காஃபிர் என்பது கேவலமான சொல்லா?
திருக்குர்ஆனில் சொல்லப்படும் ‘காஃபிர்’ (Kaafir/كَافِر ) என்ற அரபிச் சொல்லை மாற்று மத சகோதரர்கள் தம்மைக் குறிப்பிடும் கேவலமான சொல்லாகக் கருதுகிறார்கள்.
திருக்குர்ஆன் ‘காஃபிர்’ என்று தங்களை ஏசுவதாக எண்ணுகிறார்கள். அப்படியொரு தவறானப் பிரச்சாரம், திருக்குர்ஆன் பற்றி விளங்காதவர்களால் அல்லது விளங்கியிருந்தும் உள்நோக்கத்துடன் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்படுபவர்களால் முடுக்கி விடப்படுகிறது.
இந்து மதத்தைப் பின்பற்றுபவரை ‘இந்து’ என்கிறோம்; கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவரை ‘கிறிஸ்தவர்’ என்கிறோம். அதேபோல்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுபரைக் குறிக்க ‘முஸ்லிம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
இந்து, கிறிஸ்தவர் என்ற பதங்களுக்கு எதிர்ப்பதத்தைக் குறிக்க நேரடி வார்த்தைகள் இல்லை. ஆனால் ‘முஸ்லிம்’ என்ற அரபிச் சொல்லுக்கு எதிர்ப்பதம் உண்டு; அதுதான் ‘காஃபிர்’ என்ற சொல். அதாவது முஸ்லிம் அல்லாத எவரையும் குறிக்க அவர் சார்ந்த மதத்தோடு இணைத்துச் சொன்னாலும், காஃபிர் என்று சொன்னாலும் ஒன்றே.
உதாரணமாக, ‘சுதேசி’ என்ற சொல்லுக்கு “உள்நாட்டுக்காரர்” என்றும் ‘விதேசி’ என்ற சொல்லுக்கு ‘அன்னியர்’ அல்லது அயல்நாட்டுக்காரர் என்றும் பொருள்.இதையே ஆங்கிலத்தில் சுதேசியை Native/Citizen என்றும் விதேசியை Foreigner என்றும் சொல்லலாம். இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த இந்தியர் அல்லாதவரைக் குறிக்க ‘விதேசி’ அல்லது Foreigner என்று குறிப்பிட்டால் சம்பந்தப்பட்டவர் வருத்தப்படுவதில்லை.(அமெரிக்காவில் அமெரிக்கரல்லாதவரை ‘Alien’ என்கிறார்கள். முறையாகச் சொன்னால் இந்த வார்த்தைக்கு தான் முதலில் இவர்கள் வெகுண்டு எழ வேண்டும்.) ‘விதேசி’ என்பது ஒரு குறிச்சொல் என்பதை அவர் புரிந்திருப்பதால் அவருக்கு வருத்தமில்லை. இதே அளவீடுதான் ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவரைக் குறிக்க காஃபிர் என்று சொல்லும் போதும் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன் அருளப்பட்டக் காலத்தில், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இன்னும் இஸ்லாத்தை ஏற்காத குறைஷியர்கள் என பல்வேறுபட்ட சமூகத்தினர் இருந்தார்கள். திருக்குர்ஆன் ”காஃபிர்” என்று அழைப்பது முஸ்லிம் அல்லாதவர்களையே – அதாவது தங்களையேக் குறிப்பிடுகிறது என்பதை அன்றைய மாற்று மத சமுகத்தினர் நன்கு புரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்ததால் இதை ஆட்சேபிக்கவில்லை.”காஃபிர்” என்ற சொல் என்பது திட்டுவதோ, ஏசுவதோ அல்லாது, ஏக இறைவனை மறுத்தவர்களைக் குறிப்பிடும் சொல் என்பதை அவர்கள் விளங்கியிருந்தார்கள்.
அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம் அல்லாதவர்கள் உலக நாடுகளில் இன்றும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்றுமே ”காபிர்” என்ற சொல்லை, தவறாக இன்றுவரை விளங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
”காஃபிர்” என்ற வார்த்தையைப் பற்றிய பொருள் புரியாமல் அந்த வார்த்தையை வெறுப்பது, பிற மொழி பற்றிய புரிந்துணர்வு இல்லாமையால், பிற மொழியின் ஒரு வார்த்தையின் மீது ஏற்பட்ட அறியாமையின் வெறுப்பாகும். இந்த அறியாமை நீக்கப்பட வேண்டும். எனவே ”கஃபர” என்ற சொல்லிலிருந்து கிளைச் சொல்லாக திருக்குர்ஆனில் வார்த்தைகளிலிருந்து ஏராளமான வசனங்களிலிருந்து சிலவற்றை இங்கு பார்ப்போம்.
