ஒவ்வோர் ஆண்டும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் அதில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் கூறும் செய்தி என்ன தெரியுமா?
“நான் சாஃப்ட்வேர் என்ஜினீயர் ஆவேன் அல்லது டாக்டர் ஆவேன்”. இந்த இரண்டைத் தவிர, ஆசிரியர் ஆவேன் என்றோ, ஐ.ஏ.எஸ். ஆவேன் என்றோ இன்னும் மற்ற வேலைக்குச் செல்வது குறித்தோ பெரும்பாலானோர் சிந்திப்பதே இல்லை.
அந்த அளவுக்கு ஐ.டி. மோகம் இளைய தலைமுறையை மையம் கொண்டுள்ளது.
அதற்குத் தகுந்தாற்போல ஆண்டுக்கு ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தக் கல்வியாண்டில் தமிழகத்தில் 270 கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சீட்டுகள் உள்ளன. இந்த இடங்களுக்காக சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளன.
அதாவது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்கள் பொறியியல் படிப்பையே தேர்வு செய்கின்றனர்.
கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம்கிடைத்தும் மாணவர்கள் பலர் அதை உதறிவிட்டு பொறியியல் படிக்கச் சென்ற நிகழ்வுகளும் நடந்தன.
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை, கைநிறையச் சம்பளம், மேல்தட்டு வாழ்க்கை முறை போன்ற கனவுகளே பொறியியல் படிப்பு மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
அதன்படி, மற்ற நாடுகளைவிட மனிதவளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறோம்; இந்தியாவில் பொறியாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்ற பெருமையும் உள்ளது. ஆனால், எதை நாம் பலம் என்று கருதுகிறோமோ அதுவே பலவீனமாகும் அபாயமும் உள்ளது.
ஆண்டுதோறும் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடிக்கின்றனர். ஆனால், இவர்களில் 30 முதல் 35 சதவீதம் பேருக்கே வளாகத் தேர்வு மற்றும் பிற தேர்வுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
மற்ற 70 சதவீதம்பேர் கௌரவமான சம்பளத்தில் வேலை கிடைக்கவே பெருநகரங்களுக்குச் சென்று போராட வேண்டியுள்ளது.
வேலையில்லாத இளைஞர்கள் பட்டியலில் பொறியியல் படித்தவர்களே அதிகம் என்ற நிலைகூட உருவாகி விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.
அதற்காக பன்னாட்டு மற்றும் உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் குறைந்து விட்டதாகக் கருதக் கூடாது. குறிப்பாக, சமயோசித ஆற்றல், தகவல்தொடர்புத் திறன் இன்மை உள்ளிட்ட அந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வேலைவாய்ப்புத் தகுதிகளை 70 சதவீதம்பேர் நிறைவு செய்வதில்லை.
புற்றீசல்போல முளைக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரமற்ற கற்பிக்கும் திறன்தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.
12ஆம் வகுப்பை முடித்த அடுத்த ஆண்டே அதே பள்ளியில் 12ஆம் வகுப்புக்குப் பாடம் நடத்த முடியுமா? பி.ஏ. அல்லது பி.எஸ்சி. முடித்த ஆண்டே அதே கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியுமா? ஆனால், பி.இ. முடித்தவுடன் அதே கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்க முடியும்.
இரண்டாம்நிலை நகரங்களில் உள்ள பல பொறியியல் கல்லூரிகளில் இது சாத்தியம்.
மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை எவ்வளவு முக்கிய பிரச்னையாக உள்ளதோ அதேபோலத்தான் பொறியியல் கல்லூரிகளின் நிலையும்.
விரிவுரையாளர்கள் பற்றாக்குறை அல்லது அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டுமே என்ற காரணத்தால் அனுபவமற்றவர்களை பல கல்லூரிகள் விரிவுரையாளர்களாக நியமிக்கின்றன. விளைவு… மாணவர்கள் படிப்பை முடித்தாலும் வேலைக்குத் தகுதி அற்றவர்களாகத்தான் உருவாக முடிகிறது.
இச் சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்தை, ஆர்வத்தை அறியாமல், “என் பிள்ளையை பெரிய சாஃப்ட்வேர் என்ஜினீயர் ஆக்குவேன்‘ என நீங்கள் முடிவுசெய்து இலக்குகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்.
மத்திய, மாநில அரசுகள் தொழில்துறைக்கு மட்டுமே ஊக்கம் அளிப்பதுபோல, கல்வித் துறையில் தொழிற்கல்விக்கு மட்டுமே ஊக்கம் அளிப்பதுபோலத் தோன்றுகிறது.
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.
குறைந்த வேலைவாய்ப்பு என்பதால், கலை, அறிவியல் மற்றும் வேளாண் படிப்புகளை மாணவர்கள் புறக்கணிப்பதிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
அக் குறையை நீக்கும் வகையில் எந்தக் கல்வி பயின்றாலும் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
கல்விக்குக் கட்டணத்தை நிர்ணயிக்க கமிஷனை அமைக்கும் அரசு, புதுப் புது வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பரிந்துரைக்கவும் கமிஷன்களை அமைத்தால் நல்லது.
–எஸ். ராஜாராம் (தினமணி