ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பன்னாட்டு விமானநிலையத்தில், கடந்த ஜூன் 25 அன்று பரபரப்பான காலை நேரத்தில் பொதுமக்கள் செல்லும் பாதையில் கார் ஒன்று அனைத்துவிதமான பாதுகாப்புப் பரிசோதனைகளையும் முடித்து விட்டுச் செல்கிறது. அலுவலக வேலைகள் தொடங்க இன்னும் சற்று நேரமே இருக்கும் நிலையில், 8.40 மணிக்கு அமெரிக்க இராணுவ வண்டி ஒன்றில் இருந்து 9 வீரர்கள் அக்காரை நோக்கிச் சரமாரியாகச் சுடுகின்றனர். சிறிது நேரத்துக்கெல்லாம் அக்கார் தீப்பற்றி எரிந்து போகிறது.
அந்தக் காரில் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா? இல்லை.
அதே விமான நிலையத்தில் இருக்கும் ரஷீத் வங்கியின் மேலாளர் ஹபீத் அபோத் மஹ்திதான் அக்காரை ஓட்டி வந்தவர். பெண் ஊழியர்கள் இருவரையும் வங்கிக்குத் தனது காரிலேயே அவர் அழைத்து வந்து கொண்டிருந்தபோதுதான் இவ்வாறு கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நூறு முறைக்கும் மேலே சுடப்பட்டு சல்லடையாக்கப்பட்ட காரின் எஞ்சின் தீப்பற்றி மூவருமே சாம்பலாகிவிட்டனர்.
உடனே அமெரிக்க இராணுவம் “மூன்று குற்றவாளிகள் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றனர்; திருப்பச் சுட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி வெடித்ததில் மூன்று குற்றவாளிகளும் மாண்டனர்” என அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இராணுவ வண்டியில் இரண்டு இடங்களில் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருப்பதாகவும் மேலும் அது கதையளந்துள்ளது.
மஹ்தியின் கார் குண்டுகளால் துளைக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரது ஆறாவது மகன் முகம்மது ஹபீத் அங்கு விரைந்திருக்கிறார். தன் கண் முன்னாலேயே தீப்பிழம்புகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த தனது தந்தையை நெருங்க விடாமல் அமெரிக்கப் படைவீரர்கள் அவரைத் தடுத்து விட்டனர். மஹ்தியின் ஆறு குழந்தைகளையும் அநாதைகளாக்கிவிட்ட அமெரிக்க இராணுவமோ பத்தாயிரம் டாலரை இழப்பீடாக அக்குடும்பத்துக்கு வழங்க முன்வந்தது. அதை வாங்க மறுத்த அக்குடும்பத்தினர், “இப்படுகொலையில் ஈடுபட்ட அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் ஈராக்அமெரிக்க நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்” என்றனர்.
இவ்வெறிப்படையினர் ஈராக் பிரதமர் நூரி‘அல்‘மாலிக்கியின் உறவினர் ஒருவரைக் கூட ஜூன் மாத இறுதியில் இவ்வாறு கொன்றுள்ளனர். ஈராக்கின் வடக்கு சலாஹுதின் மாநில கவர்னரின் உறவினர் ஒருவரையும், 17 வயது இளைஞர் ஒருவரையும் எவ்விதக் காரணமின்றியும் ஜூலையில் கொன்றுள்ளனர். இவ்வாறு நடத்தப்பட்ட எந்தக் கொலைகளுக்கும் நீதிவிசாரணைகள் கிடையாது.
இப்படுகொலைகள் ஈராக் முழுவதிலும் கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. ஐ.நா. சபை விதித்த காலக் கெடு முடிவடையவுள்ள நிலையில், ஈராக்கை விட்டு அமெரிக்கப்படை விரைவில் வெளியேற வேண்டும் எனும் குரல் நாடெங்கும் ஒலித்தது. அமெரிக்கப்படை சொன்ன பச்சைப்பொய்யை ஈராக்கில் இருக்கும் அமெரிக்கக் கைக்கூலி அரசின் இராணுவத் தலைமை கூட நம்பத் தயாராக இல்லை. விமான நிலையக் கார் படுகொலை, அப்பட்டமான பச்சைப்படுகொலைதான் என்று அந்நாட்டின் இராணுவத் தலைவரே சொல்லியிருக்கிறார்.
வேறு வழியின்றி விசாரணையை நடத்திய அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைத் தலைமை, ஒரு மாதம் கழித்து “கொல்லப்பட்டவர்கள், அப்பாவிகள்” என்றும் “சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அறிவித்திருக்கிறது.
இன்னொரு நாட்டை ஆக்கிரமித்திருப்பதே கிரிமினல் குற்றம். அதிலும் அங்கிருக்கும் அப்பாவி குடிமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாய்த் தாக்குதல் நடத்திக்கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வது?
இது ஏதோ ஒருமுறை பதற்றத்தில் நடந்து விட்டது என விட்டுவிட முடியாது. 2003இல் அமெரிக்கா அந்நாட்டின் மீது படை எடுத்ததில் இருந்தே இவ்வாறான படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்தவாறுதான் உள்ளன. சென்ற ஆண்டில்கூட பாக்தாத்தின் போக்குவரத்து நெரிசலான இடத்தில் அங்கிருந்த வாகனங்கள் மீது அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுண்டுகள் சுட்டுப் பல பொதுமக்களைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்தாத்தில் மட்டுமன்றி நாடு முழுக்க பொதுமக்கள் மீதும், ஆம்புலன்சு வண்டிகள், மருத்துவமனைகள் மீதும் சுட்டு, வெறிபிடித்த மிருகமாய் ஆக்கிரமிப்புப் படை நரவேட்டையாடி வருகிறது.
பிரிட்டனின் புள்ளிவிவர நிறுவனமான “ஓ.ஆர்.பீ”, இதுவரை பத்து இலட்சம் ஈராக்கியருக்கும் மேல் கொல்லப்பட்டு விட்டதாக ஆதாரத்துடன் கூறியுள்ளது. ஈராக்கில் இருபது சதவீத குடும்பங்களில் யாராவது ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர். பாக்தாத்திலோ 40 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் பலி கொடுத்துள்ளனர். கொல்லப்பட்ட அத்தனை பேரும் போராளிகளோ அல்லது பயங்கரவாதிகளோ இல்லை. எல்லோருமே அப்பாவிப் பொதுமக்கள்.
இவ்வளவு கொடூரங்களும் எதற்காக? ஜனநாயகத்தை வழங்கவா, அல்லது உலகைக் காக்கவா? இல்லை. எண்ணெய் மேலாதிக்க வெறிக்காகத்தான் உலக நாகரிகத்தின் தொட்டிலான ஈராக்கில் கேள்விமுறையின்றி நாய்களை போல மக்களைக் கொல்கிறது, அமெரிக்கா.
குவாண்டனாமோ, அபு கிரைப் சித்திரவதைக் கூடங்களில் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து, பிடிபட்ட கைதிகளை வதைக்கும் அமெரிக்காதான், மிதக்கும் சிறைகளை உருவாக்கி உலகெங்கும் மனித குலத்துக்கு எதிரான கடுங்குற்றங்களைப் புரிந்து வருகிறது. ஈராக்கில் அது நிலைகொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் அங்குள்ள மக்கள் படுகொலைக்குள்ளாகின்றனர்.
போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டிய பயங்கரவாத அமெரிக்காவுக்கு மனித உரிமை, ஜனநாயகம் பற்றிப் பேச ஏதாவது யோக்கியதை இருக்கிறதா?
நன்றி: இரணியன், புதிய ஜனநாயகம்.