உங்களைத் தூய்மையுடையோராய் ஆக்கலாம்
கே.எல்.எம்.இப்ராஹீம் (மதனீ) ஜித்தா, சவுதி அரேபியா
ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ
كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
1) இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு முஸ்லிமான புத்தியுள்ள, வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால் சிலருக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியிருக்கிறது. நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பில் இதன் விபரங்களை பார்க்கவும்.
ரமளான் மாதத்தின் சிறப்புகள்
1) ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)
3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்ப்பவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். ஆகவே நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹுதஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டது தான் ரமளான் மாதமும். இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது.
அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது, நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது; அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான். “யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்” என ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!
ரமளான் நோன்பின் சிறப்புகள்
1) “நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்” ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் “நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி” என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும். இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு “அர்ரய்யான்” என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். “நோன்பாளிகள் எங்கே” என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலில் நுழையமாட்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது(நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் ஆகிய இரு சந்தோஷங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
விளக்கம்: வணக்கங்களை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியது நாம் அல்லாஹ்விற்கு, கட்டுப்படுகின்றோமா இல்லையா? என்பதை சோதனை செய்வதற்குத்தான். வணக்கங்களை நாம் செய்வதினாலோ, அல்லது விடுவதினாலோ அல்லாஹ்விற்கு எந்த லாபமோ, நஷ்டமோ கிடையாது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு வணக்கத்தைக் கடமையாக்குவதின் மூலமாக “எப்படிப்பட்ட தியாகத்தையும் அல்லாஹ்விற்காக நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா” என்பதைச் சோதிப்பதற்குத்தான். அப்படிச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான்.
இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பைப் பொறுத்தவரையில் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கும் முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது, இவைகளை வெறும் சடங்குக்காகச் செய்யக்கூடாது. வணக்கம் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வது தான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று)பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)
தக்வா(இறையச்சம்)என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்தும் தடை செய்தவைகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். “தக்வாவின் உரிய தோற்றத்தை” நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவனாக இருந்தும் தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை. தாகமுள்ளவனாக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான்.
இதுதான் ”இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்”. இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால் தான் தொழாதவர் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்து தொழ ஆரம்பித்து விடுவார். பாவங்களில் ஈடுபடக்கூடியவர் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் ஈமான் கொண்டவர்களே அல்லாஹுவைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மதுஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்ந்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீதுல் குத்ஸியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே” அது (நோன்பு)எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுக்கின்றேன், (காரணம்)அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான்.
எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்குக் காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ்(மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால் தான். எனவே நோன்பு விஷயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று மற்ற எல்லா விஷயங்களிலும், எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சிவாழ்வோமாக..!
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கின்றாரோ அதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை. ‘யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை’ என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர்.
இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு. ஏன் இந்த நல்ல பண்புகளை நோன்பு அல்லாத மாதங்களிலும் தொடரக்கூடாது? நோன்பு மாதத்தில் எந்த இறைவனை அஞ்சி இந்த நல்ல செயல்களில் ஈடுபட்டோமோ அவன் நோன்பு அல்லாத மாதங்களில் நம்மைக் கண்காணிப்பதில்லையா? நோன்பு அல்லாத மாதங்களில் நாம் மரணிப்பதற்கு வாய்ப்பில்லையா? ஏன் நோன்பு மாதத்தோடு இந்த நல் அமல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்! விடை கிடைக்கும். நல் அமல்களை, தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக…!
ஸதகத்துல் ஃபித்ர்
1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை ”தர்மமாக” கொடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
4) நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக “தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்” ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!
ஸதக்கத்துல் ஃபித்ராவின் சட்டங்கள்
கடமை: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பின் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.
அளவு: இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும்.
நாள்: இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.
பெருநாள் தொழுகை
1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதலி ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா
4) நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஈதுத் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ கிடையாது. ஈதுத் தொழுகைக்கு முன் பின் சுன்னத்தும் கிடையாது.
நோன்பின் கடமைகள்(பர்ளுகள்)
1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.
2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தரிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
3) முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
4) சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியள்ளது. நோய் நீங்கி பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5) பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6) கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7) மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
8) நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.
நோன்பை முறிக்கும் செயல்கள்
1) சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும்.
2) முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3) உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
4) மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.
அனுமதிகள்
1) நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண் காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது.
2) நோன்பு நாட்களின் பகற்பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. அது நோன்பல்லாத நாட்களின் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.
3) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வது தவறில்லை. சுப்ஹு தொழுகைக்காக, குளித்துக் கொண்டாலே போதுமானது.
4) கடும் வெயிலின் காரணமாக, குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதிலோ, அல்லது பகல் மற்றும் மாலைப் பொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.
5) நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால். நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.
6) வாய்க் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கி விட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
7) நேரம் தெரியாது சூரியன் மறைந்துவிட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று நினைத்து, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
8) காயங்கள், சிறு மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.
9) மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டால், அல்லது குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனேயே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
ஒழுக்கங்கள்
1) பஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்தவுடனேயே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
2) பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3) ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து பஜ்ருடைய நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்தும் கூட விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பதும் தவறாகும். பஜ்ர் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணக்கூடாது. இதுபோன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
4) ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைபிடிக்கவேண்டும்.
5) நோன்பாளி அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ளவேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருள் ஈட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
6) கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக் கொள்ளவேண்டும்.
7) பெருநாள் தொழுகைக்கு முன்பு(ஸதகத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தர்மத்தை முறையாக கொடுக்க வேண்டும்.
ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்
1) “யார் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்”. என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: முஸ்லிம்
நன்றி: இஸ்லாம் கல்வி