அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் வைத்துவிட்டால் ஜிப்ரீலை அழைத்து, ”அவரை நான் பிரியம் கொள்கிறோம். அவரை நீ விரும்புவீராக!” என்று கூறுவான். அவரும் அவனை பிரியம் கொள்வார். ஜிப்ரீல் வானத்தில் உள்ளவர்களை அழைத்து ”அல்லாஹ் இன்னமனிதனை பிரியம் கொள்கிறான். அவரை நீங்களும் விரும்புங்கள் என்பார். வானத்தில் உள்ளோர் அவரை பிரியம் கொள்வர். பின்பு பூமியில் (உள்ளவர்களிலும்) அவர் பால் இணக்கத்தை ஏற்படுத்தப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி)
ஒரு அடியானை அல்லாஹ் கோபம் கொண்டால் ஜிப்ரிலை அழைத்து ‘நான் அவரை கோபிக்கிறேன்” என்று கூறுவான். வானத்தில் உள்ளோரிடம் அதை அவர் அறிவிப்பார். பின்பு பூமியில் உள்ளோரிடையேயும் அவர் மீது கோபத்தை இறக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதி)
“கண் பார்த்திராத, காது கேட்டிராத, மனித உள்ளத்தில் உதித்திராத ஒன்றை என் நல்லடியார்களுக்கு தயார் செய்து வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறுகிறான். (நீங்கள் விரும்பினால் 32:17 வசனத்தைப் படித்துக் கொள்ளுங்கள்.)
சொர்க்கத்தில் ஒரு மரம் உண்டு. 100 வருடம் ஆனாலும் விலகாத அதன் நிழலில் ஒருவர் இளைப்பாறுவார். நீங்கள் விரும்பினால் 56:30 வசனத்தைப் படியுங்கள்.
சொர்க்கத்தில் உள்ள ஒரு இன்பமான இடம்: பூமி மற்றும் அதில் உள்ளவை அனைத்தையும் விட சிறந்ததாகும் நீங்கள் விரும்பினால், ”3:185” வசனத்தைப் படியுங்கள். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதி)
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உண்டு அவர்களின் நடைபாதைகளில் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை தேடியவர்களாக சுற்றி வருவார்கள். அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களைக் கண்டால் ”நீங்கள் தேடியவை பக்கம் வாருங்கள் என ஒருவருக்கொருவர் தங்களிடையே கூறிக் கொண்டு, தங்களின் இறக்கைகளால் வானத்தின் பால் அம்மக்களை சூழ்வார்கள்.
அவர்களை நன்கு அறிந்தவனாக அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் என்ன கூறுகிறார்கள்? என்று கேட்பான். ”உன்னை அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறி தூய்மைப் படுத்துகிறார்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி உன்னை பெருமைப் படுத்துகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி உன்னை புகழ்கிறார்கள். உன்னை புகழுக்குரிய வார்த்தைகளால் உயர்வு படுத்துகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர்.
என்னை பார்த்து இருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ”இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை அவர்கள் பார்த்ததில்லை என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான்.”உன்னை அவர்கள் பார்த்திருந்தால் உன்னை வணங்குவதில் கடுமையாக நடந்து கொள்வார்கள். உன்னை புகழ்வதில் பெருமைப் படுத்துவதில் உன்னை தூய்மைப் படுத்துவதில் அதிகமாக நடந்து கொள்வார்கள் என்று வானவர்கள் கூறுவர்.
என்னிடம் அவர்கள் என்ன கேட்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறார்கள் என்று வானவர் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைவா! அதை அவர்கள் பார்த்திருந்தால் அதன் மீது அதிகப் பேராசை கொள்வார்கள். இன்னும் அதிகமாக அதைத் தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவார்கள்.
எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள் என்று அல்லாஹ் கேட்க ”நரகத்திலிருந்தும் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?” என்று அல்லாஹ் கேட்பான்.”இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! அதை அவர்கள் பார்த்ததில்லை” என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதிலிருந்து விலகவும், அதை அஞ்சவும் என கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று மலக்குகள் கூறுவர். ”நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்களில் ஒருவர் ”மக்களில் ஒருவர் உம்மை நினைவு கூர்ந்தவர்களில் இல்லை. தன் தேவைக்காகவே (அவ்விடத்திற்கு)வந்தார். (அவருக்குமா மன்னிப்பு உண்டு)” என்று கூறுவார்.
”அவர்களும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்கள் தான்! அவர்களுடன் உட்கார்ந்தவர் அவர்களுக்கு (பயனில்) குறை ஏற்படுத்தி விட மாட்டார். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)
அனைத்து மக்கள் முன்பும் என் சமுதாயத்தில் இருந்து ஒரு மனிதரை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, அவன் முன்னே 99 ஏடுகளை பரப்புவான். ஒவ்வொரு ஏடும் பார்வை படும் தூர அளவுக்கு இருக்கும். (இவை அனைத்தும் பாவ ஏடுகளாகும்)
நம்பகமான எனது எழுத்தாளர்கள் வானவர்கள் உனக்கு அநீதம் செய்துள்ளார்களா? இதில் எதையேனும் நீ மறுக்கிறாயா? என்று அல்லாஹ் கேட்பான். ”இறைவா! இல்லை” என்பார் அம்மனிதர்.
உனக்கு ஏதேனும் குறை உண்டா? என்று அல்லாஹ் கேட்பான். இறைவா! இல்லை என்பார் அவர். ”இல்லை, உனக்கு ஒரு நன்மை உண்டு. இன்று உனக்கு அநீதம் செய்யப்பட மாட்டாது” என்று அல்லாஹ் கூறுவான். பின்பு ஒரு சிறிய சீட்டு ஒன்று வெளியே எடுக்கப்படும். அதில் ”அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு” என்று இருந்தது.
உன் (நல்லறத்தின்) எடையைப்பார் என்று அல்லாஹ் கூறுவான். அவரோ ”இறைவா! இந்த (பெரிய) ஏடுகளுடன் இந்த சிறிய சீட்டினால் (நிறுப்பதால்) பயன் என்ன?” என்று கூறுவார். ”நீ அநீதம் செய்யப்படமாட்டாய் (எடையைப்பார்!)” என்று அல்லாஹ் கூறுவான்.
பின்பு ழூழூ(தராசின்) ஒரு தட்டில் ஏடுகள் வைக்கப்படும் மறுதட்டிலோ சிறிய சீட்டு வைக்கப்படும். ஏடுகள் (இருந்த தட்டு) லேசாம், சீட்டு (உள்ள தட்டு) கனத்துவிடும். அல்லாஹ்வின் பெயருடன் எதுவும் கனத்து விடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதி)