ஒற்றுமையைப் பேணுவோம்
எம்.ஏ. முஹம்மது அலீ
‘காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களையும் செய்து, சகித்துக்கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர! ( இவர்கள் நஷ்டவாளிகள் அல்ல)’ (திருக்குர்ஆன் 103 : 1-3)
ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கும் மனிதன் பறவையினங்கள் கூட்டங்கூட்டமாகப் பறப்பதை காணுகின்றான். பூமியை உற்று நோக்கும்போது எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதைப் பார்க்கின்றான். ஆனால், இவைகளிடமுள்ள ஒற்றுமை என்னும் உயர் பண்பை மட்டும், கண்டும் காணாதவனாக இருந்து வருகின்றான்.
காடுகளில் வாழும் மிருகங்கள்கூட தத்தம் இனத்தோடு ஒன்றாக சேர்ந்து வாழத்தெரிந்து கொண்டிருக்கும்போது ஆறறிவு படைத்தவன், ஆற்றல் மிக்கவன் என்று சொல்லிக்கொள்ளும் மனிதன் மட்டும் தனது இனத்திற்குள் தெரிந்தோ தெரியாமலோ ஆயிரக்கணக்கான பிரிவுகளை வகுத்துக்கொண்டு பிளவுபட்டு நிற்கின்றான்.
இன்று ஒற்றுமையைப்பற்றி எண்ணாத குடும்பத் தலைர்களில்லை, போதிக்காத ஆசிரியர்களில்லை, பேசாத அரசியல்வாதிகளில்லை, வலியுறுத்தாத அறிஞர்களில்லை! ஆனால் ……… !
மனித வாழ்விவில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் முதன் முதலாக அவன் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ‘பொறுமையாளர்களுடன்தான் அல்லாஹ் இருக்கிறான்’ என்பது திருக்குர்ஆனின் முழுமையான, வழிகாட்டும் ஒற்றுமைக்கான ஒளிவிளக்கு.
அல்லாஹ், மேலும் கூறுகின்றான்,’நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்ப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அப்படியிருந்தால், நீங்கள் தைரியத்தை இழப்பதுடன் உங்கள் வலிமையும் குன்றிவிடும். ஆகவே நீங்கள் (துன்பங்களை சகித்துக்கொண்டு) பொறுமையாயிருங்கள். நிச்சயமாக அல்லாஹ், பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.’ (அல் குர்ஆன் 8-46)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மையாக வழிப்படுவதன் மூலம் ஒற்றுமை மலரும் என்பதை சுட்டிக்காட்டுவதுடன் வீணாக சண்டையிட்டு பிளவுபட்டு நிற்க வேண்டாம் என்பதனையும், அவ்வாறிருந்தால் ஏற்படக்கூடிய இழப்பினை நமக்கு எச்சரிப்பதுடன், பொறுமையைக்கொண்டு அதனை வெல்ல முடியும் என்பதனையும், அவ்வாறு பொறுமையுடன் இருப்பவர்களுடன் தானும் இருப்பதாகக் கூறுவதன் மூலம், ஒற்றுமையின் உயர்வை அல்லாஹ் மேலும் சிறப்பிக்கின்றான்.
அடுப்பங்கரை முதல் அரசியல் மேடை வரை ஒற்றுமை என்பது எட்டாக்கனியாக ஆகிக்கொண்டு வருகிறது. சமையலறையில் இருப்பவர்கள்(மாமியாரோ, மருமகளோ) மனமகிழ்வுடன் ஒன்றுபட்டு சமைப்பார்களானால் கிடைப்பது சுவையான உணவாக இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை! அதற்கு மாற்றமாக அங்கு பிணக்கு ஏற்பட்டால் என்னவாகும்? ஓன்று, அடுப்பே எறியாது அல்லது உப்போ காரமோ, சரியான அளவில் சேர்க்கப்படாத சுவையற்ற உணவுதான் அன்றைக்கு! ஒற்றுமை எங்கு சிதறினாலும் எல்லோருக்கும் நட்டம்தான்.
தனியொரு கையால் ஓசை எழுப்ப முடியாது. பல கரங்கள் ஒன்று சேர்ந்தால்தான் சமுதாயம் எந்த காரியத்திலும் வெற்றி பெற முடியும். ‘எந்த உணவில் அதிகமான கை போடப்படுகின்றதோ அதுவே சிறந்த உணவு’ என்கின்ற அகிலத்தின் அருட்கொடை எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு ஒற்றுமையினால் கிடைக்கக்கூடிய ‘பரக்கத்தை-அருள் மழையை’ பறைசாற்றுகிறதே! அதை கவனத்தில் கொள்ள வேண்டாமா?
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குன்றி பிணக்கு ஏற்பட்டால் அதன் இறுதி முடிவு விவாகரத்தில் போய் முடிகிறது. ஆகுமானவற்றில் அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பான செயலல்லவா அது! கணவன் மனைவிக்கிடையில் வேற்றுமை அல்லாஹ்வின் வெறுப்புக்குள் அல்லவா நம்மை தள்ளி விடுகிறது! அதுவும் அல்லாஹ்வின் ‘அர்ஷே’ நடுங்கும் அளவுக்கு!
பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் பிளவு ஏற்பட்டால் அது, கட்டாய பாகப்பிரிவினயாகிறது!
ஆசிரியர்கள் மாணவர்களுக்குள் ஒற்றுமை சிதறுமானால் அது கல்வியின் வீழ்ச்சிக்கு அடிப்படையாகிவிடுகிறது!
அரசியல்வாதிகளுக்கிடையில் பிளவு ஏற்படும்போது மக்களின் செல்வத்தையும், காலத்தையும் சுரண்டுவதற்கு இன்னொரு புதுக்கட்சி உதயமாகிறது!
அறிஞர்களுக்குள் ஒற்றுமை குன்றுமானால் அது சமுதாயத்தின் மிகப்பெரும் வீழ்ச்சிக்கு அடிப்படையாகி விடும்.
இன்று நமது சமுதாயத்தில் வரதட்சணைக் கொடுமையால் பல குடும்பங்களில் ஒற்றுமைச்சிதைவு ஏற்பட்டுள்ளது கண்கூடு. பல இடங்களில் ஒற்றுமை, வேற்றுமையாக மாறுவதற்கு ‘செல்வம்’ மிகப்பெரும் காரணமாக அமைகிறது. இதன் காரணத்தால், உறவைத் துண்டித்து வாழக்கூட அந்த பேராசைக்க்காரர்கள் தயங்குவதில்லை. இவர்களை கடுமையாக எச்சரிக்கிறது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருவாக்கு. சொன்னார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்‘(உறவைத்)துண்டிப்பவன் சுவர்க்கம் செல்ல மாட்டான்!’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கம் வேண்டாம் என்று அடம்பிடிக்கக் கூடியவர்கள்கூட உலகில் உண்டா என்ன! இருக்கின்றார்களே, உறவைத் துண்டித்து நரகத்திற்குத்தான் செல்வோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சிலர்! இவர்களை அறியாமையில் உழல்கின்றவர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கண்ட அறிவுரையை பார்த்த பிறகாவது அவர்கள் திருந்தி வாழ முயற்சிக்க வேண்டாமா?
இதையொட்டி, ஓற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் இன்னொரு ஹதீஸ்: ‘எவருக்கு எல்லா பேறுகளின் வளமும், நீண்ட ஆயுளும் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ அவர் உறவுடன் ஒட்டி வாழட்டும்.’ ஒற்றுமையைக் கடைப்பிடிக்க ஆவலைத் தூண்டும் அற்புதமான வார்த்தைகளல்லவா இது! அனைத்து வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ எவருக்கத்தான் ஆசையிருக்காது?
இந்த ஹதீஸை கொஞ்சம் விரிவாக சிந்தனை செய்து பாருங்கள்: ‘உறவுடன் ஒட்டி வாழட்டும்!’ உறவு என்றால், நம் சொந்த ரத்த பந்தங்களை மட்டுமா குறிக்கிறது? திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்படி மனித இனம் அத்தனையும் ஒரே தாய் தந்தை மூலம் உலகிற்கு வந்தவர்கள் தானே! யோசிக்க வேண்டாமா? குடும்பத்தார்கள் மட்டுமின்றி அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா?
‘காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களையும் செய்து, சகித்துக்கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர! (இவர்கள் நஷ்டவாளிகள் அல்ல)’ (திருக்குர்ஆன் 103 : 1-3) சகிப்புத்தன்மை இல்லாமல் ஒற்றுமை வருமா என்ன?
பொதுவாக ஒற்றுமையின் அவசியத்தை பெரும்பாலானோர் இறிந்தே இருக்கின்றனர். ஆனால், அதை கடைப்பிடிக்கத்தான் வழி தெரியாதவர்களாக, விழியிருந்தும் குருடர்களாகத் தடுமாறுகிறார்கள். திருக்குர்ஆனின் ஒளியும, திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும் நம்மிடையே இருந்தும், அதை அலட்சியம் செய்பவர்களாக வாழ்வதால் அல்லவா இன்றைய இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையின்றி பிளவுபட்டு நிற்கிறது!
இஸ்லாமிய கோட்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்துத் தான் நமது சமுதாயம் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது. எப்பொழுது அதன் ‘அசல் கோட்பாட்டை’ விட்டு விலகி யதோ, அது முதல் ஒற்றுமை குன்றிய சமுதாயமாக மாறிவிட்டது. இந்த மாபெரும் சருக்கலுக்கு அறிஞர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆணிவேராக இருந்துள்ளாரகள் என்பதை மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது!
நமது நாட்டின் முந்தைய சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் கூட ஒற்றுமையின் உயர்வு நமக்குப் புலப்படும். முஹம்மது பின் காசிம் நமது இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கும்போது, இங்கு எத்தனைப்பேர் முஸ்லிம்களாக இருந்தனர், அதற்குப்பிறகு எத்தனை முஸ்லிம் மன்னர்கள் நம் நாட்டை அரசோச்சினர்! அவர்கள் ஆண்ட காலத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மிக சொற்பமாக இருந்தும் அவர்களால் ஆள முடிந்தது. ஆனால் பிற்காலத்தில் முஸ்லிம்களிடம் பிரிவுகள் அதிகமாகி, பிளவுகள் ஏற்பட்டதால் பலமிழந்தவர்களாக மாறினர். எண்ணூறு ஆண்டுகள் முஸ்லிம்களால் ஆளப்பட்ட ஸ்பெயினிலும் இதே கதைதான் என்பதைக் கண்ட பிறகாவது நாம், குறிப்பாக சமுதாயத்தின் தலைவர்களாக பொறுப்பேற்றிருப்பவர்கள் தெளிவு பெற வேண்டாமா?
ஏன் நீண்ட கால சரித்திரத்துக்கு போவானேன்! நமது கால கட்டத்தைத்தான் எடுத்துக் கொள்வோமே!நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் பாபரி மஸ்ஜிதை இழந்திருப்போமா? ஆனால், இன்றைய கால கட்டத்தில் நமது அரசியல் தலைவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள். இவர்களது சுயநல அரசியலால் சமுதாயத்தைப் பிளந்து, ஒற்றுமையைச் சிதைத்து மற்றவர்கள் பார்வைக்கு மேலும் பலம் குன்றிய சமுதாயமாக, காட்சிப் பொருளாக அல்லவா ஆக்கி விட்டனர் நம் சமுதாயத்தை! இதில் எங்களது பங்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அறிஞர்களும்கூட அல்லவா போட்டி போடுகின்றனர்!
