எதனாலே உண்டாச்சு முரண்பாடு
எவரோடு செய்து கொண்டாய் உடன்பாடு
சமுதாயம் உங்களாலே படும்பாடு
சரியில்லை..முறையில்லை.. விட்டுவிடு..!
அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரும்பாவம்!
அறிந்திருந்தும் அத்தவறை மீண்டும் மீண்டும்
செய்கின்ற கொடுமையினை நிறுத்திடாயோ?
செம்மல்நபி வழி முறையில் நிலைத்திடாயோ?
அருள்மறையாம் திருமறையின் தெளிவுரைகள்
அழகுத் தமிழ் மொழியினிலே வந்திருந்தும்
அதன் பொருள் புரிந்து பழக்கத்தில் கொள்ளாமல் – சில
அண்டப்புழுகுகளின் புத்தகத்துள் புகுந்தாயோ?
அலை அலையாய் இளம்பெண்கள் நிற்கின்றார்! – உன்னை
விலை பேசிச் சந்தையிலே விற்கின்றாய்!
மலையளவு மஹர் கொடுக்க வழிகாட்டும் – மார்க்க
நிலை மறந்து யோக்கியன் போல் நடிக்கின்றாய்!
,
சொற்பத்தில் உன்னறிவை இழக்கின்றாய்!
அற்பனாக ஆவதற்கேன் முயல்கின்றாய்!
விற்பதற்கு மானம் என்ன விலைப்பொருளா?
கற்பதற்கு காத்தமுன் நபிவாழ்வே உரைகல் அறிவாய்!
எம். பைஜூர் ஹாதி,