அமெரிக்காவின் உலக ஆதிக்கம் வீழ்கிறது
அமெரிக்க உளவுத்துறை தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் உலக ஆதிக்கம் விழத்தொடங்கி விட்டது என்றும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக இந்தியாவும் சீனாவும் 2025-ம் ஆண்டு உருவாகும் என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது.
2-ம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா உலக அரங்கில் எழுச்சி பெறத் தொடங்கியது. அமெரிக்காவும், ரஷியாவும் இரு துருவங்களாக உலக நாடுகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கின. ரஷியாவில் கம்ïனிஸ்டு ஆட்சி கவிழ்ந்ததும், உலக அரங்கில் தனிப்பெரும் கதாநாயகனாக அமெரிக்கா வீறு பெற்று எழத் தொடங்கியது.பொருளாதாரம், அரசியல், ராணுவம், வான்வெளி ஆராய்ச்சி என்று பல்வேறு துறைகளிலும் அமெரிக்காவின் செல்வாக்கும் ஆதிக்கமும் வானாளவ உயர்ந்தன. அமெரிக்காவின் டாலர் நாணயத்துக்கு உலகம் எங்கும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஐரோப்பிய நாடுகளையும், ஐ.நா.சபையையும் தன் சட்டைப் பாக்கெட்டுக்கும் போட்டுக்கொண்ட அமெரிக்கா,
`தான் சொல்வது தான் சட்டம்’ என்ற நினைப்பிலும், மதப்பிலும் நடந்து கொண்டு வந்தது.
உலக போலீஸ்காரனாக தன்னை மாற்றிக்கொண்ட அமெரிக்கா, உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் தன் மூக்கை நுழைக்கத் தொடங்கியது. அங்கு எல்லாம் மூக்கை நுழைத்து தனக்கு ஆதாயம் தேடத் தொடங்கியது.
பாலஸ்தீனம், தென் அமெரிக்க நாடுகம், கிïபா, மெக்சிகோ, கொலம்பியா, கொரியா, வியட்னாம், ஆப்கானிஸ்தான், ஈராக் என்று பலநாடுகளின் விவகாரத்திலும் மூக்கை நுழைத்த அமெரிக்கா, அங்கு எல்லாம் தன் ராணுவ வலிமையை காட்டியது. வியட்னாம் நாட்டில் அமெரிக்க ராணுவத்துக்கு பலத்த அடி விழுந்தது. ஆப்கானிஸ்தானத்தில் ரஷிய ஆதரவு கம்ïனிஸ்டு ஆட்சி நடந்து வந்தது. அதை ஒழிக்கவேண்டும் என்று இன்றைய முஸ்லிம் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் பின்லேடன், தலீபான் ஆகியோரை வளர்த்து விட்டதே அமெரிக்கா தான். வளர்த்து விட்ட தீவிரவாதிகளே அமெரிக்காவின் தலையில் கைவைத்தனர். அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
குவைத்தை ஈராக் கைப்பற்றியதை எதிர்த்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா முதல் முறையாக தாக்குதல் நடத்தியது. அடுத்து, பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்து இருப்பதாக கூறி 2-வது முறையாக அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது.
இப்படி தொடர்ந்து நடந்த போர்களால் அதன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இப்போது மிகப்பெரிய பொருளாதாரச்சரிவை சந்தித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா அவ்வளவு எளிதில் இதில் இருந்து மீள முடியாது என்று தெரிகிறது.
அமெரிக்க உளவுத்துறை (நேஷனல் இண்டலிஜென்ஸ் கவுன்சில்) சமீபத்திய உலகப்போக்கு பற்றி கொடுத்த அறிக்கையில், “அமெரிக்காவின் உலக ஆதிக்கம் விழத்தொடங்கி விட்டது” என்று குறிப்பட்டு உள்ளது.
உளவுத்துறை, அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
“அமெரிக்காவின் டாலர், உலகின் நாணயமாக தொடர்ந்து இருக்காது. உலக வெப்பமயமாதல் காரணமாக உணவு, தண்ணீர் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும். இது மேலும் அமெரிக்காவை பாதிக்கும்.
அடுத்த 20 ஆண்டுகளில் புதிய தலைமை உருவாகும். புதிதாக எழுச்சி பெற்று இருக்கும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும்.
2025-ம் ஆண்டில் இந்தியாவும், சீனாவும் தான் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக உருவாக இருக்கின்றன.
அணுஆயுதங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.
இவ்வாறு இந்த அறிக்கையில் உளவுத்துறை கூறியுள்ளது.
`நேஷனல் இண்டலிஜென்ஸ் கவுன்சில்’ ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை உலகப்போக்கு பற்றி அறிக்கை கொடுப்பது வழக்கம். 2004-ம் ஆண்டு கொடுத்த அறிக்கையில், `அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்ந்து வளரும்’ என்று கொடுக்கப்பட்டு இருந்தது.