Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஹம்மது நபி (Sallallaahu Alaihi Vasallam) Part – 6

Posted on August 22, 2008 by admin

உமரின் மனமாற்றம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 17

ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள குர்ஆன், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் ஹதீஸ்கள் முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் அவரது போதனைகளும் அடங்கிய பிரதிகளுக்கு ஹதீஸ் என்று பெயர். சிலர் ஹதீத் என்றும் இதனை அழைப்பார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

குர் ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது. ஹதீஸ், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களுடையது எத்தனையோ விளக்க நூல்கள், ஆய்வு நூல்கள், ஆதரவு நூல்கள், எதிர்ப்பு நூல்கள், இஸ்லாத்தைப் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன. ஆனால், அபிசீனியா என்கிற எத்தியோப்பியாவின் மன்னன் நஜ்ஜாஷியின் அவையில், தாங்கள் யார், தங்களது புதிய மதம் என்ன என்பது பற்றி, அந்த முதல் தலைமுறை முஸ்லிம்கள் சில வரிகளில் எடுத்துரைத்ததைக் காட்டிலும் இஸ்லாத்தைத் துல்லியமாகப் புரியவைக்கும் சொற்கள் வேறு எதுவும் கிடையாது. எளிமையான சொற்கள். அலங்காரங்கள் கிடையாது. ஜோடனைகள் கிடையாது. உணர்ந்ததை, உணர்ந்தபடியே வெளிப்படுத்திய அந்த நேர்மையினால்தான் அந்தச் சொற்கள் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தபின்னும் ஜீவத் துடிதுடிப்புடன் இருக்கின்றன.

ஒரு சிறிய சொற்பொழிவு போல அமைந்திருக்கும் அந்த விளக்கத்தை மிகச்சில வரிகளில் சுருக்கினால் கிடைக்கும் சாறு இதுதான்: “நாங்கள் அறியாமையில் இருந்தோம். ஒழுக்கமற்று வாழ்ந்தோம். சிலைகளையும் கற்களையும் வணங்கிக்கொண்டிருந்தோம். உயிர்த்திருப்பதன் பொருட்டு அனைத்து அக்கிரமங்களையும் தயங்காமல் செய்தோம். எளியவர்களை எங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. எங்கள் இனத்திருந்தே ஒரு தூதரை இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்பும்வரை எங்கள் வாழ்க்கை இவ்வாறாகத்தான் இருந்தது.எங்கள் தூதர் எங்கள் கண்களைத் திறந்தார். உருவமோ, ஆதி அந்தமோ அற்ற ஒரே இறைவனை வணங்கச் சொல்லி அவர் எங்களை அழைத்தார். பேச்சில் சத்தியம், வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி, உறவினருக்கும் நண்பர்களுக்கும் யாருக்குமே துரோகம் இழைக்காதிருத்தல், எதன்பொருட்டும் ரத்தம் சிந்த அனுமதிக்காதிருத்தல் ஆகியவற்றை வற்புறுத்திச் சொன்னார்.பெண்களை மதிக்கச் சொன்னார். பொய்சாட்சி சொல்லாமலிருக்கும்படி கேட்டுக்கொண்டார். தொழுகை, நோன்பு, ஏழைவரி ஆகியவற்றைக் கடைப்பிடிக்கச் சொன்னார். இவைதான் எங்கள் தூதர் எங்களுக்கு இட்டிருக்கும் கட்டளைகள். இவற்றைத்தான் எங்கள் நாட்டைச் சேர்ந்த பலர் எதிர்க்கிறார்கள். அடைக்கலம் தேடியே உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறோம். காப்பாற்றுவீர்களாக.”

குர் ஆன் என்னும் வேதம் விவரிக்கும் வாழ்க்கை நெறி என்பது இதுதான். அதன் அத்தனை பக்கங்களுமே இவற்றின் விரிவும் விளக்கமும்தான்.முஸ்லிம்களின் இந்தத் தன்னிலை விளக்கத்தைக் கேட்ட அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி, அவர்களை நாடு கடத்தச் சொல்லிக் கேட்டுவந்த மக்கா நகரின் குறைஷித் தூதுவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். ஒரு பாவமும் அறியாத இவர்களை எதற்காக நாடு கடத்த வேண்டும்? ரொம்ப சரி. நீங்கள் அபிசீனியாவிலேயே சௌக்கியமாக இருந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.  

