லைலத்துல் கத்ரின் சிறப்பு
”ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல்: புகாரி 2014.
மகத்துவ மிக்க இறைவனின் கிருபையால் ரமளான் மாதத்தின் இறுதிப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த இறுதிப் பகுதியாகிய லைலத்துல் கத்ரு இரவில் தான் உலக மாந்தர் அனைவருக்கும் நேர்வழி காட்டிய திருமறைக் குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.
அது அருளப்பட்ட ஒரு இரவு ஆயிரம் மாதங்களுக்கு நிகரானதாகும் என்று அதை அருளிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் அதனால் அது இறக்கி ஆருளப்பட் இறுதிப் பகுதியில் வரும் லைலத்துல் கத்ரு இரவை வணக்கத்தால் நிரப்ப வேண்டும்.
ஏன் என்றால்? திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட லைலத்துல் கத்ரு இரவில் வணக்கத்தில் ஈடுபட்டால் அதற்கு முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கின்றார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானின் இறுதிப் பகுதியாகிய இறுதிப் பத்தில் 20 முதல் கடைசி நோன்பு வரை தங்கள் மனைவியருடன் இல்லற உறவில் ஈடுபடுவதை நிருத்தி விட்டு பள்ளி வாசலில் இஃதிக்காஃப் இருப்பார்கள் அந்த பத்து நாட்களையும் பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளில் கழித்து குர்ஆன் இறங்கிய இரவை சங்கைப் படுத்துவார்கள் அத்துடன் தங்களுடைய குடும்பத்தாரையும் வணக்கத்தில் ஈடுபடுவதற்கு உற்சாகப் படுத்துவார்கள். அவர்களுடன் அவர்களுடைய ஆருயிர் தோழர்களும் இஃதிக்காஃப் இருந்து கொண்டு வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறப்புக்குப் பிறகு அவர்களது மனைவி மார்கள் அதே வழியை பின் பற்றினர். (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்! என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். நூல் புகாரி: 2024
லைலத்துல் கத்ர் இரவை தேடுதல்
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா இப்னு ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல் புகாரி 2023.)
ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!”” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (நூல் புகாரி:2017)
நமது ஊர்களில் பிறை 27ல் பள்ளிவாசல்கள் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அன்றைய நாள் தான் லைலத்துல் கத்ரு இரவு என்று முடிவு செய்து கொண்டு குர்ஆனை ஓதி முடிப்பது, அதற்கு முந்தைய ஒற்றைப் படை இரவுகளை சாதாரணமாக நினைத்து விட்டு விடுவதைப் பார்க்கிறோம் அதனால் இறுதி 20க்குப் பிறகுள்ள இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக் கொள்ள வேண்டும்.
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! ” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல்: புகாரி 2014.
லைத்துல் கத்ரு இரவில் வணக்கத்தில் ஈடுபடுபவர்கள் கோரும் பாவமன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டு அவர்களுடையப் பாவங்களை கழுவித் தூய்மைப் படுத்துகிறான்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத் இறங்கக் கூடிய இதுபோன்ற சந்தர்ப்பத்தை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள முற்சிக்க வேண்டும்.
இரவில் நின்று வணங்குவது என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் இறுதிப் பகுதியைத் தான் தேர்வு செய்தார்கள் அதனால் இஷாவுக்குப் பின் நன்றாக உறங்கி எழுந்து இரவின் இறுதிப் பகுதியில் தஹஜ்ஜத் தொழுகையை தொழுது இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
– அதிரை ஏ.எம் ஃபாரூக்