விஞ்ஞானத்தை அழைக்கும் இஸ்லாம்
வானமும் பூமியும் விலகாது
கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது.
‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..’ (அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் – வசனம் 64),
‘அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு – 15வது வசனம்)
‘வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா?..’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு – 17வது வசனம்)
மேற்கண்ட வசனங்களை மெய்ப்பித்து நிற்கிறது.
ஏனைய கோள்களை, துணைக்கோள்களைப் போல பூகோளத்திலும் வாழ்க்கை வசதி அற்ற சூழ்நிலையும், அச்சூழ்நிலையை அளிப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் காற்று மண்டலக் கூரையும் இல்லாத நிலை நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக உயிரினம் தோன்றிய பூமியில் மட்டும் அந்த வசதியும், சூழ்நிலையும் ஏற்படுத்தப் பட்டிருப்பதிலிருந்தே பூமியில் உயிரினம் வாழவேண்டும் என்ற நாட்டமும், நோக்கமும் கொண்ட ஏதோ ஒரு சக்தி செயல் பட்டிருக்கிறது எனபதை உணரலாம். அதற்கு இதுவரை கூறப்பட்டவை அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களாகும்.
அறிவியல் அபிமானிகளே! இவற்றை மறுப்பதற்குரிய அறிவியல் ஆதாரங்கள் எவற்றையேனும் உங்களால் காட்ட முடியமா?.
மானிடக் கற்பனைகளையே கடை விரித்து வேதங்களாய் அறிமுகப் படுத்தப் பட்டதைக் காலங்காலமாய்க் கண்டு வந்ததால் இறை மறுப்பில் இறுகிப்போன உள்ளங்களே! உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா?.
எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு – வினாவையும் எழுப்புகின்றனவா?. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை – பரிசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை – ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சுpந்திக்கத் தெரிந்தவர்களே! விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அவைகளைச் சிந்தியுங்கள்.
நவீன அறிவியல் விண்ணகப் பருப்பொருட்களின் சலனங்களை, வானசாஸ்திரத்தைப் பற்றி என்ன கூறுகிறதோ அதை இம்மியும் பிசகாமல் 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறி நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள். பரிசுத்த குர்ஆன் பறை சாற்றுகிறது:
‘நிச்சயமாக வானங்களும், பூமியும் (ஒன்றை விட்டு ஒன்று) விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான்: அவை இரண்டும் விலகுமாயின், அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது..'(அல்-குர்ஆன் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திர் 41வது வசனம்).
இந்த வசனத்தில் வானங்களும், பூமியும் விலகும் வாய்ப்பைக் கொண்டன என்றும், ஆனால் அவை விலகி விடாத ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவை விலகும் வாய்ப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்.
இந்த அற்புத வசனம் அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட வேண்டுமாயின் பூமியும், ஆகாயமும் விலகும் வாய்ப்பு இருக்கிறதா? என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள்?. விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா?. முடியவே முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்ந்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம்.
நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா?.
விண்ணும், மண்ணும் விலகிப்போகும் வாய்ப்பைக் கொண்டன எனப் பறை சாற்றியதே பரிசுத்தக் குர்ஆன், அதை நிரூபிக்கக் கூடிய அறிவியல் சான்றுகள் எவை?. இதற்கு விடைகாணும் பொருட்டு இந்தப் பரிசுத்த குர்ஆனின் வசனத்திடம் மேலும் சற்று நெருங்கிச் செல்வோம்.
முதலாவதாக இவ்வசனம் விண்ணும், மண்ணும் விலகி விடாமல் தடுக்கப்படுகிறது எனக் கூறுவதிலிருந்து மண்ணானது (பூகோளம்) ஆகாயத்தில் பொருந்தியே இருக்கிறது. அவைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இல்லை எனக் கூறுகிறது. இதை வலியுறுத்தும் ஏனைய ஆதாரங்களுள் மேலும் ஒன்றைக் கவனியுங்கள்.
‘ஆகாயத்தில் கிரகங்களுக்கான (கோள்களுக்கான) பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் – 16வது வசனம்).