அந்தத் தூதர்கள் அத்துடன் விடுவதாயில்லை. “இதெல்லாம் சரி, இவர்களின் புதிய மதத்தின் வேதம், உங்கள் கிறிஸ்துவ மதம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேளுங்கள்“ என்று வேறொரு பிரச்னையை எழுப்பினார்கள்.குர் ஆனில் இயேசுவை (ஈஸா நபி என்று குர் ஆனில் வரும்.) “இறைவனின் அடிமை” என்னும் பொருளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். இயேசுவை அடிமை என்று அழைப்பவர்கள் இவர்கள் என்று சொல்லியாவது தாம் வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள்ளப் பார்த்தார்கள், குறைஷித் தூதர்கள்.ம்ஹ§ம். அதற்கும் நஜ்ஜாஷி மசியவில்லை. ஆம். இயேசு இறைவனின் அடிமைதான். இதிலென்ன சந்தேகம் என்று சொல்லிவிட்டான்.ஆனாலும், அபிசீனிய மக்களுக்கு, தம் மன்னனின் இந்தப் பரிபூரண சரணாகதி வேறொரு சந்தேகத்தை எழுப்பிவிட்டது. எங்கே தம் மன்னனே ஒரு முஸ்லிமாகிவிடுவானோ என்கிற சந்தேகம். இதன் விளைவாக, தேசம் முழுவதும் பெரும் பரபரப்பும் வதந்திகளும் எழத் தொடங்கின. “இயேசுவை நாம் இறைவனின் மைந்தன் என்றல்லவா சொல்லுகிறோம்? இறைவனின் அடிமை என்று அவர்கள் சொல்வதை நீங்கள் எப்படி ஒப்புக்கொள்ளலாம்?” என்று மக்கள் பிரதிநிதிகள், மன்னனிடம் சண்டைக்கு வந்தார்கள்.

உண்மையில் நஜ்ஜாஷி ஒரு மதநல்லிணக்க வாதி. அவனுக்கு முஸ்லிமாக மாறுகிற எண்ணமெல்லாம் இல்லை. அப்படியொரு சிந்தனை கூட அவருக்கு எழவில்லை. ஆயினும், அடுத்தவரின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மைமிக்க மன்னனாக இருந்ததுதான் அன்றைக்குப் பிரச்னையாகிவிட்டது. ஒருவேளை நாட்டில் பெரிதாகக் கலவரம் ஏதாவது நிகழலாம் என்று அவன் சந்தேகப்பட்டான். எதற்கும் இருக்கட்டும் என்று அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம்களை மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளவும் செய்திருக்கிறான்.நல்லவேளையாக அப்படியரு விபரீதம் நிகழவில்லை. தாம் ஒரு உண்மையான கிறிஸ்துவன்தான்; மதம் மாறும் உத்தேசமெல்லாம் இல்லை என்று மக்களிடம் எடுத்துச் சொல்லி, இயேசு “இறைவனின் குமாரர்தான்” என்பதிலும் தமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்து, மக்களைச் சமாதானப்படுத்தினான்.

அதன்பின் முஸ்லிம்கள் அங்கே தொடர்ந்து வாழ்வதற்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் போய்விட்டது.ஆனால், மக்கா நகரத்துக் குறைஷித் தலைவர்கள் இதைப் பெரிய அவமானமாகக் கருதினார்கள். தாங்கள் அனுப்பிய தூதுவர்கள், காரியத்தை முடிக்காமல் திரும்பிவந்ததில் அவர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. ஏதாவது செய்து, முஸ்லிம்கள் அத்தனை பேரையும் வெட்டிப் புதைத்துவிட்டால்தான் தங்கள் ஆத்திரம் தீரும் என்று நம்பினார்கள். ஆனால், யார் தலைமையில் ஒன்று திரள்வது? செலுத்திய அம்பு போலக் குறி தவறாமல் சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை தங்களில் யாருக்கு உண்டு? குறைஷிகளிடையே அப்போது செல்வாக்கும் நன்மதிப்பும் பெற்ற தலைவன் அபூஜஹ்ல் என்பவன்.

