73 – ல் அந்த சரியான கூட்டத்தினர் யார்?
கேள்வி: சத்திய இஸ்லாமை பரப்ப முன்வருபவர்களும் கூட சைத்தானின்; ‘கர்வ”க்கண்ணியில் சிக்கிக்கொள்வதேன்? நாங்களே சத்தியப்பாதையில் இருக்கிறோம் என்றே ஒவ்வொரு பிரிவும் உரிமைக் கொண்டாடினால் எங்களைப் போன்ற பாமரர்கள் எப்படி விளங்குவது?
பதில்: பொதுவாக அமைப்புகளோ, இயக்கங்களோ ஆரம்பிக்கப்படும் போது ‘நிர்வாகத்திற்காக ஒரு லேபிள் தேவைப்படுகிறது. மற்றப்படி எந்த பிரிவினைக்காகவும் நாங்கள் தனிப் பெயரிடுவதில்லை” என்று தான் கூறி ஆரம்பிக்கிறார்கள்.
அமைப்போ, இயக்கமோ கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு நிர்வாகத்திற்காக என்று அவர்கள் சொன்ன லேபிளே அவர்களை தனித்து அடையாளம் காட்டி விடுகிறது.
பிற்காலத்தில் அதுவே சமூகத்தை பிரித்து வைக்கவும் காரணமாகி விடுகிறது. ஒவ்வொரு இயக்கத்துடைய, அமைப்புடைய அறிஞர்கள் இதை உணர்ந்தாலும் என்னவோ தெரியவில்லை மீண்டும் அதிலேயே நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள்.
இயக்க வாதிகள் தங்கள் இயக்கத்தில் நின்றுதான் இஸ்லாத்தை பார்க்கிறார்களே தவிர இஸ்லாத்தில் நின்று இயக்கத்தைப் பார்ப்பதில்லை. இதன் விளைவு தங்கள் இயக்கமல்லாத பிற இயக்கங்கள் செய்யும் இஸ்லாமிய பணியை இவர்களால் அங்கீகரிக்க முடியாமல் போய் விடுகிறது. ஏதோ சில காரியங்களில் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தை அனுசரித்துப் போகிறதே தவிர ஒருங்கிணையும் முழுமையான மன நிலை அவர்களிடம் இல்லை என்பது உண்மைதான்.
1992 பாபர் மஸ்ஜித் தகற்த பிறகு தொடர்ந்து முஸ்லிம்கள் கடும் துன்பத்திற்கும் பிறரது அடக்கு முறைக்கும் ஆளாகி உயிரிழந்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக நடந்து முடிந்துள்ளது உயிரை உறைய வைக்கும் குஜராத் கலவரம்.
ஒவ்வொரு முறை முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போதும் இதே அறிஞர்கள் ‘முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லாததுதான் இந்த கொடுமைகளுக்குக் காரணம். ஓரணியில் எல்லோரும் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயம். நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது” என்றெல்லாம் குரல் உயர்த்தி பேசியுள்ளார்கள்.
இப்படி பேசிய எவரும் தங்கள் இயக்கத்திலிருந்து இறங்கி இன்னொரு இயக்கத்தை அங்கீகரித்ததை பார்க்கவே முடியவில்லை. ஆனால் புதிய இயக்கங்கள் துவங்கப்படுவதை மட்டும் பார்க்க முடிகிறது.
ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்காமல் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம் என்பதை நமக்கு நாமே முதலில் சொல்லிக் கொள்ளத் துவங்க வேண்டும். அப்போது தான் கொஞ்சக் காலத்திற்கு பிறகாவது இயக்க சிந்தனை மாறி ஓரணி என்ற லட்சியம் உயிரோட்டம் பெற துவங்கும்.
அடுத்து, ‘எங்களைப் போன்ற பாமரர்கள் என்ன செய்வது.. என்று கேட்டு உங்களை நீங்களே பாமரராக அறிவித்துக் கொள்கிறீர்கள்.
ஒரு முஃமின் தன்னை தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்பது நபிமொழி (முஸ்லிம்) பாமர மக்கள் என்று ஒரு இனத்தை இறைவன் படைக்கவில்லை. இறைவனின் வழியில் முயற்சிக்காமல் போனால்தான் மனிதன் பாமரனாகிறான். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று ஒரு முஸ்லிம் சொல்லிக் கொள்ள வெட்கப்பட் வேண்டும்.
இறைவனுடைய இஸ்லாமிய மார்க்கத்தை கற்பது இதர எல்லா கல்வியையும் கற்பதைவிட மிக சுலபமானதாகும். ஏனெனில் இறைவன்,
‘அவன் இந்த மார்க்கத்தில் உங்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை” என்கிறான். ‘(அல் குர்ஆன் 22:78) சிரமமில்லை என்று இறைவன் கூறிவிட்ட பிறகு அதை சிரமமாக்கிக் கொள்வது யாருடைய தவறு..? இஸ்லாத்தை கற்க தனி கல்விமுறை எதுவுமில்லை. கற்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கான விடாமுயற்சியும் இருந்து இயங்கினால் மிக இலகுவாக மார்க்கத்தை கற்கலாம்.
‘எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ நிச்சயமாக நாம் அவர்களை நம்முடைய நேரான வழியில் செலுத்துவோம். (அல் குர்ஆன் 29:69)
இறைவனின் இந்த வசனம் நீங்களும் அறிஞராகலாம் என்று தூண்டவில்லையா..!
அடுத்து இன்னார்தான் 73வது கூட்டத்தார் என்று எந்தக் கூட்டத்தையும் கூறவே முடியாது. ஏனெனில் ‘இறைவா.. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக..” என்று இறைவன் பிரார்த்திக்க சொல்கிறான். (அல் குர்ஆன் 1:6) நாம் நேர்வழியில்தான் இருக்கிறோம் என்று ஒருவனுக்கு உறுதியாகி விட்டால் இந்த பிரார்த்தனை அழுத்தமில்லாமல் போய்விடும். ஏன், அர்த்தமில்லாமல் கூட போய்விடும். இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம் எவரும் நான் நேர்வழியை அடைந்து விட்டேன். 73வது கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. சொல்லிக் கொள்ளவே கூடாது.
குர்ஆனையும் குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் பின்பற்றிக் கொண்டு செல்லும் அதே வேளையில் நேர்வழிக்கான பிரார்த்தனையை இறைவன் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். 73வது கூட்டம் எதுவென்று மறுமையில்தான் தெரியும்.
பதில் அளித்தவர்கள்: www.tamilmuslim.com