கேள்வி – ஹஜ்ஜுக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ஊர் மக்கள் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள் இது முறையா… போகும் போது மாலை போடுதல் அல்லது வந்த பிறகு மாலை போடுதல் என்ற பூமாலை நிகழ்ச்சியும் நடக்கின்றது. ஹஜ் சென்று வந்த பின் தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்கிறார்கள். இப்படி போட்டுக் கொள்ளலாமா…?
நாம் பிற மனிதர்களுக்கு இழைக்கும் குற்றங்கள் – தவறுகள் இவற்றிர்க்கு நாம் மரணிக்கும் முன்பே சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதி.
இந்த பொதுவான அடிப்படையில் – இந்த நோக்கத்திற்காக – ஹஜ்ஜை அறிவித்து உள்ளங்களை தூய்மைப்படுத்திக் கொண்டால் தவறில்லை.
ஏனெனில் ஹஜ் செய்ய போகும் இடத்தில் மரணம் நிகழ்ந்து விடலாம். பிறகு இறைவன் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் மக்களிடம் பிழை பொருக்க சொல்லி விட்டு செல்லலாம். (பொதுவாக இது எல்லா பயணத்திற்கும் பொருந்தும்)
இதை விடுத்து இதர நோக்கங்களுக்காக ஹஜ் அறிவிக்கப்படுமானால் அது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும். இன்று பல ஊர்களில் இந்த நோக்கத்திற்கு மாற்றமாகத்தான் ஹஜ் விளம்பரப் படுத்தப்படுகிறது. போஸ்டர் அடித்து ஒட்டி ஏக – போக பந்தாவாக ஹஜ்ஜூக்கு கிளம்புவதை பார்க்கலாம். மக்கள் தனது ஹஜ்ஜை அறிந்து தன்னைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பரவலாக ஹஜ்ஜை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் தான் பூமாலையெல்லாம் போட்டு விழாக்கோலமாக்கப்படும். இந்த பந்தா – விழாக் கோலத்தின் பிரதி பலிப்புதான் ஹஜ் முடித்துவிட்டு வந்த பிறகு தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஹஜ் செய்தவர் அல் ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வதாகும். (தனக்கு வரும் திருமண அழைப்பிதழில் ஹாஜி என்று போடாமல் வந்து விட்டால் அதற்காக சண்டைப் போடும் விளம்பர ஹாஜிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்)
இது முழுக்க – முழுக்க இஸ்லாமிய வணக்கத்திற்கும் அது எதிர்பார்க்கும் உள்ளத்தூய்மைக்கும் மாற்றமான செயலாகும்.
இறைவனுக்காக செய்யப்படும் அமல்கள் எது ஒன்றிர்க்கும் முழு உரிமையாளனும் அதற்கு கூலி கொடுப்பவனும் அவனேயாவான். இந்த அமல்கள் வேறு நோக்கங்களுக்காக செய்யப்பட்டால் அந்த அமல் இறைவனின் பார்வையில் வெறும் குப்பைக் கூளமாக்கப்பட்டு விடும்.
மக்கள் தன்னை பெரும் வணக்கசாலி என்று கூறி புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் அமல் செய்பவர்கள் நாளை நரகில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்கள் எதிர்பார்த்த புகழ் உலகிலேயே கிடைத்து விட்டது என்று இறைவன் கூறுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துள்ளார்கள் (ஹதீஸ் சுருக்கம்) (முஸ்லிம்)
இறைவனுக்காக செய்யப்படும் எந்த ஒரு காரியத்திற்கும் புகழுக்கான விளம்பரம் கூடாது என்று இந்த ஒரு நபிமொழியே எச்சரித்து விடுகிறது.
தினமும் தவறாமல் தொழும் ஒருவர் தன் பெயருக்கு முன்னால் ‘முஸல்லி’ என்று (உதாரணமாக ‘முஸல்லி அப்துல் காதர்’ அதாவது தொழுகையாளி அப்துல் காதர்) என்று போட்டுக் கொள்வதில்லை.
