கேள்வி : இமாம் குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே சிலர் தவாஃப் செய்து கொண்டும், சப்தம் போட்டுக் கொண்டு குழவாகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதையும் காண்கின்றோம். இந்த நிலையில் தவாஃப் அல்லது ஸயீச் செய்ய அனுமதி உள்ளதா?
பதில் : இந்த நிலையில் அவர் ஒரு பயணியாக இருந்தாரென்றால், அவர் மீது ஜும்ஆத் தொழுகை கடமையில்லை. அவர் ஜும்ஆத் தொழுகை கடமையில்லாத நிலையில், லுஹர் தொழுகைக்கு உரியவராக இருந்தால், இமாம் குத்பா பிரசங்கம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவரை அமைதியாக இருக்கச் சொல்ல முடியாது என்பதே என் பார்வைக்கு தென்படுகின்றது.
இருப்பினும், அவர் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பின், அல்லது மக்காவை இருப்பிடமாகக் கொண்டவராக இருப்பின், அவர் ஜும்ஆவில் கலந்து கொள்வதே அவர் மீது உள்ள கடமையாகும், அவர் கண்டிப்பாக ஜும்ஆ குத்பாவை செவிமடுக்க வேண்டும். எப்பொழுது ஜும்ஆத் தொழுகை முடிந்து விட்டதோ, அவர் மீண்டும் மீதி உள்ள தவாஃபுச் சுற்றுகளைச் சுற்றிப் தவாஃபைப் பூர்த்தி செய்ய வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன். (ஷேக் இப்னு மானீ).
கேள்வி : உம்ரா மற்றும் ஹஜ் செய்ய விரும்பி ஒருவர் மீகாத்தையும் கடந்து விட்ட அவர், ஹஜ்ஜைத் தடை செய்பவற்றிலிருந்து பாதுகாக்கக் கூடிய நிபந்தனையைக் கூற மறந்து விட்டார். ஏதோ ஒரு வகையில், அவர் நோயாளியாகி, ஹஜ்ஜைப் பூரணப்படுத்த முடியாத அளவுக்கு ஆளாகி விட்ட அவர், என்ன செய்ய வேண்டும்?
பதில் : இவரை முஹ்ஸர் என்றழைப்பார்கள். நோய் மற்றும் பயம் அல்லது இதைப் போன்ற காரணங்களால் தன்னுடைய ஹஜ்ஜைத் தொடர முடியாமல் இருப்பவர். இவர் தன்னுடைய நோய் தீரும் வரையிலும் பொறுமையாக இருந்து, மீண்டும் ஹஜ்ஜுக்கான கிரியைகளை நிறைவேற்றுவதற்குரிய நேரத்தை எதிர்பார்த்து இருக்க வேண்டும். அவரால் இயலாது என்ற நிலை வந்து விட்டால், அவர் தன்னுடைய தலையை மழித்துக் கொண்டு அல்லது குறைத்துக் கொண்டு, தன்னுடைய இஹ்ராமைக் களைந்து விட வேண்டும்.
அடுத்து அவர் விரும்பிய இடத்தில் அவர் ஒரு பிராணியைப் பலியிட வேண்டும். அதன் இறைச்சியை அந்த இடத்திலுள்ள ஏழைகளுக்குப் பகிர்ந்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்யக் கூடிய இவர் மக்காவை விட்டு வெளியில் இருந்தாலும் சரியே! அங்கு அவருக்கு ஏழைகள் எவரும் கிட்டவில்லை என்றால், அவர் தன்னுடன் அந்த இறைச்சியை எடுத்து வந்து மக்காவில் உள்ள ஏழைகளுக்கு வழங்க வேண்டும் அல்லது அதன் சுற்றுப் புறங்களில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்.
அவரால் பலிப்பிராணியைக் கொடுக்க முடியவில்லை என்றால், அவர் 10 நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். அவர் தன் தலைமுடியை மழித்துக் கொள்ள வேண்டும் அல்லது முடியைக் குறைத்தக் கொள்ள வேண்டும். அதன் பின் அவர் தன்னுடைய இஹ்ராமைக் களைந்து கொள்ள வேண்டும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : மீகாத் எல்லையில் இஹ்ராம் அணிந்து கொண்ட ஒருவர், ஹஜ் தமத்துஃ முறைப்படி செய்வதற்கான தல்பியாவைக் கூற மறந்து விடுகின்றார். அவர் என்ன செய்து கொள்ள வேண்டும்.
பதில் : உம்ராச் செய்வதற்காக எண்ணம் கொண்ட அவர், தல்பியாக் கூற மறந்து விட்டாலும், அவர் தல்பியாக் கூறிவராகவே கருதப்படுவார். அவர் கஃபாவை வலம் வந்து, ஸயீயைச் செய்து முடித்து, தலை முடியைக் குறைத்து, அடுத்து இஹ்ராமையும் அவர் களைந்து விடுவார். அவர் வரும் வழி நெடுகிலும் தல்பியாவையும் கூற வேண்டும். அவர் தல்பியாவைக் கூற மறந்து விடினும், எந்தக் குறையும் ஏற்பட்டு விடாது. ஏனென்றால், தல்பியாக் கூறுவது ஒரு நிரூபிக்கப்பட்ட சுன்னத். அவர் செய்யக் கூடிய உம்ராவானது அவரது எண்ணத்தின் அடிப்படையில், அதை நிறைவேற்றப் புறப்பட்டதே அசலானதாகும். அவரது அசலான எண்ணம் ஹஜ்ஜுச் செய்வது என்றிருக்குமெயானால், அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான நேரமும் மீதமிருக்குமானால், அவர் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக் கொண்டு, அதாவது அவர் நிறைவேற்றிய கிரியைகளை உம்ராவுக்காகச் செய்ததாகக் கொண்டு, அவரது தலைமுடிகளைக் குறைத்து இஹ்ராமைக் களைந்து விடலாம். பின்பு, ஹஜ்ஜிற்கான நேரம் வந்தவுடன், மீண்டும் அவர் ஹஜ் தமத்துஃ செய்ய முடியும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : ஒரு மனிதர் தனது தயாருக்காக ஹஜ்ஜுச் செய்கின்றார், ஆனால் அவர் தன்னுடைய தாயாருக்காக இந்த ஹஜ்ஜை நிறைவேற்றுவதாக, அதற்கான தல்பியாக் கூற மீக்காத்தில் மறந்து விடுகின்றார். அவர் என்ன செய்து கொள்ள வேண்டும்?
பதில் : அவர் தன்னுடைய தாயருக்காகவே ஹஜ்ஜுச் செய்ய வந்திருப்பது வரை, அவர் தன்னுடைய தயாருக்காக ஹஜ்ஜுச் செய்கின்றேன் என்று தல்பியாக் கூறாது மறந்திருந்தாலும் அது பற்றிப் பிரச்னையில்லை. அவரது எண்ணமே, (வாயினால் மொழியக் கூடிய சொல்லான) தல்பியாவை மிஞ்சி விட்டது.
இது பற்றி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன, என்று கூறினார்கள்.
ஒருவர் தல்பியாவை வாயினால் மொழிவதற்கு மறந்து விட்டாலும், அவரது தாயாருக்காக ஹஜ்ஜுச் செய்கின்றேன் என்ற தல்பியாவைக் கூற மறந்து விட்டாலும், அல்லது வேறு யாருக்காகவாவது ஹஜ்ஜுச் செய்தாலும், அந்த ஹஜ்ஜானதை அவர் யாருக்காகச் செய்கின்றாரோ, அந்த ஹஜ் அசலாக ஏற்றுக் கொள்ளப்படும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : ஒரு மனிதர் மக்காவிற்காக வேலை நிமித்தம் வருகின்றார். அவருக்கு ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கின்றது. அவர் இஹ்ராமைத் தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அணிந்து கொள்ளலாமா? அல்லது அவர் மக்காவிற்கு வெளியே சென்று இஹ்ராம் அணிந்து கொண்டு வர வேண்டுமா?
பதில் : ஹஜ் அல்லது உம்ரா செய்யும் எண்ணமில்லாமல், ஒருவர் உறவினர்களைப் பார்க்கவோ அல்லது வியாபார விஷயமாகவோ மக்காவிற்கு வந்த இடத்தில் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு (ஹஜ் அல்லது உம்ரா செய்ய எண்ணுகின்றார்) விடுகின்றார். இந்த நிலையில் அவர் தன்னுடைய இஹ்ராமை தன் இருப்பிடத்திலிருந்தோ அல்லது மக்காவிற்கு வெளியிலோ சென்று, இரண்டில் எதேனுமொரு முறையில் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.
உண்மையிலேயே அவர் மக்காவிற்கு வந்திருப்பதன் நோக்கமே உம்ரா அல்லது ஹஜ் செய்யும் நோக்கமாக இருப்பின், அவர் தன்ஈம் சென்று இஹ்ராம் அணிந்து வர வேண்டும்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உம்ரா செய்ய விரும்பிய பொழுது, அவர்களுடைய சகோதரர் அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் சென்று, தன்ஈம் என்ற இடத்தில் இஹ்ராம் அணிந்து அழைத்து வருமாறு, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இது உம்ரா செய்வதற்கான இஹ்ராமிற்குரிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையாகும். ஆனால் ஒருவர் ஹஜ்ஜுச் செய்ய விரும்பினால், முன்பு நான் குறிப்பிட்டுள்ளது போல அவர் தன்னுடைய இருப்பிடத்திலிருந்தே இஹ்ராமை அணிந்து கொள்ளலாம்.
கேள்வி : இஹ்ராம் அணிந்த பின்பு இரண்டு ரக்அத் தொழ வேண்டியது கட்டாயமா?
