101. கேள்வி – இஸ்ராயில் என்ற மலக்கே கிடையாது என சிலர் கூறுவது குறித்து ?
பதில் : உண்மைதான். உயிரைப் பறித்துக் கொண்டு போகும் மலக்கை நம் மக்கள் பரவலாக இஸ்ராயீல் அல்லது இஜ்ராயீல் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஆனால் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ அப்படி எந்தப் பெயரும் வரவில்லை. உயிரை கைப்பற்றுவதற்காக இறைவன் ஒரே ஒரு மலக்கை நியமிக்கவில்லை. அந்த வேலையை செய்வதற்காக ஒரு தனி படையே இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை குர்ஆன் வசனங்களை சிந்திக்கும் போது விளங்கலாம்.
உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவுத்” (மரணத்திற்குரிய மலக்கு) உங்கள் உயிரைக் கைப்பற்றுவார். பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 32:11)
‘உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும்” என்ற வார்த்தை ஒரு மலக்கு மட்டுமே அனைவரின் உயிரையும் கைப்பற்றுவதில்லை என்பதை விளக்குகிறது.
அவர்களின் முகங்களிலும் – அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து மலக்குகள் (வானவர்கள்) அவர்களை மரணமடைய செய்யும் போது எப்படி இருக்கும்? (அல் குர்ஆன் 47:27)
இந்த வசனத்தில் இறைவன் மலக்கு என்ற ஒருமைச் சொல்லை பயன்படுத்தாமல் ‘மலாயிகஹ்” என்ற பன்மைச் சொல்லை பயன்படுத்தியுள்ளான். வானவர்கள் இந்தக் காரியத்தை கவனிக்கிறார்கள் என்கிறான். இதிலிருந்து மவுத்துக்குறிய மலக்கு என்ற அடைமொழியுடன் அந்த பணிக்காக ஏராளமான வானவர்களை இறைவன் நியமித்துள்ளான் என்று தெரிகிறது. இவர்களுக்கெல்லாம் தலைவர் இஸ்ராயீல் என்று கூறுவதற்கெல்லாம் ஆதாரம் எதுவும் இல்லை.
102. கேள்வி: ஜும்ஆவில் இமாம் குத்பா நிகழ்த்தும்போது எவராவது பள்ளியில் நுழைந்தால் உட்கார்ந்துவிடுவது வழக்கம். குத்பாவைக் கேட்டால் இரண்டு ரக்அத் தொழுத நன்மை கிடைக்கும் என்பது ஹதீஸ். ஆனால் இன்று இரண்டு ரக்அத் தொழாமல் உட்காரக் கூடாது என்பது ஏன்?
பதில்: இமாம் நிகழ்த்தும் உரையைக் கேட்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அது இரண்டு ரக்அத்திற்குரிய நன்மையைப் பெற்றுத்தரும் என்று எந்த ஹதீஸ{ம் கிடையாது. மாறாக எந்த சந்தர்ப்பத்தில் பள்ளிக்கு வந்தாலும் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுத்தான் உட்கார வேண்டும் என நபிஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள்.
”உங்களில் எவரேனும் பள்ளிக்கு வந்தால் இரண்டு ரக்அத் தொழும்வரை உட்கார வேண்டாம்” (அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 444)
இமாம் உரை நிகழ்த்தும்போது வருபவர்களும் தொழுதுவிட்டுத்தான் அமர வேண்டும் என்று இந்த பொதுவான அறிவிப்பின் அடிப்படையில் முடிவு செய்ய முடியும் என்றாலும், இமாம் உரை நிகழ்த்தும் போது வருபவர் தொழத்தான் வேண்டும் என்பதற்கு நேரடியான ஆதாரமே இருக்கிறது.
”நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆவில் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் வந்து உட்கார்ந்தார். உடனே நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுதுவிட்டீரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். எழுந்து தொழுவீராக என்றார்கள் “”ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கும் இச்செய்தி புகாரி 930, 931, திர்மிதி 508-ல் பதிவாகியுள்ளது.
நபிவழியை மதிக்கக்கூடியவர்கள், இமாம் உரை நிகழ்த்தினாலும் இரண்டு ரக்அத் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும். இதற்கு மாற்றமாகத் தொழாமல் உட்காருவோர் அவர் எவராக இருந்தாலும் நபிவழியைப் புறக்கணிக்கிறார் என்பது வெளிப்படையான பொருள்.
103. கேள்வி : ஒரு முஸ்லிம் பெண் ஓடிப் போய் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி திருமணம் முடித்தால் அந்த திருமணம் செல்லுமா..? அவர்கள் உறவுக் கொண்டதாக கூறினால் தண்டனை வழங்க வேண்டுமா..? அல்லது அவர்களை பிரித்து வைக்க வேண்டுமா..?
பதில் : திருமணம் என்பது ஒரு சந்தைக்கடை விஷயமல்ல அது ஒரு நல்ல பாரம்பரியத்தையும் குடும்ப அமைப்பiயும் நெடிய உறவு முறைகளையும் உருவாக்கும் ஒரு காரியம் என்பதால் இஸ்லாம் இதில் மிகுந்த அக்கரை செலுத்தியுள்ளது. ஆண் பெண்ணுக்குறிய இயல்புகளை கருதி திருமண விஷயத்தில் தன் சட்டங்களை வரையறுத்துள்ளது. அப்படி வரையறுக்கப்பட்ட சட்டங்களில் ஒரு முஸ்லிம் பெண் பொறுப்புதாரர்களோ சாட்சிகளோயின்றி தான் திருமணம் செய்துக் கொள்வதற்கு தடையுள்ளது. – வலியின்றி (எந்தப் பெண்ணுக்கும்) திருமணமில்லை – என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி அபூ மூஸா, அபூ ஹ_ரைரா, இப்னுஅப்பாஸ், அனஸ், ஆய்ஷா போன்ற நபித்தோழர்கள் மூலம்அறிவிக்கப்பட்டுள்ளது. (திர்மிதி 1107 வது ஹதீஸ்)இங்கு வலியென்று நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளது யாரைக்குறிக்கும்..?
அந்தப் பெண்ணின் பாதுகாவலர் மற்றும் பொறுப்புதாரிகளைக் குறிக்கும்.வலி என்ற வார்த்தையின் கணத்தை நாம் விளங்கினால் எவர் வேண்டுமானாலும் வலியாகி விடலாம் என்ற வாதம் தவறு, அப்படி தீர்மாணிக்க முடியாது என்பதை விளங்கலாம். திருமணம் முடிப்பதாக இருந்தால் முஸ்லிம் பெண்ணுக்கு பொறுப்புதாரி அவசியம். இது அவள் மீது அக்கரை செலுத்தக்கூடிய ஆண் சொந்தங்களையே குறிக்கும். வலி என்பது ஒரு பெண் அவளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை குறிக்காது. அவள் மீது இறைவன் ஏற்படுத்தின உறவைக் குறிக்கும்.
103. கேள்வி: மத்ஹப் நூல்கள் தொழுகையில் தொப்பி போடுவதை சுன்னத்தாக்கி இருக்கும்போது, நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள் தலைப்பாகையுடன் தொழுததற்கு ஹதீஸ் இருக்கும்போது, திறந்த தலையாக பள்ளியில் வந்து தொழுவதுதான் நபிவழியா?
பதில்: தொப்பி போடுவது சுன்னத் என்பது இன்றைய ஹஜ்ரத்மார்களின் கண்டுபிடிப்புத்தானே தவிர அவர்கள் நம்பிக் கொண்டிருக்கக் கூடிய மத்ஹப்களிலோ ;அல்லது நபிவழியிலோ தொப்பி அணிவது சுன்னத் என்பதற்கு ஆதாரமில்லை.
”எவராவது சோம்பலின் காரணத்தால் தலையை திறந்து தொழுதால் அது மக்ரூஹ், பணியை வெளிப்படுத்த தலையைத் திறந்து தொழுதால் அது தவறில்லை” என்று தீர்ப்புக் கூறுகிறது ஹனபி மத்ஹப். துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 549-ல் இச்சட்டம் உள்ளது.
விடாப்பிடியாக மத்ஹப்களைப் பிடித்துக் கொண்டு அலைவோர் என்ன செய்ய வேண்டும், தலையைத் திறந்து தொழுது தமது பணிவை வெளிப்படுத்த வேண்டாமா? (இந்த சட்டம் குர்ஆன், சுன்னாவிலிருந்து எடுக்கப்பட்டவையல்ல என்பது தனி விஷயம்) எந்த மத்ஹப் தலையை மூடுவது சுன்னத் என்கிறது? ஹனபி தொழுகை நூல் என்று வெளியிடுவார்கள், அதிலிருந்தாவது தலையை மறைப்பது சுன்னத் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியுமா? இது ஹஜ்ரத்மார்களின் வெறும் யூக கண்டுபிடிப்பாகும்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தலையை மறைத்திருந்தார்கள் என்பது உண்மைதான். அது மார்க்கம் சம்பந்தப்பட்ட தலை மறைப்பா? அல்லது அந்நாட்டு வழக்கமா? மார்க்கம் சார்ந்த தலைமறைப்பு என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. ஏனெனில் நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்தவர்கள்கூட தலையை மறைத்துத்தான் இருந்தார்கள். பாலைவனத்தின் வெயில், காற்றில் பறக்கும் தூசிமணல் இவைகளைத் தவிர்ப்பதற்காக தலையில் துணியைப் போட்டுக் கொண்டார்கள். அந்த வழக்கம்தான் இன்றுவரை அரபு நாடுகளில் நாட்டுக் கலாச்சாரமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. தலைப்பாகை அணியுங்கள், தலையை மறையுங்கள் என்ற எந்த அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமாகக் கிடைக்கவில்லை. பெண்களுக்கு மட்டும் தலையை மறைக்கும் கட்டளை வந்துள்ளது.
”பருவமடைந்த பெண் தன் தலையைத் திறந்து தொழுதால் அந்தத் தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்பது நபிமொழி ‘ஆயிஷா ரளியல்லாஹுஅன்ஹா” அறிவிக்கும் இச் செய்தி ‘திர்மிதி” என்ற நூலில் பதிவாகியுள்ளது.இதுபோன்று ஆண்கள் தலையை மறைப்பது சுன்னத் என்பதற்கு ஒரு அறிவிப்பைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். நபி ஸல்லல்லாஹ
{அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை மறைத்திருந்தார்கள் என்பதற்கு சில அறிவிப்புகளைக் கொடுப்பார்கள். பெங்க@ரைச் சார்ந்த ‘ஸைஃபுத்தீன் ரஷாதி” என்பவர் ‘தொப்பி, தலைப்பாகை” என்று ஒரு நூல் எழுதியுள்ளார். ‘ஷரீஅத் பாதுகாப்பு(?) பேரவை” இந்நூலை வெளியிட்டுள்ளது. இதில் பல பலவீனமான, அறிவுக்குப் பொரந்தாத பல செய்திகளை வெளியிட்டுள்ளார். சிலது பலவீனமானதுதான் என்று அவரே ஒத்துக்கொள்கிறார். (அந்த நூல் பக்கம்: 28-ல்).
”ஐவேளைத் தொழுகையில் மூன்று முழு தலைப்பாகையும், ஜும்ஆ, ஈத் பெருநாள்களில் ஏழு முழு தலைப்பாகையும் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அதிக சந்தர்ப்பங்களில் அணிந்துள்ளார்கள்”.
அன்வர் ஷாஹ் காஷ்மீரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: அல் அர்புஃஷ் ஷதி ஷாஹ் திர்மிதி
இச்செய்தி அதே நூல் பக்கம் 17-ல் வருகிறது. பெரிய ஆதாரம் இருப்பதாக மக்களை நம்ப வைக்கும் மோசடி இது. இந்த செய்தியை அறிவிப்பவரைக் கவனியுங்கள். காஷ்மீரைச் சார்ந்த அன்வர் ஷாஹ் என்பவர் அறிவிக்கிறார். இவர் நபித் தோழரா?, தாபிஈயா?, தபவுத்தாபிஈயா?, அதற்கும் அடுத்த நூற்றாண்டைச் சேர்ந்தவரா? … ஒன்றுமில்லை. மிக, மிக, மிகப் பிற்காலத்தில் பிறந்தவர். நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு முழம், மூன்று முழம் தலைப்பாகை அணிவர் என்று எப்படி அறிவிக்கிறார்?. வேறெதாவது முந்தைய நூலைப்ப பார்த்து அறிவிக்கிறார் என்றால் அந்த மூல நூலை வெளியிடலாமே? இவரது செய்தியை வெளியிடும் அவசியம் என்ன? வெறும் பிரம்மையை ஏற்படுத்தும் திட்டம்தானே… தொப்பி, தலைப்பாகை சுன்னத் என்ற தமது குளறுபடியான பத்வாக்களுக்கு இப்படிப்பட்ட ஆதாரங்கள்தான் அவர்களுக்குக் கிடைக்கும்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களும், நபித் தோழர்களும் தலை திறந்த நிலையில் இருந்துள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன.நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளுவை வர்ணிக்கும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தம் நாட்டு வழக்கமாக, தட்ப வெட்ப நிலை, இயற்கைப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க தiலைப்பாகை அணிந்திருப்பார்களேயானால், அந்தத் தலைப்பாகையை கழற்றி விட்டு தம் தலைக்கு மஸஹ் செய்யாமல் தலைப்பாகையின் மீதே தண்ணீரை தொட்டுத் தடவிக் கொள்ளும் பழக்கத்தையே கடைபிடித்தார்கள். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு நாம் ஒளு சம்பந்தமான ஹதீஸ்களை அணுகினால் நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் மிகக் குறைந்த சந்தர்ப்பங்களிலேயே தலைபாகை அணிந்துள்ளார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் திறந்த தலையுடனே இருந்துள்ளார்கள் என்பதைத் தெளிவாக விளங்கலாம். ஏனெனில் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வதற்காக வரும் செய்திகள் மிக, மிக சொற்பமே.தலைப்பாகை மஸஹ் – ‘அம்ர் இப்னு உமைய்யா ரளியல்லாஹுஅன்ஹு”மூலம் (புகாரி 205), ‘முகீரதிப்னு ஷ{ஃபா ரளியல்லாஹ{அன்ஹ{மூலம் (திர்மிதி 100) ஆகியவற்றில் பதிவாகியுள்ளது. இதே செய்தி முஸ்லிம், நஸயி, அஹ்மத், இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் கிடைக்கின்றன.
தலையின் மீது மஸஹ் – புகாரியின் எண்கள் 140, 159, 164, 185, 186, 191, 192, 197, 199 மற்றும் ஏராளமான இடங்களில் காணக்கிடைக்கின்றன. தலைக்கு மஸஹ் செய்வது சம்பந்தமாக இதர நூல்களில் வரும் விபரங்கள்: முஅத்தா எண் 15, 44, நஸயி 99, 102 திர்மிதி 32.
மேற்கண்ட செய்திகளையெல்லாம் சிந்திக்கும்போது நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமின்றி நபித்தோழர்களும் தொடர்ச்சியாகத் தலைப்பாகை அணியும் வழக்கத்தில் இல்லை. பிரயாணம் அல்லது ஏதாவது குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின்போது மட்டும்தான் தலைப்பாகை அணிந்துள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
பள்ளியில் திறந்த தலையுடன் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள்
”நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் சமயத்தில் என் வீட்டுனுள்ளே தலையை நீட்டுவார்கள், நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன்” என அன்னை ஆயிஷாரளியல்லாஹுஅன்ஹஅறிவிக்கிறார்கள்.
புகாரி எண்கள்: 296, 2028, 2029, 2030, 2031
‘இஃதிகாப்” என்ற சிறந்த வணக்கத்தில் நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் ஈடுபட்டபோதுகூட திறந்த தலையுடன் இருந்துள்ளார்கள் என்பதற்கு இது மிகச் சிறந்த ஆதாரமாகும்.
தமக்குக் குளிப்பு கடமையான விபரம் மறந்து ஒருமுறை நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் இமாமத்திற்குத் தயாராகி வரிசைகள் சரிபடுத்தப்பட்டு தக்பீர் சொல்ல நாடும்போதுதான் குளிக்க வேண்டும் என்பது ஞாபகத்திற்கு வந்து ‘அப்படியே நில்லுங்கள் வந்துவிடுகிறேன்” என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறி சென்று குளித்து முடித்து வந்து தலையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் என்ற விபரம் அபூ-ஹ{ரைராரளியல்லாஹுஅன்ஹுமூலம் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் முடி அலங்காரம்:
”நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுடி இரு காதுகளின் பாதிவரை நீண்டு இருக்கும்”” (முஸ்லிம், நஸயி, திர்மிதி, அபூ-தாவுத் நூல்களில் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கிறார்கள்.)
”நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுடி முற்றிலும் சுருண்டோ, முற்றிலும் நீண்டோ இருக்காது”” (புகாரி, முஸ்லிம், நஸயி நூல்களில் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கிறார்கள்.)”நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் நடு வகிடெடுத்து தலை வாரினார்கள், பின்னர் அதை மாற்றிக்கொண்டார்கள்” (புகாரி, அபூ-தாவுத் நூல்களில் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கிறார்கள்.)
”நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தம் தலைக்கு எண்ணெய் தேய்த்து வருவார்கள். தேவைக்கேற்ப தலை வாரும் பழக்கம் இருந்தது”” (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயி நூல்களில் அன்னைஆயிஷா ரளியல்லாஹுஅன்ஹா,இப்னு முகப்பல் ரளியல்லாஹுஅன்ஹுஆகியோர் அறிவிக்கிறார்கள்.)
திறந்த தலையுடன் தொழலாம்:
”ஏழு உறுப்புகளின்மீது ஸஜ்தா செய்யுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன். ஆடையையோ, முடியையோ (தரையில் படாதவாறு) தடுக்கக் மூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் “” என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹ{அன்ஹ{-புகாரி 809, 810, 812)இந்த ஹதீஸைக் கவனியுங்கள். நெற்றி, இரண்டு கைகள், இரண்டு முட்டுக்கள், இரண்டு பாதங்கள் ஆக ஏழு உறுப்புகள் ஸஜ்தா செய்ய வேண்டும். இதில் கைகள், பாதங்கள் நேராக தரையில் படும். முட்டுக்கால்களில் ஆடை இருக்கும். அந்த ஆடையை உயர்த்தி முட்டியை வைத்து ஸஜ்தா செய்யாதீர்கள். ஆடையோடு செய்யலாம். அதே போன்று ஸஜ்தாவின் போது முடி வந்து தரையில் விழுந்தால் அதை ஒதுக்க வேண்டாம் என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.
தலைப்பாகையோ, தொப்பியோ தலையிலிருந்தால் முடி வந்து விழ வேண்டும் என்று அவசியமில்லை. வந்து விழும் முடியைத் தடுக்க வேண்டாம் என்ற நபிகளாரின் கூற்று தாராளமாகத் திறந்த தலையுடன் தொழலாம் என்பதை எடுத்துக் கூறுகிறது.
நபித் தோழர்களின் நிலை:
(மேலாடை கூட இல்லாமல்) தமது வேட்டிகளை மட்டும் தோள்களில் முடிச்சு போட்டுக் கொண்டவர்களாக நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுள்ளார்கள். (ஸஹ்ல் ரளியல்லாஹுஅன்ஹு -புகாரி: 351).
”ஒரு ஆடையுடன் தொழலாமா?”” என ஒருவர் நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்க… ”உங்களில் எல்லோரிடமும் இரண்டு ஆடைகள் கூட இருக்கின்றனவா?”” என நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹுஅன்ஹு- புகாரி: 365).நபி ஸல்லல்லாஹ
{அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியிலிருக்கும்போது பரட்டைத் தலையுடன் வந்த ஒருவரை நோக்கி … தாடியையும், தலையையும் எண்ணெயிட்டு சீவிக்கொள்ளுமாறு கூறினார்கள் அதா இப்னு யாஸிர் ரளியல்லாஹுஅன்ஹு,முஅத்தா).இப்படி ஏராளமான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் மட்டும் தொப்பி, தலைப்பாகை அணிந்துள்ளார்கள். அதுவும்கூட நாட்டு நடைமுறைக்குறியதாக இருந்தது. தாடி வையுங்கள் என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியது போல் தொப்பி, தலைப்பாகைக்கு எந்த ஏவலும் அவர்களிடமிருந்து வரவில்லை. திறந்த தலையுடன் இருந்த நபித் தோழர்களை அங்கீகரித்துள்ளார்கள். எண்ணெயிட்டு தலை சீவி அலங்கரித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறியுள்ளார்கள். தொப்பி என்பது இஸ்லாமிய சின்னமல்ல. இன்றைய ஹஜ்ரத்துகளே ‘தொப்பி இஸ்லாமிய சின்னம்” என்ற நவீன கண்டுபிடிப்பபைப் பரப்புகிறார்கள். எனவே, எவரும் தொப்பி அணிவதாக இருந்தால் அது அவரது விருப்பம். தாராளமாக அவர் அணியலாம். அணிந்தே தொழலாம். ஆனால் தலை மறைக்க வேண்டும் என்று பிறரை ஏவும் உரிமை எவருக்கும் இல்லை.
104. கேள்வி: இரவின் பிற் பகுதியில் தொழும் தொழுகையின் சிறப்பைப் பற்றி முஸ்லிம், அபூதாவுத் போன்ற நூல்களில் வரும் ஹதீஸில் ‘இரவின் மூன்றாம் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு இறங்கி வந்து என்னிடம் கேட்போர் உண்டா.. பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா…என்று இறைவன் கேட்பதாக உள்ளது. என்னுடைய கேள்வி என்னவென்றால் இந்த பூமி உருண்டை வடிவமானது அதனால் பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் மூன்றாம் இரவு இருந்துக் கொண்டு தான் இருக்கும். அப்படியானால் இறைவன் முதல் வானத்திலேயே இருந்து விடுவான் என்று பொருள் கொள்ளலாமா?
பதில் : இறைவனின் தன்மைகளை பற்றிப் பேசும் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களுக்கு மேலதிக விளக்கம் எதுவும் கொடுக்காமல் அப்படியே நம்ப வேண்டும் என்பது பல அறிஞர்களின் வாதம். இறைவனுக்கு கைகள் உண்டு – விரல்கள் – பார்வை – புலன்கள் உண்டு என்று வரும் ஆதாரங்களுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கும் அறிவாற்றல் மனிதனுக்கு இல்லை. மனித விளக்கங்களில் குறை ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது அதனால் அது பற்றிய எந்த சர்ச்சையிலும் ஈடுபடாமல் அப்படியே ஏற்க வேண்டும் என்பது இவர்களிடமிருந்து வெளிப்படும் விளக்கமாகும். இதே அடிப்படையில் இறைவன் முதல் வானத்திற்கு இறங்குவதை அப்படியே ஏற்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இறைத் தன்மையில் குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மௌனமாக இருந்து விட வேண்டும் என்ற இவர்களின் வாதம் இறைத் தன்மைப்பற்றி பேசும் எல்லா இடங்களுக்கும் பொருந்தாது. வேறு ஆதாரங்களுடன் மோதும் விதத்தில் உள்ளவற்றிர்க்கு மோதாதவாறு விளக்கம் அளித்துதான் ஆக வேண்டும்.
அப்படி விளக்கம் தேவைப்படுபவைகளில் ஒன்றுதான் நீங்கள் கேட்டுள்ள கேள்வி.
இறைவன் முதல் வானத்திற்கு இறங்கி வருவதை இறங்கி வருவதாகவே நம்ப வேண்டும் வேறு பொருள் எடுக்கக் கூடாது என்று முடிவு பண்ணினால் இறைவன் முதல் வானத்திலேயே இருந்து விடுவான் என்று தான் நம்ப வேண்டி வரும்.
பூமி உருண்டை வடிவம் என்பதால் அதில் ஒவ்வொரு வினாடியும் – ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் – ஒரு உதிப்பும் ஒரு மறைவும் ஏற்படுகிறது. இதை மெய்பிக்கும் விதமாக பல கிழக்குகள் பல மேற்குகள் பற்றி குர்ஆன் பேசுகிறது. (பார்க்க 70:40) ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் இந்த பூமியின் எங்காவது ஒரு இடத்தில் மூன்றாம் இரவு இருந்துக் கொண்டே இருக்கிறது. மூன்றாம் இரவில் இறைவன் இறங்குகிறான் என்றால் – ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் மூன்றாம் இரவு இருந்துக் கொண்டு இருப்பதால் இறைவன் இங்கேயே இருக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் – அதாவது மேலதிக விளக்கம் தேவையில்லை என்றால் இப்படிதான் நம்ப வேண்டி வரும்.
ஆனால்,இறைவன் அர்ஷில் இருப்பதாக குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது (பார்க்க 7:45 – 10:3 – 13:2 – 20:5 – 25:59 – 32:4 – 40:7 – 57:4 – 69:17)
இறைவன் முதல் வானத்தில் நிரந்தரமாக இருந்து விடுவான் என்று நம்புவது இந்த வசனங்களுக்கு முரண்பாடான – அர்த்தமற்ற – நம்பிக்கையாகி விடும். இறைவனின் வசனங்களுக்குறிய முக்கியத்துவத்தை கொடுக்காமல் ஹதீஸ்களை மட்டுமே கற்று அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்வோர் வேண்டுமானால் இந்த வசனங்களை கண்டுக் கொள்ளாமல் விட்டு விடலாம். குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாகத்தான் நபியின் சொல் அமைந்திருக்கும் என்று தெளிவான முடிவில் இருப்போர் அந்த வசனங்களுக்கு முரண்படாமல் தான் இந்த – இத்தகைய – ஹதீஸ்களை விளங்குவார்கள்.
