MUST READ
புனித ரமளானில் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும் எதிராளி மீது நூறு சதவிகிதம் தவறு இருந்தாலும் கூட ” நான் நோன்பாளி, நான் நோன்பாளி” என்று இரண்டு முறைக் கூறி ஒதுங்கி விடும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவ்வாறு கூறி ஒதுங்கி விடுகின்ற நல்லப் பழக்கம் ரமளான் மாதத்திற்குப் பின்பும் ஒருவரைப் பின் தொடர்ந்து கொண்டால் அது அவருடைய உலக மற்றும், மறு உலக வாழ்க்கைக்கு மாபெரும் வெற்றியாக அமைந்து விடும். அதனால் தான் கோபத்தை கட்டுப் படுத்திக் கொள்ளும் மனிதருக்கு சிறந்த வீரன் என்ற நற்சான்றிதழை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கினார்கள்.
கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக, அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
கோபத்தால் ஏற்படும் விபரீதங்கள்
குடும்பத்தில் தாய் தந்தை பிள்ளைக்கு மத்தியில், கணவன் மனைவிக்கு மத்தியில், அல்லது பணிபுரியக் கூடிய அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில், அல்லது தான் நடத்தும் கம்பெனியில் பணிபுரியக் கூடிய ஊழியர்களிடத்தில் சில நேரத்தில் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொள்வதற்கு சில நொடிப் பொழுதுகள் உடலை ஆக்ரமிக்கும் கோபம் ஒருக் காரணமாகி விடுகிறது கோபத்தின் காரணத்தால் உபயோகித்த கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் பெரும், பெரும் பிரச்சனைகள் உருவாகி அதனால் நிலமைகள் தலை கீழாக புரண்டுப் போய் விடும் .
கோபம் கொள்ளும் போது முதலில் அவருடைய நரம்பு மண்டலங்கள் விரிவடைந்து அதனால் தசை மண்டலங்கள் தூண்டப்பட்டு அதன் வேகத்தில் (கோபம் உடலை ஆக்ரமித்திருக்கும் வரை) எதிரில் நிற்பது யார் என்று கூடத் தெரியாத அளவுக்கு அளவு கடந்து திட்டி விடுவதும், சில நேரம் பலப் பிரயோகத்தில் ஆடுபட்டு விடுவதையும் பார்க்கிறோம் அப்பொழுது எதிராளியுடைய மூக்கு உடைந்ததா? மண்டை உடைந்ததா? என்றுக் கூட தெரியாத அளவுக்கு ரணகளம் ஏற்பட்டு விடும் அதைப் பாரத்து வெற்றி அடைந்து விட்டோம் என்று பெருமை கொள்வதும் உண்டு இதெல்லாம் சில நிமிட நேரங்களே நீடிக்கும் கோபம் தனியத் தொடங்கியதும் அவரால் நிகழ்த்தப்பட்ட அசம்பாவிதத்தால் எதிராளிக்கு ஏற்பட்ட இழப்புகளைக் கண்டு அல்லது அதனால் அவருக்கு கிடைத்த தண்டனையை நினைத்து உள்ளம் உருகுவார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட பாதிப்பு அவருடைய மொத்த எதிர்காலத்தையும் சூனியமாக்கி விடும். கண் இமைக்கும் நேரத்தில் உடலை ஆக்ரமித்து விட்டு வெளியேறும் கோபம் உடல் ஆரோக்கியத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி போன்ற முடிவில்லா நோய்கள் உருவாவதற்கும் பெரும்பாலும் கோபம் கொள்வதே காரணமாகி விடுகின்றது.
நரம்புகளில் ஓடக் கூடிய மிதமான ரெத்த ஓட்டம் நரம்பு மண்டலங்கள் விரிவடையும் பொழுது அதிக வேகத்தில் ஓடத் தொடங்கும் இதனால் உயிரியலில் மாற்றம் ஏற்பட்டு ரெத்தக் கொதிப்பு, நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது ஒரு முறை ரெத்தக் கொதிப்பு ஏற்பட்டு விட்டதென்றால் வாழ்நாள் முழுவதும் அதற்கு ப்ரஸ்ஸர் மாத்திரை சாப்பிட்டே ஆகவேண்டும்.
பிரஸ்ஸர் அளவுக்கதிகமாகி டாக்டரை சந்திக்கும் போது ப்ரஸ்ஸரை கன்ட்ரோல் செய்ய ஹெவி டோஸ் கொடுப்பார் மேல்படி ஹெவி டோஸ் முக்கிய உடலியங்கியல் உறுப்புகளை உதாரணமாக கிட்னி போன்றவைகளை விரைவில் செயலிழக்கச் செய்து விடும். பிரஸ்ஸர் அதிகமாகி டாக்டரை சந்திக்கும் போது ப்ரஸ்ஸரை கன்ட்ரோல் செய்ய இஞ்செக்ஷன் போட்டு படுக்க வைத்து விடுவார் ரெத்த ஓட்டம் பழைய நிலையை அடையும் வரை எழுந்து நடக்க விட மாட்டார்.
