பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
(1) திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கிவைத்தோம்.
(2) மாட்சிமைமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா?
(3) மாட்சிமைமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
(4) அதில் மலக்குகளும் ஜிப்ரீலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்து கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகிறார்கள்.
(5) அந்த இரவு முழுவதும் நலம் மிக்கதாகத் திகழும்., வைகறை உதயம் வரையில்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருந்த பொழுது மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் வருகை தந்து குர்ஆனின் முதல் ஐந்து வசனங்களை இறக்கியருளியது இந்த இரவில்தான்.
லைலத்துல் ஞகத்ர் இரவு அருட்பாக்கியங்கள் நிறைந்தும் உயர் அந்தஸ்து பெற்றும் திகழ்வதற்குக் காரணம் ஜிப்ரீலின் முதல் வருகை அதில் அமைந்ததேயாகும். இவ்வையகம் இறைவழிகாட்டலின் ஒளியால் பிரகாசிக்கத் தொடங்கியது அன்றிலிருந்துதானே. அதனால்தான் அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக மலர்ந்துள்ளது.
இந்த இரவில் ஒரு மனிதன் வாய்மையுடனும் மன ஓர்மையுடனும் முழு ஈடுபாட்டுடனும் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டால் ஆயிரம் மாதங்களுக்கு ஈடான நற்கூலியை அல்லாஹ் அவனுக்கு வழங்குகிறான்.
மேலும் இந்த இரவில் ஏனைய மலக்குகளுடன் ஜிப்ரீலும் சிறப்பான முறையில் பூமிக்கு வருகை தருகிறார்கள். நன்மை மற்றும் சாந்திக்குரிய விஷயங்களையும் நம்பிக்கையாளர்களுக்கான பிரார்த்தனைகளையும் ஏந்திக்கொண்டு வருகிறார்கள்.
எவ்வாறு குர்ஆன் ஓதும் பொழுது மலக்குகள் இறங்குகிறார்களோ, திக்ர் செய்யும் நல்லடியார்களை சூழ்ந்து கொள்கிறார்களோ, வாய்மையான எண்ணத்துடன் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் இறக்கைகளைத் தாழ்த்திக் கண்ணியமும் பாதுகாப்பும் அளிக்கிறார் களோ அதைப் போன்றதாகும் இதுவும்.
இது அதிகாலை வரை தொடர்கிறது. ஏனெனில் அத்துடனேயே இரவு முடிவடைகிறது.
கவனிக்க வேண்டிய கருத்துகள்
1) லைலத்துல் ஞகத்ர் என்பது மகத்தான ஓர் இரவு. அதில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
2) நன்மை மற்றும் நற்கூலியைப் பொறுத்து இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
3) இந்த இரவில் மலக்குகளும் ஜிப்ரீலும் பூமிக்கு இறங்கி வருகிறார்கள்.
4) லைலத்துல் ஞகத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அமைந்துள்ளது.