சிந்தனையின் தேன் துளிகள்
M.A.P.ரஹ்மத்துல்லாஹ், நீடூர்
1. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் அளித்துள்ள அருட்கொடை மழையாகும்.
2. இறைவன் நினைப்பு இருந்தால் பகையுணர்ச்சி பறந்துவிடும்.
3. சந்தோஷம் முயற்சிக்கு ஊட்டச்சத்தாகும்.
4. ஆர்பாட்டம் மறைமுக எதிரியை உருவாக்கும்.
5. வாய்மை வளமானதாக இருந்தால் சாதனை எளிதாகும்.
6. விமர்சனத்துக்கு ஆளாகும் தலைமைதான் நேர்மையாக நடக்கும்.
7. அன்பும், பண்பும் அமையுமானால் முட்டாலும் மேன்மையாவான்.
8. தன்னைத்தானே உயர்த்திப் பேசுபவன் சதியும் செய்வான்.
9. படித்தவன் பங்காளியானால் அடுத்தவன் கதி அதோகதி!
10. நாகரீகம் என்பது உடையில் மட்டுமல்லாமல் நடத்தையிலும் இருக்க வேண்டாமா?
11. சந்தேகத்தை கைகொள்பவர் எவராக இருப்பினும் நிம்மதியை இழப்பார்.
12. பஞ்சம் என்று தஞ்சமடைந்தவனை பசியாற்றுவதுதான் மனிதநேயமாகும்.
13. புத்திசாலிகளும் அறிவாளிகளும் ஓய்வதில்லை.
14. அண்டை வீட்டாரின் நட்பு ஆபத்தில் கைகொடுக்கும்.
15. ஏய்த்து பிழைப்பவன் ஏமாந்து போவான்.
16. நன்றியை பாராட்டுபவன் ஒருக்காலும் நசிந்து போக மாட்டான்.
17. உணவு முறைகளே வியாதிக்கு வித்தாகும்.
18. சந்தேகம் தீப்பொறி போல் ஆபத்தானது.
19. தற்பெருமை உழைப்பை கெடுத்து உயர்வை தடுக்கும்.
20. நேரத்தை தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் முயற்சியை துரிதப்படுத்த முடியும்.
21. நயவஞ்சகனின் சகவாசம் நாசத்தின் தொடக்கம்.
22. துணிந்தவனை கண்டு பணிந்தவன் விரோதியாக மாறுவான்.
23. எட்டி இருந்தால் காதல், ஒட்டி இருந்தால் காமம்.
24. நம்பிக்கை துரோகம் செய்பவன் நாணயமில்லாதவனாக இருப்பான்.
25. வம்பன் எந்த கொம்பனுக்கும் பயப்பட மாட்டான்.
26. ஆணவம் அறிவை பாழாக்கும்.
27. வைராக்கியமாக வாழ்வதைவிட ஆரோக்கியமாக வாழ்வதே மேல்.
28. பசி, ருசி அறியாதது. ருசி, பசி அறியாதது.
29. ருசிக்கு சாப்பிடுவதைவிட பசிக்கு சாப்பிடுபவன் நீண்ட ஆயுள் பெறுவான்.
30. கண்காணிப்பு இல்லாத அணைத்தும் சிர்குலையும்.
31. பணிவு பலரையும் நண்பனாக்கும்.
32. பிழைப்பதற்கு வழி உழைப்பில் இருக்காதா?
33. ரொமான்ஸ் இல்லா வாழ்க்கை உப்பில்லா பண்டம் போல.
34. இரயில் தண்டவாளத்தில் போக, தண்டவாளம் இரயிலில் போகும்.
35. முரட்டு குணமும் வரட்டு கவுரமும் காலை வாரி விட்டு விடும்.
36. நாவடக்கம் இல்லாதவன் நடு வீதியில் நிற்க வேண்டி வரும்.
37. ஆர்பாட்டம் செய்வது எளிதாகும், அமைதியாய் இருப்பது கடினமாகும்.
38. அடுத்தவனை பழி பேசியே சுகம் காண்பவன், தன் குடும்பத்தை பறி கொடுத்தவனாக இருப்பான்.
39. தவறுகளை சுட்டிக்காட்டியும், தட்டடிக் கேட்பதும்தான் கண்ணியவான்களின் செயலாகும்.
40. தனிமையை இனிமையாக ஆக்க சிந்தனை செய்யுங்கள்.