Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாத்தைப்பற்றி பெரியார்!

Posted on October 27, 2008 by admin

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாத்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கோஷம் இருக்கலாம், கடவுள் இருக்கலாம், மூடநம்பிக்கை இருக்கலாம், மதச்சின்னம், மதச்சடங்கு இருக்கலாம், சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்குக் கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம், மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம், மத வேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம், நாத்திகர்களுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம், சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற, ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம், தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிருஸ்தவனாகி, கிருஸ்தவப் பறையன், கிருஸ்தவச் சக்கிலி, கிருஸ்தவப் பிள்ளை, கிருஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதை விட, பறத் துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, ‘எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்’ என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் ‘சரி எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக்கொள்’ என்று சொல்வதிலும் என்ன தப்பு என்று கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர், ‘இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறைபோட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்’ என்று எழுதியிருக்கிறார். அது (உறைபோட்டு வைத்திருப்பது) உண்மை என்றும் தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்கவேண்டிய கிரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம். (17.11.1935 ‘குடியரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்)

மேலும் பெரியார் கூறுகின்றார்.

காட்டுமிராண்டிகளைத் திருத்திய முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

அடுத்த நாட்டுக்காரன் முஸ்லிம். அவர்களும் காட்டுமிராண்டிகளாகக் கல்லைக் கட்டிக்கொண்டு அழுதவர்களாக இருந்தவர்கள்தான். முஹம்மது நபி தோன்றி அவற்றையெல்லாம் ஒழித்து ஒரே கடவளையும், அது பிறப்பு இறப்பு இல்லாததாகவும், ஒன்றும் வேண்டாததாகவும், அருளானதாகவும், அன்பானதாகவும் முஸ்லிம் ஆக்கிக்கொண்டான். அதன் காரணமாகவே முன்னேறுகிறான். (விடுதலை 30.10.1960)

மேலும் பெரியார் கூறுகிறார்.

தீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் மூஸ்லிம்களாக மாறியாக வேண்டும்

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகிவிட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டதென்றோ, அவர்களுக்கு ‘மோட்சலோகம்’ கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, ‘ கடவுளோடு கலந்துவிட்டார்கள்’ என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படி சொல்லுவதும் இல்லை. அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை.

இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூட நம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்திலுள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் பாவ புண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீhகளேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும், அறியாமையிலிரந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூறமுடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூரத்தில் எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடியிருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக்கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழ வேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம். எந்த வேலைக்கும் போகலாம். அரசியலில் சம பங்கு பெறலாம். மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு. வேதம் படிக்க உரிமை உண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும் அரசியல் பங்குக் குறைவிலுமிருந்தும் ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை.

ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்கவேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டவேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும், நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதியிருக்கின்றார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தை சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ளமாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் எற்படும் வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றொம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் எதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றேன். (நன்றி : கீற்று இணையதளம்)

மேலும் பெரியார் கூறுகிறார்.

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்.

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றயோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால் நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்துவரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தை விட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரை விடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவாகளுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாதவன், குளத்தில் இறங்கக் கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும், கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தை விட கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மததத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்பு தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும். பார்த்தாக வேண்டம். கேட்டாக வேண்டும். இந்து மத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர, பார்ப்பனன் தவிர மற்ற யாவரும், அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து வாசற்படியில் காவல் காக்கின்றது. தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான் ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்’ என்று சொன்னதற்காக அனேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்வில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை. சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம்.

ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை. அல்லது ‘ஆத்மாத்தத்திற்கோ, கடவுளை அடைவதற்கோ’ நான் அப்படிச் சொல்லவில்லை. அதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாகிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையை தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம். செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாகிரகம் செய்வது கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிருஸ்து மதத்தை தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக்கூடாது? கிருஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடை முறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிருஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான். (சாத்தன்குளத்தில் 28.07.1931 அன்று பெரியார் ஆற்றிய உரை. குடியரசு 2.8.1931)

முஸ்லிம் களின் மார்க்கத்தைத் தஞ்சமடைக!

இந்து மத ஊழல்களைத் திருத்தப்பாடு செய்த புதுமதக் கொள்கைகளே இன்று கிருஸ்து மார்க்கம், முஸ்லிம் மார்க்கம், முதலிய பல புதிய மார்க்கங்களாகத் தோன்றலாயின. இந்துமதக் கொடுமை தாங்கமாட்டாமலேதான் பல கோடி பேர்கள் முஸ்லிம்களாகவும், கிருஸ்தவர்களாகவும் ஆனார்கள். இன்றும் இந்துக்கள் பிறமதம் புகுகிறார்கள். என்றாலும் முஸ்லிம் மார்க்கம் தவிர வேறு எந்த மார்க்கத்துக்கு மனிதன் போனாலும் அவன் பின்னாலேயே ஜாதிச் சனியன் தொடர்ந்து கொண்டே போகிறது. உதாரணமாக ஒருவர் கிறிஸ்தவனாகப் பிறக்கும் பார்ப்பனக் கிறிஸ்தவன், பள்ளக் கிறிஸ்தவன், பறை கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், ஆசாரி கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்கின்ற பாகுபாடும், சடங்கு ஆச்சார அனுஷ்டானமும் எந்தக் கிறிஸ்தவனையும் விட்டுத் தொலைவதில்லை. பிரார்த்தனை ஸ்தலங்களிலும் இந்துக் கோயில்கள் போல இருந்து வருகின்றன.

அனால் இந்த இழிவு ஆபாசம் முஸ்லிம் மார்க்கத்திலே காணமுடிவதில்லை. ஒரு தீண்டாதான், முஸ்லிம் மதத்தை தழுவிவிட்டால் உடனே தீண்டாமை பறந்து போகிறது. அவன் அந்த சமூகத்தில் மனித சுதந்திரத்தை, சமத்துவத்தைப் பெறுகிறான். அங்கு பற முஸ்லிம் யாரேனும் என்று சொல்லி, தங்கள் பற்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஏன்? அவர்கள் தங்கள் மதத்தினிடையே சமத்துவம் நிலவ வேண்டுமென்ற உணர்ச்சியை அவ்வளவு அதிகமாகக் கொணடுள்ளனர். அதனாலேயே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்கிறவர்களை முஸ்லிம் மார்க்கத்தை தஞ்சமடையும்படி இந்த பத்து வருஷமாய்ச் சொல்லி வருகிறேன். (23.1.1938 அன்று அயக்கவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையில் கடவுள் பற்றிய பகுதி – குடியரசு 30.1.1938)

-abunoora

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 20 = 24

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb