‘தன் பிள்ளை(களை)விட, பெற்றோர்களைவிட, மற்றுமுள்ள ஏனைய ஜனங்களைவிடவும் அவருக்கு நான் மிக விருப்பமுள்ளவராக ஆகும்வரை, உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
மூன்று காரியங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர் அவைகளின் மூலமாக ஈமானின் இன்பத்தைப் பெற்றுவிடுகின்றார்.
1. அவ்விருவரல்லாத மற்றனைத்தையும்விட அல்லாஹ்வையும் அவனது தூதரும் அவருக்கு மிகப்பிரியமானவர்களாக இருக்க வேண்டும். 2.
அவர் மனிதரை நேசிப்பார் அந் நேசம் அல்லாஹ்வுக்காக அன்றி (மற்றெவருக்காகவும்) இருக்காது. 3. (குப்ர் எனும்) இறை நிராகரிப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தபின் நரகத்துக்குள் போடப்படுவதை வெறுப்பதுபோன்று, மீண்டும் குப்ர் (இறை நிராகரிப்பு)க்குள் திரும்பச் செல்வதை அவர் வெறுக்கவேண்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
‘யார் அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களைத் தூதராகவும் பொருந்திக் கொண்டாரோ அவர், ஈமானின் சுவையை சுகித்தவராவார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றதாக, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம்)
‘நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்படமற்ற நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்கிறதோ, அவர் அதை விட்டு விடும்வரையிலும் நயவஞ்சகத்தில் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்.
‘அவர் பேசினால் பொய்யுரைப்பார். ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார். வாக்கு கொடுத்தால் மாறி விடுவார். தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க முற்பட்டுவிடுவார்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆயினும் நிச்சயமாக ஸ{ப்யானுடைய ஹதீஸில் அவைகளில் ஒரு குணம் அவரி(டத்தி)ல் இருப்பின் நயவஞ்சகத்தின் ஒரு குணமும் அவரிடத்தல் இருக்கும் என வந்துள்ளது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
‘நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். அவன் பேசினால் பொய் பேசுவான். அவன் வாக்களித்தால் அதற்கு மாற்றம் செய்வான். அமானிதம் கொடுக்கப்பட்டால் மோசடி செய்துவிடுவான்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)