‘இறங்கி வருதல்” என்பது இறைவன் அர்ஷிலிருந்து இடம் பெயற்கிறான் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்காது. மாறாக இரவில் எல்லோரும் உறங்கும் போது இறைவனுக்கு அஞ்சி – அவனை நேசித்து – எழுந்து வணங்குபவர்களுக்கு இறைவனின் அருள் பார்வை பிரத்யேகமாக கிடைக்கிறது என்ற அர்த்தத்தில் தான் சொல்லப்பட்டிருக்கும். இறைவனுக்காக ஒருவர் தன் உறக்கத்தை தியாகம் செய்யும் போது அவரை இறைவன் விஷேஷமான அந்தஸ்த்தில் கவனிக்கிறான் என்பதே அந்த ஹதீஸின் பொருளாக இருக்கும் என்பதை நாம் மேலே கொடுத்துள்ள குர்ஆன் வசனங்கள் இனி வரக்கூடிய ஹதீஸ் ஆகியவற்றை வைத்து சிந்திக்கும் போது விளங்கலாம்.
இறைவனின் தன்மையைப் பற்றி வரும் செய்திகளுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கக் கூடாது அப்படியே மௌனமாக நம்பி விட வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் கீழுள்ள ஹதீஸ_க்கு தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து விளக்கம் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு அடியான் கடiமான காரியங்களை செய்வதன் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும். கடமையான காரியங்களுக்கு பிறகு உபரியான காரியங்களை செய்து இறைவன் பால் நடந்தால் இறைவன் அந்த அடியானை நோக்கி நடக்கிறான். அடியான் இறைவனை நோக்கி ஓடினால் அவனை நோக்கி இறைவன் ஓடி வருகிறான் இறுதியில் அவன் பார்க்கும் பார்வையாகவும், பிடிக்கும் கைகளாகவும், நடக்கும் கால்களாகவும் இறைவன் மாறி விடுகிறான் அவன் எதை கேட்டாலும் கொடுக்கிறான். நாம் பரவலாக கேள்விப்படும் பிரபல்யமான – ஆதாரப்பூர்வமான – ஹதீஸ் இது.இந்த ஹதீஸுக்கு மேலதிக விளக்கம் கொடுக்காமல் மௌனம் சாதித்து ஏற்கும் போது மனிதன் இறைத்தன்மையை பெற முடியும் என்ற பொல்லாத கருத்து உருவாகிறது. இன்றைக்கும் பலர் நாங்கள் வணக்க வழி பாட்டின் மூலம் இறைத்தன்மையை பெற்று விட்டோம் என்று -நேரடியாக சொல்லா விட்டாலும் – செய்கையின் மூலம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
அடியானின் பார்வையாகவும் – கைகளாகவும் – கால்களாகவும் இறைவன் மாறுகிறான் என்பது ஹதீஸின் நேரடிப் பொருள். அதாவது இறைத் தன்மையை எடுத்துக் காட்டும் வாசகம் இது. இதற்கு மேலதிக விளக்கம் தேவையில்லை அப்படியே நம்ப வேண்டும் என்று கருதினால் மனிதன் தொடர் வணக்கத்தின் வழியாக இறைத் தன்மையைப் பெறுகிறான் என்பதை தவிர வேறு பொருள் எடுக்க முடியாது. கப்ரு வணக்கம், அவ்லியா வழிப்பாடு போன்ற கேடு கெட்ட இணை வைத்தல் போன்ற காரியங்கள் மார்க்கத்தின் பெயரால் அரங்கேறுவதற்கு இந்த ஹதீஸை நேரடியாக புரிந்துக் கொள்ளும் தன்மையே வழி வகுக்கிறது.
இதையெல்லாம் தெளிவாக உயர்ந்த அக்கறையுள்ள அறிஞர்கள் ‘இத்தகைய ஹதீஸ்களுக்கு நேரடி பொருள் கொள்ளக் கூடாது இறைவன் பிறரது கைகளாகவோ, கால்களாகவோ, பார்வையாகவோ மாற மாட்டான் ஏனெனில் அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்று அவனே தெளிவாக அறிவித்து விட்டான். அதனால் இந்த ஹதீஸ் நல்லடியார்களுக்கு இறைவனின் உதவி மிக மிக நெருக்கத்தில் இருக்கிறது. நெருக்கம் என்றால் அளவிட்டு சொல்ல முடியாத அளவுக்கு உள்ள நெருக்கம் என்பது தான் அந்த ஹதீஸின் பொருள் என்று தீமைக்கு வழி வகுக்காத விளக்கம் கொடுக்கிறார்கள். இப்படி விளக்கம் கொடுப்போரில் ‘இறைத் தன்மைக்கு மேலதிக விளக்கம் கொடுக்கக் கூடாது” என்று சொல்வோரும் அடங்குவர்.
பிற ஆதாரங்கள் – வாதங்களின் அடிப்படையில் இந்த விளக்கம் சரி என்றால் அதே போன்ற ஆதாரங்கள் – வாதங்களின் அடிப்படையில் சொல்லப்படும் இறைவன் முதல் வானத்திற்கு இறங்கி வரமாட்டான் – அந்த ஹதீஸ_க்கு நேரடி பொருள் கொள்ளக் கூடாது என்ற வாதம் மட்டும் எப்படி தவறாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.எனவே இறைவன் முதல் வானத்திலேயே இருந்து விடுவான் என்று நம்பத் தேவையில்லை.
105. கேள்வி – பெண்கள் சேலை அணிந்து தொழலாமா…?
புதில் : இந்த உடையில் தான் தொழ வேண்டும் என்று தொழுகைக்காக எந்த பிரத்யேக உடையையும் இஸ்லாம் ஏற்படுத்தவில்லை. சுத்தமான நிலையில் மறைக்க வேண்டிய பகுதிகள் மறைந்திருந்தால் எந்த உடையுடனும் தொழலாம். சேலை என்பது விசாலமான உடை என்பதால் சேலை உடுத்திக் கொண்டு தொழலாம். தடையில்லை.
106.கேள்வி : மனைவியிடம் இல்லறத்தில் கூடாமல் வேறு விளையாட்டால் சுகம் அனுபவித்தால் குளிப்பு கடமையாகுமா…?
பதில் : உங்கள் மனைவிகள் உங்கள் விளை நிலங்களாவர் எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்கு செல்லுங்கள். (அல் குர்ஆன் 2:223)
இந்த வசனப்படி நமது சொந்த விளைநிலத்தில் எப்படியும் சுகம் பெறலாம். மாதவிடாய் காலங்களிலும் – மலப்பாதையிலும் மட்டும் உறவுக் கொள்வதற்கு தடையுள்ளது. இந்த இரண்டு வழியல்லாத மற்ற வழிகளில் (நீங்கள் கேட்டுள்ளப்படியும்) சுகம் பெறலாம் தடையில்லை. இல்லறமல்லாத மற்ற அனுமதிக்கப்பட்ட வழிகளை நாடும் போது விந்து வெளிப்பட்டுவிட்டால் குளிப்பு கடமையாகி விடும். இல்லையைன்றால் குளிப்பு கடமையல்ல.
107.கேள்வி : ஸஜ்தா என்பது எத்துனை பொருள்களை கொண்டது விளக்கவும் .
பதில் : மனிதன் செய்யும் ஸஜ்தாவிற்கு ‘தலை வணக்கம்” என்று பொருள். பொதுவாக எல்லோரும் ஸஜ்தாவிற்கு தலைவணக்கம் தான் பொருள் என்று விளங்கி வைத்திருந்தாலும் இந்த பொருளை கொடுக்க முடியாத இடங்களிலும் ஸஜ்தா என்ற பதம் வந்துள்ளது.
மரங்களும் செடி – கொடிகளும் அவனுக்கு ஸஜ்தா செய்கின்றன (அல் குர்ஆன் 55:6) இங்கு நாம் விளங்கி வைத்துள்ள ஏழு உறுப்புகளின் ஸஜ்தா என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மரம் செடி கொடிகளுக்கு அந்த உறுப்புகள் கிடையாது. எந்த நோக்கத்திற்கு அவை படைக்கப்பட்டதோ அதற்கு மாறு செய்யாமல் நடக்கின்றன என்பது தான் இந்த வசனத்தின் ஸஜ்தாவிற்கு பொருளாகும்.
இறைவன் படைத்திருக்கும் பொருள்களில் எதையுமே அவர்கள் பார்க்கவில்லையா.. அவற்றின் நிழல்கள் வலப்புறமாகவும், இடப்புறமாகவும் ஸ_ஜூது செய்கின்றன. (அல் குர்ஆன் 16:48)
இங்கும் நாம் செய்யும் ஸஜ்தாவின் அர்த்தத்தை கொடுக்க முடியாது. நிழல்கள் வல – இடப்புறமாக சாய்வதையே இறைவன் இங்கு ஸஜ்தா என்கிறான்.
பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும், சந்திரனும் எனக்கு ஸஜ்தா செய்வதாக கனவுக் கண்டேன் என்று யூசுப் அலைஹிஸ்ஸலாம் சொல்கிறார்கள். (அல் குர்ஆன் 12:4)
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நாம் செய்யும் ஸஜ்தா உறுப்புகள் கிடையாது. தாய் தந்தை மற்றும் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வதையே இங்கு ஸஜ்தா என்ற பதம் சுட்டிக் காட்டுகிறது.
அந்த பட்டணத்தில் நுழையும் போது ஸஜ்தா செய்தவர்களாக நுழையுங்கள் என்று மூஸா அலைஹிஸ்ஸலாம் சமூகத்திற்கு இறைவன் கூறுகிறான். (அல் குர்ஆன் 2:58)
ஏழு உறுப்புகளை கொண்ட ஸஜ்தா என்று இங்கும் பொருள் கொள்ள முடியாது ஏனெனில் அப்படி பொருள் கொண்டு ஸஜ்தா செய்தால் உள்ளே நுழைய முடியாது. திமிரோடும் ஆணவத்தோடும் இல்லாமல் அடக்கமாக உள்ளே நுழையுங்கள் என்பது தான் இங்கு வந்துள்ள ஸஜ்தாவிற்குறிய அர்த்தமாகும்.
இவற்றை வரிசைப்படுத்தினால் ஸஜ்தாவின் பொருள்கள் எத்துனை என்று உங்களுக்கு புரிந்து விடும்.
108. கேள்வி : நான் இதற்கு முன் சித்தாரா என்று பெயரிடலாமா என்று ஒரு கேள்வி கேட்டிருந்தேன் அதன் பொருள் திரை சீலை என்று (அஃரிணையாக) வருவதால் சந்தேகம் வருகிறது.
பதில் : உச்சரிப்பதற்கு அழகாகவும், தவறான அர்த்தத்தை கொடுக்காத வார்த்தையாகவும் இருந்தால் எந்த வார்த்தையையும் பெயராக சூட்டிக் கொள்ளலாம். நீங்கள் அரபு நாட்டில் இருப்பதால் அரபுகளின் பெயர்களை ஊன்றி கவனித்தாலே போதும் இதை விளங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் ‘சித்தாரா” என்பது உச்சரிப்பதற்கு அழகாகவும் இருக்கிறது. அதில் தவறான அர்த்தமும் இல்லை. அஃரிணையாக வருவதை பெயராக சூட்டக் கூடாது என்றெல்லாம் சட்டம் ஒன்றும் இல்லை. நபிஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூட ஒருவருடைய ‘வரண்ட நிலம்” என்ற பெயரை மாற்றி ‘செழிப்பான நிலம்” என்று அஃரிணையாக வைத்ததற்கு ஆதாரம் உள்ளது (அபூதாவூத்) எனவே சித்தாரா என்று பெயரிடலாம்.
109.கேள்வி – விபச்சாரம் செய்வதை இஸ்லாம் பெரிய பாவங்களின் பட்டியலில் சேர்க்கிறது. சுய இன்பம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது விளக்கம் தேவை.
பதில் : விபச்சாரம் போன்று நேரடியான தடை சுய இன்பத்திற்கு இல்லை என்றாலும் அதை தடை செய்யும் விதமாக குர்ஆனில் வசனம் உண்டு என்று சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.
23வது அத்தியாயத்தில் வெற்றிப் பெறும் முஃமின்களைப் பற்றி இறைவன் கூறி வருகையில்,
‘அவர்கள் தங்கள் மனைவிகளிடமும் – அடிமைப் பெண்களிடமும் தவிர மற்ற வழிகளை நாடாமல் தங்கள் வெட்கத்தலங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்” என்கிறான் (23:5,6)
110. கேள்வி – குர்ஆன் ஓதும் போது செருப்பணிந்துக் கொண்டு ஓதலாமா…?
பதில் :தொழும் போதோ – குர்ஆன் ஓதும் போதோ செருப்பணிந்துக் கொள்ளக் கூடாது என்று எந்த தடையும் இல்லை. செருப்பு என்பது நாம் உடுத்தும் உடைகளில் ஒரு உடை அவ்வளவு தான். செருப்பில் அசுத்தம் இருந்தால் அதை அணிந்துக் கொண்டு தொழக் கூடாது. அசுத்தம் இல்லையெனில் தாராளமாகத் தொழலாம் ஓதலாம் பிரச்சனையில்லை.
111. கேள்வி – நான் பணிபுரியும் இடத்தில் பள்ளி இரூக்கிறது நான் ஒய்வு எடுக்கும் சமயத்தில் பள்ளியில் ஒய்வு எடுப்பது வழக்கம். ஒரூநாள் எனது நண்பர் பள்ளியில் தூங்கக் கூடாது என்று சொல்கிறார் இதற்கு விளக்கம் தேவை.
பதில் : நபிஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நாங்கள் இளைஞர்களாக இருந்த போது பள்ளியில் ஓய்வெடுத்து தூங்கக் கூடியவர்களாக இருந்;தோம் என்று இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள். (புகாரி – திர்மிதி – இப்னுமாஜா)
பள்ளியில் தங்கி ஓய்வெடுக்கலாம் தடையொன்றும் இல்லை.
112.. கேள்வி – இந்தியாவில் நம் உறவினர்கள் மரணித்து விட்டால் வெளிநாட்டில் வசிக்கும் முக்கியமானவர்கள் மையத்தை சென்று பார்ப்பதற்கு குறைந்தது 12 மணி நேரங்களாகிறது. அதிக நேரம் மய்யித்தை காக்க வைப்பது முறையா..?
பதில் : இத்துனை மணி நேரத்திற்குள் மய்யித்தை எடுத்து விட வேண்டும் என்ற எந்த சட்டமும் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இல்லை. தேவைக்கேற்ப கொஞ்சம் முன் பின் படுத்துவதில் தவறில்லை. ஆனாலும் பொதுவாக நீண்ட நேரம் மைய்யத்தை காக்க வைக்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் அடக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடக்கி விட வேண்டும். இதை கீழ் காணும் ஹதீஸ்களிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.
மய்யித்தை மனிதர்கள் தூக்கி செல்லும் போது அவன் நல்லடியாராக இருந்தால் (தங்குமிடத்திற்கு) என்னை அவசரமாக எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். தூக்கி செல்லப்படுபவன் பாவியாக இருந்தால் என் கேடு என்னை பிடித்துக் கொண்டது என்று அலறுவான். இந்த சப்தத்தை மனிதர்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவியுறும். மனிதன் இதை செவியுற்றால் அங்கேயே மயக்கமுற்று அடித்து விழுவான் என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். (அறிவிப்பு, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,புகாரி)
மய்யித்தை தூக்கி செல்லும் போது விரைவாக தூக்கி செல்லுங்கள் அந்த மய்யத் நல்லறம் புரிந்ததாக இருந்தால் அதை விரைவில் நல் வாழ்க்கையின் பால் சேர்த்தவர்களாவீர். அது தீயதாக இருந்தால் தீமையை உங்கள் தோல்களை விட்டும் இறக்கி விடுகிறீர்கள் என்பது நபி மொழி. (ராவி : அபூ ஹ_ரைரா, புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்)
இந்த இரண்டு ஹதீஸ்களிலும் மரணித்தவருக்கு கப்ரில் வேறொரு வாழ்க்கை தீர்மாணிக்கப் படவேண்டியிருப்பதால் அந்த வாழ்க்கையின் பக்கம் அவர்களை விரைவாக சேர்த்து விடுங்கள் என்ற விபரம் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து மையத்தை அதிக தாமதப்படுத்தி அடக்கக்கூடாது என்பதை விளங்கலாம்.
113. கேள்வி : பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது. தங்கள் அழகை வெளிகாட்டக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் பெண்கள் தங்கள் முகத்தை திறக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். இது பற்றி என்ன முடிவுக்கு வருவது..?
பதில் : இது பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் விளக்கமாக உள்ள நபி மொழிகளையும் சிந்தித்தால் பெண்களை முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை என்பதை விளங்கலாம்.
குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.
இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக!
அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது
மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்
தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை வெளிப்படுத்தக் கூடாது
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (ப+மியில்) தட்டி நடக்க வேண்டாம். (அல் குர்ஆன் 24:31)
இந்த வசனத்தில் ஜீனத் என்ற பதம் மூன்று இடங்களில் வந்துள்ளது. இவற்றிர்க்கு அலங்காரம் என்று பொதுவாக அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள். இது முழுமையான அர்த்தம் அல்ல.
நாமாக தேவைக்கேற்ப செயற்கையாக செய்துக் கொள்ளும் அழகிற்கே அலங்காரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.
வீட்டை அலங்கரிக்கிறார்கள், புதுப் பெண் அலங்கரிக்கப்படுகிறாள், கணவனுக்காக மனைவி தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் போன்ற வற்றிலிருந்து செயற்கையாக செய்துக் கொள்வதையே அலங்காரம் என்ற சொல் குறிக்கிறது என்பதை விளங்கலாம்.
திருக்குர்ஆனில் ஜீனத் என்று வரும் எல்லா இடங்களிலும் நாம் பயன் படுத்தும் அர்த்தத்தில் அலங்காரம் என்ற பொருளை கொடுக்க முடியாது இடத்திற்கு ஏற்றார்போல் அதன் அர்;த்தம் மாறுபடும்.
இதை புரிந்துக் கொள்வதற்காக சில வசனங்களைப் பார்க்கலாம்.
அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிபடுத்தி இருக்கும் ஜீனத்தையும் உணவுப் பொருள்களில் நல்லவற்றையும் தடுப்பது யார்..? (7:32)
இந்த வசனத்தில் இடம்பெறும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. – இயற்கை
அழகு – என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
பிர்அவ்னுக்கும் அவன் அமைச்சர்களுக்கும் ஜீனத்தும் வாழ்வாதார தேவைகளும் கொடுக்கப் பட்டிருந்தன (10:88)
இந்த வசனத்திலும் ஜீனத்திற்கு – இயற்கை செல்வம் – என்று தான் பொருள் கொள்ள முடியும்.
குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும் அவற்றில் நீங்கள் ஏறி செல்வதற்காகவும் ஜீனத்தாகவும் படைத்துள்ளான். (16:8)
இங்கும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
ஆதமின் மக்களே..! தொழுமிடங்களில் உங்களை ஜீனத்தாக்கிக் கொள்ளுங்கள்(7:31)
இங்கு ஜீனத் என்பதற்கு பொருள், நிர்வாணமாக பள்ளிகளுக்கு செல்லாமல் ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
ஜீனத் என்ற பதம் இப்படி பல பொருள்களை கொண்டுள்ளது.
இப்போது பெண்கள் பற்றி பேசும் நூர் அத்தியாயத்தில் 31வது வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதங்களுக்கு எந்த பொருள் பொருந்தி போகிறது என்று பார்க்க வேண்டும்.
பெண்கள் ஜீனத்தை அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியதை தவிர காட்டக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.
இங்கு ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம், அதாவது ஆடை அலங்காரம் என்று பொருள் கொண்டால் – அதிலிருந்து தெரியக்கூடியதை தவிர – என்று இறைவன் கூறுவதற்கு பொருள் விளங்காமல் போய்விடுகிறது. ஆடை அலங்காரத்திலிருந்து எதையோ வெளியில் காட்டலாம் என்று பொருள் வருகிறது.
இஸ்லாம் கூறும் முறைப்படி ஒரு பெண் ஆடை உடுத்தினால் அந்த ஆடை முழுவதையும் கூட அந்த பெண் வெளிகாட்டலாம் தடையில்லை. உறுப்புகள் எடுப்பாக வெளியில் தெரியாக அளவிற்கு கணமான விசாலமான ஒரு சேலையை ஒரு பெண் தன் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டால் அதுவே அவளுக்கு இஸ்லாமிய உடையாக அமைந்து விடும் அதோடு அவள் வெளியில் செல்லலாம். சூடான், பாகிஸ்தான் நாட்டுப் பெண்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
உடலை முழுதும் மறைக்காத அளவிற்கு பெண் உடை உடுத்தினால் அவள் வெளியில் செல்லும் போது புர்காவோ, துப்பட்டியோ மேலதிகமாக அவசியமாகி விடுகிறது. இந்தியா மற்றும் அரபு நாட்டுப் பெண்கள் இதற்கு உதாரணம். இவர்களின் ஆடை போதுமானதாக இல்லை என்பதால் வெளியில் செல்லும் போது மேலதிகமாக துப்பட்டி புர்கா அணிகிறார்கள்.
இந்த விளக்கம் ஏன் என்றால் 24:31 வசனத்தில் முதலில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு ஆடை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியாது என்பதற்குதான். பெண்களை பொருத்தவரை அவர்கள் உடுத்தும் எந்த உடையும் அவர்களுக்கு அலங்காரம்தான். சல்வார் கமீஸ_டன் வெளிபட்டாலும் சரி, சேலையோ, புர்காவோ. துப்பட்டியோ எதுவும் அவர்களுக்கு அலங்காரம்தான். அப்படியானால் அந்த வசனத்தில் பேசுவது அலங்காரம் பற்றியது அல்ல. அங்கு வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயற்கை அழகு என்பது தான் பொருள்.
இப்போது பொருளைப் பார்ப்போம்.
முஃமினான பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்
தங்கள் இயற்கை அழகி(ஜீனத்தி)லிருந்து தெரியக்கூடியதைத் தவிர மற்றதைக் காட்டக்கூடாது.
இன்னும் தங்கள் மார்புகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும்.
அதிலிருந்து தெரியக்கூடியது என்பதிலிருந்து பெண்கள் தங்கள் முகத்தையும் கைகளையும் திறந்திருக்கலாம் என்பதை தெளிவாக விளங்கலாம்.
இந்த வசனத்தில் அடுத்து தொடராக இரண்டு இடங்களில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயல்பாக வீட்டில் இருக்கும்போதுள்ள செயற்கை அலங்காரம் என்ற பொருள்தான் பொருந்திப் போகிறது.
நபியே………….. விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)
பெண்கள் முகத்தை திறந்திருக்கலாம் என்பதற்கு இந்த வசனமும் சான்றாக இருக்கிறது. தலை முக்காட்டுடன் ஒரு பெண் முகத்தை திறந்திருக்கும் போது அவள் நல்லப் பெண் கண்ணியமானப் பெண் என்று பிறரால் அறியப்படுவாள். இதன் காரணமாக அவள் பற்றிய அவதூறு, அவளுக்கெதிரான ராகிங் போன்றவை நடக்காமலிருக்க இது வழிவகுக்கும் என்றெல்லாம் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது.
இந்த வசனத்தில் இடம் பெறும் – தலை முந்தானைகளை தாழ்திக்கொள்ளட்டும் –
என்பதற்கு என்ன விளக்கம்? தலை முந்தானையால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றுதானே புரிந்துக் கொள்ள முடிகிறது.,! என்று சிலருக்குத் தோன்றலாம். இதற்கு அந்த பொருளில்லை. தலை முந்தானை அடிக்கடி தலையிலிருந்து சரிந்து விழும் வாய்ப்புள்ளதால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். நபிமொழிகளிலிருந்து இதை விளங்கலாம்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு பட்டாலான மேலாடையும் கீழாடையும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து……… – பெண்களுக்கு தலைக்கு போடும் முக்காடாக கத்தரித்துக் கொள்ளவே அனுப்பினேன் – என்று கூறினார்கள்.(அலி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)
தனி முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்று இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.
அந்த முக்காடுகள் சரிந்து விழும் நிலை இருந்ததை அடுத்த செய்தி விளக்குகிறது.
(என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார்) அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் நபித்தோழர்கள் பலருடன் வந்து என்னை பெண் கேட்டார். நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம்; , உஸாமாவிற்கு என்னை திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். யார் என்னை விரும்புகிறாரோ எவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நபியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எனவே என் திருமண விஷயத்தை அவர்களிடம் ஒப்படைத்து நீங்கள் விரும்பியவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறிவிட்டேன்.. (இது நீண்ட ஹதீஸ்) என்னை உம்ம ஷரீக் வீட்டில் இத்தா இருக்க நபி ஸல் சொன்னார்கள். பிறகு வேண்டாம் அங்கு இத்தா இருக்க வேண்டாம் ஏனெனில் அவர் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர் வந்து தங்குவார்கள். அப்போது உன் தலையில் போட்டுள்ள முக்காடு கீழே விழும் சந்தர்பங்களில் மற்றவர்கள் உன்னை பார்ப்பதை நான் வெறுக்கிறேன். அதனால் நீ உம்மி மக்தூம் வீட்டில் இத்தா இரு என்று கூறினார்கள். (பாத்திமாபின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா, நூல் : நஸயி)
மற்றவர்கள் முன்னிலையில் தலை முக்காட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே அந்த வசனத்தில் இறைவன் – தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் – என்று கூறுகிறான்.
