Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்?!

Posted on September 22, 2008 by admin

அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று அந்த நாட்டின் பொருளாதார நிபுணர்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா மட்டுமல்ல, உலக சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, சுமார் 700 பில்லியன் டாலர்களை (அடேயப்பா, 70,000 கோடி டாலர்கள்.  “ரூபாய்.31 லட்சம் கோடி” –  அதாவது, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கள்ளப்பணம் ரூபாய். 64 லட்சக் கோடியில் பாதிக்கும் சற்று குறைவு) திவாலாக இருக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வாரி வழங்கி, தனது ஒட்டுமொத்தப் பொருளாதாரமே தகர்ந்து விடாமல் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் நிதிநிலைமை ஆட்டம் காணும் அளவுக்கு அப்படி என்ன பொருளாதார நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டது? எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத சந்தைப் பொருளாதாரம் சந்திக்க நேரும் விபத்தைத்தான் இப்போது அமெரிக்காவும் சந்தித்துள்ளது. உலகிற்கெல்லாம் பொருளாதார நடவடிக்கையில் அரசின் தலையீடு கிஞ்சித்தும் கூடாது என்று உபதேசம் செய்தவர்கள் இப்போது அரசின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

1990-ன் பிற்பகுதியில், அமெரிக்காவில் அனைவருக்கும் குடியிருக்க வீடு வேண்டும் என்கிற முனைப்புடன் அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவில் குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடனை வாரி வழங்கத் தொடங்கின. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் நிறுவனங்களின் வளர்ச்சிதான் இப்படியொரு திட்டத்தின் பின்னணியாக இருந்தது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்போது, இந்தியாவில் யார், இன்னார் என்று கேள்வி இல்லாமல் வங்கிகள் கடன் அட்டைகளையும், வாகனக் கடன்களையும் கொடுப்பதுபோல, அமெரிக்காவிலும் தராதரம் பார்க்காமல் எல்லோருக்கும் வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகள் இறங்கின. என்ன வேலை, என்ன சம்பளம், என்ன பின்னணி என்பதைக் கருத்தில்கொள்ளாமல் வாங்க இருக்கும் வீடுகளையே அடமானமாக ஏற்றுக்கொண்டு அதிகரித்த வட்டிக்குக் கடன்கள் தரப்பட்டன.

கேட்டதும் கடன் கிடைக்கிறது எனும்போது வீடு வாங்கும் ஆசை அனைவருக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியும், வீடுகளின் விலைகளில் எண்ணிப் பார்க்க முடியாத உயர்வும் ஏற்பட்டன. இந்தச் செயற்கையான வளர்ச்சியை எத்தனை காலம் தக்க வைக்க முடியும்? ஒரு கட்டத்தில் தேவையும் குறைந்து விலையும் சரியத் தொடங்கியது. வேறு காரணங்களால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிறு பின்னடைவு, அதிகரித்த வேலைஇழப்புக்கு வழிகோலியது. பலருடைய வீட்டுக்கடன்களின் தவணைகள் அடைக்கப்படாத நிலைமை ஏற்பட்டது. அந்தக் குடியிருப்புகளை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தினவே தவிர, அவைகளை விற்றுப் பணமாக்க முடியவில்லை. அவற்றை வாங்க ஆள் இல்லை.

வங்கிகள் தாங்கள் விநியோகம் செய்திருந்த கடன்களையும், அதற்காக அடமானமாகப் பெற்றிருந்த வீடுகளின் பத்திரங்களையும் காட்டி பெரிய நிதிநிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்றிருந்தன. தவணைப் பணம் தடைப்பட்டு, அடமானமாகப் பெற்ற வீடுகளையும் விற்க முடியாத நிலையில் வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்டம் காணத் தொடங்கின. விளைவு? இந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்காக முதலீடு செய்திருந்த நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின.

இதன் தொடர்விளைவாக இந்த நிதி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்த பொதுமக்கள், தங்களது முதலீடு மதிப்பிழந்ததால் நஷ்டமடைந்தனர். இது அமெரிக்கா முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. பங்குச்சந்தை சார்ந்த பொருளாதாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இது என்பதற்கு அமெரிக்கா இப்போது சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓர் எடுத்துக்காட்டு.

உலகமெல்லாம் பெயரும் பெருமையும் பேசிய பியர் ஸ்டேர்ன்ஸ், லெஹ்மான் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி. நிறுவனங்களில் தொடங்கி சிறிய மற்றும் அமெரிக்காவில் மட்டுமே செயல்படும் பல நிதி நிறுவனங்களும் வாராக்கடனாக மாறிய வீட்டுக் கடன்களால் பாதிக்கப்பட்டு திவாலாகும் நிலைமை. அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்பட்டு விடாமல் தடுக்க, அமெரிக்க மத்திய வங்கி முதலில் வட்டிவிகிதத்தைக் குறைத்தது.

பிரச்னை தீர்ந்தது என்று கருதும் வேளையில் ஒன்றன்பின் ஒன்றாக நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கியதும், அரசு அந்த நிறுவனங்களின் உதவிக்கு ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிதி நிறுவனங்களில் கண்ணை மூடிக்கொண்டு கடன் வழங்கும் நமது ஐசிஐசிஐ போன்ற வங்கிகள், தாங்கள் உலகப் பொருளாதாரத்தில் ஒன்றியவர்கள் என்று காட்டிக்கொள்ள முதலீடு செய்துவிட்டு இப்போது முழிக்கின்றன. உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இப்போது அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அதனால் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தொடர் விளைவுகளும் உதாரணங்கள்.

இந்தியாவிலும் கடன்களை வாரி வழங்கி பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்திக் காட்டும் முயற்சி நடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அமெரிக்காவின் அவலத்திலிருந்து நம்மவர்கள் பாடம் படித்தால் நல்லது!

நன்றி: தினமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb