அருளப்பட்ட நிலையிலேயே இன்றளவும் உள்ள வேத நூல்!
திருமறைக்குர்ஆன் இன்றளவும் அது மனிதக் கரங்கள் ஊடுருவாமல் இறக்கி அருளப்பட்ட நிலையிலேயே இருப்பதும அது வாழும் அற்புதம் என்பதற்கு உண்மையான சான்றாகும்.
உலக பிரசித்திப்பெற்ற 100 தலைவர்களுடைய சாதனைகளை பட்டியலிட்ட மைக்கேல் ஹார்ட் அவர்கள் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதன்மை படுத்தியதற்கு அவருடைய வாசகர்கள் எழுப்பிய ஆட்பேனைக்கு அளித்த பதிலில் அல்குர்ஆனும் – நபிகளாருடைய வாழ்வும் 14 நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்படும் பொக்கிஷமாக இருப்பதை ஒரு காரணமாகக் கூறினார்.
கடந்த இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மனியில் உள்ள மியூனிச் பல்கலை கழகத்தின் ஆய்வுப் பிரிவு ஒன்று உலகம் முழவதுமுள்ள இஸ்லாமிய நாடுகளில் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டு வெளியிட்ட திருக்குர்ஆனின் 42 ஆயிரம் பிரதிகளை கொண்டு வந்து 50 ஆண்டுகள் ஆய்வு செய்த பின் ஒரு சில எழுத்துப் பிழைகளை தவிர அல்குர்ஆனில் எந்த மாற்றமும் செய்யப் படவில்லை அது இறங்கிய அதே நிலையில் இன்றளவும் அனைத்துப் பிரதிகளும் இருக்கிறது என்ற நற்சான்றிதழை வழங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி கடும் தாக்குதலுக்கு உள்ளான போது மேல்படி மியூனிச் பல்கலை கழகம் குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டு விட்டது.
அதே போன்று அல்குர்ஆன் எந்த மொழியில் இறக்கி அருளப்பட்டதோ அந்த மொழி இன்றளவும் உலகில் 55க்கும் மேற்பட்ட நாடுகளில்; மக்கள் பேசும் மொழியாக இருப்பதும் அது வாழும் அற்புதம் என்பதற்கு அடுத்த சான்றாகும்.
மக்கள் பேசக் கூடிய மொழியில் வேதம் இருந்தால் தான் அவர்களால் வேதவாக்குகளை ஜீரணித்துக் கொண்டு அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
நியூயார்க் நகரைச் சேர்ந்த அறிஞர் அலி கேம்ப் பெல் அவர்கள் தான் சார்ந்த மதத்தின் வேதத்தை அறிந்து கொள்வதற்காக அவர் அடைந்த அனுவபத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கேளுங்கள்.
கலிஃபோர்னியா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் நான் கல்வி பயின்றேன். இதன் பிறகு புர்டியூ பல்கலைக்கழகத்திலும் பயின்றேன். இடையில் இரண்டாம் உலக யுத்தம் மூண்டதால் ரசாயனப் பொறியியலில் என்னால் பட்டம் வாங்க இயலவில்லை.
இதன் பிறகு நீண்டகாலம் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸில் அணுகுண்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டேன். பிறகு ராக்பெல்லர் யுனிவர்சிட்டி பிரஸ்ஸை (பிரகாசநிறுவனம்) நிறுவினேன். அதன் பிறகு 30 ஆண்டு காலம் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷ்னின் நியூயார்க் நகரப் பிரிவில் செயல் துணைத் தலைவராகவும் செயல்பட்டேன். இந்த காலகட்டத்தில் கொலம்பியா பல்கழைக்கழகத்தில் கட்டட வரைபடக் கலை பட்டமும் பெற்றேன்.
எனது அறிவியல் பருவம் அவ்வாறு கடந்து சென்ற போது எந்த ஒரு இறை நம்பிக்கையும் என் மனதில் பதிய வில்லை. நான் புரோட்டஸ்டண்ட் நம்பிக்கையுடைய சூழலில் வளர்ந்து வந்தாலும் அதனை நான் நிராகரித்தேன். பிறகு கத்தோலிக்க மதத்தில் ஈடுபாடு காட்ட முயன்றேன். ஆனால் அதன் பாவமன்னிப்புக் கோட்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புதிய ஏற்பாடு என்ன சொல்கிறது என்பதை நேர் முகமாக அறிய கிரேக்க மொழியைப் படித்தேன். (மென்மேலும் அதனை படிக்கும் போது அதன் மீதான எனது நம்பிக்கை குறைந்து கொண்டே சென்றது.)