இந்த வசனமும் கோள்களைச் சுற்றி ஏதேனும் இடைவெளி இருப்பதாகவோ, அப்படிப்பட்ட இடைவெளிகளில்தான் கோள்கள் இருப்பதாகவோ கூறவிவ்வை. மாறாகக் கோள்கள் இருப்பது ஆகாயத்தில்தான் எனக் கூறுகிறது. இதிலிருந்து பூகோளத்திற்கு மேல் போர்த்தப் பட்டுள்ள காற்று மண்டலமும் ஆகாயத்தைச் சார்ந்த பகுதியே என்பது தெளிவாகிறது.
இந்த இடத்தில் மற்றொரு ஐயமும் எழலாம். ‘ஆகாயத்தை ஒரு கூரையாக ஆக்கினான்’ என்று குர்ஆன் கூறிய (40:64) வசனம், காற்று மண்டலத்தை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறதே. ஆகவே கூரையாக ஆக்கப்பட்ட இப்பகுதியை இதற்கு மேலும் நாம் ஆகாயம் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்பதே அந்த ஐயமாக இருக்கும். இந்த ஐயத்திற்கும் பரிசுத்த குர்ஆன் பதிலளிக்கிறது.
‘இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்…’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் – 22வது வசனம்).
இந்த வசனத்தில் மழையை அனுப்புவது ஆகாயத்திலிருந்தே எனக் கூறுகிறது குர்ஆன். மழை புறப்படும் இடம் ஆகாயம் எனக் குர்ஆன் கூறுவதால், மழை புறப்படும் இடமாகிய காற்று மண்டலம் ஆகாயத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதையும் பரிசுத்த குர்ஆனே விளக்குகிறது. எனவே ஆகாயம் என்ற சொல் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கியதே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மேற்கண்ட வசனங்களிலிருந்து பூகோளத்தைப் பொருத்தவரை ஆகாயத்தின் கீழ் எல்லை எது எனத் தெரிந்து விட்டது. பூகோளம் (ஏனையக் கோள்களும்) இடைவெளியின்றி ஆகாயத்தில் பொருந்தியிருப்பதால், பூகோளத்தின் மேற்பரப்பிலிருந்து ஆகாயம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது.
ஆகாயத்தின் கீழெல்லையை கண்டு விட்டோம். சரி. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா?. நிச்சயமாக கூறுகிறது. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி அதற்குரிய ஆதாரங்களுடன் அருள்மறை குர்ஆன் கூறவே செய்கிறது.
‘நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் ஆகாயத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்தோம்.’ (அருள்மறை குர்ஆன் 37 வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்)
‘ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் எனபதை நீங்கள் பார்க்கவி;ல்லையா?. இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.’ (அருள்மறை குர்ஆன் 71வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்).
மேற்கண்ட வசனங்களிலிருந்து இத்தலைப்புக்குத் தேவையான விபரங்களை மட்டும் பார்ப்போம். ஆகாயங்கள் மொத்தம் ஏழு எனவும், பூமிக்குரிய ஆகாயமே நட்சத்திரங்களின் அழகால் அலங்கரிக்கப் பட்டுள்ளது எனவும் எல்லா ஆகாயங்களிலும் நட்சத்திரங்கள் (சூரியன்), துணைக்கோள்கள் (சந்திரன்) உள்ளடங்கியுள்ளன எனவும் குர்ஆன் கூறுகிறது.
மேற்கண்ட வசனத்தில் ஆகாயங்கள் யாவும் நட்சத்திரங்களை உள்ளடக்கி இருக்கின்றன என கூறுவதிலிருந்து, ஆகாயத்தின் மேலெல்லையும் நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது எனக் காண்கிறோம்.
‘நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது’ என்று கூறினால் என்ன பொருள்?. பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா?. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்ப;ட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா? என்ற வினா இப்பொது எழுகிறது. இந்த வினாவுக்கும் பரிசுத்த குர்ஆனே விடையளிக்கிறது:
‘ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..’ (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் – 33 வது வசனம்)
மேற்படி வசனம் பிரபஞ்சம் முழுவதுமே ஆகாயமன்று. ஆகாயங்களுக்கும் நிச்சயமாக ஓர்; எல்லை இருக்கிறது. எனவே ஆகாயம் எனத் தனியான ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.
