Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஹம்மது நபி (Sallallaahu Alaihi Vasallam) Part – 4

Posted on August 21, 2008 by admin

 

அந்த மூன்று வினாக்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 15

கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரேபிய வர்த்தகர்களிடம் என்னென்ன இருந்தன என்று நகைச்சுவையாக ஒரு பட்டியல் போடுவார்கள். அவர்களிடம் ஏராளமான ஒட்டகங்கள் இருந்தன. அதைக்காட்டிலும் அதிகமாக அடிமைகள் இருந்தார்கள். அடிமைகளைக் காட்டிலும் அதிகமாக வைப்பாட்டிகள் இருந்தார்கள் என்று அப்பட்டியல் முடிவு பெறும்.இதெல்லாவற்றைக் காட்டிலும் அவர்களது சொத்தாக இருந்த முக்கியமான விஷயம், தாழ்வு மனப்பான்மை.சொத்து, சுகங்கள், அடிமைகள், வளமை இருப்பினும் கல்வியிலும் உலக ஞானத்திலும் தாம் பிற்பட்டவர்கள் என்கிற எண்ணம், அன்றைய பணக்கார அரேபியர்கள் அத்தனை பேருக்குமே உண்டு.

தமது இறை நம்பிக்கை, வழிபாட்டு உருவங்கள் பற்றிய பெருமிதம் இருந்தாலும், மதக்கல்வி ரீதியில் தம்மைக் காட்டிலும் யூதர்கள் மேலானவர்கள் என்கிற உணர்வு அவர்களிடையே இருந்திருக்கிறது. யூத மதம் மிகவும் பண்பட்டது; யூதர்கள் அனைவரும் கற்றறிந்த மேலோர் என்னும் எண்ணம் அவர்களது இயல்பாகிப் போயிருந்தது.இத்தனைக்கும் கிறிஸ்துவம்தான் அன்றைய தேதியில் வருவோரையெல்லாம் அரவணைத்துக்கொள்ளும் மதமாக இருந்ததே தவிர, யூத மதத்தில் பிரசாரம், மதமாற்றம் போன்றவை எதுவும் அறவே இருந்ததில்லை. இதனாலேயேகூட ஒருவேளை அவர்களுக்கு யூதர்கள் மேம்பட்டவர்களாகத் தெரிந்திருக்கலாம்.இந்த எண்ணம் அவர்களிடையே எத்தனை தீவிரமாக ஊடுருவியிருந்தது என்பதற்கு ஒரே ஓர் உதாரணம் சொன்னால் போதும். விளங்கிவிடும்.

இஸ்லாம் தோன்றி, மூன்றாண்டுகள் ஆகி, மொத்தமே நாற்பது முஸ்லிம்கள் உலகில் இருந்த தருணம் அது. அரபிகளின் புனிதத் திருவிழாக்காலம் ஒன்று வந்தது. அந்தச் சமயத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து மெக்காவுக்குப் புனித யாத்திரையாகப் பல்லாயிரக்கணக்கானோர் வரத் தொடங்குவார்கள். இன்றைக்கும் அதே மக்காவுக்குத்தான் முஸ்லிம்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். அதே க“அபாவைத்தான் பயபக்தியுடன் சுற்றி வருகிறார்கள். ஆனால் இன்றைய க“அபாவுக்கும் அன்றைய க“அபாவுக்கும் வித்தியாசங்கள் பல. பிரதானமான வித்தியாசம், அன்றைக்கு அங்கே இருந்த ஏராளமான உருவச் சிலைகள், சிறு தெய்வங்கள்.அப்படிப் புனித யாத்திரையாக வரும் பக்தர்களை உபசரித்து, தங்க வைத்து, விருந்துகள் நடத்தி, புண்ணியம் தேடிக்கொள்வதில் மக்கா நகரத்துப் பணக்காரக் குறைஷிகளுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. புண்ணியம் மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. சில வர்த்தகக் காரணங்களும் உண்டு.

புனித யாத்திரையாக வரும் வெளிநாட்டினருக்கு விருந்தளித்து உபசரிக்கும் குறைஷிகள், அப்படியே அவர்களுடன் சில வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு தங்கள் தொழிலையும் மேம்படுத்திக்கொள்வது வழக்கம். உலர் பழ வகைகள், தானிய வகைகளை ஏற்றுமதி செய்வது அன்றைய குறைஷிகளின் பிரதானத் தொழில். கிட்டத்தட்ட, மத்திய ஆசியா முழுவதிலும் அன்றைய மெக்கா வர்த்தகர்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள். சில ஆப்பிரிக்க நாடுகளுடனும் தூர கிழக்கு நாடுகளுடனும் அவர்களுக்கு வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கிறது.இந்த வர்த்தக உறவுகள் எப்போதும் சுமுகமாக இருப்பதற்கு, புனித யாத்திரைக் காலங்களில் மெக்காவுக்கு வருவோரை நன்கு கவனிப்பது மிகவும் அவசியம். யாத்ரீகர்கள் வசதியாகத் தங்குவதற்கு, நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல், சௌகரியமாக க“அபாவில் வழிபட்டுத் திரும்புவதற்கு, உணவுப் பிரச்னையில்லாமல் உண்டு களிப்பதற்கு, இன்னபிறவற்றுக்கு மக்கா குறைஷிகள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.

வருஷா வருஷம் நடப்பதுதான். ஆனால் அந்த வருஷம் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது. முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்). அவர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிற இஸ்லாம் என்கிற புதிய மார்க்கம். என்னதான் சொல்கிறார் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) என்று சும்மா வேடிக்கை பார்க்கப் போகிறவர்கள்கூட அவரது அடிபணிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிடுகிற அபாயம். அதுநாள் வரை பகிரங்கமாகப் பிரசாரம் மேற்கொள்ளாதிருந்த முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)அவர்களும் அவரது தோழர்களும், இஸ்லாம் தோன்றிய அந்த நான்காம் ஆண்டின் தொடக்கத்தில் பகிரங்கப் பிரசாரத்துக்கான இறை உத்தரவு கிடைக்கப் பெற்றவர்களாக, மெக்காவுக்கு வரும் யாத்ரீகர்களிடையே இஸ்லாம் குறித்துப் பேசுவதற்குத் தயாராக இருந்தார்கள்.

என்ன செய்து முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)அவர்களின் பிரசாரத்தைத் தடுக்கலாம் என்று குறைஷிகள் யோசித்தார்கள். அவரை ஒரு மந்திரவாதி என்றும் சூனியக்காரர் என்றும் சித்திரித்து, கூடியவரை அவரை யாரும் நெருங்க இயலாமல் செய்வதற்கு ஒருபுறம் ஏற்பாடு செய்தார்கள். மறுபுறம் கலகக்காரர் என்றும் பித்தலாட்டக்காரர் என்றும் மக்கள் விரோத, இறைவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என்றும் சொல்லிப் பார்த்தார்கள். கெட்ட ஆவியால் பீடிக்கப்பட்டவர் என்றும் ஒரு வதந்தியை திட்டமிட்டுப் பரப்பினார்கள்.குறைஷி வர்த்தகர் சமூகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு விபரீதத்தை உண்டு பண்ணியது.

குறைஷியர் சமூகத்திலேயே இளைஞர்களாக இருந்தவர்கள், தமது தந்தைமார்களும் பிற உறவினர்களும் ஏன் இந்த முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)-ப் பற்றி எப்போதும் தவறாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் அவர் என்னதான் சொல்கிறார், செய்கிறார் என்று அறியும் ஆவல் மிக்கவர்களாக முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) இருக்கும் இடம் நாடிப் போக ஆரம்பித்தார்கள். இதைக் காட்டிலும் குறைஷிகளுக்கு வேறு பிரச்னை வேண்டுமா? யாத்ரீகர்களையல்ல; முதலில் தமது மக்களை அவர்கள் முகம்மதுவிடமிருந்து “காப்பாற்றி“யாகவேண்டும்.ஆகவே சிறுபிள்ளைத்தனமான சில நிபந்தனைகளை அவர்கள் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)-க்கு வைக்கத் தொடங்கினார்கள்.