நான் சமஸ்கிருதத்தைக் கற்றேன். ஹிந்து மதத்தை பயின்றேன் பௌத்தத்தையும் படித்தேன். ஆனால் அவை மிக மோசமாக இருந்தன. இறுதியில் நான் அரபி மொழியைக் கற்று திருக்குர்ஆனை ஆய்வு செய்யத் தொடங்கினேன்..
உடனடியாக எனக்கு தெளிவு கிடைத்தது என்று நான் கூற மாட்டேன். ஆனால் ஒரு விஷயம் என்னைத் தொட்டது. அது திருக்குர்ஆன் அப்பழுகற்றது இடைச் செருகல்களுக்கு அப்பாற்பட்டது, என்பது பற்றி அறிந்தேன்.
குர்ஆனுக்கு முந்தைய எந்த ஒரு வேதமும், இது இறக்கி அருளப்படும்போது மக்களால் பேசப்பட்ட மொழியில் இல்லை.
உதாரணத்திற்கு: பைபிள் இறக்கி அருளப்படும் பொழுது மக்கள் அராமிக் மொழி பேசிக் கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் பைபிள் தொகுக்கப்படவில்லை அராமிக் மொழி வழக்கிழந்த பிறகு கிரேக்க மொழியில் எழுதப்பட்டு சுர்யானி மொழிக்கு மாற்றப்பட்டது.
தவ்றாத் வேதம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டு, லத்தீன் மொழிக்கு மாற்றி ஹிப்ரு மொழியில் இருப்பதை அறிகிறோம்.
அதே போன்று நாம் வாழும் இந்தியாவில் ஹிந்துப் பெருமக்கள் தங்களுடைய கடவுள் அருளிய வேதம் இருக்கும் மொழி சமஸ்கிருதம் இன்று அது மக்களால் பேசப்படும் மொழி அல்ல என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கெல்லாம் காரணம் குர்ஆனுக்கு முந்தைய அனைத்து வேதமும் அந்தந்த இறைத் தூதர்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள் பேசுப்பட்ட மொழியில் எழுதி தொகுக்கப்படவில்லை என்பதுடன் அந்த சமுதாயத்து மக்கள் அதை மனணம் செய்யவுமில்லை. அதனால் குர்ஆனுக்கு முந்தைய அனைத்து வேத கிரங்தங்களும் அந்தந்த மதகுருமார்களால் தங்களுடைய இஸ்டத்திற்கு எழுதி தொகுக்கப்பட்டதால் அவைகள் இன்று பாதுகாக்கப்பட்ட இறைவேதமாக இல்லை.
தனித்து விளங்கும் திருக்குர்ஆன்
குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு விட்டதால் குர்ஆனை உலகம் முடியும் காலம் வரை நிலைத்திருக்கச் செய்ய நாடிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதை பாதுகாக்கும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொன்டான். அதனால் அதை நூல் வடிவிலோ, எழுத்து வடிவிலோ கொடுக்காமல், வஹி மூலம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மனனம் செய்யச் செய்து அவர்கள் மூலமாக அவர்களுடைய தோழர்களுக்கு மனனம் செய்யச் செய்து அதன் பிறகு தோன்றும் மக்களை எளிதில் மனனம் செய்து கொள்ளும் ஆற்றலையும் வழங்கினான். இறுதியாக குர்ஆனை உயர்த்தும் பொழுதும் மனனம் செய்தவர்களுடைய உள்ளத்திலிருந்தே உயர்த்துவதாகவும் இறைவன் கூறுகிறான். “நாமே அறிவுரையை (வேதத்தை) அருளினோம் நாமே இதைப் பாதுகாப்போம்.” (திருக்குர்ஆன் 15:9)
குர்ஆனுடைய குடியிருப்பு மனித உள்ளங்கள் ஆகும் எழுதப்பட்ட நூலுக்குள் அல்ல அதனால் குர்ஆனிய சமுதாயமாகிய நாம் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதியும், ஆய்வு செய்தும் அதனடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வழி தவற மாட்டோம் என்பதுடன் குர்ஆனிய சமுதாயத்தை வேறருத்து விட நினைக்கும் குர்ஆனை மறுப்பவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் குர்ஆனிய சமுதாயத்தை வெற்றி கொள்ள முடியாது .
சகோதரர்களே !
குர்ஆனை மனனம் செய்யுங்கள் உள்ளத்தில் பதிய வையுங்கள், ஒழுக்க நெறியை போதிக்கும் அது நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும், குர்ஆன் உள்ளத்தில் இருக்கும் வரை எவரும் வழி தவற மாட்டார்.
-அதிரை ஏ.எம்.பாரூக்