பதில் : அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதில் அறிஞர்களிடேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. தல்பியாவிற்கு முன்பாக இஹ்ராம் அணிந்தவுடன் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று அதிகமான அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
இதற்கு இவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய இறுதி ஹஜ்ஜின் பொழுது லுஹர் தொழுகையைத் தொழுகையைத் தொழுது விட்டு, இஹ்ராமை அணிந்தார்கள் என்பதைக் கொண்டு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒருவர் என்னிடம் வந்தார், அவரிடம், அருள் செய்யப்பட்ட இந்தப் பள்ளத்தாக்கில் தொழுங்கள் என்றும், உம்ராவுடன் ஹஜ்ஜையும் இணைத்து (ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றேன் என்றும் கூறுமாறு) கூறினேன். இது தான் இஹ்ராமிற்கான இரண்டு ரக்அத் தொழுவதற்கான ஆதாரமாகும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மேலே உள்ள ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள மற்ற அறிஞர்கள் மறுக்கின்றார்கள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன் தொழுத அந்தத் தொழுகை (லுஹர் தொழுகைக்கான) பர்ளு தொழுகையாகும். இந்த பர்ளுத் தொழுகை;காகத் தொழுத தொழுகையை, இஹ்ராமிற்கான தொழுத தொழுகையாகும் என்று ஆதாரமாகக் காட்ட முடியாது. இதனடியில், பர்ளுக்கான தொழுகையைக் கொண்டு, இஹ்ராமிற்கான தொழுகைக்கான ஆதராரமாக அந்தத் தொழுகை குறிக்கவில்லை. இது எதனைக் குறிக்கின்றதென்றால், ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிபவர்கள், கடமையான பர்ளுத் தொழுகையை நிறைவேற்றிய பின் இஹ்ராம் அணிந்து கொள்வது நல்லது என்பதைத் தான் புரிந்து கொள்ள முடிகின்றது. (இப்னு பாஸ்)
கேள்வி : ஹஜ் அல்லது உம்ராவுக்கு இஹ்ராம் அணியாமல் மீகாத் எல்லையைக் கடந்து செல்வபவர் பற்றி சட்டமென்ன?
பதில் : ஹஜ் அல்லது உம்ராவுக்காகச் செல்பவர்கள், இஹ்ராம் அணியாத நிலையில் மீகாத்தைக் கடந்து சென்று விடுவார்கள் என்றால், அவர்கள் மீண்டும் மீகாத்திற்கு வந்து இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
மதினா வழியாக வருபவர்கள் துல் ஹ{லைஃபா என்ற இடத்திலிருந்தும், ஷாம் வழியாக வருபவர்கள் ஜுஹ{ஃபா என்ற இடத்திலும், ரியாத் அல்லது நஜ்து பகுதியிலிருந்து வருபவர்கள் கர்னல் மனாஸிலிலும், எமன் மற்றும் இந்தியா போன்ற பகுதயிலிருந்து வருபவர்கள் யலம்லம் ஆகிய இந்த இடங்களில் உள்ள மீகாத் எல்லைகளில் இருந்து, மீகாத் செய்து கொள்ள வேண்டும். யார் யாரெல்லாம் இந்த வழியாக ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்ற வருகின்றார்களோ அவர்கள், தங்களுக்குரிய அந்தந்த மீகாத்தில் இஹ்ராம் செய்துகொள்ள வேண்டும்.மற்றுமொரு வகையில், ஹஜ்ஜினுடைய மாதங்களான ஷவ்வால், துல்கஃதா, துல் ஹஜ் 10 நாட்கள் இவற்றில், உம்ராவை முதலில் செய்ய விரும்புகின்றவர், அதாவது அவர் கஃபாவை வலம் வந்து, ஸயீயைச் செய்து முடித்து, முடியையும் குறைத்து, அடுத்து இஹ்ராமைக் களைந்த விட வேண்டும். அடுத்து அவர் அணியக் கூடிய இஹ்hமைக் கொண்டு ஹஜ் செய்ய வேண்டும்.
எனினும், மேலும் மீகாத் எல்லையை ஹஜ்ஜினுடைய மாதங்களல்லாத நாட்களில் உம்ரா செய்வதற்காக நுழைபவர்கள், அதாவது ஷஃபான், ரமளான் ஆகிய மாதங்களில், உம்ராவிற்காக மட்டுமே இஹ்ராமை அணிந்து கொள்ள வேண்டும். அவர் உறவினர்களைப் பார்ப்பதற்காகவோ, வியாபார விசயமாகவோ மக்காவில் நுழைந்து விடுகின்றார் எனில், அவர் (மீகாத் வந்து) இஹ்ராம் அணிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்பது அநேக அறிஞர்களின் கருத்துமாகும். இவர் மக்காவில் இருப்பதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, உம்ரா செய்வதற்காக அவர் எண்ணிக் கொள்வது சிறந்தது.
கேள்வி : ஒரு மனிதர் ஹஜ் செய்ய எண்ணி வர, ஆனால் அவர் இஹ்ராம் அணிவதற்கு முன்பதாக அவரது விமானம் ஜித்தா விமான நிலையத்தில் இறங்குகின்றது. இவர் என்ன செய்து கொள்ள வேண்டும்?
பதில் : இவர் ஷாம் அல்லது எகிப்திலிருந்து விமானப் பயணம் வழியாக, இஹ்ராம் அணிவதற்கு முன்பாக ஜித்தா விமான நிலையத்தை அடைவாரென்றால், அவர் தன்னுடைய ஹஜ்ஜைத் தொடங்குவதற்கு இஹ்ராம் அணிந்து கொள்வதற்காக ராபிஃ என்ற இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து வர வேண்டும். இன்னும், இவர் நஜ்து பிரதேசத்திலிருந்து இஹ்ராம் அணிவதற்கு முன்பாக ஜித்தா விமான நிலையம் வந்திறங்குவாரென்றால், அவர் கர்னல் மனாஸில் என்ற இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து வர வேண்டும்.
அவ்வாறல்லாமல், இவர் மீகாத் எல்லைக்குச் சென்று தன்னுடைய ஹஜ்ஜிற்கான இஹ்ராமை அணியாமல், ஜித்தாவிலிருந்த நிலையிலேயே இஹ்ராம் அணிந்து கொண்டு விட்டார் என்றால், அவர் அதற்கான பரிகாரமாக ஒரு பலிப்பிராணியை (ஒரு ஆடு அல்லது ஏழு நபர்கள் சேர்ந்து ஒரு மாடு, அல்லது ஒட்டகம்) மக்காவில் அறுத்து அதனை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : ஒரு மனிதர் தொழுவதே இல்லை இருப்பினும் அவர் ஹஜ்ஜுச் செய்து விடுகின்றார். அவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படுமா?
பதில் : தொழுகையை இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒரு தூணாக அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மறுத்த நிலையில் தொழுகையைத் தொழாதவர், நிரகாரிப்பாளராக ஆகி விடுகின்றார், அவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர் சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ அல்லது பொடுபோக்குத் தனத்தின் காரணமாகவோ தொழுகையை விட்டிருப்பாரெனில், இந்த நிலையில் அறிஞர்கள் கருத்து வேறுபடுகின்றார்கள். சிலர் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் சிலர் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
சரியான தீர்ப்பு என்னவென்றால், அவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதேயாகும். ஏனென்றால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : முஸ்லிம்களையும் முஸ்லிமல்லாதவர்களையும் பிரிக்கக் கூடிய பிரிகோடாக இருப்பது தொழுகையாகும், யார் அதனை விட்டு விடுகின்றார்களோ அவர்கள் நிராகரிப்பைச் செய்து விட்டார்கள். மேலும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதனுக்கும் மற்றும் நிராகரிப்பிற்கும், பல தெய்வ வணக்கத்திற்கும் இடைப்பட்டதாக, தொழுகையை விட்டு விடுவதில் இருக்கின்றது.
யார் தொழுகையைத் தொழ மறுத்து விடுகின்றானோ மற்றும் எவன் தொழுகையை பொடுபோக்குத் தனத்தால் தொழாமல் விட்டு விடுகின்றானோ ஆகிய இருவருக்குமே இது பொருந்தும். அதாவது, அவர்களது ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதாகும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி: ஒருபெண்ணுக்கு இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் மாதவிடாய் அல்லது பிரசவத் தீட்டு ஏற்பட்டு விடுகின்றது. அந்தப் பெண் தவாஃபை நிறைவேற்றலாமா?
பதில் : இத்தகைய பெண்கள் தவாஃபைத் தவிர்த்து, ஹஜ்ஜின் ஏனைய அனைத்து கிரியைகளையும் நிறைவேற்ற வேண்டும். எப்பொழுது அவள் சுத்தமடைகின்றாளோ அப்பொழுது தவாஃப், மற்றும் ஸயீயைச் செய்து கொள்ள வேண்டும். தவாஃப் மற்றும் ஸயீச் செய்த பின்பு, பயண தவாஃப் செய்வதற்கு முன்பு அவளுக்கு மாதவிடாய்த் தீட்டு ஏற்பட்டால், இவள் பயண தவாஃப் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்களுக்கு பயண தவாஃப் செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. (ஷேக் பின் பாஸ்)
கேள்வி : தவாஃப் அல்லது ஸயீச் செய்து, அதனை இன்னும் முடித்திருக்காத நிலையில் தொழுகைக்கான இகாமத்தைக் கேட்டு விட்டால், தாவஃப் அல்லது ஸயீயை பூரணப்படுத்துவதா? அல்லது அதனை நிறுத்தி விட்டு தொழுகைக்குச் செல்வதா?
பதில் : தவாஃபை அல்லது ஸயீயை நிறுத்தி விட்டு, தொழுகையைத் தொழுது விட்டு, மீதியுள்ள சுற்றுக்களை நிறைவேற்ற வேண்டும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : தவாஃபை முடித்து விட்டு, மாகமே இப்றாஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது அவசியமா? இதனை ஒருவர் மறந்து விட்ட ஒருவர் என்ன செய்வது?
பதில் : மகாமே இப்றாஹீமிற்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத் தொழுவது என்பது கட்டாயக் கட்டளை அல்ல, அதனை பள்ளியின் எந்த இடத்திலும் நின்று தொழலாம். அதனைத் தொழாமல் விட்டு விட்டாலும் எந்தக் கெடுதியும் இல்லை, ஏனென்றால், அது ஒரு சுன்னத், கட்டாயக் கடமையல்ல. (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : தவாஃபுல் இஃபாழவை கிளம்புவதற்கு சற்று முன் வரைத் தாமதப்படுத்தி, பயண தவாஃபுடன் இணைத்துச் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருக்கலாமா?
பதில் : அவ்வாறு செய்வதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டையும் இணைத்தே செய்வதாகவோ அல்லது தனித்தனியாகச் செய்வதாகவோ அவர் நினைத்திருந்தாலும், தவாஃபுல் இஃபாழாவை (நிறைவேற்றி விடுவதே) பயண தவாஃபிற்குப் போதுமானதாக இருக்கின்றது. சுருங்கச் சொன்னால், அவர் இரண்டையும் ஒன்றாக இணைத்து செய்வதாக நினைத்துக் கொண்டாலும், தவாஃபுல் இஃபாழாவே ஒருவருக்குப் போதுமானதாக இருக்கின்றது. மேலும், தவாஃபை இரவிலோ அல்லது பகலிலோ எந்த நேரத்திலும் செய்யலாம், அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
கேள்வி : தவாப் மற்றும் ஸயீச் செய்வதற்கு ஒளுஅவசியமா?
பதில் : ஒ@ தவாஃபிற்கு மட்டும் அவசியத் தேவையானது, ஸயீக்குத் தேவையில்லை. ஸயீயைப் பொறுத்தவரை ஒ@ இல்லாமல் செய்தாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகி விடும். இருப்பினும் ஒளுவுடன் செய்து கொள்வதே நல்லது. (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : உம்ராவின் பொழுது பயண தவாஃப் செய்வது கட்டாயமானதா? பயண தவாஃப் முடிந்ததும் பொருட்களை வாங்குவதற்காக தாமதிக்கலாமா?
பதில் : உம்ராவுக்கு பயண தவாஃப் செய்வது மிகச் சிறந்தது, ஆனால் அது தேவையில்லாததும் கூட. பயண தவாஃபை நிறைவேற்றாமல் மக்காவை விட்டுக் கிளம்புவதால் எந்த வித தீங்கும் இல்;லை. ஆனால் ஹஜ்ஜின் பொழுது, அதனை நிறைவேற்றியாக வேண்டும், ஏனென்றால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கஃபாவை இறுதியாகச் சுற்றி முடிக்காதவரை, உங்களில் எவரும் (மக்காவை விட்டுச்) சென்று விட வேண்டாம்.
இது ஹஜ்ஜுச் செய்யக் கூடிய ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான அழைப்பாகும்.
ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களையோ அல்லது வியாபார நோக்குடனோ மக்காவில் கொள்முதல் செய்வது பற்றி எந்தவிதத் தவறுமில்லை. அதற்காக சாதாரண நேரங்களில் செலவிடுவதைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், விரைந்து முடித்து விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு முறை தவாஃப் செய்ய வேண்டி இருக்கும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : உம்ரா அல்லது ஹஜ்ஜின் பொழுது தவாஃபிற்கு முன்பாக ஸயீயைச் செய்யலாமா?
பதில் : உம்ராவிலோ அல்லது ஹஜ்ஜின் பொழுதோ, சுன்னாவின் படி ஸயீக்கு முன்பாகவே தவாஃபைச் செய்து விட வேண்டும். ஆனால் ஒரு மறதியாக ஸயீயைச் செய்து விட்டார் என்றால், அதில் தவறொன்றும் இல்லை.
ஒரு மனிதர், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், நான் ஸயீயை முதலாவதாக நிறைவேற்றினேன் என்று கூற, அதனால் தவறொன்றும் இல்லை என்று பதிலளித்தார்கள். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : ஹஜ் அல்லது உம்ராவிற்குப் பின்னர் தலைமுடியை முழவதுமாகவோ அல்லது தலைமுடியைக் குறைத்து வெட்டிக் கொள்வதோ இதில் எது சிறந்தது? தலைமுடியின் ஒரு பகுதியிலிருந்து முடியை எடுத்து கத்தரித்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டதா?
பதில் : உம்ரா அல்லது ஹஜ்ஜின் பொழுது தலைமுடியை முற்றிலும் களைந்து (மொட்டையடித்துக் கொள்வது) சிறந்தது, ஏனென்றால், யார் தங்கள் தலைமுடியை முழவதும் களைந்து கொள்கின்றார்களோ அவர்களுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவன் அவர்களுக்கு மும்முறை கருணையையும், மன்னிப்பையும் வழங்குமாறு பிரார்த்தனை செய்தார்கள். குறைத்துக் கொண்டவர்களுக்கு ஒருமுறை பிரார்த்தனை செய்தார்கள்.
ஹஜ்ஜின் செய்கின்ற ஒருவர் தன்னுடைய தலைமுடியை உம்ராவின் பொழுது குறைத்துக் கொண்டால், ஹஜ்ஜின் இறுதியின் பொழுது அவர் தன்னுடைய தலைமுடியை முழுவதுமாக களைந்து கொள்வது சிறந்தது. ஏனென்றால், உம்ராவை விட ஹஜ் சிறந்ததாகும்.
உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் இடைப்பட்ட நாட்கள் மிக அதிகமாக இருந்தால், தலைமுடி வளர்வதற்குத் தேவையான காலங்கள் இருப்பதால், அவர் உம்ராவின் பொழுது தலைமுடியை முற்றிலும் களைந்து விடுவதும், பின் ஹஜ்ஜின் பொழுதும் தலைமுடியை முற்றிலும் களைந்து கொள்வதும் மிகச் சிறந்தது.
அடுத்ததாக, தலைமுடியின் ஒரு பாகத்தில் மட்டும் முடியை எடுத்து கத்தரித்துக் கொள்வது, போதுமானதாக ஆகாது. ஒருவர் தலைமுடியை முற்றிலுமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும், அல்லது தலைமுடியின் அனைத்துப் பாகங்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்யக் கூடிய ஒருவர், தலைமுடியை வலது பக்கத்திலிருந்து கத்தரிக்கவோ, மழித்துக் கொள்ளவோ ஆரம்பிக்க வேண்டும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : தஷ்ரீக்குடைய நாட்களில் இடப்பற்றாக்குறையின் காரணமாக ஒருவர் மினாவை விட்டு, தன்னுடைய விருப்பப்படி வெளியில் தங்கலாமா? மினாவை விட்டு ஹாஜி எப்பொழுது வெளியில் வர வேண்டும்?
பதில் : ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் தஷ்ரீக்குடைய நாட்களான 11,12 ஆம் நாள் இரவன்று மினாவில் தங்கியிருப்பது, ஹஜ்ஜுச் செய்கின்றவர்கள் மீது உள்ள கடமையாகும் என்பது ஆதாரமான ஹதீஸ்களில் காணக் கூடிய தீர்ப்பாகும். யாருக்கு மினாவில் தங்கியிருக்க இடமில்லையோ, அவர் மினாவில் தங்கியிருப்பதனின்றும் விலக்கு அளிக்கப்படுகின்றார், அவர் பலிப்பிராணியை அறுத்துப் பலியிட வேண்டிய அவசியமில்லை.
ஒரு ஹாஜியானவர் 12 ம் நாளன்று ஷத்தானிற்குக் கல் எறிந்து முடித்தவுடன் மினாவை விட்டுக் கிளம்பலாம். ஆனால் 13 ம் நாளன்றும் இருந்து ஐஷத்தானிற்குக் கல் எறிந்து விட்டுச் செல்வது மிகச் சிறந்தது. (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : ஜம்ரத் துக்களைச் சுற்றி நாம் கல்லை பொறுக்கிக் கொள்ளலாமா?
பதில் : ஜம்ரத்தைச் சுற்றி இருக்கின்ற பகுதிகளில் கிடைக்கின்ற கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ள அனுமதி இருக்கின்றது. அந்தக் கற்கள் யாவும் ஜம்ரத்தை எறியப் பயன்படுத்தப்பட்ட கற்கள் அல்ல. மாறாக, ஏற்கனவே ஜம்ரத் தை எறிந்த பின், அதன் அடியில் உள்ள தொட்டியில் உள்ள கற்களை எடுப்பதற்கு அனுமதியில்லை. (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : ஒருவருக்கு தான் எத்தனை கற்கள் எறிந்தோம் என்ற சந்தேகம் வந்து விடுகின்றது? அவர் என்ன செய்ய வேண்டும்?
பதில் : ஜம்ரத் தைச் சுற்றிக் கிடைக்கின்ற கற்களை எடுத்தாவது, அவர் சரியான எண்ணிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : என்னுடைய தாயார் நோயாளி மற்றும் வயதானவர், அவருக்குப் பதிலாக நான் ஹஜ்ஜுச் செய்யலாமா?
பதில் : உங்களுக்காக ஏற்கனவே நீங்கள் ஹஜ்ஜுச் செய்து முடித்து விட்டீர்களென்றால், தாராளமாக உங்கள் தாயாருக்குப் பதிலாக ஹஜ்ஜுச் செய்யலாம். இருப்பினும், வருங்காலத்தில் (நோய் நீங்கி) அவரால் ஹஜ்ஜுச் செய்ய முடியும் என்ற நிலை இருந்தால், சிறந்த பேணுதலின் நிமித்தம் அவர் தனக்காகத் தானே ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்வது சிறந்தது. இறைவன் மிக அறிந்தவன். (இப்னு மனீ)
கேள்வி : ஹஜ்ஜுச் செய்வதற்காக கடன்கள் வாங்கலாமா?
பதில் : அவ்வாறு செய்வதற்கு அனுமதி இருக்கின்றது, ஆனால் அது தேவையற்றது. யாருக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு இல்லையோ, அவருக்கு ஹஜ் செய்வதனின்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. யாருக்கு அதனை நிறைவேற்றச் சக்தி இருக்கின்றதோ, அவர் மீது மட்டுமே கடமையாக இருக்கின்றது. எனவே, யாரிடம் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குரிய பணம் இல்லையோ, அவர் இதற்காக அடுத்தவரிடம் கடன் வாங்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் யார் யாருக்கெல்லாம் இதனை நிறைவேற்றச் சக்தியில்லையோ, அவர்களைச் சார்ந்தவராக இவர் இருக்கின்றார். அல்லாஹ் மிக அறிந்தவன். (ஷேக் இப்னு மனீ).
கேள்வி : ஒருபெண் உம்ராவை நிறைவேற்ற விரும்புகின்றார். ஆனால் அவரிடம் மஹ்ரமான ஆண்கள் இல்லை. இவர் தன்னுடைய தங்கை மற்றும் தங்கை கணவனுடன் உம்ரா செய்யச் செல்லலாமா?
பதில் : அல்லாஹ்வையும், அவனது இறுதி நாளையும் நம்பக் கூடிய ஒருவர் மஹ்ரமான துணையில்லாமல் உம்ராச் செய்வதற்காகச் செல்லக் கூடாது. அவரது தங்கையின் கணவர் இவளுக்கு மஹ்ரமான ஆண் துணையாக மாட்டார். எனவே, அவர் தன்னுடைய தங்கையின் கணவராக இருந்த போதிலும், அவருடன் இணைந்து உம்ரா செய்யச் செல்வது கூடாது. அவ்வாறு அல்லாமல், தன் தங்கையின் கணவனுடன் செல்வாராகில் அவர் ஒரு பாவத்தைச் செய்து விட்டார். ஏனென்றால், அவரது கீழ்படிதலுக்கு உரித்தவரான தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆண் மஹ்ரத்தின் துணை இல்லாமல் பெண் பயணத்தில் ஈடுபடுவதைத் தடுத்துள்ளார்கள். பெண்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கான சக்தி என்பது, அவர்களது (பயணத்திற்குத் துணையாகக்) கிடைக்கின்ற ஆண் மஹ்ரமாகும் என்று கூறினார்கள். அவ்வாறு ஒரு பெண்ணுக்கு உரிய மஹ்ரமான துணை கிடைக்கவில்லை எனில், அவர் மீது ஹஜ்ஜுக் கடமை இல்லை, அதிலிருந்து அவருக்கு விலக்களிக்கப்படுகின்றது. அவர் பொருளாதார நிலையிலும், உடல்நிலையிலும் சக்தி பெற்றவராக இருப்பினும் சரியே! இறைவன் மிக இறிந்தவன். (ஷேக் இப்னு மானீ)
கேள்வி : நான் உம்ராவை முடித்து விட்டேன். ஆனால் தலைமுடியைக் குறைக்க மறந்து, என்னுடைய இஹ்ராமைக் களைந்து விட்டு, என்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டேன், இந்த நிலையில் நான் என்ன செய்வது?
பதில் : மறதியின் காரணமாகவும், பிறரின் வற்புறுத்துதலின் காரணமாகவும் என்னுடைய உம்மத்தவர்கள் செய்த பாவங்களையும், தவறுகளையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)
உங்கள் மீது பிராணிகள் எதனையும் பரிகாரமாகப் பலியிட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, உங்களுடைய ஆடைகளைக் களைந்து விட்டு, இஹ்ராம் உடைகளை அணிந்து கொண்டு, உங்களது தலை முடிகளைக் களைந்து கொண்டு அல்லது குறைத்துக் கொண்டு விடுங்கள். உங்களுக்கு நாம் தவறு செய்து விட்டோம் என்ற ஞாபகம் வந்த பின்னரும் நீங்கள், உங்கள் முடிகளை இறக்கி அல்லது குறைத்துக் கொள்ளவில்லை எனில், ஹஜ்ஜின் கிரியைகளில் ஒன்றை நீங்கள் கடைபிடிக்காததன் காரணமாக, அதாவது, முடியைக் களையாமலும், குறைத்துக் கொள்ளாமலும் இருந்ததற்காக – உங்கள் மீது பரிகாரம் காணுவது அவசியமாகும். எனவே நீங்கள் ஒரு ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும். அல்லாஹ்மிக அறிந்தவன். (ஷேக் இப்னு மானீ)
கேள்வி : நான் கடனாளியாக இருக்கும் நிலையில் ஹஜ்ஜுச் செய்வது என் மீது கடமையா?
பதில் : ஹஜ்ஜுக்கும் கடனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இருப்பினும் கடனாளியாக ஒருவர் இருக்கின்ற நிலையில் செய்யக் கூடிய ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படும். ஒருவர் கடன் கொடுக்க வேண்டியது தவணை நிலுவையில் இருந்தால், அந்தக் கடனை அடைத்தாக வேண்டும், ஏனென்றால் வாங்கி கடனை அடைக்காமல் காலம் தாழ்த்துகின்ற வசதி படைத்தவனின் செயல் தவறானது. அவனைத் தண்டனைக்குள்ளாக்கி, அவனை இழிவுக்குள்ளாக்க வேண்டும். இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய கடனை அடைத்தாக வேண்டும். அந்தக் கடனை அடைத்த பின்பு அவன் தன்னுடைய ஹஜ்ஐஜப் பின்பு நிறைவேற்றட்டும். அவனால் கடனை அடைக்க இயலாவிடில், அவன் ஹஜ் செய்வதனின்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளான்.
இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (3:97)
அடுத்ததாக, கடனிருக்கும் நிலையிலேயே ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்று விட்டாரென்றால், இருப்பினும் அவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளத்தக்கதே, அவ்வாறு அவர் செய்வது பாவமானதாகும். (ஷேக் இப்னு பாஸ்)
கேள்வி : நான் ஹஜ் தமத்துஃ செய்தேன், தவாஃபுல் இஃபாழாவைச் செய்த பிறகு ஸயீயைச் செய்யவில்லை, ஸயீ என்பது உம்ராவுக்காகச் செய்த ஸயீயே ஹஜ்ஜுக்கும் போதுமானது என நினைத்துக் கொண்டேன். நான் பின்பு என்னுடைய நாட்டுக்குத் திரும்பி விட்டேன். நான் செய்தது சரியா?
பதில் : மார்க்கத்தில் அறிவு ஞானம் பெற்றவர்கள் (இறைவன் தன்னுடைய கருணையைப் பொழிவானாக) இந்த தமத்துஃ முறையில் ஹஜ்ஜுச் செய்பவர்கள் ஸயீயை இரண்டாக, ஒன்றை உம்ராவுக்காவும், இன்னொன்றை ஹஜ்ஜுக்காவும் நிறைவேற்ற வேண்டுமா என்பதில் கருத்து வேறுபடுகின்றார்கள். இதில் ஹஜ்ஜுக்கு ஒன்றும், உம்ராவுக்கு ஒன்றுமாக இரண்டு தடவைகள் ஸயீச் செய்ய வேண்டும் என்பதே அநேக அறிஞர்களின் கருத்தாக இருந்து கொண்டிருக்கின்றது. அதாவது, முதல் ஸயீ உம்ராவுக்கானது உம்ராவானது ஹஜ்ஜுடன் இணையாத தனியானதொரு கிரியையாக இருக்கின்றது. இந்த நிலையில் ஹஜ்ஜானது இன்னொரு அமலாக, கிரிiயாக இருக்கின்ற காரணத்தினால் அதற்கென தனியான கிரியைகள் இருக்கின்றன, அது தான் இரண்டாவது ஸயீயைச் செய்வது.
இருப்பினும், ஒரு ஸயீச் செய்வதே ஹஜ் மற்றும் உம்ராவுக்குப் போதுமானது என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். முஃரித் மற்றும் காரின் முறையில் ஹஜ்ஜுச் செய்பவர்களுக்கு, முதல் வருகையின் பொழுது அவர்கள் தவாஃபுல் குழூம் உடன் செய்யக் கூடிய ஸயீயே, தவாஃபுல் இஃபாதாவுக்குப் போதுமாதாக இருக்கின்றது என்பதைப் போல.. (இரண்டுக்கும் ஒரு ஸயீயே போதுமானது என்று கூறுகின்றார்கள்). இந்தக் கருத்து இமாம் அஹ்மது மற்றும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) ஆகியோர்களது கருத்தை ஒத்து இருக்கின்றது, அவர்களின் இருவேறு கருத்துக்களும் நிறைவானதாகவும் இருக்கின்றது.
யார் தமத்துஃ முறையில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜுச் செய்தார்களோ அவர்கள், ஒன்றுக்கு அதிகமான முறையில் ஸயீ யைச் செய்யவில்லை. இமாம் அஹ்மது அவர்களின் மகனார் அப்துல்லா அவர்கள் கூறுகின்றார்கள் : தமத்துஃ முறையில் ஹஜ்ஜுச் செய்பவர் எத்தனை தடவை ஸயீச் செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டார். அப்பொழுது, ஒருவர் தவாஃபையும், ஸயீயையும் இரண்டு முறை செய்வாரென்றால் அதுவே மிகச் சிறந்தது, ஆனால் அவர் ஒரு முறை ஸயீச் செய்வதில் எந்தத் தவறுமில்லை, எனக் கூறினார்கள். இருப்பினும், இரண்டு முறை ஸயீச் செய்வதையே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக இமாம் அஹ்மது அவர்கள் கூறுகின்றார்கள் : தமத்துஃ முறையில் ஹஜ்ஜுச் செய்பவர்கள் ஒரு முறை தவாஃபும், ஸயீயையும் செய்தாலே போதுமானது.
நபித்தோழர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வந்து தமத்துஃ முறையில் ஹஜ்ஜுச் செய்ய மக்கா வந்த பொழுது, கஃபாவை வலம் வந்து, பின்னர் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையில் ஸயீயையும் செய்தார்கள் என்பதில் அறிஞர் பெருமக்களிடம் ஒத்த கருத்து இருக்கின்றது. அவர்கள் ஹஜ்ஜின் பொழுது அரஃபா மைதானத்திலிருந்து திரும்பியவுடன், இன்னொரு ஸயீ யைச் செய்தார்களா? என்பதில் தான் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்கள். சிலர் அவர்கள் ஸயீயைச் செய்ததாகவும், சிலர் செய்யவில்லை என்றும் கூறுகின்றார்கள்.
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக இமாம் புகாரி அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களோ அல்லது அவர்களது நபித்தோழர்களோ ஒரு முறைக்கு அதிகமாக ஸயீயைச் செய்ததில்லை.
கீழ்க்கண்ட ஹதீஸ{ம் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ{க்கு வலுச் சேர்ப்பதாக இருக்கின்றது : மறுமை நாள் வரைக்கும், உம்ரா என்பது ஹஜ்ஜுடன் இணைந்த அல்லது உள்ளடங்கிய ஒன்று (முஸ்லிம்). இவ்வாறிருக்க, எப்பொழுது தமத்துஃ முறையில் ஒருவர் இஹ்ராம் அணிந்து கொண்டு விட்;டாரோ அவர், உண்மையிலேயே அவர் ஹஜ்ஜிற்கான கிரியைகளைத் துவங்கி விட்டார் என்பதே அர்த்தமாகும். ஆனால், பின்னால் வரக் கூடிய ஹஜ்ஜானது, முன்னால் செய்து முடித்து விட்ட உம்ராவுடன் பிரிக்கப்படக் காரணம் (இஹ்ராமைக் களைவது) ஹஜ்ஜுச் செய்யக் கூடியவரின் வசதியை முன்னிட்டு, அவருக்கு அதனை எளிதாக்கி விடும் பொருட்டுத் தான் அவ்வாறு செய்யப்பட்டிருக்கின்றது.
மேலே நாம் கூறிய அடிப்படையின் பிரகாரம், இன்னும் சில அறிஞர்கள் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டுக்குமே ஒரு ஸயீ யே போதுமானது என்று கருதுவதால், இந்தக் கேள்வியைக் கேட்டவர், ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஸயீச் செய்ததில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால், உங்களுக்கு நான் சொல்லக் கூடிய அறிவுரை என்னவென்றால், ஒரு பாதுகாப்பின் நிமித்தம் இரண்டுக்குமே தனித்தனியாகச் ஸயீச் செய்து கொள்ளுங்கள் என்பதேயாகும். அல்லாஹ் மிக அறிந்தவன். (ஷேக் இப்னு மனீ).
சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வலாஇலாஹ இல்லல்லாஹுவல்லாஹு அக்பர். சுப்ஹானக்க லாஇல்மலனா இல்லா மாஅல்லம்தனா, இன்னக்க அன்தல் அளீமுல் ஹக்கீம்.
-tamilislam.com