சகோதரி. ஹயா ரூஹி
[ ஆளுமையையும் பண்பாடுகளையும் வளர்க்க வேண்டிய கல்வித் திட்டம் இன்று வெறும் தகவல் திணிப்பு பொம்மைகளை உருவாக்கி விட்டிருக்கிறது. வாழ்க்கை நதியின் போக்கை – நெளிவு சுழிவைக் கற்றுக்கொடுக்க வேண்டிய நவீனக் கல்விக் கோட்பாடு இன்று பொருளாதாரம் ஒன்றையே பிரதான இலக்காகக் கொண்டிருப்பது பெருமூச்சுக்குரிய விடயமாகும்.
எந்த விதமான நோக்கமும் இலக்கும் குறிக்கோளும் உயர்ந்த இலட்சியமும் இன்றி ஆழ்கடலில் தத்தளிக்கும் ஓடங்களாய் இளைஞர்களை செதுக்கி விட்டிருக்கும் நவீனக் கல்வி முறை ஒரு பெரும் சவாலாகும்.
நமது இளைய தலைமுறை எதிர் நோக்கும் மற்றுமொரு சிக்கல் வாய்ந்த பிரச்சினை ‘மதச்சார்பின்மை’ என்ற சிந்தனாரீதியான சதியாகும்.
அறிவியல் தொழில் நுட்பத்தின் அசுரவளர்ச்சியில் மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து, பகுத்தறிவு என்ற பெயரில் இறைமறுப்புக்கு மாத்திரம் முதலிடம் வழங்கப்படும் இந்த நிலை ஆரோக்கியமற்றது.
உலகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக மதச்சார்பின்மை எனும் ளுநஉரடயசளைஅ முன்வைக்கப்படுகிறது. பண்பாட்டு, கலாசார ஒழுக்க விழுமியங்களை உடைத்தெறிகின்ற இந்தச் சடவாத சிந்தனை இளைஞர் சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது. சிற்றின்ப ஆசைகளை வளர்த்து, மனித மனங்களில் கொடூரத்தையும் காழ்ப்புணர்வையும் வளர்க்கும் இச்சிந்தனையின் தாக்குதலில் நிலைகுலைந்து நிற்கும் இளைஞர் சமூகத்தின் போக்கு கண்களில் நீரை வரவழைக்கிறது.
இந்த விழிநீர்த் துளிகள் காய்வது எப்போது?]
இளையதலைமுறை – பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு நாட்டின் சக்தியும் உறுதியும் அந்நாட்டின் எழுச்சி மிக்க இளைய தலைமுறையாகும். அநீதிகளுக்கெதிராய்த் துடித்தெழும் இரத்ததின் மறுபெயர்தான் இளமை.
இனிமையும் கனவுகளும் கொண்ட இளமைப்பருவம் வாழ்க்கைப் புத்தகத்தின் வித்தியாசமான ஒரு பக்கம். எதிர்காலத்தை எழுதும் பேனாக்கள்தான் இளைஞர்கள் என்று கூறினால் மிகையாகாது.
உணர்ச்சிகளின் இருப்பிடமான இளையதலைமுறையின் பங்களிப்பு இன்றி எந்தவொரு சமூக மாற்றமோ, எழுச்சியோ, ஆயுதப்புரட்சியோ ஏற்பட்டதில்லை. நெறிப்படுத்தப்பட வேண்டிய ஒரு சக்திப்பிரவாகம் இளமையாகும்.
சிறு குழந்தையாகவும் இல்லாது வளர்ந்து முழுமையடைந்த மனிதனாகவும் இல்லாது துப்பவும் முடியாது மெல்லவும் முடியாது தவிக்கும் இளமைப் பருவம் சிக்கல்களினதும் பிரச்சினைகளினதும் முகவரியாகிப்போகும் நிலமை அதிசயப் படத்தக்கதல்ல.
இளைஞர்கள் இன்று எதிர் நோக்கும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று தொடர்பூடகங்களாகும். உலகத்தையே உள்ளங்கைக்குள் சுருட்டி வைக்கும் ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சி ஆக்கத்தை விட அழிவுக்கே துணைபோயுள்ள அவலத்தை நினைக்கும்போது நெஞ்சு சுடுகிறது.
மனித மனத்தின் கீழான உணர்வுகளைத் தூண்டி அதில் குளிர்காயும் சமகால ஊடகக்கலாச்சாரம், இளைஞர்களின் இரத்தத்தில் ஊறிப்போயுள்ளது. அறிவையும் அன்பையும் மனிதப் பண்பாடுகளையும் வளர்க்க வேண்டிய மீடியா, பொருளாதாரம் ஒன்றையே பிரதான நோக்காகக் கொண்டு, தீமைகளின் அடி வேராகத் திகழ்கிறது.
தொலைக்காட்சி, சினிமா, வானொலி, மாத-வாராந்த-நாள் இதழ்கள். இணையம் இவையனைத்தும் இளைய சமுதாயத்தின் உள்ளத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இணைய வலைப்பின்னலின் கோடானுகோடி நன்மைகளை மறுதலித்து விட்டு அதன் தீமைகளை அரவணைத்துக் கொள்வதிலேயே இளைய சமூகம் ஆர்வம் காட்டுகிறது. “உலகிலுள்ள மொத்த இணைய தளங்களில் 30
ஆபாசம் தொடர்பான தளங்களாகும். இந்நடவடிக்கை மூலம் 12,13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருடாந்தம் வருமானமாகப் பெறப்படுகிறது.”
துரதிஷ்டவசமாக, “பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்கள் இணையத்தினூடாக இத்தகைய தளங்களைப் பார்வையிடுகின்றனர்” என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதைவிட மூளைகளும் உணர்வுகளும் ஆக்கிரமிக்கப் படுவது, மிகப்பயங்கரமான விளைவுகளை இஸ்லாமிய உம்மத்திடையே ஏற்படுத்தியுள்ளது” என்று டாக்டர் யூஸூப் அல் கர்ளாவி கூறுகிறார்.
நவீன நாகரீகத்தின் மூளைச்சலவைக்கு உட்படுவதிலும் முதலிடம் இளைஞர்களுக்கே.
அடுத்தவர்களின். குறிப்பாக எதிர்ப்பாலினரின் கவன ஈர்ப்புக்கருதி உடை-சிகையலங்காரம் முதற்கொண்டு கொள்கை கோட்பாடுகள் வரை மேற்குக் கலாச்சாரத்தைத் தெய்வமாக வழிபடும் நவீன ஜாஹிலிய்யத் சிந்தனை இளைய உள்ளங்களில் வேர்பிடித்து வளர்ந்து விட்டிருக்கிறது.
மனதளவில் தனிமையை உணரும் இளைஞர்கள் சமூகம் தமது சென்ற தலைமுறைக்கும் தமக்கும் இடையே பாரிய இடைவெளியை உணர்கிறது. அன்புக்காக ஏங்கும் பருவம் என்பதால் நட்பும் காதலும் உள்ளத்தின் இரட்டையாட்சி செய்கின்றன.
இவை சரியான முறையில் நெறிப்படுத்தப்படாதபோது பாரிய உளரீதியான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேரிடுகிறது. மது. போதைப்பொருள். விபச்சாரம். தன்னினச் சேர்க்கை போன்ற தீமைகள் இளைஞர்கள் சமுதாயம் எதிர் நோக்கும் பிரச்சினைகளின் பன்முக வடிவங்களாகும்.
இளமையின் தேவைகள் சரியான முறையில் நிறைவு செய்யப்படாத போதும் குடும்பச்சூழல், அன்பான அரவணைப்பு, இதமான கவனிப்பு கிடைக்கப்பெறாத போதும் இளைஞர்களின் மனம் சமுதாய வேரினையே செல்லரித்து விடும் தீமைகளை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இது மட்டுமல்ல, ஆக்கத்துக்குத் துணை போக வேண்டிய இளமை சமூகவிரோதச் செயல்களுக்கு ஆயுதமாகப் பயன்படுகிறது.
நாள்தோறும் நம் செவிகளுக்கு வரும் கொலை, கொள்ளை, வன்புணர்ச்சிச் சம்பவங்களில் இளைய சமுதாயத்தின் கையே மேலோங்கி நிற்கிறது. இளையசமுதாயம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகளில் மற்றொன்று நவீனக் கல்வித் திட்டத்தின் அபாயகரமான முகமாகும்.
ஆளுமையையும் பண்பாடுகளையும் வளர்க்க வேண்டிய கல்வித் திட்டம் இன்று வெறும் தகவல் திணிப்பு பொம்மைகளை உருவாக்கி விட்டிருக்கிறது. கல்வியின் நோக்கம் ஒழுக்கமும் ஆளுமையும் திறனும் கொண்ட தனிமனிதனை உருவாக்குவதாகும். வாழ்க்கை நதியின் போக்கை – நெளிவு சுழிவைக் கற்றுக்கொடுக்க வேண்டிய நவீனக் கல்விக் கோட்பாடு இன்று பொருளாதாரம் ஒன்றையே பிரதான இலக்காகக் கொண்டிருப்பது பெருமூச்சுக்குரிய விடயமாகும்.
எந்த விதமான நோக்கமும் இலக்கும் குறிக்கோளும் உயர்ந்த இலட்சியமும் இன்றி ஆழ்கடலில் தத்தளிக்கும் ஓடங்களாய் இளைஞர்களை செதுக்கி விட்டிருக்கும் நவீனக் கல்வி முறை ஒரு பாரிய சவாலாகும்.
நமது இளைய தலைமுறை எதிர் நோக்கும் மற்றுமொரு சிக்கல் வாய்ந்த பிரச்சினை ‘மதச்சார்பின்மை’ என்ற சிந்தனாரீதியான சதியாகும். அறிவியல் தொழில் நுட்பத்தின் அசுரவளர்ச்சியில் மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து, பகுத்தறிவு என்ற பெயரில் இறைமறுப்புக்கு மாத்திரம் முதலிடம் வழங்கப்படும் இந்த நிலை ஆரோக்கியமற்றது.
உலகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக மதச்சார்பின்மை எனும் ளுநஉரடயசளைஅ முன்வைக்கப்படுகிறது. பண்பாட்டு, கலாசார ஒழுக்க விழுமியங்களை உடைத்தெறிகின்ற இந்தச் சடவாத சிந்தனை இளைஞர் சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது. சிற்றின்ப ஆசைகளை வளர்த்து, மனித மனங்களில் கொடூரத்தையும் காழ்ப்புணர்வையும் வளர்க்கும் இச்சிந்தனையின் தாக்குதலில் நிலைகுலைந்து நிற்கும் இளைஞர் சமூகத்தின் போக்கு கண்களில் நீரை வரவழைக்கிறது.
இந்த விழிநீர்த் துளிகள் காய்வது எப்போது?
ஆம், இளைய சமுதாயத்தின் ஒட்டு மொத்தப் பிரச்சினைகளுக்குமான தீர்வு இனிய இஸ்லாத்தின் தூதை மீண்டும் இந்தப் பூமியிலும் இளைய இதயங்களிலும் நிலைநாட்டுவதாகும். அல்லாஹுத்த ஆலா இந்த மார்க்கத்தைப் பூரணமாக்கி வைத்தான். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கால, தேச, வர்த்தமான சூழ்நிலைகளுக்கும் நெகிழ்வுடையதாக இஸ்லாத்தை ஆக்கினான்.
ஆன்மீக வறுமையில் உழலும் நம் இளைய சமுதாயத்தின் இதயத்தில் அல்லாஹ்வைப் பற்றிய ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தும் கல்வித் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஐரோப்பிய வானத்தில் அறிவியலை வாழ வைத்த பரம்பரை நம்முடையது. கொள்கையை நெஞ்சில் ஏந்தி வாழும் தனிமனிதர்களாக அறிவின் பெறுமதியை, நேரத்தின் முக்கியத்துவத்தைச் சுமந்த இலட்சியவாதிகளாக நமது இளைஞர்களைப் பயிற்றுவிப்பது பயனுள்ள முயற்சியாகும். அன்பின் ஆளுகைக்குள் அடங்க வைக்கும் திருமணத்தை உரிய காலத்தில் ஊக்குவிப்பதும் தீமையின் சுவடுகளை அடிவேரிலேயே கிள்ளி எறிய உதவும்.
அனைத்துக்கும் மேலாக எமது இறுதி இலக்கான சுவனத்தின் இனிய வசந்தத்தையும் அல்லாஹ்வின் திருப்தியையும் ஆசிக்கும் உள்ளங்களாக நம் இளைய சமுதாயம் வார்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ் அருள வேண்டும்.