தயாரிப்பாளர்கள் தங்களது உற்பத்திப் பொருள்களின் விலையைக் குறைப்பதன் மூலம், வியாபாரம் அதிகரித்து, அதனால் பொருளாதாரச் சுணக்கம் விலகும் என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார் நிதியமைச்சர் ப. சிதம்பரம். மோட்டார் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபயோகப் பொருள்களின் விலையைக் குறைத்தால், அந்தப் பொருள்களின் கலால் வரியைக் குறைக்க அரசும் முன்வரும் என்று உத்தரவாதமும் அளித்திருக்கிறார்.
பொருளாதாரச் சுணக்கத்தின் அடிப்படையே, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் குறைந்து, வாங்கும் சக்தி குறைந்திருப்பதுதான். வாங்கும் சக்தி குறையும்போது இயற்கையாகவே பொருள்களின் விலையும் குறைந்துவிடும் என்பது அடிப்படைப் பொருளாதார இலக்கணம். வாங்கும் சக்தி குறைவாக இருக்கும் நிலையில் வலியப் போய் விலையைக் குறைப்பதால் மட்டும் விற்பனை அதிகரித்து விடவா போகிறது?
இரண்டு பிரச்னைகள் நம்மை எதிர்நோக்குகின்றன. முதலாவது பிரச்னை, பொருளாதாரத் தேக்கம். அதற்குக் காரணம், அளவுக்கு அதிகமாக அன்னிய முதலீடு நமது பங்குச் சந்தையில் விளையாடியதுபோக, அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் திடீர் பொருளாதார வீழ்ச்சியால் அவை அன்னிய முதலீட்டாளர்களால் கொண்டு செல்லப்பட்டுவிட்டதுதான். போதாக்குறைக்கு, நமது ஏற்றுமதிகளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், உற்பத்தி குறைந்து அன்னியச் செலாவணி வரவும் குறைந்திருக்கிறது.
இதன் தொடர் விளைவாக, எல்லாத் துறைகளிலும் மந்த நிலை காணப்படுகிறது. ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருந்த பல நிறுவனங்களில், தங்களது ஊழியர்களுக்கு முந்தைய சம்பளத்தைத் தர முடியாத நிலைமை. ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு என்று ஏற்படுவதால், அளவுக்கு அதிகமாக இருந்த நுகர்வோர் பொருள்களின் விற்பனை கணிசமாகக் குறைந்துவிட்டது. அது, மொத்தத்தில் காணப்படும் மந்த நிலையை மேலும் பலப்படுத்துகிறது.
இரண்டாவது பிரச்னை, நிறுவனங்கள் தொடர்பானது. உலகச் சந்தையை மட்டுமே நம்பி இருந்து, இப்போதைய உலகப் பொருளாதாரச் சரிவால் பெருத்த நஷ்டமடையும் நிறுவனங்கள், தங்களைக் காப்பாற்றும்படி அரசைக் கோருகின்றன. அமெரிக்காவில் செய்ததுபோல, இந்திய அரசும் மக்களின் வரிப்பணத்தை இந்தத் தனியார் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடு செய்ய ஏன் தரக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?
இந்த இரண்டாவது பிரச்னையைப் பொருத்தவரை, ஏற்றுமதி நிறுவனங்கள் எல்லாமே வருமான வரி உள்பட அத்தனை வரிகளுக்கும் விலக்குப் பெற்றவை. அவர்கள் டாலர்களில் சம்பாதிக்கும்போது, அந்த வருமானத்தை அந்தந்த நிறுவனங்களைப் பன்னாட்டு நிறுவனங்களாக வளர்த்துக் கொள்ளவும், இந்தியாவில் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவும் பயன்படுத்தினார்களே தவிர, ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்த ஏற்றுமதி நிறுவனங்களால் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்பது உண்மை. அதன் தொடர்விளைவுதான், நுகர்வோர் பொருள்களான மோட்டார் வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள், உள்நாட்டு விமானப் போக்குவரத்து, அதிக விலையுள்ள குடியிருப்புகள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்ததும், அதனால் நகர்ப்புறப் பணப்புழக்கம் அதிகரித்ததும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், இந்த நுகர்வோர் தேவையில் இன்னொரு பகுதியாகச் சேமிப்புக்குப் பதில் கடன் வாங்குவது என்கிற கலாசாரம் வளர்ந்தது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
தயாரிப்பாளர்களைப் பாதுகாத்து, நஷ்டப்படும் நிறுவனங்களை அரசு நிதியுதவி அளித்துக் காப்பாற்றுவதா அல்லது ஒட்டுமொத்த பொருளாதாரத் தேக்கத்தை அகற்ற முடியாவிட்டாலும், மேலும் சரிவு ஏற்படாமல் தடுக்க முற்படுவதா என்பதுதான் அரசின் முன் இருக்கும் கேள்வி. பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதாலும், மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்பதாலும், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் இப்போது நஷ்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனங்களை அரசு காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கிறது.
வங்கிகள் கடன்களை வாரி வழங்கி பொருளாதாரத் தேக்கத்தை அகற்ற முற்படுவதும் அபத்தமான தீர்வு. வாராக்கடன்களால் வங்கிகள் திவாலானால், அந்த வங்கிகளைக் காப்பாற்றுவது யார்? தனியார்மயம், சந்தைப் பொருளாதாரம், சந்தைத் தேவைகளையும், இருப்புகளையும் சமன் செய்து கொள்ளும் என்று கூக்குரலிட்டு, அரசின் அத்தனை கண்காணிப்பையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்துவிட்டு இப்போது மக்கள் வரிப்பணத்தால் தனியார் நிறுவனங்களைக் காப்பாற்ற முயல்வது மிகப்பெரிய வியாபார மோசடி.
ஜி – 20 மாநாட்டில், நமது பிரதமர் அந்த நாடுகளுக்குச் சொன்ன அறிவுரை இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? சந்தைப் பொருளாதாரச் சரிவை, சந்தைப் பொருளாதாரம் பார்த்துக் கொள்ளட்டும். மக்கள் வரிப்பணத்தால் தனியார் நஷ்டங்களை ஈடுசெய்ய முயல்வது என்பது பொருளாதார மோசடி!
தினமணி