முஸ்லிம் தலைவர்களும் இஸ்லாமிய தலைமையும்
பின்வரும் இறை வசனத்தை ஓர் ஆட்சித்தலைவர் தன் இலட்சியமாகக் கொள்ளவேண்டும்.
”அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள்.” (சூரா அல் ஹஜ் 22:41)
இன்று ‘மஹல்லா” ‘முத்தவல்லி” அமைப்பில் இருந்து துவங்கி உலக அரங்கில் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் ஆட்சித்தலைமை வரை எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்களுக்குத் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பொதுவாகத் திருமறை குர்ஆனில் எங்கெல்லாம் ‘தலைமை” (இமாமத்) பற்றி சொல்லப்டுகிறேதோ அங்கெல்லாம் ‘வழிகாட்டுதல்” (ஹிதாயத்) பற்றிச் செல்லப்படாமல் இருப்பதில்லை.
”நம் கட்டளையைக் கொண்டு மக்களுக்கு நேர்வழி காட்டும் இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம்”. (சூரா அல் அன்பியா 21:73)
‘அவர்கள் பொறுமையுடன் இருந்து நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக்கொண்டபோது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழிகாட்டும் தலைவர்களை அவர்களில் நின்றும் உண்டாக்கினோம். (சூரா அஸ் ஸஜ்தா 32:24)
மேற்கண்ட வசனங்கள், இஸ்லாமியத் தலைமைக்குரிய அடிப்படை இலக்கணமே மக்களுக்கு நேர்வழி காட்டுதல்தான் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலும் அது ஏதோ ஒரு வழிகாட்டுதல் அல்ல. ‘நம்முடைய கட்டளையைக் கொண்டு” – அதாவது அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு வழிகாட்டுவதுதான் தலைமைக்குரிய அடிப்படைப் பண்பாகும் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
அதாவது, முஸ்லிம்களின் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் தலைமையும் தாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுக்கும் அல்லாஹ்வுடைய கட்டளைகளை – வழிகாட்டுதலை – ஆதாரமாகக் காட்டக்கூடியவர்களாக இருந்திட வேண்டும்.
அந்த முடிவுகள் – வணக்க வழிபாடுகள் குறித்து இருந்தாலும் சரி, முஸ்லிம்களின் சமூக, பொருளாதார அல்லது அரசியல் பிரச்னையாக இருந்தாலும் சரியே!
இஸ்லாமியத் தலைமைக்குரிய அடுத்த இலக்கணம் தக்வா என்னம் ‘இறையச்சம்”. இது தலைமைக்கு மிக மிக அவசியம்.
ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மக்களைக் கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்”. புகாரி, முஸ்லிம்
தமது பொறுப்பு குறித்து இறைவன் விசாரணை செய்திடுவான் என்ற அச்சம் ஒவ்வொரு தலைரிடத்தும் காணப்படிவேண்டிய அரும்பண்பாகும்.
இறையச்சம் இல்லாத ஒரு தலைவர் மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்துச் செல்ல எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில்,
‘இறையச்சம் உடையவருக்கே இந்த குர்ஆன் வழிகாட்டும்” (சூரா அல்பகரா 2:2)
தலைமைக்கு நேர்வழி கிட்டவில்லையென்றால் அவர் மக்களுக்கு எங்ஙனம் நேர்வழி காட்ட முடியும்?
எனவேதான் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட கலீஃபாக்கள், அதனை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல், ‘இந்த பொறுப்பு குறித்து இறைவனுக்கு எங்ஙனம் பதில் சொல்வேன்? என்ற அஞ்சி கண்ணீர் சிந்திய நிகழ்ச்சிகளை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.
இஸ்லாமியத் தலைமைக்குரிய அடுத்த பண்பு ‘இல்ம்” என்ப்படும் ‘இஸ்லாமிய அறிவு”.
எந்த ஒரு விஷயத்தில் ஒருவனுக்கு அறிவு இல்லையோ, அந்த விஷயம் குறித்து அவன் மற்றவர்களுக்கு வழிகாட்டிட இயலாது.
எனவே இறைவனின் வழிகாட்டுதலின் பக்கம் அழைத்துச் செல்கின்ற இஸ்லாமியத் தலைமை இறைவனின் வழிகாட்டுதல் குறித்த முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
எப்போது இஸ்லாமியத் தலைமை மார்க்கத்தைக் கற்றுணர்ந்த அறிஞர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு மார்க்க அறிவைப் பெற்றிராத முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்ட்டதோ அன்றில் இருந்துதான் முஸ்லிம்களின் பிரச்னைகள் சிக்கலாக்கப்பட்டன என்பதை யாரும் மறுக்க இயலாது.
