சூனியம் செய்வது, ஜோசியம் பார்ப்பது, குறி கேட்பது
சூனியம் செய்வது இறை நிராகரிப்பு (குஃப்ர்) ஆகும். இது அழிவை ஏற்படுத்தும் ஏழு பாவங்களில் ஒன்றாகும். இது மனிதர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காமல் இடையூறைத்தான் எற்படுத்தும்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلا يَنْفَعُهُمْ 2.102 …. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்…. (அல்குர்அன் 2:102)
மேலும் கூறுகிறான்: وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى020.069 …… சூனியக்காரர்கள் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டார்கள். (அல்குர்அன் 20:69)
சூனியம் செய்பவன் காஃபிர் (இறைநிராகரிப்பாளன்) ஆவான்.وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلا تَكْفُر 002.102
” …. ஆனால் ஸுலைமானோ காஃபிராக இருக்கவில்லை. அந்த ஷைத்தான்கள்தான் மெய்யாகவே காஃபிர்களாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மனிதர்களுக்குச் சூனியத்தையும் பாபிலூன் (என்ற உரில்) ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(து என்று கூறி பல)வற்றையும் கற்று கொடுத்து வந்தார்கள். (மேலும் அவர்கள் கூறியதாவது) அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தை கற்கச் சென்ற மனிதர்களை நோக்கி) நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் காஃபிர்களாகி விடுவீர்கள். அதலால் இதைக் கற்று) நீங்கள் காஃபிர்களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை எவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை…… (அல்குர்அன் 2:102)
இத்திருவசனத்தில் (ஷைத்தான்) ஜின்கள், மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி அல்லாஹ் அவர்களைக் “காஃபிர்கள்’ என்று கூறுகிறான். ஷரீஅத் சட்டப்படி சூனியம் செய்பவனை கொலை செய்திட வேண்டும். சூனியத்தின் மூலம் இட்டப்படும் செல்வம் அசுத்தமானதும் ஹராமானதும் ஆகும்.
அறியாத மக்களும் அநியாயக்காரர்களும் பலவீனர்களும் சிலரைப் பழிவாங்க வேண்டும் அல்லது கெடுதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக சூனியக்காரர்களை நாடிச் செல்கிறார்கள். சிலர் சூனியத்தை அகற்றுவதற்காக சூனியக்காரர்களிடம் நோக்கிச் செல்கிறார்கள். இதுவும் குற்றச் செயலாகும். இதுபோன்ற தீங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்வையே நாடி அவனுடைய திருவசனங்களின் மூலமாகவே நிவாரணம் தேட வேண்டும்.
ஜோதிடனும் குறி சொல்பவனும் மறைவான விஷயங்கள் தனக்குத் தெரியும் என்று கூறினால் அவ்விருவரும் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். ஏனெனில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் மறைவானதை அறிய முடியாது.
عَالِمُ الْغَيْبِ فَلا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا إِلا مَنِ ارْتَضَى مِنْ رَسُولٍ فَإِنَّهُ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا அவன்தான் மறைவான இவ்விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் எவருக்கும் வெளிப்படுத்துவதுமில்லை. ஆயினும் தன்னுடைய தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு அதனை அவன் அறிவிக்கக்கூடும். அதனை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில் நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (மலக்கை) பாதுகாப்போராக அனுப்பி வைக்கிறான். (அல்குர்அன் 72:26,27)
قُل لاَّ يَعْلَمُ مَن فِى السَّمَـوتِ والاٌّرْضِ الْغَيْبَ إِلاَّ اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ (நபியே!) நீர் கூறும்: வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவைகளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்….. (அல்குர்அன் 27:65)
பொய்யர்களும் ஜோசியர்களும் அறிவீனர்களை ஏமாற்றி பணம் பறிக்க பல வழிகளில் முயல்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் ஒரு முறை உண்மையானால் 99 முறை பொய்யாகி விடும் என்பதை அந்த அறிவீனர்கள் விளங்கிக் கொள்வதில்லை. வியாபார முன்னேற்றத்திற்காக நல்ல மனைவி அமைய, காணாமல் போன பொருள்களை கண்டு பிடிப்பதற்காக அவர்களை நாடிச் செல்கிறார்கள். குறி சொல்பவனின் வார்த்தையை உண்மையென நம்புகிறவன் காஃபிராகி மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஜோசியன் அல்லது குறிகாரனிடத்தில் வந்து அவன் கூறுவதை உண்மையென நம்பக் கூடியவன் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்தவனாவான். (முஸ்னத் அஹமத்)
ஒருவர் ஜோசியன் அல்லது குறி சொல்பவனின் கூற்றை சோதித்துப் பார்ப்பதற்காக அவர்களிடம் சென்றால் அவர் காஃபிராகிவிட மாட்டார். எனினும் இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். அவனது 40 நாள் தொழுகைகள் ஏற்கப்படாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் குறி சொல்பவனை அணுகி அவனிடம் எதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அவருடைய 40 நாள் தொழுகைகள் அங்கீகரிக்கப்படாது. (ஸஹீஹ் முஸ்லிம்)