கோபத்தை கட்டுப் படுத்த…
மொத்த மனித குலத்திற்கும் அருட் கொடையாக வந்துதித்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 1400 வருடங்களுக்கு முன் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அதைக கட்டுப் படுத்த எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கீழ்கானுமாறு கூறினார்கள். எவர் நின்று கொன்டிருக்கும் போது கோபம் வந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும், கோபம் போய் விட்டால் சரி இல்லையென்றால் சிறிது நேரம் படுத்துக் கொள்ளட்டும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஆபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் (நூல்கள்: அஹ்மத், திர்மிதி)
மேற்கானும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உபதேசத்தை ஒருவர் கோபம் வரும் போது (ரத்தக் கொதிப்பு வருவதற்கு) முன்பே நடைமுறைப் படுத்த தொடங்கி விட்டால் அவருக்கு வரக்கூடிய கோபத்தால் எந்த பாதிப்பும் எதிராளிக்கு ஏற்படாது, உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்காது. இன்னும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையுடன் நடந்தால் அது இன்னும் இலகுவாகும்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாளில் ஓர்நாள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். ‘அ¥து பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்” … என்று சுலைமான் இப்னு ஸூரத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி 6115)
நோன்பு நோற்காத காலங்களிலும்…
நோன்பு நோற்றிருக்கும் போது கோபத்தை கட்டுப்படுத்தி அதன் மூலம் நிகழவிருக்கின்ற அசம்பாவிதங்களை தடுத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வுடைய நோன்பை நோற்றிருக்கிறேன் என்று ஒதுங்கி விடுகிறோம், இதையே நோன்பல்லாத நாட்களி;லும் அறிவற்ற தர்க்கம் செய்பவரிடம் ‘ஸலாம்” கூறி ஒதுங்கி விடு;ங்கள் என்று அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகிறான் .
எதிராளி அறிவற்ற முறையில் என்னக் கூறினாலும் அவருக்கு நிகராக நின்று பதில் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர் இறைவனுடைய கட்டளையை புறக்கனித்தவராவார். அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள் அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும்போது ‘ஸலாம்” எனக் கூறுவார்கள். (திருக்குர்ஆன். 25: 63)
மன்னிப்பதே மேல்
அதையும் மீறி நாமும் மனிதர்கள் என்ற முறையில் கோபத்தை ஏற்படுத்தும் முறையில் எதிராளி நடந்து கொண்டால் எல்லாம் அறிந்த அல்லாஹ் இந்த கோபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக எதிராளி செய்யும் தவறை மன்னித்து விடும்படிக் கூறுகிறான் மன்னிக்கும் மனப்பக்குவம் எவரிடம் இருக்குமோ அவரிடம் கோபம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். (திருக்குர்ஆன். 2: 124)
நேர் வழி காட்டும் திருமறைக் குர்ஆன்
மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வந்த அருள்மறை குர்ஆன் உலகம் முடியும் காலம் வரை மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் ஓரு தாய் தனது பிள்ளைக்கு அறிவுரை கூறுவதுபோல் அல்லாஹ் தனது அடியார்கள் ஒழுக்க சீலர்களாகவும், உடல் ஆரோக்கியமிக்கவர்களாகவும் வாழ்வதற்காக திருக்குர்ஆன் முழுவதும் அறிவார்ந்த அறவுரைகளை அள்ளி வழங்குகிறான்.
இஸ்லாம் மதீனாவில் துளிர் விடத் தொடங்கிய காலகட்டத்தில் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஆக்கிக் கொள்வதற்காக அணி அணியாக வந்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உபதேசம் செய்யுங்கள் என்றுக் கேட்ட பொழுது கீழ்கானுமாறு உபதேசம் செய்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோபம் கொள்ளாதே! எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் உபதேசம் செய்யுங்கள் எனக் கூறவே மீண்டும் கோபம் கொள்ளாதே! என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
• பயபக்தியுடையவர்கள் எதிராளியுடன் நிகராக தர்க்கம் செய்யக் கூடாது.
• எதிராளியுடைய தவறை மன்னிக்க வேண்டும்
• கோபம் வந்தால் உட்கார்ந்து கொள்ள வேண்டும், அல்லது படுத்து கொள்ள வேண்டும்,
• அவூதுபில்லாஹ்… துஆவை அதிகம் ஓதிக்கொள்ள வேண்டும்.
• நோன்பு காலங்களில் நோன்பாளி என்று இரண்டு முறைக் கூறி ஒதுங்கி விட வேண்டும்.
• நோன்பல்லாத காலங்களில் ‘ஸலாம்” என்றுக் கூறி ஒதுங்க வேண்டும்.
– அதிரை ஏ.எம்.ஃபாரூக்.