அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தான் குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவும் பிறகு அதில் குளிக்கவும் வேண்டாம். பிறகு அதில் உலூ செய்யவும் வேண்டாம். ஏனெனில் அதில் தான் பெருமளவு வஸ்வாஸ் (மனக்குழப்பம்) உள்ளது என்று அப்துல்லாஹ் பின் முகப்பல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ, அபூ தாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)
பொந்துக்குள் சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் பின் சார்ஜில் அறிவிக்கிறார்கள்.
பொந்துக்குள் சிறுநீர் கழிக்க தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன என்று (அறிவிப்பாளர்) கதாதா அவர்களிடம் கேட்கப்பட்டது. பொந்துகள் ஜின்கள் வசிக்கும் இடம் என்று சொல்லப்பட்டதாக அவர் பதில் சொன்னார். (நூல்: அபூ தாவூது)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டிலுக்கு அடியில் மரப்பாத்திரம் (வைக்கப்பட்டு) இருக்கும். அதில் இரவில் அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள் என்று உமைமா பின்து ருகையா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது, நஸயீ, ஹாகிம்)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘சாபத்திற்குரிய இரண்டை – தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! சாபத்திற்குரிய அவ்விரண்டும் யாவை? என்து வினவியதும், ‘மக்கள் (நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: அபூ தாவூது, முஸ்லிம், அஹ்மத்)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சாபத்திற்குரிய மூன்று காரியங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவை: நீர்துறைகள், நடுப்பாதை, நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மல, ஜலம் கழிப்பதாகும் என்று முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது) (குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் இப்னுமாஜா அவர்களும் தனது நூலிலும் பதிவு செய்துள்ளார்கள். முஆத் பின் ஜபல் (ரளி) வழியாக அறிவிக்கும் அபூஸயீத் அல்ஹிம்யரீ என்பார் முஅத் அவர்களிடம் எதையும் செவியுற்றதில்லை என்று இப்னுல் கத்தான் கூறுவதாக ஹாபிள் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள். எனவே இது முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும்.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவரும் போது ‘குஃப்ரானக்” (இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறுவார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது)