Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மாதவிலக்கு – ஓர் இஸ்லாமியப்பார்வை!

Posted on August 25, 2008 by admin

மாதவிலக்கு இயற்கையானது

“மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்” என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறினார்கள். மாதவிலக்கு (ஹைள்) என்பது பெண் பருவ வயதையடைந்தால் கர்ப்பப் பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறும் இரத்தத்தைக் குறிக்கும்.

குறித்த காலத்திற்கும் கூடுதலாகவும் வெளியாகக்கூடிய இரத்தம் ”உயர் இரத்தப் போக்கு” (இஸ்திஹாளா) எனப்படும். மாதவிலக்கு இரத்தமானது கர்ப்பப் பையின் ஆழத்திலிருந்து வெளியாகும். உயர் இரத்தப் போக்கானது கர்ப்பப் பையின் வாய்ப்பகுதியிருந்து கசியும் இரத்தமாகும். இந்த இருவகை இரத்தங்களிலும் வித்தியாசம் உண்டு அதுபோல் இதற்கான சட்ட விதிமுறைகளிலும் வேறுபாடு உண்டு.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, மாதவிலக்கை அனுபவிக்கும் பெண்கள் அசுத்தமானவர்கள் எனவும் அவர்கள் தொடும் பொருளும் தீட்டு என்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட அறியாமைக் காலத்தில், தீட்டு, தீண்டாமை போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இஸ்லாம் அன்றே குரல் எழுப்பியது. அது பற்றி இங்கு சற்றுச் விரிவாகப் பார்ப்போம்.

“மாதவிலக்கு பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் (இயற்கை) உபாதை. எனவே, மாதவிலக்கின் போது (தாம்பத்திய உறவு கொள்ளாமல்) பெண்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள். பாவத்திலிருந்து மீள்வோரை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையானவர்களையும் நேசிக்கிறான்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன், 002:222)

இந்த வசனம் பெண்கள் மாதவிலக்குக் காலங்களை அடையும்போது அவர்களிடம் தாம்பத்திய உறவு கொள்ளாமல் அவர்களை விட்டும் விலகியிருங்கள் என்ற ஒரு நிபந்தனையை மட்டும் தடையாக விதிக்கிறது.

 அல்குர்ஆனின் மேற்கண்ட 002:222வது வசனம் அருளப்பட்ட பின்னணி…

“யூதர்கள் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் கலந்து உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களின் தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டார்கள்! அப்போது, (நபியே) மாதவிலக்கு பற்றி உம்மிடம் கேட்கின்றனர்… எனும் அல்குர்ஆன் 002:222 என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் ”தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது ‘நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்’ என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் ரளியல்லாஹு அன்ஹு, அப்பாத் பின் பிஷ்ர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் வந்து ”அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே (மாதவிலக்கு ஏற்பட்டுள்ள) பெண்களுடன் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?” என்று கேட்டனர்.

(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. ஆகவே (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டு விட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது.

உடனே அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் அவ்விருவரையும் பின் தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்து வரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கு (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்து கொண்டனர்.” அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு (நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், தாரிமீ.)

இன்னும் இது பற்றி வேறு அறிவிப்புகளும் பதியப்பட்டுள்ளன. இந்நபிமொழியிலிருந்து, யூதர்கள் மாதவிலக்கை அடைந்த பெண்களை இல்லத்தில் வழக்கம்போல் இயங்க விடாமல், தீட்டு, தீண்டாமை என்ற பெயரில் அவர்களை ஒதுக்கி இருந்தார்கள். இது இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனை என்று நிறுவி, மேலும் பெண்கள் மாதவிலக்குக் காலங்களை அடையும்போது அவர்களிடம் தாம்பத்திய உறவை மட்டும் தவிர்த்துக் கொண்டு, பெண்கள் வழக்கம் போல் குடும்பப் பணிகளில் ஈடுபடலாம். கணவன், குழந்தைகளைத் தொடலாம் அதனால் எந்தத் தீண்டாமை அசுத்தங்களும் ஏற்பட்டு விடாது என அன்றைய யூதர்களின் மூடநம்பிக்கைக்கு மேற்குறிப்பிட்ட நபிமொழி சாவு மணி அடிக்கிறது.

 “எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்” அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, (நூல்கள்: புகாரி, முஸ்லிம்.)நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது.

மாதவிலக்குக் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். ‘உனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டதா?’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்” அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா (நூல்: புகாரி, முஸ்லிம்.)

மேற்கண்ட நபிமொழிகள், மாதவிலக்கு ஏற்பட்ட மனைவியிடம் தாம்பத்திய உறவைத் தவிர மனைவியைக் கட்டியணைப்பதையும், மனைவியுடன் சேர்ந்து ஒரே படுக்கையில் படுப்பதையும் தடை செய்யவில்லை.

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து பழகுவதில் இஸ்லாம் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மற்றும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதே சமயம், மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் தொழுகை, நோன்பு, காபாவை வலம் வருதல் இந்த வணக்க வழிபாடுகளைச் செய்வதை விட்டும் இஸ்லாம் விலக்கு அளித்துள்ளது. இந்தத் தடை இக்காலகட்டங்களில் பலவீனமாக இருக்கும் அவர்களின் உடல்நிலையைப் பேண இஸ்லாம் வழங்கியிருக்கும் மிகப்பெரிய அருட்கொடை எனலாம்.

ஏனெனில், உயிரோடு இருக்கும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுடைய இக்கட்டானப் பலச் சூழல்களுக்கு ஏற்ப பல்வேறு கடமை மற்றும் சட்டங்களைப் பேணுவதில் இருந்து விலகி இருக்க அனுமதி வழங்கியிருந்தாலும் தொழுகை விஷயத்தில் மட்டும் இஸ்லாம் மிகக் கடுமையாகவே உள்ளது. “நமக்கும் நிராகரிப்பாளருக்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையில் உள்ளது, யாரொருவர் தொழுகையை விட்டு விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார்” என மிகக் கடுமையாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அத்தகைய எதிரிகளின் அச்சத்தில் இருக்கும் போர் வேளைகளில் கூட கண்டிப்பாகக் கடைபிடிக்கக் கடமையான மிக முக்கியத்துவம் வாய்ந்தத் தொழுகையினை விட்டுவிடுவதற்கான அனுமதி, மாதவிலக்கிலுள்ள பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் அருட்கொடையாகும்.

 நான் ஆயிஷா ரளியல்லாஹ¤ அன்ஹா அவர்களிடம் ”மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ”நீ ‘ஹரூரா’ எனும் இடத்தைச் சேர்ந்தவளா?” என்று கேட்டார்கள். ”நான் ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவள் அல்லள். ஆயினும் (தெரிந்து கொள்வதற்காகவே) கேட்கிறேன்” என்றேன்.

அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ”எங்களுக்கும் அது (மாதவிலக்கு) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் பணிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்.)

நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டது. அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘உனக்கு என்ன? மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘இந்த மாதவிலக்கானது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வை வலம் வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்’ என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் ‘குர்பானி’ கொடுத்தார்கள்” அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நூல்: புகாரி.

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள், தொழுகை, நோன்பு, காபாவை தவாப் செய்தல் போன்ற வழிபாடுகளை செய்யக்கூடாது. மாதவிலக்குக் காலத்தில் விடுபட்டத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை. விடுபட்ட நோன்பைப் பிந்தைய நாட்களில் நோற்க வேண்டும் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம். கன்னிப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்களும் வெளியே சென்று நன்மையான காரியங்களிலும், முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்ளலாம். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்கும் செல்லலாம். மாதவிடாய் பெண்கள் மட்டும் தொழுகையை விட்டு விலகியிருக்க வேண்டும் என்பதையும் நபிமொழிகளிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

 மாதவிலக்கு முடிந்து குளிப்பது:

மாதவிலக்கு முடிந்த பின் குளிக்கும் முறை பற்றி அஸ்மா பின்த் ஷகல் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டனர் அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள், ”உங்களில் ஒருத்தி குளிப்பதற்காக தண்ணீரையும், இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். அதன் பிறகு தலையின் மீது தண்ணீரை ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும் வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ”அதை வைத்து எவ்வாறு சுத்தம் செய்வாள்?” என்று கேட்டார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அதனால் சுத்தம் செய்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

உடனே நான், ”இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்” என்று – பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன்.

மேலும் அஸ்மா, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களிடம், பெருந் தொடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு ”தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி தலையினட சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!” என்றார்கள்.

“பெண்களில் அன்ஸார்களின் பெண்களே சிறந்தவர்கள். அவர்கள் மார்க்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை” என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்.

 உயர் இரத்தப்போக்கு:

“ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?’ என்று கேட்டதற்கு, ‘அது ஒரு நரம்பு நோய். அது மாதவிலக்கன்று. மாதவிலக்கு ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிலக்குக் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் கூறினார்கள்” என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம்.  

“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஃதிகாப் இருந்தவாறு தொழுதார்” என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி.)

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவது போல் பெரும் உதிரப் போக்கும் ஏற்படுவதுண்டு. இந்த உதிரப் போக்கை ஒரு நரம்பு நோய் என்று இறைத்தூதர்நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். மாதவிலக்கிலிருந்து இந்த இரத்தப் போக்கு, வணக்க வழிபாடுகளில் விதி விலக்குப் பெறுகிறது. ”இஸ்திஹாளா” எனும் பெரும் இரத்தப் போக்கு நோய் உள்ளவர்கள் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 69 = 73

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb