டோக்கியோ: ஜப்பானில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நூற்றாண்டைக் கடந்த ஜப்பானியர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 276-ஐ எட்டியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சத்தான உணவு வகைகள், தினசரி உணவில் அதிக காய்கனிகளை சேர்த்துக் கொள்வது உள்ளிட்ட காரணங்களால் ஜப்பானியர்களின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக சரிந்துள்ளது. இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மாற்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும் ரூ.80 ஆயிரம் கோடி நகைகள் விற்பனை
இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.80 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்படுவதாக டைட்டன் இண்டஸ்ட்ரிஸ் (ஆபரணப் பிரிவு) துணை தலைவர் எல்.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
“உலகில், ஆண்டு தோறும் மூன்றாயிரம் டன் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 800 டன் கொள்முதல் ஆகிறது. உலகளவில் தங்கத்தின் தரம் பார்க்கும் கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 95 சதவீத வாடிக்கையாளர்களுக்கு, 12 முதல் 36 சதவீதம் வரை தரம் குறைவான தங்க நகை கிடைக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எட்டாயிரம் கோடி ரூபாய் வரை இழக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்தியாவில் 10 லட்சம் பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலை ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளோம். இந்திய அளவில் காரைக்குடியில் துவக்கப்பட்டது 28வது கிளை. தமிழகத்தில் இது 16வது கிளை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்வு செய்துள்ள 834 நகரங்களில் கிளைகள் துவக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் மூன்றாயிரம் டிசைன்கள் உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த கல்வி ஆண்டில் (2009-10) நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகள்
சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் (2009-10) நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
விழுப்புரம், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
ஏர்பஸ் விமானங்களுக்கு கிராக்கி அதிகரிப்பு
சர்வதேச அளவில் விமானப்போக்குவரத்து அதிகரித்துவருவதை அடுத்து, ஏர்பஸ் விமானங்களுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. ‘இன்னும் மூன்று ஆண்டில், இந்தியாவில் இருந்து தான் அதிக ஆர்டர்களை எதிர்பார்க்கிறோம்’ என்று நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத்தலைவர் கிரன் ராவ் கூறினார். விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஏர்பஸ் மற்றும் போயிங். இரண்டுமே, இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானங்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றன. கடந்த 2005ல், இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 500 விமானங்களை இந்திய நிறுவனங்களுக்கு விற்றன. மிக அதிக அளவில் விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கியது அப்போது தான். மீண்டும் 2012க்குள் 500 விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கும் என்று ஏர்பஸ் விமான நிறுவனம் எதிர்பார்க்கிறது.. ஏர்பஸ் விமானங்கள் ஆர்டர் கொடுத்து விட்டு வாபஸ் பெறுவது குறைந்து விட்டது.
சிறிய ரக கார்கள் உற்பத்தியில் சாதிக்கப் போகிறது இந்தியா
சந்தை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ‘குலோபல் இன்சைட்‘ என்ற நிறுவனம் கூறியுள்ளதாவது: வரும் 2013ம் ஆண்டில், சிறிய ரக கார்கள் உற்பத்தியில் இந்தியா பெரிய சாதனை படைக்கும். உலகில் தயாராகும் மொத்த கார்களில் 31 சதவீதம், அப்போது இந்தியாவில் உற்பத்தியாகும்.
தொழில்நுட்ப திறன், குறைவான செலவு. நிலையான பொருளாதாரம், சிறிய ரக கார்கள் உற்பத்திக்கு ஏற்ற அரசின் கொள்கைகள் உட்பட பல சாதகமான அம்சங்களால் இந்தியா இந்த நிலையை எட்டும். இந்தியாவில் கடந்த ஆண்டு 10 லட்சம் சிறிய ரக கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
உலக அளவில் சிறிய கார்கள் உற்பத்தி, 2013ம் ஆண்டில், 50 லட்சமாக அதிகரிக்கும். அப்போது, கார் உற்பத்தியில் 10வது இடத்தில் உள்ள இந்தியா, ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும். சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும்.
மேலும், இந்தியாவிலிருந்து தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் சிறிய ரக கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2013ம் ஆண்டில், 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும். மேலும், ஆசியாவிலேயே சிறிய ரக கார்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். ஜப்பான், கொரியா, தாய்லாந்து மற்றும் சீனா போன்றவை இடம் பெற்றுள்ள பட்டியலில் இந்தியாவும் சேரும். இவ்வாறு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ. 1,300 கோடியில் மின்னணு பூங்கா!
சென்னை: பெங்களூர் நிறுவனம் சென்னையில் அமைக்கிறதுசென்னை, செப். 14: பெங்களூரைச் சேர்ந்த வேளாங்கண்ணி டெக்னாலஜீஸ் நிறுவனம் சென்னையில் ரூ. 1,300 கோடி முதலீட்டில் மின்னணு பூங்காவை அமைக்க உள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இந்த மின்னணு பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பூங்கா 250 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
எலெக்ட்ரானிக் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் 30 வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கு ஆலைகளை அமைக்க உள்ளன.
இந்த மின்னணு பூங்கா முழுவதுமாக 2012-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.
பொதுவாக தொழிற்சாலை தொடங்க விரும்பும் நிறுவனங்கள் கட்டடப் பணியிலிருந்து படிப்படியாகத் தொடங்க வேண்டும். ஆனால் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தங்களுக்குத் தேவையான இடத்தை மட்டும் தேர்வு செய்து அதில் நேரடியாக இயந்திரங்களை நிறுவி உற்பத்தியைத் தொடங்க முடியும்.