ஆனால் வயதானவன். இந்தக் காரியத்துக்கு இள ரத்தம் தான் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? அபூஜஹ்லுக்குத் தன் மருமகன் உமரின் ஞாபகம் வந்தது. உமருக்கு அப்போது இருபத்தியாறு வயது. முரடு என்றால் அப்படியரு முரட்டு சுபாவம் கொண்ட இளைஞர். மிகத் தீவிரமான உருவ வழிபாட்டாளர். ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களையும் அவரது தோழர்களையும் ஒரு வழி பண்ணிவிடமாட்டோமா என்று பலநாட்களாகக் காத்துக் கிடந்தவர். ஆகவே, அபூஜஹ்ல் வாயிலாகவே அப்படியரு வாய்ப்பு வந்தபோது, மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஒரு பெரிய வாளைத் தூக்கிக்கொண்டு உடனே கிளம்பிவிட்டார். உமரின் கோபம், உருவமற்ற இறைவனை முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) முன்னிறுத்தியதனால் மட்டுமல்ல. ஒரே கூட்டுப் பறவைகளாக இருந்த மக்கா நகரின் மக்களிடையே இன்று இரு பிரிவுகள் தோன்றிவிட்டதற்கு முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) தானே காரணம் என்கிற உணர்ச்சிவயப்பட்ட மனநிலை அவருக்கு இருந்திருக்கிறது. அதனால், முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)அவர்களைக் கொன்றுவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பினார்.

தவிரவும் இஸ்லாம் ஒன்றும் மிகத் தீவிரமாகப் பரவி ஏராளமானவர்களை இன்னும் கவர்ந்திழுக்கவில்லையே. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள்? முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)அவர்களைக் கொன்றுவிட்டால் மதம் மாறுவதும் நின்றுவிடும்; மாறியவர்களையும் மீண்டும் மாற்றிவிடலாம்.இவ்வாறு எண்ணியபடி முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)அவர்களைத் தேடி ஆக்ரோஷத்துடன் புறப்பட்டுப் போனார் உமர். போகிற வழியில் நுஐம் இப்ன் அப்துல்லாஹ் என்னும் ஒரு முஸ்லிம் (இவர் வெளிப்படையாகத் தன்னை முஸ்லிம் என்று அப்போது அறிவித்துக்கொண்டிருக்கவில்லை. உயிருக்குப் பயந்து ரகசிய முஸ்லிமாகத்தான் இருந்திருக்கிறார்.) உமரைத் தடுத்து நிறுத்தி, “எங்கே இத்தனை ஆக்ரோஷமாகக் கிளம்பிவிட்டீர்கள்?” என்று கேட்டார். “எங்கா? அந்த முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஐ ஒழித்துக் கட்டுவதற்காக” என்று சொன்ன உமர், தன் வாளையும் தொட்டுக்காட்டினார்.

நுஐமுக்குக் கவலை வந்துவிட்டது. என்ன செய்து இந்த முரட்டு உமரைத் தடுத்து நிறுத்துவது? கையில் கொலை வாளுடன் போய்க்கொண்டிருக்கிறார். முகம்மதும் அவரது தோழர்களும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஆயுதம் ஏதும் இருக்காது. தற்காப்புக்காகக் கூட ஏதும் செய்துகொள்ள முடியாது. இங்கேயே இவரைத் தடுக்காவிட்டால் விபரீதம் நடப்பது உறுதி என்று அஞ்சியவர், வேறு வழியே இல்லை என்று கண்டவராக, “முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஐ கொல்வது இருக்கட்டும்; உன் வீட்டிலேயே முஸ்லிம்களை வைத்துக்கொண்டு நீ முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஐ நோக்கிப் போவதைப் பார்த்தால் யாராவது சிரிக்கமாட்டார்களா?” என்று கேட்டார். நுஐமின் நோக்கம் அப்போது எப்படியாவது முகம்மதைக் காப்பாற்றுவதாக மட்டுமே இருந்தது. களப்பலியாக வேறு யாரையாவது இழக்க நேர்ந்தாலும் சரியே என்னும் முடிவில் இருந்தார். ஆகவே உமரின் சகோதரியும் அவளது கணவரும் முஸ்லிமாக மாறிவிட்டார்கள் என்கிற உண்மையை (அன்றுவரை உமருக்கு அந்த விஷயம் தெரியாது.) முதல்முதலாக உமரிடம் சொல்லிவிட்டார்.