நபி ஸல் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்திருந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. ஒரு பெண் விரும்பி தன் முகத்தை மூடிக் கொண்டால் அது அவள் விருப்பம் அதை தடுக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். (இறைவன் மிக்க அறிந்தவன்)
114. கேள்வி – ஒருவரைப் பற்றி முனாஃபிக் என்று நான் முடிவு செய்து பத்வா கொடுக்கலாமா? அல்லது அதை அல்லாஹ் முடிவு செய்பவனா?
பதில் : முனாபிக் என்றால் நயவஞ்சகன் – சந்தர்;ப்பவாதி – இரட்டை நாக்குடையவன் என்பது பொருளும் – கருத்துமாகும். பேச்சின் மூலமாகவோ – செயல்களின் மூலமாகவோ இத்தகையோரை நாம் அடையாளம் காணலாம் என்றாலும் அவசரமாக அத்தகையோருக்கு முனாபிக் பத்வா கொடுத்து விட நம்மால் முடியாது. நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமையுடன் இருப்பது போல இருந்து இரட்டை வேடம் பூண்ட பலர் இருக்கத்தான் செய்தனர். நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிந்த நிலையிலும் இத்தகையோர் குறித்து எச்சரிக்கையாக இருந்தார்களே தவிர முனாபிக் பத்வா கொடுக்கவில்லை. அல்லாஹ்தான் அத்தகையோரை தன் வசனங்களின் வழியாக அடையாளம் காட்டினான். (பார்க்க 3:67,68 – 4:61,78,143 – 9:64,69,73,79 – 33:3,12,34,48,60,73 – 48:6 – 57:13,14)
115. கேள்வி – தரீக்கா என்றும் தனி நபரை குரு என்றும் என்றும் அழைத்து அவரிடம் பைஅத் செய்து தங்களை முரீது என்று சொல்லிக் கொண்டு நமது முஸ்லிம் சமூகத்தில் சிலர் இருக்கின்றனர் இது சரியா..? குரு இல்லாமல் சொர்க்கம் போக முடியாது என்கிறார்கள். அந்த குருக்களுக்கு மறைவான ஞானம் உள்ளது அவர்கள் அனைத்தையும் அறிவார்கள் என்றும் சொல்கிறார்கள். இது பற்றிய விளக்கம் வேண்டும்.
பதில் : இறைவனின் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் விஷயத்தில், அவனைப் பற்றி சிந்திக்கும் விஷயத்தில், அவனை புரிந்துக் கொள்ளும் விஷயத்தில் மனிதர்களுக்கு – முஸ்லிம்களுக்கு – மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு காரணம் மனித அறிவின் பலவீனங்களேயாகும். எல்லா மனிதர்களும் சமமான அறிவுள்ளவர்களாகத்தான் படைக்கப் படுகிறார்கள். அதை பயன்படுத்தும் முறையை பொருத்து, பக்குவப்படுத்தும் முறையை பொருத்து மனிதர்கள் பெரும் வேறுபாட்டை அடைகிறார்கள் என்பதை நாம் கண்டு அனுபவித்து வருகிறோம். இந்த வேறுபாடுகளை அவர்கள் கற்கும் கல்வி, கிடைக்கும் அனுபவம், இருக்கும் சூழ்நிலை, சுற்றி வாழும் சமூகங்கள் ஆகியவையே தீர்மானிக்கின்றன.
இறைவனையும், இறைத்தூதர்களையும், இஸ்லாத்தையும் புரிந்துக் கொள்ளும் விஷயத்திலும் மனிதர்களுக்கு மத்தியில் பாகுபாடு நிலவுவதற்கு நாம் மேலே குறிப்பிட்டவையே காரணங்களாகும். இந்த சாதாரண விஷயத்தை விளங்க முடியாதவர்கள் தான் முரீது என்ற அத்வைத கோட்பாட்டில் தன் ஈமானை இழந்து நிர்ப்பவர்கள்.
பாதை தெரியாமல் பயணிக்கும் தளமாகவே இந்த உலக வாழ்க்கையுள்ளது. மனிதன் சுயமாக சிந்தித்து விளங்க முடியாத பெருத்த இடற்பாடுகளும் குறுக்கீடுகளும் இந்த தளத்தில் உள்ளன. எனவே அவனை வழி நடத்தவும் போய் சேரக்கூடிய இலக்கை அறிவித்துக் காட்டவுமே இறைவன் புறத்திலிருந்து வேதங்கள் வந்தன. அதன் படி வாழ்ந்துக் காட்டவும் வழி நடத்தவும் தான் இறைத்தூதர்கள் வந்தார்கள். இறைவனை விளங்கி புரிந்துக் கொள்வதற்குறிய சரியான அளவு கோலை நம்மைப் போன்ற மனிதர்களாக இருந்த இறைத்தூதர்களிடமிருந்துதான் பெற முடியும். அவர்களல்லாத வேறு வழியில் பெறுவதற்கு எந்த வித சாத்தியக் கூறும் இல்லை.
அந்த இறைத் தூதர்களில் யாருமே,
நாங்கள் இறைவனைக் காட்டுகிறோம் என்று கூறவில்லை.
இறைவனும் மனிதனும் இரண்டற கலந்து விட முடியும் என்று கூறவில்லை
இறைவனுக்கும் எங்களுக்கும் அந்தரங்க தொடர்பு உண்டு என்றுக் கூறவில்லை.
நாங்கள் இறைத் தூதர்கள் என்பதால் நீங்களும் நாங்களும் வேறுபட்டவர்கள் என்று குரு – சீடர்கள் முறையை உருவாக்க வில்லை.
ஆனால், முரீது கொடுக்கிறோம் என்று புறப்பட்டு மிக சொற்ப மனித மனங்களை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் ஷேக்குகள் இவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ரகசிய ஞானம் என்று ஒன்று இஸ்லாத்தில் உண்டு என்றுக் கூறுவது, இறைவனுக்கும், அவன் வேதத்திற்கும், இறைத்தூதர்களுக்கும் எதிராக செய்யக் கூடிய பெரும் அநீதியாகும்.
மக்களுக்கு தெளிவான வழி காட்டுவதற்காகவும், அவர்கள் எளிதாக புரிந்துக் கொள்வதற்காகவும் இந்த குர்ஆன் இறக்கப்பட்டதாக தன் வேதத்தில் பல இடங்களில் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.
பாதுகாக்கப்பட்ட நபிமொழிகளில் இறைத்தூதரின் வாழ்க்கை முறை திறந்த புத்தகமாக இருக்கிறது. இவை இரண்டிலும் இல்லாத – சொல்லப்படாத – ரகசிய ஞானத்தை இந்த ஷேக்குகள் எங்கிருந்து கற்றனர்?
ஞானம் பெறுவதற்காக பைஅத் கொடுக்கிறேன் என்பதெல்லாம் பெரும் மோசடியாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்தால் அந்த நாட்டுக் குடி மக்கள் அந்த ஆட்சியாளரிடம் நான் உங்கள் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்பதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய இன்றைக்கும் நடை முறை படுத்த வேண்டிய ஒப்பந்தமாகும் அதாவது பைஅத் ஆகும். இதுவல்லாத ஆன்மீக பைஅத் முறை எதுவும் இஸ்லாத்தில் இல்லை.
மற்ற மார்க்கங்களில் போலி சாமியார்கள் இருப்பது போன்று இங்கும் ஷேக்குகள் என்ற பெயரில் பல போலிகள் அவ்வப்போது உருவாகும். தமது முரீது வியாபாரத்தை மக்களிடம் நல்ல விலைக்கு விற்க சமூகத்தில் தம்மை மேம்பட்டவர்களாக காட்ட நபி ஸல் அவர்கள் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக பொய்யை ஹதீஸ் என்ற பெயரில் ரெடிமேடாக உருவாக்கி வைத்துக் கொண்டார்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஹதீஸ்களில் ஒன்று மகா பயங்கரமானதாகும்.
ஒரு கூட்டத்திற்கு ஷைக்காக இருப்பவர் ஒரு உம்மத்திற்கு அனுப்பப்பட்ட நபியை போன்றவராவார் என்று நபி சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. இப்னு உமர் ரலி அறிவிக்க, இப்னு ஹிப்பான் நூலில் பதிவு.
இந்த செய்தி மூலமாக ஷைக்குகள் தங்களை நபிக்கு ஒப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன? இறைவன் எப்படி வஹி மூலமாக நபிமார்களோடு தொடர்பு வைத்திருக்கிறானோ அதே போன்று எங்களோடும் இறைவனுக்கு தொடர்பு உண்டு. நபிமார்கள் எப்படி இறைவனிடம் அந்தஸ்து மிக்கவர்களாக இருக்கிறார்களோ அதே போன்று நாங்களும் இறைவனிடம் அந்தஸ்து மிக்கவர்கள். சில நேரம் சில நபிமார்களுடன் இறைவன் பேசியது போன்று எங்களோடும் பேசுவான் என்றெல்லாம் மக்களை நம்பவைத்து மூளை சலவை செய்வதற்காகத்தான் இந்த செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.
தனி மனித வழிபாட்டுக்கு இஸ்லாத்தில் துளியும் அனுமதியில்லை என்பதை தனது தெளிவான வாழ்க்கையின் மூலமாக நிரூபித்து விட்டு போன நபி ஸல், இப்படி தனி மனித வழிபாட்டை ஊக்குவிக்க வழிவகுத்திருப்பார்களா..? இந்த செய்தி நபியின் பெயரை பயன்படுத்தி புனையப்பட்டதாகும்.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு கானிம் என்று ஒருவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர் அதனால் இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ள முடியாது என்று இதை பதிவு செய்த இப்னு ஹிப்பான் அவர்களே அடையாளம் காட்டி ஒதுக்கி விட்டார்கள்.
இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்று இப்னு ஹஜர் அஸ்கலானி குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்தான் முரீது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு ஆதாரமாக்கப் படுகிறது.
இவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறுவது அடுத்த திட்டமிட்ட பொய்யாகும். இதை பொய் என்று நிருபிக்க பெரிய ஆதாரமெல்லாம் தேவையில்லை. மறைவான ஞானம் உண்டு என்று சொல்லக்கூடிய இந்த ஷைக்குகளிடம் சென்று முன்னெச்சரிக்கை இல்லாமல் ஓங்கி ஒரு அறை அறையுங்கள். மறைவான ஞானம் இருந்தால் அதை தடுத்துக் கொள்ளட்டும் பாரக்கலாம்!
மறைவான ஞானத்திற்கு சொந்தக்காரன் இறைவன் ஒருவனே, அவன் அறிவித்துக் கொடுக்காத எது ஒன்றையும் எவரும் சொந்தமாக அறிந்துக் கொள்ள முடியாது என்பதற்கு நபிமார்கள் வாழ்வில் ஏராளமான அத்தாட்சிகள் உண்டு.
நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்தால் எந்த துன்பமும் என்னை தீண்டியிருக்காது. நான் நிறைய நன்மையை பெற்றுக் கொண்டிருப்பேன் என்று நபியே நீர் கூறும் என்கிறான் இறைவன். (அல் குர்ஆன்);
இந்த குர்ஆன் வசனத்திற்கு விரிவுரையே நடத்துகின்ற மாதிரி நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன.உஹது போர் களத்தில் அவர்களின் கன்னம் கிழிக்கப்பட்டு பல் உடைக்கப்பட்டு மூர்ச்சையாகி கீழே விழுகிறார்கள். வயதான காலத்தில் இந்த தாக்குதல் அவர்களுக்கு பெறும் துன்பமாக இருந்தது. நபியை தாக்கி இரத்தம் சிந்த வைத்தவர்கள் உருப்பட மாட்டார்கள் என்று சபிக்கும் அளவுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்தியது அந்த தாக்குதல். நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் தம்மை பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும்.
யூத பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து நபி ஸல் அவர்களை விருந்துக்கு அழைக்கிறாள். அவள் அழைப்பை ஏற்று அவளை கண்ணியப்படுத்த அவளிடம் சென்று விருந்துண்ட நபிக்கு விஷத்தின் தாக்கம் உடம்பில் ஏறி அவர்கள் மரணிக்கும் வரை தொந்தரவுக் கொடுத்தது. அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.
தன் அருமை மனைவி ஆய்ஷா அவர்கள் மீது, அவர்களின் கற்பு மீது சில நயவஞ்சகர்கள் களங்கம் சுமத்தியபோது நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மை நிலவரம் புரியாமல் துவண்டு போனார்கள். ஆய்ஷாவுக்கு தலாக் கொடுத்து விடுவோம் என்று அவர்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு, பிறரிடம் ஆலோசனை செய்யக் கூடிய அளவிற்கு நிலமை மோசமாகியது. அன்னை ஆய்ஷாவின் கற்புக்கு இறைவன் உத்திரவாதம் கொடுத்து வசனங்களை இறக்கும்வரை இதே நிலைதான் நீடித்தது. நபி ஸல் அவர்களுக்கு ரகசிய ஞானம் இல்லை என்பதை ஆயிரக்கனக்கான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி நிரூபித்துக் கொண்N;ட செல்லலாம் பதில் மிக நீளமாகிவிடும் என்பதற்காக சுருக்குகிறோம்.
மறைவானவற்றின் திறவுகோல் அவனிடமே இருக்கிறது அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:59)
அல்லாஹ்வைத் தவிர வானங்கள் பூமியிலுள்ள எவரும் மறைவானவற்றை அறிய மாட்டார்கள். (அல் குர்அ+ன் 27:65)
இறை வேதத்தின் போதனைகளை உண்மை என்று நம்பக் கூடிய எந்த முஸ்லிமும் இந்த வசனங்களை விசுவாசித்து இதற்கு மாற்றமாக பொய் கூறி திரியும் போலி ஷைக்குகளை புறக்கணித்து மக்களுக்கு இனங்காட்டுவார்கள். இனங்காட்ட வேண்டும்.
116 கேள்வி : ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை எவ்வளவு காலத்திற்கு பிரிந்து இருக்கலாம்? 4 அல்லது 6 மாதம் வரை பிரிந்திருக்கலாம் என்று ஒரு ஹிந்து நண்பர் கூறுகிறார். ஷரீஆ என்ன சொல்கிறது ?
பதில் :4 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் என்ற எந்த வரையறையையும் இஸ்லாம் ஏற்படுத்த வில்லை. இந்த வரையறை அறிவுக்குட்பட்டதும் அல்ல. ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் கணவன் மனைவியாக இணைகிறார்கள். இதன் முக்கிய நோக்கம் இல்லறத்தின் மூலம் தம் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதாகும். இந்த பாலியல் தேவை என்பது சிலருக்கு தினந்தோருமும் சிலருக்கு வாரத்திற்கு ஒரு முறையும் தேவைப்படலாம். மாதத்திற்கு ஒருமுறையோடு போதுமாக்கிக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது அவரவர்களின் உடற் கூறுகளையும் இருக்கும் சூழ்நிலையையும் பொருத்ததாகும். பாலியல் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தினந்தோரும் அடைய விருப்பமுள்ள தம்பதியர்கள் பிரிந்து வாழவேக் கூடாது.
பொருளாதார சூழ்நிலையாலோ இன்ன பிற காரணங்களாலோ தம்பதியர்கள் பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் இருவரும் கலந்து பேசி முடிவு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இன்ன காரணத்திற்காக நாம் இவ்வளவுக் காலம் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரிந்து வாழும் காலங்களில் உனக்காக நானும் எனக்காக நீயும் காத்திருப்போம். இந்த பிரிவு நம்மை தவறான வழியில், ஒழுக்க வீழ்ச்சியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது. கட்டுப்படுத்த முடியாது என்று ஒரு சூழ்நிலை வரும் போது பிரிந்திருப்பதற்கு எவ்வித நியாயமும் கற்பிக்காமல் உடனடியாக ஒன்று சேர்ந்துக் கொள்வோம் என்று புரிந்துணர்வு அடிப்படையில் கணவனும் மனைவியும் பேசி முடிவு செய்துக் கொண்டால் – வாக்குறுதியை காப்பாற்றும் மன உறுதி இருவருக்கும் இருந்தால் அவர்கள் இருவரும் எவ்வளவுக் காலமும் பிரிந்திருக்கலாம் இதில் எந்த தடையுமில்லை.
பாலியல் தேவைகள் குறிப்பிட்ட காலங்களில் அவசியமானது – தவிர்க்க முடியாதது – தவிர்க்கக் கூடாதது என்பதால் மிக நீண்ட காலம் பிரிந்திருப்பது இஸ்லாம் வகுக்கும் இல்லற நெறிகளுக்கு முரணானதாகும்.
நீங்கள் அவர்களுக்கு ஆடை அவர்கள் உங்களுக்கு ஆடை.
நீங்கள் ஓய்வு பெருவதற்காக உங்கள் மனைவி உங்களிலிருந்தே படைக்கப் பட்டுள்ளாள்.
கணவனுக்கு மனைவி மீது உரிமை இருப்பதுப் போன்றே மனைவிக்கு கணவன் மீது உரிமை இருக்கிறது. போன்ற குர்ஆன் வசனங்களை மனதில் நிறுத்துவோர் எவரும் மிக நீண்ட காலத்திற்கு தாம்பத்ய உறவுகளை தள்ளிப் போட மாட்டார்கள்.
இது கணவன் மனைவி சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் இது அவர்களாகப் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும். மார்க்கம் இதில் எந்த கெடுக்களையும் விதிக்கவில்லை.
-Tamil Muslim.com