உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ‘நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு சுல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்’ என்றார். (அறிவிப்பாளர்: ஆபிஸ் இப்னு ரபீஆ)
உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வதை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ சுல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்’ எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்.
பிறகு ‘நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?’ எனக் கூறிவிட்டு, ‘எனினும், இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம் விரும்பவில்லை’ எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அஸ்லம்)
”நெரிசலுள்ள நேரத்திலும், நெரிசலற்ற நேரத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதை விட்டதில்லை.”
”இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவ்விரு மூலைகளுக்கிடையே நடந்து செல்வாரா?’ என நாஃபிஉ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்டபோது, ‘முத்தமிடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக நடந்துதான் செல்வார்’ எனக் கூறினார்” என்று உபைதுல்லாஹ் அறிவித்தார். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு)
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம் வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு)
”ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.” (அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு)
”ஒருவர் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ‘நான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!’ எனக் கூறினார்கள். அப்போது நான், ‘கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?’ எனக் கேட்டேன். அதற்கவர்கள், ‘கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உன்னுடைய ஊராகிய) யமனில் வைத்துக் கொள்! நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!” என (மீண்டும்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸுபைர் இப்னு அரபி)
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம் வந்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் சைகை செய்தார்கள்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு)
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம் வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு ‘அல்லாஹு அக்பர்’ ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு)
-இங்கு இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் ஸஹீஹ் புகாரியில் உள்ளது