வ மா கஃபர சுலைமானு வ லாகின்னஷ் ஷையாத்தீன கஃபரு – சுலைமான் (மறுக்கவில்லை) நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள் தாம் நிராகரித்தார்கள். 2:102
”கால வமின் கஃபர” – என்னை மறுத்தவருக்கு – நிராகரித்தவருக்கு 2:126
”ஃப மின்ஹும் மன் ஆமன வ மின்ஹும் மன் கஃபர” – அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர், அவர்களில் மறுப்பவர்களும் – நிராகரித்தவர்களும் உள்ளனர். 2:253
”இன்னீ கஃபர்து – நிச்சயமாக நான் நிராகித்து விட்டேன்” – மறுத்து விட்டேன். 14:22 (இது ஷைத்தான் மறுமையில் சொல்லும் வார்த்தை முழு வசனத்தையும் படித்து விளக்கம் சொல்ல வேண்டும்)
”…ஃபல்யக்ஃபுர்” – விரும்புபவர் மறுக்கட்டும். 18:29
”கஃபர்த” – அவனையா நீ நிராரிக்கிறாய். 18:37
”ஃபகஃபரத்” – நன்றி செலுத்தாமல் மாறு செய்தது. 16:112
”கஃபர்தும்” – நம்பிக்கை கொண்டபின் மறுத்து விட்டீர்களா?. 3:106
”கஃபர்னா” – மறுத்து விட்டோம். 14:9, 40:84,
”கஃபர்னா பிகும்” – உங்களை மறுக்கிறோம். 60:4
”கஃபரூ” – (ஏக இறைவனை) மறுப்போரை… 2:6, 26, 39 89ல் இருமுறை.
”அக்ஃபரு” – நன்றி மறுப்புக்கு சொல்லப்பட்டுள்ளது. 27:40 மறுத்து 40:42
”ஃபலா தக்ஃபுர்” – நிராகரிப்பவர்களாக ஆகிவிடாதீர்கள். 2:102
”தக்ஃபுரூ” – (ஏக இறைவனை) மறுத்தால். 4:131, 170. 14:8
”கய்ஃப்ன தக்ஃபுரூன பில்லாஹ்…” – அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள். 2:28, -வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறுபகுதியை மறுக்கிறீர்களா? 2:85.- ஏன் அல்லாஹ்வின் வசனங்களை மறுக்கின்றீர்கள்? 3:70,98,101,106, 4:89, 6:30
”வலா தக்ஃபுருனி” – நன்றி மறக்காதீர்கள். 2:152
”யக்ஃபுரூன” – அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக… 2:61, 3:21,112. (குர்ஆனை) மறுக்கின்றனர் 2:91 – அல்லாஹ்வையும் தூதர்களையும் மறுத்து 4:150 – (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் 6:70.
”அக்ஃபர், கஃபர” – (ஏக இறைவனை) மறுத்து விடு என்று மனிதனிடம் கூறி, அவன் மறுத்தபின் 59:16
”அக்ஃபுரூ” – காலையில் நம்பி மாலையில் மறுத்து விடுங்கள் 3:72
”குஃபிர” – மறுக்கப்பட்டவருக்கு 54:14
”யுக்ஃபரு” – மறுப்போர் அனைவரையும் 4:140
”யுக்ஃபரூஹு” – எந்த நன்மை செய்தாலும் அது மறுக்கப்படாது 3:115
”அல் குஃப்ர” – நம்பிக்கையை (இறை) மறுப்பாக மாற்றுபவர் 2:108. அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்த போது..3:52.
”பில் குஃப்ரி” – நீங்கள் முஸ்லிம்களாக ஆன பின் (ஏக இறைபனை) மறுக்குமாறு அவர் உங்களை ஏவுவாரா? 3:80. (இறை) மறுப்பை நோக்கி 3:176. (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக்கொண்டோர் 3:177. (இறை) மறுப்பை நோக்கி 5:41.
”கஃபரூ – குஃப்ரன்” – நம்பிக்கை கொண்டபின் மறுத்து பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின்.. 3:90. குஃபூரன் 17:89,99.
”கஃபூருன்” – 11:9. ”கஃபூரின்” – 22:38.
”கஃபூரன்” – ஷைத்தான் நன்றி கெட்டவனாக இருக்கிறான். 17:27. மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். 17:67.
கஃபரூ, கஃபரன் – நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்து. பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை…4:137
”பி குஃ ப்ரிக” – உனது (இறை) மறுப்பு 39:8
”குஃப்ரிஹிம்” – (தன்னை) மறுத்ததால் 2:88. 4:156 அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்தததாலும் 4:155.
”அல் காஃபிரு” – (ஏக இறைவனை) மறுப்பவர் 25:55
”காஃபிரின்” – (குர்ஆன்) இதை மறுப்போரில் முதன்மையாகாதீர்கள் 2:41.
”காஃபிருன்” – (ஏக இறைவனை) மறுப்போராக… 2:217. 64:2
”அல் காஃபிரூன்”, (ஏக இறைவனை) மறுப்பவர்களே. 109:1.
”அல் காஃபிரூன”, ”அல் காஃபிரீன்” – (நம்மை) மறுப்பவர்கள், மறுப்போருக்கு 4:151. 2:19,24,34.
”அல் குஃப்ஃபார்” – (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள். 60:10.
‘காஃபிர்’ என்ற சொல் இழிவு படுத்துவதற்காக பிரயோகப்படுத்தப் பட்டிருந்தால், முஹம்மது நபியுடன், இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எவ்விதத் தொடர்பும் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். முஹம்மது நபிக்கு கடன் கொடுத்திருந்த யூதர் பற்றியும், முஹம்மது நபியை மதித்த ஆனால் நபியாக ஏற்காத நண்பர்கள் பற்றியும் நிறைய குறிப்புகள் இருக்கின்றன. குரைஷியர்களின் அவச்சொல்லுக்கு அஞ்சி, கடைசிவரை இஸ்லாத்தை ஏற்காத முஹம்மது நபியின் நெருக்கமான உறவினர் அபூதாலிஃப் அவர்கள் காஃபிராகவே இறந்தார்கள் என்பதிலிருந்து, காஃபிர் என்ற சொல், இஸ்லாத்தை ஏற்காதவர்களைக் குறிக்கும் சொல்லேயன்றி ஏளனச் சொல் அன்று என்பது விளங்குகிறது.
மேலும், மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது, இஸ்லாத்தை ஏற்காமலும் அதேசமயம் முஸ்லிம்களைத் துன்புறுத்தாமலும் இருந்த எண்ணற்ற முஸ்லிமல்லாதவர்கள் (காஃபிர்கள்) மக்காவில் வசித்தனர். அதேபோல், முஸ்லிம்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ஆக்ரோஷமாகப் போரிட்டு முஸ்லிம்களிடம் போரில் தோற்று சிறைபிடிக்கப்பட்ட காஃபிர்களும் கண்ணியமாக நடத்தப் பட்ட சம்பவங்களுக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
மஹாபாரதப் போர்க் களத்தில் பாண்டவர்களை எதிர்த்து நிற்பவர்களைக் கொல்வதைக் கடமை என்கிறது கீதை. இது போர்க்களத்தில் எதிர்த்து நிற்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். காஃபிர்களைக் கொல்லுங்கள்; வெட்டுங்கள் என்று சொல்லப்படும் குர்ஆன் வசனங்கள், நிராயுதபாணியாக இருந்த அன்றைய முஸ்லிம்களை அடக்குமுறைக்கு ஆளாக்கிய மக்கத்துக் காஃபிர்களைக் குறித்துச் சொல்லப்பட்டவையாகும். இதனைத் திரித்து , குர்ஆன் இன்றைய எல்லாக் காஃபிர்களையும் கொல்லச் சொல்கிறது என்பது முற்றிலும் அபத்தம்.
திருக்குர்ஆன், முஸ்லிம் அல்லாதவர்களைக் ‘காஃபிர்’ என்று ஏளனப்படுத்துகிறது! முஸ்லிம் அல்லாதவர்களே ஒன்று படுங்கள்!! என்ற பசப்புவார்த்தை, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒடுக்கி வைக்கும் நோக்கத்தினாலேயன்றி ‘சகோதரத்துவத்துவ’ முழக்கமன்று; சக மனிதனை பிராமணன், ஷத்திரியன், வைசியன் என்று வகைப்படுத்தியதோடு, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் இந்து அல்லாத அனைவரையும் ‘சூத்திரன்’ என்று வருணபேதம் போதித்து இழிவு படுத்தும் கொள்கையைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, மனிதர்களைவரும் ஒரே தாய்-தந்தையிடமிருந்து பிறந்தவர்களே; பிறப்பால் உயர்வு தாழ்ச்சி இல்லையென உலகளாவிய சகோதர அழைப்புவிடும் இஸ்லாத்தை விமர்சிப்பதில் நியாயமில்லை.