‘நோன்பாளி அப்துல் அளீம்’ என்று யாரும் தன் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் தர்மம் செய்யும் ஒருவர் – ஜகாத் கொடுக்கும் ஒருவர் தன்னை ‘கொடை வள்ளல்’ என்று விளம்பரப்படுத்துவதும், ஹஜ் செய்தவர் தன்னை ஹாஜி என்று விளம்பரப்படுத்துவதும் (சில ஆலிம்?கள் உம்ரா செய்து விட்டு வந்து தன்னை உம்ரி என்றும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்) இறைவனுக்கு உகந்த செயல்தானா என்று விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
(நபியே) நீர் கூறும் மெய்யாக என் தொழுகையும் என் குர்பானியும் (ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அமல்) என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களில் இறைவனான அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இப்படித்தான் நான் ஏவப்பட்டுள்ளேன். (அல் குர்ஆன் 162, 163)
‘இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்’ என்ற ஏவலின் பிரகாரமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்துக் காட்டினார்கள். அவர்களோ – அவர்களை சார்ந்த நபித்தோழர்களோ இந்த விளம்பரங்களை கண்டு அஞ்சினார்கள். இதனால் நாளை இறைவனிடம் கூலி கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அதை வெறுத்து ஒதுக்கினார்கள். இந்த மன நிலை இறைவனுக்காக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வர வேண்டும்.
கேள்வி – பிறருக்காக ஹஜ் செய்யலாமா?
ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.
இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத் , இப்னுமாஜா )
பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ… என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.
மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.
தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத் – நஸயி)
இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது.
கேள்வி : இஹ்ராமிற்கான நிய்யத்தை வார்த்தைகளினால் கூற வேண்டுமா? தனக்கல்லாது பிறருக்காக ஹஜ்ஜுச் செய்யும் பொழுது என்ன கூற வேண்டும்?
பதில் : நம்முடைய நோக்கங்களுக்குக் காரணமானதொன்றாக இதயம் இருக்கின்றது. ஒரு ஹஜ்ஜுச் செய்ய விரும்புகின்றார் எனில், அவர் முதலில் தன்னுடைய எண்ணத்தில் அதை நினைக்கின்றார். அவர் பிறருக்காக ஹஜ்ஜுச் செய்ய விரும்புகின்றார் எனில், செய்யக் கூடிய அவர் தான் யாருக்காகச் ஹஜ்ஜுச் செய்யப் போகின்றேன் என்பதை மொழிய வேண்டும் என்பது விரும்பத்தக்கதாகும். அதாவது,
அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன் அந் ஃபுலான்
பொருள் : யா அல்லாஹ்! இன்னாருக்காக நான் ஹஜ்ஜுச் செய்கின்றேன் என்று கூற வேண்டும்.
அதாவது, அவரது தகப்பானருக்காகவா? தாய், சகோதரர் அல்லது வேறு யாருக்காகவுமா? என்பதை அவர் கூற வேண்டும். இது அவரது உள்ளத்தில் என்ன இருக்கின்றது என்பதை வார்த்தைகளினால் நிச்சயிக்கப்படுகின்றது என்பதேயாகும், ஏனென்றால், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் தல்பியாவைக் கூறி உள்ளார்கள். நாம் இந்த தல்பியாவை வார்த்தைகளினால் கூற வேண்டும் என்பதன் உண்மைச் சட்டம் என்னவென்றால், நாம் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றுகின்றோம் என்பதாகும். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு எதனைக் கற்றுக் கொடுத்தார்களோ, அதனைப் போலவே நாமும் செய்கின்றோம். அவர்கள் தல்பியாவை சப்தமிட்டுக் கூறினார்கள்.
ஒருவர் மனதால் நினைத்துக் கொண்டது மட்டுமே போதும் எனத் திருப்தி கொண்டவராக, யாருக்காக அவர் ஹஜ்ஜுச் செய்கின்றாரோ அவரது பெயரை உச்சரிக்காமல் விட்டுவிடுவாரேயானாலும் அல்லது அவர் தல்;பியாவைக் கூறியவராக, அவர் யாருக்காகச் செய்கின்றாரோ அவரது பெயரை விட்டு லப்பைக்கல்லாஹ{ம்ம லப்பைக் எனக் கூறி விடுவாரேயானாலும் பரவாயில்லை. இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.
இருப்பினும், அவர் யாருக்காக ஹஜ்ஜுஅல்லது உம்மராச் செய்கின்றாரோ அவருடைய பெயரை உச்சரித்து, தல்பியாக் கூறுவது சிறந்தது. ஹஜ் அல்லது உம்ராச் செய்ய ஆரம்பிக்கு முன்னர், யாருக்காக இவர் ஹஜ் அல்லது உம்ராச் செய்கின்றாரோ, அவரது பெயருடன் இவ்வாறு மொழிவது போதுமானது :
லப்பைக்க ஹஜ்ஜன் அல்லது உம்ரத்தன் அந் ஃபுலான்.
நான் இன்னாருக்காக இந்த ஹஜ் அல்லது உம்ராவைச் செய்கின்றேன். எனக் கூற வேண்டும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி – ஒரே இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்கிறார்களே இது கூடுமா…?
மீகாத் என்றால் எல்லை என்றுப் பொருள். ஹஜ் உம்ரா செய்யும் நோக்கோடு வெளியிலிருந்து மக்கா வருபவர்களுக்கு குறிப்பிட்ட எல்லைகளை இஸ்லாம் தீர்மானித்துள்ளது. அந்த எல்லைக்குள் நுழையும் போது இஹ்ராத்துடன் நுழைய வேண்டும். இஹ்ராம் இல்லாமல் நுழைந்தால் அவர்களால் ஹஜ்ஜோ – உம்ராவோ செய்ய முடியாது.
இவ்வாறு இஹ்ராம் பூண்டு உம்ராவை நிறைவேற்றினால் அந்த உம்ராவிற்குறிய எல்லை முடிந்துப் போய்விடும். அதாவது உம்ரா செய்வதற்காக ஒரு எல்லை வழியாக நுழையும் ஒருவர் உம்ராவை நிறைவேற்றி விட்டால் அதோடு அந்த எல்லைக்கும் உம்ராவிற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடுகிறது. அவர் மீண்டும் உம்ரா செய்வதாக இருந்தால் மீண்டும் தனக்குறிய எல்லையிலிருந்து இஹ்ராத்துடன் வர வேண்டும். ஒரே இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்யலாம் என்றால் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது அர்த்தமில்லாமல் போய்விடும்.
சிலர் உம்ரா செய்து விட்டு மீண்டும் இஹ்ராம் கட்டுவதற்கு மக்காவிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஆய்ஷா மஸ்ஜித் என்ற பள்ளிக்கு சென்று இஹ்ராம் கட்டி வந்து அடுத்த உம்ரா செய்வதை பார்க்கிறோம். ஆய்ஷா பள்ளி என்பது இஹ்ராத்திற்குறிய இடம் தான் என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் அது பொதுவான எல்லையல்ல. வெளியிலிருந்து வரும் போது அந்தந்த எல்லையில் இஹ்ராம் கட்டி உள்ளே நுழைபவர்களுக்கு எதிர்பாராத தடங்கள் ஏற்பட்டு உம்ரா செய்ய முடியாமல் போய் இஹ்ராத்திலிருந்து விடுபடும் சூழ்நிலை உருவானால் அவர்களுக்காக நியமிக்கப்பட்ட இடமாகும் அது.
இஹ்ராத்துடன் உள்ளே நுழையும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது. இந்த சந்தர்பத்தில் அவர்களால் கஃபாவை நெருங்க முடியாது. அவர்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரை இஹ்ராத்திலிருந்து விடு பட வேண்டும். தூய்மை அடைந்ததும் ஆய்ஷா பள்ளி என்ற மீகாத் – எல்லைக்கு சென்று இஹ்ராம் ஆகி கொள்ளலாம். அதே போன்று இஹ்ராத்துடன் உள்ளே வருபரவர்கள் நோய்க்கு ஆட்பட்டு இஹ்ராத்திலிருந்து விடுபட்டால் அவர்களுக்கும் ஆய்ஷா பள்ளி தான் எல்லையாகும். குறிப்பாக சொல்லப் போனால் இஹ்ராத்துடன் உள்ளே நுழைபவர்கள் ஏதோ தடங்களால் உம்ரா செய்ய முடியாமல் இஹ்ராத்திலிருந்து விடுபடுகிறார்கள். இவர்கள் உம்ரா செய்ய இலகுவாக்கப்பட்ட எல்லைதான் ஆய்ஷா பள்ளி என்று அறியப்படும் ‘தன்யீம்’ என்ற இடமாகும்.
நான் இஹ்ராத்துடன் மக்கா வந்ததும் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. என்னால் கஃபாவை நெருங்க முடியவில்லை. இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உன் தலையை அவிழ்த்து சீவி ஹஜ்ஜூக்கு மட்டும் இஹ்ராம் கட்டு. உம்ராவை விட்டு விடு என்றார்கள். நான் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்கு என்னை அனுப்பினார்கள். அங்கு உம்ராவிற்காக இஹ்ராத்துடன் வந்து உம்ராவை முடித்தேன். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி – திர்மிதி)
நாம் மேலே விளக்கியவற்றிர்க்கெல்லாம் இந்த ஹதீஸில் ஆதாரம் கிடைத்து விடுகிறது. இது தவிர ஒரு இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்வதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
”எவ்வளவோ தொலைவிலிருந்து வருகிறோம் எங்களால் மீண்டும் அந்தந்த எல்லைக்கு சென்று இஹ்ராம் அணிவது சிரமம் அதனால் ஆய்ஷா பள்ளிக்கு சென்று வருகிறோம்” என்று சொல்லக் கூடிய மக்களைப் பார்க்கிறோம்.
ஒரு காரியத்தை செய்வதில் சிரமம் இருக்கிறது என்பதற்காக நாமாக ஒரு முடிவு எடுத்து அதன்படி செயல்பட்டு அதற்கு நியாயம் கற்பிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. சிரமத்திற்கேற்ற கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதலில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மக்கா என்பது உம்ராவிற்கு மட்டும் கூலி கிடைக்கும் இடமல்ல. தவாபிற்கும் – தொழுகைக்கும் கூட அங்கு ஏராளமான கூலி கிடைத்து விடும். அங்கு எவ்வளவு வேண்டுமானாலும் தவாப் செய்யலாம் (தவாப் செய்வதற்கு எந்த தனி சட்டமும் இல்லை) எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம். அவரவர் எல்லைக்கு சென்று மீண்டும் இஹ்ராம் கட்டி வர முடியாதவர்கள் தவாப் – தொழுகை போன்றவற்றின் மூலம் நிறைய நன்மைகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்பதால் இந்த வழியை தேர்ந்தெடுப்பதே அறிவுடமையாகும்.
‘இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்’ என்பதை ஒரு முஸ்லிம் ஒப்புக் கொண்டால் அவனின் அமல்களை விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டான் என்பதில் இரண்டாவது கருத்து வர வாய்ப்பே இருக்காது.
கேள்வி : ஹஜ் மற்றும்; உம்றா செய்வதற்கு முன்னால் களையும் அக்குள் முடிகளை இஹ்ராம் கட்டும் இடத்தில் தான் களைய வேண்டுமா அல்லது வீட்டிலிரூந்தே அதை செய்யலாமா?
இஹ்ராம் என்பது அதற்காக நியமிக்கப்பட்டுள்ள இடத்தை கடந்த பிறகு சில காரியங்களை செய்யக்கூடாது என்று தடுப்பதாகும். அந்தந்த எல்லையில் நின்றுதான் குளிக்கவேண்டும், முடி களைய வேண்டும், இஹ்ராம் துணி அணிய வேண்டும் என்பதல்ல சட்டம். வசதி வாய்ப்புகள் இருந்தால் தங்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே இவை அனைத்தையும் நாம் செய்துக் கொள்ளலாம். அந்த எல்லைகளை கடந்தப் பிறகு இவைகளை செய்யக் கூடாது என்பதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த எல்லைகளை அடையுமுன் எந்த இடத்திலும் இவற்றை செய்துக் கொள்ளலாம்.
கேள்வி : ஜம்ஜம் நீரை நின்றுகொண்டு, பிஸ்மில்லா சொல்லாமல் தான் குடிக்க வேண்டும் ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அப்படித்தான் செய்தார்கள் என்று கூறப்படுவது உண்மையா? ஜம்ஜம் நீரை குடிப்பதற்கென்று விசேஷமான முறை எதுவும் உண்டா?
பொதுவாக உண்ணும் போதோ குடிக்கும் போதோ தலையை மூடிக் கொள்ள வேண்டும் என்ற எந்த சட்டமும் இஸ்லாத்தில் இல்லை. தலை திறந்த நிலையில் சாப்பிடுவதில் எந்த குற்றமும் இல்லை. இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தலையை திறந்திருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும் தான்) என்பது சட்டம். எனவே அந்த நேரத்தில் தலை திறந்த நிலையில் தான் ஸம் ஸம் நீரை குடிக்க வேண்டும். பெண்கள் முகத்தையும் கைகளையும் தவிர மற்ற பாகங்களை இஹ்ராமில் மூட வேண்டி இருப்பதால் அவர்கள் தலை திறந்து ஸம் ஸம் நீரை குடிக்க முடியாது – குடிக்கக் கூடாது.
நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ – பிஸ்மில்லா சொல்லாமல் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் ஹஜ் செய்யும் முறை பற்றி விளக்கவும்
பெண்களின் ஹஜ்
இறைவனின் தூதரே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா என்று நான் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போரிட தேவையில்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமை என்று கூறி அதுதான் ஹஜ்ஜூம் – உம்ராவும் என்றார்கள். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, அஹ்மத் – இப்னுமாஜா)
சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமை என்ற வாக்கியத்தில் சக்திப் பெற்றுள்ள பெண்களும் அடங்கத்தான் செய்வார்கள். ஆனாலும் ஒரு பெண் சக்திப் பெற்றவளாக கருதப்பட வேண்டுமானால் அவள் கூடுதலாக ஒரு சட்டத்திற்கு உட்பட வேண்டும். அது பயணத்தில் இருக்க வேண்டிய ஆண்துணை.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய பெண் மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயண தொலைவிற்கு தந்தையுடனோ – கணவனுடனோ – சகோதரனுடனோ இல்லாமல் செல்லக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நஸயி – இப்னுமாஜா)
தக்க ஆண்துணை இருந்தால் தான் பெண்களுக்கு ஹஜ் கடமையாகும்.
மாதவிடாய்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ் செய்வதற்காக அன்னை ஆய்ஷா ரலி அவர்கள் செல்கிறார்கள் வழியில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடுகிறது. இதை அறிந்த நபி ஸல் அவர்கள் ‘ ஹஜ் உடைய எல்லா காரியங்களையும் செய், தூய்மையாகும் வரை கஃபத்துல்லாஹ்வை நெருங்காதே ‘ என்று கூறிவிட்டார்கள். இந்த கட்டளைப்படி ஆய்ஷா ரலி அவர்கள் கஃபத்துல்லாஹ்வை வலம் வரவுமில்லை, ஸபா மர்வாவில் ஓடவுமில்லை. மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடன் தன் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்துவந்து கஃபாவை வலம் வந்த செய்தி பிரபல்யமான ஹதீஸ் நூல்கள் எல்லாவற்றிலும் – குறிப்பாக புகாரியில் பல இடங்களில் – எண் 1556, 1650 – வருகின்றது.
கேள்வி : பெண்கள் உம்ரா மற்றும் ஹஜ்ஜில் முடியை சிறிது வெட்ட வேண்டுமா? சில பெண்கள் உம்ரா முடித்த உடன் முடி வெட்டுகிறார்கள்;. இவ்வாறு செய்யவேண்டுமா.? இதற்கு அனுமதி அல்லது தடை உள்ளதா.?
தலைமுடி
ஹஜ் உம்ரா செய்பவர்கள் தலையை முழுவதுமாக மழித்து விடுவது அதிக ஆர்வமூட்டப்பட்ட செயலாகும். ஆனாலும் இது ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.
பெண்கள் தங்கள் தலைமுடியை மழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடைசெய்துள்ளார்கள். (அலி ரளியல்லாஹு அன்ஹு திர்மிதி)
ஆண்களை போல் மழிப்பதற்கு தடையுள்ளதால் தங்கள் சடையிலிருந்து சிறிதளவு வெட்டி அந்த மார்க்க அடையாளத்தை பூர்த்தி செய்யலாம்.
தலையை மழிப்பது பெண்களுக்கு கிடையாது. குறைத்துக் கொள்வது அவர்களுக்கு போதும் என்பது நபிமொழி ( இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத் – தாரகுத்னி)
உம்ரா மட்டும் செய்பவராக இருந்தால் முடியை குறைத்துக் கொள்வதுடன் உம்ரா நிறைவுக்கு வந்து விடும். ஹஜ்ஜையும் சேர்த்து செய்பவராக இருந்தால் மினாவில் ஜம்ரத்துல் அகபாவில் ஏழுமுறை கல்லெறிந்து பிறகு குர்பானி கொடுத்து விட்டால் அதன் பின் (ஆண்கள்) தலையை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இப்போது உடலுறவைத் தவிர இஹ்ராமின் மற்ற சட்டங்களிலிருந்து விடுபட்டு விடலாம்.
-tamilmuslim.co