சவுதி அரேபியாவின் –கிங் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில்– இஸ்லாமிய பொருளாதார ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் சகோதரர் டாக்டர் நஜாதுல்லாஹ் சித்திகீ அவர்களின் ஆய்வில் இஸ்லாமிய வங்கியியல் பற்றிய சிறப்புக் கட்டுரை.
வங்கிகள் எதற்கு? வங்கிகள் ஏன் ஆதவைப்பெறுகின்றன? இஸ்லாமிய வங்கியியலை விவாதிப்பதற்கு முன் இந்தக் கேள்விகளுக்கு விடைக்காண்பது முக்கியமாகும்.
பணத்தை சேமிக்க விரும்புகிறவர்களுக்கும் முதலீடு செய்ய பணம் தேவைப்படுகிறவர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதுதான் வங்கி. அன்றாட செலவுகள் போல மீதமான பணத்தை சேமித்து வைக்க விரும்புபவர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள். அது போலவே தனது வியாபாரத்தை வளர்க்கவும் புதிய கிளைகளைத் தொடங்கவும் புது களங்களில் காலூண்றவும் பணம் தேவைப்படும் வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.
இவர்களிடையே நேரடித் தொடர்பும் பேச்சு வார்த்தையும் பணம் கொடுக்கல் வாங்களுக்கான நிபந்தனையும் வரையறுப்பது மிகவும் கடினமான காரியமாகும். காலவிரயமும் அதிகமாகும். பணத்தை சேமிக்க விரும்புபவர்களுக்கும் முதலீடு செய்ய பணம் தேவைப்படுபவர்களுக்கும் பணத்தின் அளவு போன்ற விபரங்கள் ஒத்துப் போக வேண்டும். இதற்கு அதிக நேரம் பிடிக்கும். இதனால் இரு தரப்பினருக்கும் அதிக அளவில் பலன் தராது. பண்ட மாற்று முறைப் போலவே இது மிகவும் குறைப்படு உள்ளதாகும்.
இப்படிப்பட்ட தருணத்தில் தான் வங்கிகள் களத்திற்கு வருகின்றன. கொடுக்கல் வாங்களுக்கு உதவிகரமாக பணம் இருப்பது போலவே வங்கிகள் நிதி பரிவர்த்தனைக்கு உதவுகின்றன. உற்பத்திக்கும் கொடுக்கல் வாங்களுக்கும் துணைப் போகின்றன. பங்கு சந்தைகள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் இதே வேலையை செய்தாலும் வங்கிகள் சில சிறப்புத் தன்மையைப் பெற்றிருக்கின்றன. பணத்தை டெபாசிட் செய்யவும், விரும்பும் போது பணத்தை எடுக்கவும் வங்கிகளில் வசதியுண்டு. செக், டிராப்ட் போன்ற வசதிகளும் உண்டு மற்றும் மற்ற நிதி நிறுவனங்களை விட வங்கிகள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன. அரசின் கடுமையான மேற்பார்வைக்குள்ளாக்கப்படுகின்றன என்ற கருத்தும் மக்களிடையே நிலவுகஜன்றன. இவையெல்லாம் சேர்த்து இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் பெரும் வளர்ச்சி அடைவதற்கு துணைப்புரிந்துள்ளன.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தானே எதற்கு இந்த பீடிகை என்கிறீர்களா.. வணிக வளர்ச்சிக்கும், ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் பணத்தை சேமிக்க விரும்புவர்களுக்கும் முதலீடு செய்ய பணம் தேவைப்படுபவர்களுக்கும், பயனுள்ள வகையில் செயல்படுவது மிகவும் அவசியம் என்பதை புரிந்துக் கொள்ளவே இந்த முன்னுரை.
வங்கிகளில் நடக்கும் கொடுக்கல் வாங்கல்கள் வட்டியின் அடிப்படையில் தான் அமைந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்ல. இப்போது என்ன நடக்கின்றது? வங்கிகளில் முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் அடிப்படையில் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படுகின்றன. மக்களிடமிருந்து அதைவிட சற்று குறைவான வட்டி விகிதத்தின் அடிப்படையில் டிபாஸிட்டுகளைப் பெறுகின்றன. இந்த இரண்டு வட்டி விகிதத்திற்கிடையேயுள்ள வித்தியாசத்தைக் கொண்டு நிர்வாக செலவுகள் இதர செலவுகளை சமாளித்து லாபமும் ஈட்டுகின்றன.
ஆனால்,
இதைவிட சிறப்பான செயல் முறை என்னவெனில் வட்டியின் அடிப்படையில் கடன் கொடுக்காமல் எந்த தொழிலில் முதலீடு செய்வதற்காக தொழில் முனைவோர் கடன் கேட்கிறாரோ அந்தத் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது என்ற உத்திரவாதத்தின் அடிப்படையில் கடன் கொடுப்பது. இவ்வாறு வங்கிகள் தாம் முதலீடு செய்யும் தொழில்களில் ஈட்டும் லாபத்தில் பங்குகளை வழங்குவதாக கூறி மக்களிடம் லாபத்ததை பங்கிட்டுக் கொள்ளும் இந்த வழி முறை பயனுள்ளதாக அதிக நிலைப்பாடுக் கொண்டதாக அதிக நியாயமானதாக இருக்கின்றது.
இன்னும் சொல்லப் போனால் இன்று உலகம் முழுதும் காணப்படும் பொருளாதார நிச்சயமற்ற சூழலுக்கு வட்டி அடிப்படையிலான வங்கியிலால் பணம் படைத்தவர்களுக்குத் தான் அதிக அனுகூலங்கள் இருக்கின்றன. தவிர தொழில் முனைவோருக்கு பெரும் சுமையாகவே இருக்கிறது.
வட்டியில்லா வங்கியில். 1) பயனுள்ளது 2) நீதி மிக்கது 3) நிலையானது.
பயனுள்ளது.
பொதுவாக வட்டி அடிப்படையிலான வங்கிகள் யாருக்கு கடன் அளிக்கின்றன? எவரிடம் நிலங்கள் வீடுகள் லாபகராமான தொழில்கள் என சொத்துகள் அதிகமாக இருக்கின்றதோ கடன் தொகைக்கும் அதிகமான மதிப்புள்ளதை உத்திரவாதமாக அளிக்கின்றாரோ அவருக்கே கடன் வழங்கப்படுகின்றது. எந்தத் தொழிலுக்காக கடன் கொடுக்கப்படுகிறது. அது லாபகமான தொழில் தானா என்பதைக் குறித்தெல்லாம் வங்கிகள் கவலைப்படுவதில்லை. அவற்றுக்கு தேவைப்படுவதெல்லாம் வாங்கிய கடனை திருப்பித் தரும் சக்தி கடன் பெறும் நபருக்கு இருக்கிறது என்பதற்கான உத்திரவாதமே. இத்தகைய முறையால் தொழில் முனைவோருக்கும் சரி, வங்கிகளுக்கும் சரி அதிக பலனில்லை.
ஏனெனில் லாபகரமானதொரு தொழில் புரிய விரும்பும் ஒருவரிடம் உத்திரவாதம் இல்லாத நிலையில் அவருக்கு கடன் கிடைக்காது. அதே சமயம் முன் கூட்டியே ஒரு தொகையை வங்கிகள் பெறுவதால் தொழிலில் லாப நஷ்ட வாய்ப்புகள் குறித்து வங்கிகள் அக்கறை செலுத்துவதில்லை. கடனாளி கடனைத் திருப்பித் தரக் கூடிய அளவுக்கு சக்திப்படைத்தவராக இருக்கின்றாரா என்பதை கண்காணிப்பதிலேயே குறியாக இருக்கும்.
இதனால் ‘லாபம் தருமா‘ என்ற சந்தேகத்திற்கிடமான தொழில் தொடங்க முனைவோருக்கு கடனை திருப்பித் தரக் கூடிய உத்திரவாதம் இருக்கின்ற பட்சத்தில் வங்கிகள் கடன் கொடுத்து விடுகின்றன. இது தொழில் முனைவோருக்கு சுமையான முறையேயாகும்.
லாபத்தைப் பங்கிட்டுக் கொள்வது என்ற அடிப்படையில் வங்கிகள் செயல்பட துவங்கும் போது தொழிலின் லாப நஷ்ட எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டே செயல்படும். தொழில் முனைவோர் எவ்வளவுதான் கடனைத் திருப்பித் தருவதற்கான உத்திரவாதத்தை; பெற்றிருந்தாலும் அவர் தொடங்கும் தொழிலில் அதிகலாபம் கிடைக்காது என்பது நிச்சயமாக தெரிந்தால் வட்டியில்லா வங்கிகள் அவருக்கு கடன் கொடுக்க முன்வராது. அதிக லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்யவே வங்கிகள் விரும்பும். தொழில் முனைவோரின் நோக்கமும் அதுவாகவே இருக்கும். இத்தகைய வங்கியியல் தான் தொழில் முனைவோருக்கு மிக்க பயனுள்ளதாக உள்ளது.