இதுவரை நாம் கண்ட விஷயங்களில் இருந்து பூமியன் மேற்பரப்பிலிருந்து துவங்கிக் கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய அகன்ற பெருவெளியாய்ப் பரவி, அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் உட்பட்டு தனிச் சிறப்புடன் விளங்குவதே ஆகாயம் (பேரண்டம்) எனக் கண்டோம்.
விண்ணகப் பருப்பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கி, நெடிதுயர்ந்து பரவிக் கிடக்கும் பேரண்டப் பெருவெளி. அதில் ஏனைய பருப்பொருட்களைப் போல் இடைவெளி ஏதுமின்றி பொருந்தி நிற்கும் பூகோளம். இந்த பூகோளம், அது பொருந்தி நிற்கும் பேரண்டப் பெருவெளியிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பைக் கொண்டதா?. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா?. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா?. இதுவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் கருப்பொருள்.
பரிசுத்த குர்ஆனின் பிரகடனத்தை, அதன் உண்மை நிலையை நமக்குக் கற்றுத்தர, அருள்மறை குர்ஆன் மேலும் கூறுகிறது:
‘இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான்: (அவை) யாவும் (அவைகளுக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் செல்கின்றன.’ (அருள்மறை குர்ஆன் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியா – 33வது வசனம்).
அற்புதம்தான்! நவீன் வான சாஸ்திரத்தின் திறவுகோலையும் நமக்களித்து, நாம் தேடிச் செல்லும் கருப்பொருளின் நுழைவாயிலுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஒப்பற்ற இறை வேதத்தின் மெய்யான இந்த பரிசுத்த வசனம்.
என்ன கூறுகிறது இந்த வசனம்? விண்ணில் காணப்படும் சூரியன், சந்திரன், உள்ளிட்ட பருப்பொருட்கள் யாவும் ஒரே இடத்தில் ஓய்ந்திருக்காமல் அவைகளுக்கென்றே இருக்கும் மண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் பயணம் செய்கின்றன எனக் கூறுகிறது.
அற்புதமல்லவா! இது புவி மையக் கோட்பாட்டை தகர்த்தெறியவில்லையா?. எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே!. இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள்?. விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தை மறுக்கிறீர்களா?. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை மறுக்கிறீர்களா?. இல்லை. இரண்டையுமே நீங்கள் ஒப்புக் கொண்டு இந்த வசனம் மெய்யான வசனமே என உங்களை அறிந்தோ – அறியாமலோ அதற்கு சாட்சியாக நிற்கிறீர்கள்.
பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க வந்த அறிவியல், இந்த விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?.
சந்திரன் மணிக்கு 3,600 கி.மீ. வேகத்தில் செல்கிறது. பூமியானது மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. சூரியன் மணிக்கு 9,00,000 கி.மீ. வேகத்தில் பாய்கிறது எனக் கூறுகிறது அறிவியல்.
சூரியன் மட்டும்தான் ஓடுகின்றதா? ஏனைய நட்சத்திரங்கள் ஓடவில்லையா?. ஏனில்லை?. அனைத்தும் ஓடுகின்றன. வானியல் அறிஞர்கள் நிறமாலை நோக்கிகளின் துணை கொண்டு விண்ணை ஆய்வு செய்யக் கற்றுக் கொண்ட பின் விண்ணில் எதுவும் ஓய்ந்திருக்கவ;ல்லை: யாவும் அவைகளுக்குரிய திசைகளிலும், திசை வேகத்திலும் (ழுசடிவையட ஏநடழஉவைல) சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறிப் பரிசுத்த குர்ஆன் மெய்யான இறைவேதமே என்பதற்கு தன்னையே சாட்சியாக அர்ப்பணித்து நிற்கிறது.
அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் – கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?.
ஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ நீங்கள் மறுக்கிறீர்களா?. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது.
பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா?.
அறிவார்ந்த நண்பர்களே! மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம்?. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது! விலகவே விலகாது! ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.
விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா?. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன்?. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ -அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி?.
எப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (Light year) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும்.
ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.