ஓற்றுமையின் அடிப்படையிலேயே இஸ்லாம் அனைவரையும் சகோதரராக பாவிக்கச் சொல்கிறது. ‘அடுத்த வீட்டுக்காரன் பட்டினி கிடக்கும்போது தான் மட்டும் உணவு உண்பவன் உண்மையான விசுவாசியல்ல’ என்கின்ற திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு தர்ம சிந்தனையுடன் ஒற்றுமையையும் வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளதை கவனிக்க வேண்டாமா!
‘மூன்று பேர் ஓரிடத்திற்கு சேர்ந்தார்ப்போல் பயணமானால் தங்களில் ஒருவரை தலைவராக ஆக்கிக் கொள்ளவும்’ என்கின்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கனிமொழி, பயணம் போன்ற தற்காலிக நிலையில்கூட வேற்றுமை வளராமல் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையை வலியுறுத்தும் போது பயணமல்லாத சாதமாரண நிலைமையில் ஒற்றுமை ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் இருப்பது சரியா?
நமது ஜமா அத்துத் தொழுகையும், ஹஜ்ஜும் ஒற்றுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஐவேளை தொழுகையை பள்ளியில் தோளோடு தோள் நின்று தொழுதுவிட்டு வெளியில் வந்தவுடன் அதற்கு மாற்றமாக நடப்பது உண்மையான விசுவாசிக்கு அழகல்லவே! இறைவணக்கத்தில் ஒற்றுமையைப் பேணக்கூடிய நாம், வாழிவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதைப் பேண மறுப்பது முறையாகுமா?
விண்ணையும் மண்ணையும் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் கூறுகின்றான்:
‘நீங்கள் எல்லோரும் (ஒற்றுமையுடன்) அல்லாஹ்வுடைய (திருக்குர்ஆன் எனும்) கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் (உங்களுக்குள் பகையை வளர்த்துக்கொண்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்.’ (திருக்குர்ஆன் 3 : 103)
கடலில் தத்தளிக்கும் ஒருவனிடம் கயிற்றை வீசி எறியும்போது அவன், அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் கரையிலிருப்பவன்; அவனை இழுத்துப்போட்டு விடுவான். ஆனால் கயிற்றை பிடிப்பவன் அதை வலுவாகப் பிடிக்க வேண்டும். ஏனோ தானோவென்று பிடித்தானென்றால் அவன் கடலில் மூழ்க வேண்டியதுதான். அதுபோலத்தான், திருக்குர்ஆனையும் வலுவாகப் பின்பற்றி பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனோ தானோவென்று பின்பற்றினால் கயிற்றை வலுவாகப் பிடிக்காதவனுடைய கதிதான்!
நமது வாழ்வில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் பெருமை, பொறாமை, பேராசை இவைகளைக் களைய வேண்டும்.
இறையுணர்வு நமது உள்ளத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.
பிளவு ஏற்படுகின்ற நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடித்து ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டும்.
நன்மையான காரியங்களைச் செய்வதிலும், தூண்டுவதிலும் ஒன்று பட வேண்டும்.
அல்லாஹ் திருமறையில்:
‘விசுவாசிகளே! நீங்கள் தீனுல் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்து விடுங்கள்.’ (2 : 208)
என்று அழைப்பு விடுக்கின்றான். தீனுல் இஸ்லாத்துக்கள் முழுமையாக நுழைந்து விட்டால் ஒற்றுமை பூத்துக் குலுங்காதா என்ன!
‘சமுதாயங்களில் சிறந்த சமுதாயம்’ என்கின்ற வல்லோன் அல்லாஹ்வின் நற்சான்றிதழுக்கொப்ப இனியாவது, சிறந்த சமுதாயமாக ஒற்றுமையுடன் வாழ கற்றுக்கொள்வோமே! எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக! வஆகிரு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.