அதனாலென்ன? முதலில் என் வீட்டுக் களையைப் பிடுங்கிவிட்டுப் பிறகு முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)மிடம் போகிறேன் என்று சொல்லிவிட்டு உமர் நேரே தன் சகோதரியின் வீட்டுக்கு ஓடத் தொடங்கினார். தம் சகோதரி ஃபாத்திமாவின் வீட்டருகே உமர் சென்றபோது உள்ளே யாரோ ஓதிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது. சந்தேகமே இல்லை. நுஐம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று கோபம் தலைக்கேறி, உருவிய வாளுடன் கதவை உடைத்துத் திறந்து உள்ளே பாய்ந்தார் உமர்.

உமரைக் கண்டதும் ஃபாத்திமா, தாம் வைத்து ஓதிக்கொண்டிருந்த குர் ஆனின் பிரதியைத் தன் உடைக்குள் மறைக்கப்பார்த்தார். அவரது கணவரோ, தங்களை விட்டுவிடும்படி மன்றாடத் தொடங்கினார். ஆனால் உமர் விடவில்லை. தன் சகோதரியை அடித்து ரத்தக்காயப் படுத்திவிட்டு, மைத்துனரின் மீது பாய்ந்தார். இருவரும் கட்டிப் புரண்டார்கள். அடித்துக் கொண்டு எழப்பார்த்தார்கள். மைத்துனரைக் கொன்றுவிடுவது என்று வெறிகொண்டு தாக்கிய உமருக்கு, சகோதரி காயம் பட்டு விழுந்ததும் சிறிதே சலனம் ஏற்பட்டது.சட்டென்று தாக்குதலை நிறுத்திவிட்டு, “நீங்கள் வைத்து ஓதிக்கொண்டிருந்ததைக் கொண்டுவாருங்கள். அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்று பார்க்கிறேன்” என்றார்.வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் இப்படித்தான் மிகுந்த ரசமுள்ளவையாக எப்படியோ அமைந்துவிடுகின்றன.

தயக்கத்துடன் ஃபாத்திமா எடுத்துவந்து கொடுத்த குர் ஆனின் அந்தச் சில பகுதிகளை வாசித்துப் பார்த்த உமர் தம்மையறியாமல் வாளைக் கீழே போட்டார். பிரமிப்பும் அச்சமும் கொண்டு அதுவரை இல்லாத கனிவும் அன்பும் மேலோங்கியவராகக் கண்கள் கலங்கி நின்றார். “இதென்ன! இந்த வசனங்கள் இத்தனை அழகும் சிறப்பும் கொண்டவையாக இருக்கின்றன! நிச்சயம் மனிதர் உருவாக்கியதாக இருக்கமுடியாது. என்றால், இது இறைவனின் வசனங்கள்தாம் என்று தோன்றுகிறது“ என்று பேசத் தொடங்கியவர், சில வினாடிகளில் “முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஓர் இறைத்தூதர்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதோ, இப்போதே போய் அவரைச் சந்தித்து இதனை உரக்கச் சொல்லுகிறேன்“ என்று அலறிக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டார்.

இஸ்லாத்தின் சரித்திரத்தில் உமரின் இந்த மனமாற்றம், மிக முக்கியமானதொரு திருப்பம். இதே உமர்தான் முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களைச் சந்தித்த மறுகணமே முஸ்லிமாக மாறியவர். அதுநாள்வரை ரகசியமாக மட்டுமே தொழுது வந்த முஸ்லிம்கள் வெளிப்படையாக மெக்கா நகரில் உள்ள க“அபாவில் தொழுகை செய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, பாதுகாவலாக நின்றவரும் அவரேதான். பின்னாளில் அரேபிய மண்ணின் தன்னிகரற்ற இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின்போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 20 ஜனவரி, 2005

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb