என் செல்லமே!
நீ என்னை நேசிக்க விரும்பினால்
இப்பொழுதே நேசி!
பாசம் காட்ட விரும்பினால்
இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!
நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின்
மீளாத்துயில் கொண்டபின்,
அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,
நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,
“தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது” எனும்
நபி மொழியை மறந்து விட்டோமே என
வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.
என் செல்லமே!
உன் அன்னையிடம் உன் பாசத்தைக்
காட்டு பரிவைக் காட்டு.
நான் நிரந்தரமாகக் கண்களை
மூடிய பின் நீ என்ன கதறினாலும்
நான் எழுந்து வர முடியாது!
இருக்கும்போது எப்பொழுதும் அருமை
தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்?
ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர்
மீண்டு வரமாட்டார். அந்த நிலை
உனக்கு வேண்டாம் மகனே!
என் செல்லமே!
உன் தாயின் முகத்தைப்பார்.
நரைத்த முடி, சோர்வான முகம்,
தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா
என்ற ஏக்கம் – உன் தாயின் விழிகளில்
தெரிவதைப் பார் மகனே!
மூன்று விஷயங்களை கண்களால்
காண்பதே பாக்கியம் என்று, அன்று
சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!
அதில் ஒன்று தாயின் முகமல்லவா?
என் செல்லமே!
இப்பொழுதே உன் தாயிடம் உன்
பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,
கனிவு காட்டு, அன்பாகப் பேசு,
இறையருள் பெற்றிடு, இறைப்
பொருத்தத்தை பெற்றிடு மகனே!
வியட்நாம் மொழியில்: ஃபாத்திமுத்துஜ் ஜொஹரா
தமிழில்: மெஹருன்னிஸா & மும்தாஜ் பேஹம்