“தண்ணீர்” – “தண்ணீர்”
இஸ்லாத்தில், நீர் என்பது அல்லாஹ்வின் மிகப் பெரும் கொடையாகக் கருதப்படுகின்றது. அது தனிநபருக்கு மாத்திரம் உரியதல்ல. மனித சமுதாயம் முழுவதற்குமுரிய நீர் மற்றும் ஏனைய வளங்கள் அனைத்தினதும் பாதுகாவலர்கள், மனிதர்களே.
நீர் விநியோகமானது இஸ்லாத்தில் மிகத் தெளிவான சட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது. பொதுப் பிரயோகத்தில், அதன் சட்டங்கள், அதனைப் பயன்படுத்தும் அனைத்து மக்களையும் அடிப்படையாகக் கொண்டவையாகும்.
நீர்ச் சட்டங்கள் அதன் மூலப்பொருளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன. வளத்தின் அளவு, நீரின் வகை, மற்றும் அதன் பாவனை என்பவற்றின் அடிப்படையில் இந்த நீர்ச் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த நீர் வளங்களானவை, ஆறுகள், கிணறுகள், மற்றும் மழை நீர் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இயற்கை ஆறுகள், சிறிய மற்றும் பெரிய ஆறுகள், மற்றும் மனிதன் உருவாக்கிய கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசனங்கள் என ஆறுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
நீர்ச் சுழற்சி பற்றி பின்வரும் அல்குர்ஆன் வசனம் அறிவுறுத்துகின்றது: ”(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கின்றான். பின்னர், அதனைக் கொண்டு பல வர்ணங்களையுடைய (பலவகைப்) பயிர்களை அவன் வெளிப்படுத்துகின்றான். பின்னர் (கதிர்) முற்றி, அவை மஞ்சள் வர்ணமாக இருக்கக் காண்கின்றீர். பின்னர், அதனைக் (காய்ந்த) சருகுகளாக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது’ (அல்குர்ஆன் 39:21)
மனித ஜீவியத்தில் நீரின் பங்கு பற்றி வலியுறுத்தும் அல்குர்ஆன் வசனங்கள் இன்று நிரூபணமாக ஏற்கப்படுகின்றன. இதற்கான காரணம் எளிமையானது. எமது காலத்திலும் இன்றைய நாட்களிலும் இயற்கையிலுள்ள நீர்ச் சுழற்சி பற்றி அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.
நீர்ச்சுழற்சி பற்றியும், மனித வாழ்வில் நீரின் இன்றியமையாத் தன்மை பற்றியும் விளக்கிய முதலாவது நூல் புனித அல்குர்ஆனாகும். புதிய நீர், சுவைநீர், மற்றும் தூய்மையான நீர் என்பவற்றை அவற்றின் இயல்பைக் கொண்டு மனிதன் பிரித்து நோக்க முயன்ற வேளை, அவற்றின் அமைவிடத்தைக் கொண்டு பிரித்து நோக்கியது அல்குர்ஆனாகும். அந்த புனித அல்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் அற்புதமானவையும் சத்தியமானவையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக உள்ளது.
தண்ணீரின் முக்கியத்துவத்தை மனிதன் அறிந்திருந்த போதும், அதை சரியான முறையில் பகிர்ந்து கொள்ளவும், பயன்படுத்திக்கொள்ளவும் தெரியாத ஆறறிவு விலங்காகத்தான் இருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது உலகின் தலையாய பிரச்னைகளில் ஒன்று. நாட்டுக்காகவும்-மொழிக்காகவும்-இனத்திற்காகவும் – மதத்திற்காகவும் மக்கள் சண்டை இட்டுக் கொண்டது பழைய காலம். இனி தண்ணீருக்கான போரை உலகம் காணப்போகிறது.
ஐ.நா.வின் பொருளியல் – சமூக குழுமத்தின் ஆய்வுப்படி உலகில் 70 சதவீதம் மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கின்றனர். 1995ம் ஆண்டு மக்கள்தொகை 7 பில்லியனாக இருந்தபோது 100க்கு 88 பேருக்கு போதுமானதாக இருந்த குடிநீர், 2025-ம் ஆண்டு உலக மக்கள்தொகை 80 பில்லியனாக உயரும்பட்சத்தில் 100க்கு 57 பேருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
ஆண்டுதோறும் உலகில் 5 மில்லியன் மக்கள் மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நோயால் இறந்து விடுகின்றனர். இது போரில் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகம். இந்தியாவில் தனிநபருக்கான குடிநீரின் இருப்பு 1950ல் 5000 கன மீட்டராகும். அது தற்போது 2000 கனமீட்டராகக் குறைந்துவிட்டது.
இந்தியாவில் ஆந்திரம், அசாம், பிகார், சண்டீகர், தில்லி, குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் ஆண்டுக்கு 4 மீ. அளவுக்குக் குறைந்து கொண்டே போகிறது.
டாடா ஆற்றல் ஆய்வுக்கழகத்தின் ஆய்வுப்படி 91 சதவீதம் வேளாண்மைக்கும், 4 சதவீதம் தொழிற்சாலைக்கும், 5 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும் செலவிடப்படுகிறது. எழுபதுகளில் புகுத்தப்பட்ட நவீன வேளாண்மை முறை அதிகப்படியான நிலத்தடி நீரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது.
நவீனமுறை சாகுபடி செய்யும் முன்னணி மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே 98 சதவீதம், 80 சதவீதம், 62 சதவீதம், 54 சதவீதம் நிலத்தடி நீரையே நம்பியுள்ளன.
மும்பையில் உள்ள நீர் ஊற்று விளையாட்டு அரங்கம் ஈசல்வேல்டு, வாட்டர் கிங்டம், கல்ப் அரங்கம், ஐந்து நட்சத்திர விடுதிகளுக்குத் தற்போது அதிகப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது. தினசரி 2540 மில்லியன் லிட்டர் தண்ணீரை மும்பை மாநகராட்சி அதற்குச் செலவிடுகிறது. சைப்ரஸ் அரசு இரண்டு மில்லியன் சுற்றுலாவாசிகளின் தேவைக்காக வேளாண்மைக்கு ஒதுக்கப்படும் நீரைப் பாதியாகக் குறைத்துவிட்டது.
மேலை நாடுகளில் 50 மில்லியன் கார்கள் புழக்கத்தில் உள்ளன. ஒரு கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. செயற்கை நூலிழை தயாரிக்க அதிகப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு டன் பருத்தி உற்பத்திக்கு 6 முதல் 300 கன லிட்டர் நீர் தேவை. ஒரு டன் விஸ்கோஸ் உற்பத்திக்கு 800 கன லிட்டர், ஒரு டன் கேப்ரான் உற்பத்திக்கு 5000 கனலிட்டர் செலவாகிறது. 75,000 கிராம மக்களின் நீராதாரமாக விளங்கிய “வைதார்னா” ஏரியை கோக்கோ கோலா நிறுவனம் விலைபேசி வாங்கிவிட்டது.
நவீன கால தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் (சாயம்), பூச்சி மருந்துகள், வேதிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், நகர்ப்புறங்களின் குப்பைகூளங்கள் நன்னீரை விஷமாக்கிவிடுகின்றன.
இன்று உலகில் நீர் ஆதாரங்களை தனியார் மயமாக்கும் போக்கு தலைதூக்கியுள்ளது. கனடாவில் உள்ள குளோபல் வாட்டர் கார்பரேஷன், அலகாஸ்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி ஆண்டுதோறும் 18 மில்லியன் காலன் தண்ணீர் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலிங் செய்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரேடியஸ் வாட்டர் லிமிடெட் நிறுவனம் சட்டிங் கார் அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி 23.6 கி.மீ. நீளத்திற்கு சோனாத் என்ற ஆற்றையே 22 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது. அதன் பரப்பளவு 400 ஏக்கராகும்.
நீர் பற்றாக்குறையால் கிராமப்புறப் பெண்களே மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 10 வயது நிரம்பிய சிறுமியர்கள் தினமும் 5 கி.மீ. வரை நடக்க வேண்டியுள்ளது. உலகில் 77 சதவீதம் மக்கள் இன்னும் தெருவோர அடிகுழாய்களையே நம்பியுள்ளனர்.
உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 2.5 சதவீதம் மட்டுமே நன்னீராகும். அதில் 30 சதவீதம் ஏரி, ஆறுகளிலும் 30 சதவீதம் நிலத்தடி நீராகவும், 70 சதவீதம் பனிப்பாறைகளாகவும் உள்ளன.
தண்ணீர் சமூகச் சொத்து. அது விற்பனைப் பொருள் அல்ல. உலக குடிமகன் ஒவ்வொருவனுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது சலுகை அல்ல. அது அவனின் வாழ்வுரிமை. தண்ணீர் இறைவன் அளித்த அற்புத பானம். அதை வீணாக்குவது நம் அறிவீனம். “நீரின்றி அமையாது உலகு”. உணர்ந்து செயல்படுவோம்.