நிலைப்படு மிக்கது
வட்டியின் அடிப்படையிலான வங்கியியல் இயல்பிலேயே நிலையற்றதாக உள்ளது. இது கடனாளியின் வருமானத்திற்கும் கடன் தொகையை திருப்பித் தர வேண்டிய கால அளவுக்கும் இடையேயுள்ள முரண்பாடால் ஏற்படுகிறது. வங்கிக் கடனை குறிப்பிட்ட தொகையில் குறிப்பிட்ட காலஅளவில் செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் தொழிற் நிறுவனம் ஈட்டும் லாபத்திற்கு கால அவகாசம் கிடையாது. சந்தை நிலவரம், உற்பத்தியான பொருளின் தேவை போன்றவை விற்பனையை நிர்ணயிக்கும். விற்பனையைப் பொருத்தே லாபமும் இருக்கும். ஆனால் கடனாளியோ தான் உற்பத்தி செய்த பொருள் விற்றதோ இல்லையோ வங்கிக்கு குறிப்பிட்ட காலஅளவிற்குள் கடனை திருப்பி அடைக்க வேண்டிய இக்கட்டிற்குள்ளாகிறார். இதனால் கடனைதிருப்பி தரமுடியாமல் தத்தளிக்கிறார். இது கடன் பட்டோரையும், புதிய தொழில் முனைவோரையும் அதிர்வுக்குள்ளாக்குகிறது. உண்மையான லாபத்துடன் கடன் தொகையை திருப்பித் தருவதற்கான காலகெடுவை இணைத்ததன் மூலம் இஸ்லாமிய வங்கியில் இந்த நிலையற்றத் தன்மையை நீக்கி விடுகிறது. தற்போது இருக்கின்ற வங்கியில் முறை கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டது. இது பண வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. வட்டியில்லா வங்கியியல் லாபத்தை பங்கிடும் முறையை அடிப்படையாகக் கொண்டதால் பணவீக்கம் ஏற்படுவதில்லை. ‘கடன்கள்‘ வளர்வதற்கு பதிலாக ‘ சொத்துக்கள்‘ வளர்கின்றன
.
நீதி மிக்கது.
நஷ்டம் ஏற்படுமோ என்கிற அச்சம் மனிதனின் பொருள் உற்பத்தி, பரிவர்த்தனை சூழலில் என்றுமே இருந்து வருகிறது. எதை உற்பத்தி செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்ய வேண்டும்? என்பதை வியாபாரிகள் அல்லது தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தாம் உற்பத்தி செய்யும் பொருள் விலைப் போகுமா.. லாபம் ஈட்டுமா.. என்ற நிச்சயமற்ற சூழலில் லாபமோ – நஷ்டமோ எதையும் சந்திப்பது என்ற துணிவுடன் வியாபாரிகள் தங்கள் நிலையை முடிவெடுக்கிறார்கள். இந்த ரிஸ்க் தவிர்க்க முடியாதது. வட்டி அடிப்படையிலான வங்கியியலில் இந்த பிரச்சனை முழுக்க முழுக்க தொழில் முனைவோர் மீது சுமத்தப்படுகிறது. பணம் கொடுப்பவரின் முதலும் வட்டியும் பாதுகாக்கப்படுகின்றது. இது அநியாயமானது. பணத்தை வைத்தே பணம் பண்ண இடம் கொடுப்பது சரியல்ல. தொழிலிலோ வணிகத்திலோ முதலீடு செய்து லாபத்தையோ நஷ்டத்தையோ பங்கிட்டுக் கொள்வது பணம் முதலீடு செய்பவருக்கும் தொழில் முனைவோருக்கும் என இரு தரப்பினருக்கும் பலனளிக்கக் கூடியது. நியாயமானதும் கூட.
வட்டி அடிப்படையிலான வங்கி சிலருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருப்பதால் பணம் பணம் படைத்தவர்களிடமே சுற்றி வருகிறது. செல்வம் ஒரே இடத்தில் குவிய வழிவகுக்கிறது. தொழில் முனைவோருக்கு மிகவும் நெறுக்கடியைத் தருகிறது. பணம் படைத்தவருக்கோ தேவைக்கும் அதிகமான பலனைத் தருகிறது. இது அநியாயமானது. லாபத்தில் பங்கிட்டுக் கொள்வது என்கிற அடிப்படையிலான இஸ்லாமிய வங்கியியல் முறையால் பணம் முதலீடு செய்பவருக்கும், தொழில் முனைவோருக்கும் பலன் கிட்டுகிறது. இரு தரப்பினரும் ரிஸ்க்கை பகிர்ந்து கொள்வதாலும் விதியை எதிர்கொள்வதாலும் சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
பொருளாதார தியரிகளும், வல்லுனர்களும் பலவாராக வாதிட்டாலும் வட்டியின் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் முறை அநீதியானது என்பது தொன்று தொட்டு மக்களால் உணரப்பட்டு வந்துள்ளது.
இனி செய்ய வேண்டியது என்ன?
இஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழபோகும் வாய்ப்புகள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில் வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் துவங்கி விட்டன.
பாரம்பர்யமான புகழ்பெற்ற வங்கிகள் கூட இஸ்லாமிய கவுண்டர்களை திறந்திருக்கின்றன. ஈரான் மலேஷியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வங்கியை அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தியுள்ளன. இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. முதலீட்டின் அளவும் கூடி வருகிறது.
வட்டியில்லாமல் இயங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து இந்தியாவும் இந்தத் துறையில் நுழையலாம். அல்லது புகழ்பெற்ற வங்கிகள் வட்டியில்லா வழி முறையை ஒரு பகுதியாக கையாள்வதற்கு அனுமதிக்கலாம்.
கிரின் வேஸ் நிறுவனத்தால் பாகிஸ்தானில் செயல்பட முடிகிறது. பஹ்ரைனில் சிட்டி பாங்கால் வட்டியில்லா முறையை செயல்படுத்த முடிகின்றதெனில் இந்தியாவின் பெரு நகரங்களில் ஏன் செயல்படுத்த முடியாது.