‘அறிவு” (இல்ம்) என வருகிறபோது தலைவராக இருக்கின்றவர் வெறும் இஸ்லாமிய அறிவைப் பெற்றவராக இருந்தால் மட்டும் போதாது. தம்மைச் சுற்றி வாழும் ஜாஹிலிய்யாவைப் பற்றியும் அவர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
இதையே கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்:
‘இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து, ஜாஹிலிய்யாவை அறியாத ஒருவன் இஸ்லாத்தையே அலைக்கழித்து விடுவானோ என நான் அஞ்சுகின்றேன்.”
ஆகவே, தன்னைச் சுற்றியிருக்கும் அஞ்ஞான சக்திகள், இஸ்லாத்தை வெறுக்கும் சக்திகள், இஸ்லாத்தை வாழ்க்கை வழியாகக் கொண்டு நிற்கும் முஸ்லிம்களை வேரறுக்க வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சக்திகள், இவற்றைப் பற்றிய அறிவைப் பெறாதவர்களைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினால் அவர்கள் முஸ்லிம்களை அலைக்கழித்துவிடுவார்கள்.
அடுத்து இறையச்சத்தை கொண்டு வழி நடத்தப்படும் விஞ்ஞான கல்விக்கு, ஆராய்ச்சிகளுக்கு ஆவன செய்து தருவது, இஸ்லாமியத் தலைமையின் பிறிதோர் பிரிக்க முடியாத பகுதியாகும்.
அதேபோல் ஹலாலானவற்றை நிலைநிறுத்த வேண்டும். ஹராமானவற்றை தலைகாட்ட விடாமல் தடுக்கவேண்டும்.
பலம் குன்றியவர்களை, பலமானவர்கள் அச்சுறுத்தியும், அநியாயங்களுக்கு ஆட்படுத்திடாமலும் பாதுகாத்திட வேண்டும். இப்படிப் பலங்குன்றியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாயும் இருக்கலாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத சிறுபான்மையினராகவும் இருக்கலாம்.
யாரும் குற்றங்கள் செய்திட கட்டாயப்படுத்திடாத அளவுக்குச் சமுதாயச் சூழ்நிலைகளை நியாயம் நிறைந்ததாக ஆக்கி வைத்திட வேண்டும் ஆட்சியாளர்.
எல்லா நிலைகளிலேயும், எல்லாப் பிரச்னைகளிலும் குடிமக்கள் அனைவரும் நியாயம் மிக எளிதாகக் கிடைக்கும் வண்ணம் நீதி பரிபாலனத்தை நிலைநிறுத்த வேண்டும். இதில் அவரே மார்க்க அறிஞராகவும் நீதி வழங்கிட வல்லவராகவும் இருந்திட வேண்டும்.
இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்க்ள நீதிமானாக இருந்தார்கள். அவர்களைப் பின்பற்றி ஆட்சி நடத்திய நேர்வழி பெற்ற கலீஃபாக்களும் அப்படியே இருந்தார்கள். இவர்களெல்லாம் எப்படிப் பட்ட நீதியை நிலைநாட்டினார்கள் தெரியுமா?
ஒரு வரலாற்று நிகழ்ச்சி
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் எகிப்தின் கவர்னராக நியமிக்கப் பட்டிருந்தார்கள். இவர்களது மகன் ஒரு முறை ஒரு சாராரண குடிமகனைச் சாட்டையால் அடித்துவிட்டார். சிறு நிகழ்ச்சியேயானாலும் இது, ஆட்சித்தலைவர் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. எகிப்தின் கவர்னருடைய மகன் குற்றம் சாட்டப்பட்டு நின்றார். கலீஃபா அவர்கள் சற்றும் சலனமின்றி அந்தச் சாதாரண குடிமகனின் கைகளில் சாட்டையைத் தந்து பழி தீர்த்துக் கொள்ள வகை செய்தார்கள். அத்தோடு எகிப்தின் கவர்னரைப் பார்த்து கலீஃபா உமர் (ரலி) அவர்க்ள இப்படிக் குறிப்பிட்டார்கள்.
‘அல்லாஹ் அவர்களை சுதந்திரமாகப் படைத்திருக்கும்போது நீங்கள் ஏன் அவர்களை அடிமைகளாக நடத்துகின்றீர்கள்?”
அல்லாஹ் கூறுகின்றான்.
‘முஃமின்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான.” (அல்குர்ஆன் 5:8)
சமுதாயத்தில் நீதியையும், நிம்மதியையும் நிலைபெறச் செய்த பின்னர், ஆட்சியாளர், ஆட்சித்தலைவர், நம்பிக்கையாளர்களின் தலைவர் என்ற பொறுப்பில் ஒரு அடிப்படைக் கடமையை நிலைநாட்ட வேண்டும்.
