“இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் இவர்களுக்கு அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லலையா? வீணானதை நம்பி இறைவனின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?” – அல் குர்ஆன் – 29:67
இந்த குர்ஆனிய வசனத்தை நாம் ஆழ்ந்து சிந்தித்தால் இதில் பல உண்மைகள் நமக்கு தெளிவாகும். இன்று நம் நாட்டிலும் இன்னும் உலகின் பல நாடுகளிலும் நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எத்தனை சட்டங்கள் போட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஒரு பெண் தன்னந்தனியாக இரவில் எந்த பயமும் இல்லாமல் சென்று வரும் காலமே நம் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்று காந்திஜி அன்று சொன்னார். இன்று வரை அத்தகைய நிலை நம் இந்திய நாட்டுக்கு கிட்டவில்லை. சட்டங்களில் உள்ள ஓட்டைகள்தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம்.நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் சவூதி அரேபியாவில் டிரெய்லர்கள் அதிகம் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப் படுகிறது. இதில் ஓட்டுனர் ஒருவரே இருப்பார். நம் நாடு மாதிரி கிளீனர் இங்கு கிடையாது. ஓட்டுனர்கள் அதிகமாக பாகிஸ்தானிகளே உள்ளனர். ஒரு சில இந்தியர்களும் உண்டு. இவர்கள் பொருட்களை ஏற்றிச் செல்லும் போது வழியிலே டிரெய்லர்களை மடக்கி பொருட்களை கொள்ளை அடிப்பது சில காலம் நடந்து வந்தது. இதில் சில ஓட்டுனர்களின் உயிரையும் அந்த கொள்ளையர்கள் எடுத்துள்ளார்கள்.
இதைத் தடுக்க நினைத்த சவூதி அரசு மஃப்டியில் ஆட்களை அமர்த்தி சாமர்த்தியமாக குற்றவாளிகளான இரண்டு சவூதி பிரஜைகளை பிடித்து விட்டனர். குற்றவாளிகளைப் பிடித்து கோர்ட் கேஸ் என்று இழுத்தடிக்காமல் குற்றம் நிரூபிக்கப் பட்டதால் அந்த இருவரின் தலையையும் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் சவூதி அரசு வெட்டியது. வெட்டியதோடு அல்லாமல் எங்கு வழிப்பறி நடந்ததோ அந்த சாலைகளில் மர ஸ்டாண்டில் உடல்களை கட்டி தொங்கவிட்டு விட்டார்கள். இதை நேரில் பார்க்கும் யாருக்கும் அடுத்த முறை திருட மனம் வருமா! இந்த தண்டனை நிறைவேற்றியவுடன் இத்தகைய வழிப்பறி நடப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதே போன்று கடமையில் இருந்த ஒரு போலீஸ்காரரை கொலை செய்த எமனியை குற்றம் நிரூபிக்கப் பட்டதால் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்காக கட்டி தொங்க விட்டனர். இதை நானும் நேரில் பார்த்தேன்.
இதை யாராவது காட்டுமிராண்டித்தனம் என்று சொல்ல முடியுமா?
குற்றவியல் தண்டனையைப் பொறுத்தவரை இஸ்லாம் மூன்று முக்கிய அடிப்படைகளைப் பார்க்கிறது.
1. குற்றவாளியின் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை.
2. பாதிக்கப்பட்ட தனிநபர் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரைத் திருப்திபடுத்துவதன் மூலம் பழிவாங்கல் என்ற பெயரில் குற்றங்கள் பெருகாமல் தடுப்பது.
3. ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டனையின் மூலம் மீண்டும் அதே குற்றம் நடப்பதைத் தடுப்பது.
மேலே நான் குறிப்பிட்ட தண்டனைகள் நாட்டு மக்கள் என்று பாரபட்சம் காட்டாமல் நிறைவேற்றப்படுவதால்தான் மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. நம் நாட்டிலோ நிலைமை தலைகீழ். கையும் களவுமாக பிடிபடுகிறார்கள்: வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் அரசியல்வாதிகளின் ஆசிகளால் வெளியில் விடப்படுகிறார்கள். பிறகென்ன! அதே குற்றவாளிகள் இன்னும் தைரியத்துடன் குற்றங்களை செய்வதற்கு அரசாங்கமே வழிவகை செய்து கொடுக்கிறது.
மேலே நான் குறிப்பிட்ட குர்ஆனிய வசனத்தையும் இன்றைய சவூதி ஆட்சியையும் சற்று ஒப்பிட்டு பார்ப்போம்.
Federal Bureau Of Investigation (FBI) என்ற அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையில் ஏழு குற்றங்களுக்கான அட்டவணை பெறப்பட்டது.
குற்றம் சவூதி ஜப்பான் அமெரிக்கா
கொலை 0.17 1.10 5.51
கற்பழிப்பு 0.14 1.78 32.05
கொள்ளை 0.14 4.08 144.92
தாக்குதல் 0.12 23.78 323.62
கொள்ளை 0.05 233.6 728.42
இப்பொழுது இந்த குற்றங்களின் விகிதாச்சாரத்தை நாடுவாரியாக பாருங்கள். குர்ஆனுடைய குற்றவியல் சட்டத்தை தயவுதாட்சனியமின்றி சவூதி அரேபியா பின்பற்றுவதால்தான் அந்நாட்டு மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் கிடைக்கிறது. இந்த குர்ஆனின் சட்டத்தை கைவிட்ட மற்ற முஸ்லிம் நாடுகள் அமைதியிழந்து அல்லலுறுவதையும் நாம் பார்க்கிறோம்.
சவூதி அரேபியாவைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அத்வானி முன்பு அமைச்சராக இருந்தபோது ‘நம் நாட்டுக்கு அரபு நாட்டு சட்டங்களே தேவை’ என்று சொன்னார். பாம் வைப்பவனையும், மதக்கலவரத்தைத் தூண்டுபவனையும் அவன் இந்துவாகட்டும், முஸ்லிமாகட்டும், கிறித்தவனாகட்டும் இரண்டு முறை தலையை பொது மக்கள் முன்னிலையில் நம் அரசாங்கம் எடுக்கட்டும்: பிறகு பாருங்கள் நாமும் சவூதியைப் போல் அமைதி கொண்ட நாடாக மாற்றப்படுவோம்.
நன்றி: சுவனப்பிரியன்