அது ‘தாருல் இஸ்லாம்” என்ற இஸ்லாத்தின் ஆட்சி நிலை நாட்டப் பட்ட இடங்களைப் பாதுகாப்பது, விரிவுபடுத்துவது.
இதில் பின்வரும் இறைவசனங்களின் உட்பொருளை அறிந்து செயல்படவேண்டும்.
(இஸ்லாத்தின் எதிரிகளான) அவர்களை எதிர்பதற்காக (ஆயுத) பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்). அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்படமாட்டாது. அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாயுங்கள். அல்லாஹ் மீதே நம்பிக்கை வைப்பீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனும், (யாவையும்) நன்கறிந்தொனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:60,61)
ஆக, ஜிகாதிற்கான தயார் நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை வைத்திருக்க வேண்டும்.
இத்தோடு தொடர்புடைய பிறிதோர் பணி இருக்கிறது.
அது இஜ்திஹாத்!
இஜ்திஹாத் என்பதற்கு இருபதாம் நூற்றாண்டின் மார்க்க மேதை அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்) அவர்கள் தனது உலகப் புகழ்பெற்ற நூலாம் ‘இஸ்லாமும் இன்றைய உலகமும்” என்ற நூலில் இப்படி விளக்கம் சொல்கின்றார்கள்.
‘இஜ்திஹாத் என்பது மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கைப் போக்குக்குத் தக்கபடி இஸ்லாமிய உலகையும் முன்னேற்றிக் கொண்டே செல்வதாகும்.
இதற்கு இஸ்லாத்தின் வழிகாட்டுதல் பற்றிய ஆழமான பார்வையும் அகலமான பார்வையும் தேவைப்படுகின்றது. இன்னும் இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதல்கள், சட்டங்கள் இவற்றில் அமிழ்ந்து கிடக்கும் ஆழிய ஞானம் இவையும் தேவைப்படுகிறது. அதேபோல் இயற்கை வளங்களை இஸ்லாத்தின் சேவைக்காகப் பயன்படுத்திட வேண்டிய அறிவும் அகப்பார்வையும் தேவை. இந்த இயற்கை வளங்கள் இறைவனையும், மறுமையில் அவனுக்குப் பதில் சொல்லவேண்டும் என்ற கொள்கையையும் மறுக்கின்றவர்களின் கைகளுக்குப் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறைவனையும் மறமையையும் மறுப்பவர்கள் இந்த வளங்களைக் கையகப்படுத்திக் கொண்டால் பூமியில் குழப்பங்களையும், அடாவடித்தனங்களையுமே அதிகமாக வளர்ப்பார்கள்”.
ஆக, ஆட்சியாளர் – ‘இமாம்” இந்த அறிவையும், ஞானத்தைப் பெற்றவராகவும், சதா சர்வகாலமும் உஷார் நிலையிலும் இருக்க வேண்டும். அதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
கல்வியில் முஸ்லிம்களையும், முஸ்லிம் உலகையும் கரம் பிடித்து அழைத்துச் செல்பவராக இருக்க வெண்டும் நம்பிக்கையாளர்களின் தலைவர்.
பைத்துல் மாலில் மிகவும் கவனமுடனிருக்க வேண்டும். ஜகாத்தையும், தொழுகையையம் ஒன்றுபோலவே நிலைநாட்ட வேண்டும்.
ஆடம்பரம் சற்றும் தலைகாட்டாத மிகவும் எளிய வாழ்க்கையையே வாழ்ந்திட வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமையை எல்லா நிலைகளிலேயும் கட்டிக்காக்கும் அளவில் தன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் ஒற்றமையைக் குலைக்க எல்லா முயற்சிகளையம் மேற்கொள்வார்கள்.
முஸ்லிம் சமுதாயத்தில் சில தான் தோன்றிகள் தங்கள் அதிகாரம் நிலைக்க அல்லது தாங்கள் தலையெடுக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமுதாயத்தைப் பிளக்க நினைக்கலாம். இவர்கள் சில நேரங்களில் ஜாஹிலிய்ய தலைமையும் இதற்காகவே கைகோர்க்கலாம்.
இதுகுறித்தும் ஆட்சியாளர் அதிகக் கலனம் செலுத்த வேண்டும்.
எங்கெல்லாம் எப்போதெல்லாம் முஸ்லிம்களிடையே பிளவுகளுக்கான விதைகள் தூவப்படுகின்றனவே அங்கெல்லாம் விரைந்து சென்று அதனைக் களைந்திட வேண்டும்.
இந்நிலையில் உள் விவகாரத்துறையும் வெளி விவகாரத்துறையும் திறம்பட இயக்கப்பட வேண்டும் ஆட்சியாளரால்.
இந்த வகையில் கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின்போது நடந்த நிகழ்ச்சியொன்றை இங்கே நினைவு கூறலாம்.
நானிலம் போற்றும் நல்லதோர் நபித்தோழர் ஃகாலித் பின் வலீத் (ரலி) அவர்கள் இவர்களை ‘அல்லாஹ்வின் போர்வாள்” எனவம் அழைப்பார்கள். பல போர்கள் இவர்களின் தலைமையில் நடைபெற்றது. அத்தனையிலும் வெற்றி! காலப்போக்கில் முஸ்லிம்களில் சில பாமர முஸ்லிம்களிடம் ஓர் எண்ணம் தலை தூக்கிற்று.
முஸ்லிம்களின் வெற்றிக்கு காரணம் ஃகாலித் பின் வலீத் (ரலி) அவர்கள்தாம் என்பதே அந்த எண்ணம்! இந்த எண்ணம் நம்பிக்கை என்ற அளவுக்கு வளர்ந்து விடுவதற்கு முன் இதனைத் தடுத்திட நினைத்தார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள். வெற்றி, தோல்வி என்பது அல்லாஹ்விடமிருந்து வருவதே என்ற நம்பிக்கை மட்டுமே மக்களிடம் நிலைபெற வேண்டும். இதையே நிலைநாட்டிட விழைந்தார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள். இதனால் ஃகாலித் பின் வலீத் (ரலி) அவர்களை தளபதி பொறுப்பிலிருந்து கீழிறக்கினார்கள். கலீஃபா உமர் (ரலி) அவர்க்ள அதன்பின் பல போர்களில் அவர்கள் சாதாரண வீரராகவே கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வுகளை வைத்துக் கொண்டு சிலர் ஃகாலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கும், கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் வளர்ந்துவிட்டன எனப் பேசிட ஆரம்பித்தார்கள்.
இதுபோன்ற செய்திகள் விரிந்த அந்த இஸ்லாமிய நிலப்பரப்பில் பரவிக் கொண்டிருக்கின்றன என்ற செய்தியை கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அறிந்தார்கள். உடனேயே ஃகாலித் பின் வலீத் (ரலி) அவர்களை அழைத்தார்கள். ஷ_றாவைக் கூட்டினார்கள். பேசினார்கள். பிரச்னையைத் தீர்த்தார்கள்.
எல்லா கவர்னர்களுக்கும் கடிதம் எழுதினார்கள். அதில் ஃகாலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கும் எனக்குமிடையில் எள்முனை அளவு கூட கசப்போ கருத்துவேறுபாடோ இல்லை. அதுபொன்ற செய்திகளைப் பேசிடவேண்டாம். நாங்கள் ஷ_றாவின் முன்னிலையில் அனைத்தையும் பேசித் தீர்த்துக் கொண்டோம். இதை மக்கள் அனைவரிடமும் சொல்லி விடுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.சிலர் ஃகாலித் பின் வலீத் (ரலி
_ அவர்களிடம் ஃகாலித் (ரலி) அவர்களே! நாங்கள் எங்கே பிளவுகள் முஸ்லிம்களிடையே வந்து விடுமோ என் அஞ்சினோம்” எனக் குறிப்பிட்டார்கள்.
இதற்கு ‘அல்லாஹ்வின் போர் வாள்” ஃகாலித் பின் வலீத் (ரலி அவாகள் இப்படிப் பதில் சொன்னார்கள்:
ஃகலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில அது நிச்சயமாக நடக்காது”.
இதுபோன்று வதந்திகளை – குறிப்பாக முஸ்லிம்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வதந்திகளை விரைந்து வேரறுக்கும் தகைமையும் தலைவருக்கு – ஆட்சித் தலைவருக்கு இருக்க வேண்டும். இதில் அவருக்கு ஆலோசனைக் குழு என்ற ஷ_றாவின் உதவி எப்போதும் உண்டு.
இறைவன் கூறுகின்றான்.
தங்கள் இறைவனின் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலை நிறுத்துவார்கள். அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வார்கள். மேலும், நாம் அவர்களுக்கு அறித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். (அல்குர்ஆன் 42:38)
இன்னும் சில தகுதிகள்
இன்னும் சில தகுதிகளை இங்கே சுட்டிக்காட்டுகின்றோம்.
அவைகளில் ஒன்று – ‘உறுதிகொண்ட நெஞ்சம்”!
அபூதர் (ரி) அவர்களிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
‘அபூதர்ரே!” நான் உம்மைப் பலவீனம் உடையவராகக் காண்கிறேன். எனவே தலைமையை விரும்பாதீர். உமது பொறுப்பில் வருபவர் இரண்டு பேராக இருந்தாலும் சரியே!”
இதில் இருந்து தெரிவது, இஸ்லாமியத் தலைமைக்குப் பலவீனம் கூடவே கூடாது என்பதுதான். எனவே பலம் தேவை. இது எப்படிப்பட்ட பலம்?
அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் பதவி ஏற்றதும், ஒரு பிரிவினர் ‘தொழுவோம், ஆனால் ஜகாத் தரமாட்டோம்” என்ற சொன்னபோது அவர்கள் சொன்னார்கள். ‘ஒரு ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறு அளவாக அது இருப்பினம் அதனை அவர்களிடம் இருந்து பெறும் வரையில் போர் தொடுப்பேன்.”
இதுதான் உறுதி! இதுதான் பலம்!
ஒரு விஷயத்தில் இதுதான் இறைவனின் தீர்ப்பு என்று தெரிந்து விடும் பட்சத்தில் அதனைச் செயல்படுத்திடுவதற்குக் கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டிடக்கூடாது.
அடுத்து இஸ்லாமியத் தலைவர் பதவிக்காக அலைபவராக இருந்திடக் கூடாது.
ஒரு தடவை இரு நபித்தோழர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் வந்தார்கள்.
அவர்களில் ஒருவர் ‘யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தில் ஏதாவது ஒன்றுக்கு என்னைத் தலைவராக்குங்களேன்” என்றார்.
அடுத்த நபித்தோழரும் அதுபோன்றே கேட்டுக் கொண்டார்.
அண்ணலார் மறுமொழி பகந்தார்கள்: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! யார் பதவியைக் கேட்கிறார்களோ, யார் அதற்காக ஆசைப்படுகிறார்களோ அவர்களில் யாரையும் நான் அப்பதவிக்கு நியமிக்கவே மாட்டேன்!”
அடுத்த இஸ்லாமித் தலைமை தனது அதிகாரத்தைக் குடும்பச் சொத்தாக கருதிவிடக்கூடாது!
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர், ஒருவரை தன் உறவினர் அல்லது நண்பர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம்கள் மீது அதிகாரியாக நியமித்து விடுவார் எனில், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும். அறிவிப்பாளர் : யஸீத் பின் அபூஸ_.ப்பான் (ரலி) அடுத்து, இஸ்லாமியத் தலைவர் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவராக அமைந்திட வேண்டும்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் பின் ஜபல் (ரி) அவர்களை யமன் நாட்டு நீதிபதி அல்லது ஆளுநராக நியமித்து அனுப்பியபோது ‘முஆதே! உல்லாசம் அனுபவிப்பதில் இருந்து உம்மை நீர் காத்துக் கொள்ளும். ஏனெனில் அல்லாஹ்வின் நல்லடியார்கள் உல்லாசம் அனுபவிப்பதில்லை!” என்று அறிவுரை பகர்ந்தார்கள். (மிஷ்காத்)
மேலும் இஸ்லாமியத் தலைமை என்பது எளிதில் அணுகக் கூடியதாக அமைந்திட வேண்டும். தலைவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு தங்களை உயர்த்திக் காட்டிக்கொள்ளக்கூடாது. இஸ்லாமியத் தலைமை பொதுமக்களின் நலன் நாடக்கூடியதாக அமைந்திட வேண்டும். பொதுமக்களை மோசடி செய்திடக்கூடாது. பொதுமக்களைத் தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடிமைகள் என்று கருதிடக்கூடாது. பொதுமக்ககள் தங்களை விமர்சிப்பதைத் தடை செய்தல் கூடவே கூடாது.
இவைகளெ இஸ்லாமித் தலைக்குரிய முக்கியமான பண்புகள்.
இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தகுதிமிக்க தலைவர்களையும் நாம் பெற்றே வந்திருக்கின்றோம். தகுதியில்லாத தலைவர்களும் நம்மை ஆட்டிப்படைத்திருக்கின்றார்கள் என்பத புரியும்.
நமக்குத் தலைமை தாங்கிடும் இஸ்லாமியத் தலைவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை நாம் துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
தொழுகையும், ஜகாத்தும் நமக்கு எவ்வாறு அடிப்படைக் கடமைகளொ அதுபோல ‘தக்வா”வுள்ள தலைமையைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு மிக முக்கியமான கடமையே!
-மு.முஹம்மத் Tamil muslim.com