ஒரு பவுர்ணமி தினத்தன்று முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்று, “உண்மையிலேயே நீங்கள் ஓர் இறைத்தூதர் என்று நாங்கள் எப்படி நம்புவது? உங்களால் இந்த முழுநிலவைப் பிளந்து காட்ட முடியுமா?” என்று சவால் விட்டார்கள். “பார், இந்த முகம்மது எப்படித் திண்டாடப்போகிறார்!” என்று தம் குலத்தின் இளவல்களைப் பார்த்துப் பெருமிதமாகப் புன்னகை புரிந்தார்கள்.ஆனால், முகம்மது கண் மூடி தியானித்த மறுகணம் அந்த அற்புதம் நடக்கத்தான் செய்தது. பவுர்ணமி நிலவு இரண்டாக இரு பிறைகளாகப் பிரிந்து காட்சியளித்தது! உடனே, முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஒரு மந்திரவாதி, கண்கட்டு வித்தை செய்கிறார் என்று அலறத் தொடங்கிவிட்டார்கள் குறைஷிகள். ஒன்றல்ல; இதைப்போல் வேறு பல சம்பவங்களும் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் நடந்ததற்கான சரித்திரக் குறிப்புகள் இன்றும் வாசிக்கக் கிடைக்கின்றன.

ஆனால், சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்), இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. இஸ்லாத்தின் மையம் என்பது குர்ஆன் தான். “குன்” என்கிற ஒரு சொல்லை மரியத்தின் மணிவயிற்றில் வைத்துத்தான் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)அவர்களுக்கு முந்தைய நபியான இயேசுவை (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) இறைவன் படைத்தான் என்று இஸ்லாம் சொல்கிறது. அந்தச் சமயம், சொல்லிலிருந்து உதித்தவர், இறைத்தூதர். இம்முறை சொல்லிலிருந்து உதித்தது,

குர்ஆன் என்கிற ஒரு வேதம். ஆக, குர்ஆன்தான் முக்கியமே தவிர, நிகழ்த்தப்படும் அற்புதங்களல்ல. நிகழ்த்துபவருமல்ல. இதை, மற்ற யாரையும்விட முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) மிக நன்றாக உணர்ந்திருந்தார். தாம் இறைவனால் இஸ்லாத்தை விளக்கவும் பரப்பவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பரிபூரணமாக அறிந்திருந்தார். ஆகவே, தன் மூலமாக நிகழ்த்தப்படும் எதற்கும் தான் உரிமை கொள்வதற்கோ பெருமைப்படுவதற்கோ ஏதுமில்லை என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார் அவர். ஆன்மிகத்தின் மிகக் கனிந்த நிலை என்பது இதுதான். இந்த ஒரு நிலைக்காகத்தான் எத்தனையோ முனிவர்களும் யோகிகளும் பல்லாண்டுகாலம் கடுந்தவம் புரிந்திருக்கிறார்கள். “தான்” என்கிற ஒரு விஷயத்தை முற்றிலுமாகக் களைய முடியும்போதுதான் ஆன்மிகம் வசப்படும் என்பார்கள்.

முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஒரு பழுத்த ஆன்மிகவாதி.அது ஒருபுறமிருக்க, இந்த முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களை என்ன செய்து தடுத்து நிறுத்தலாம் என்று குறைஷிகள் கூடி ஆலோசிக்கத் தொடங்கியதைப் பார்க்கலாம். அவருக்கு எதிராகச் சாத்தியமுள்ள அத்தனை பிரசாரங்களையும் முடுக்கி விடுவது; புனித யாத்திரைக் காலத்தில் பிரச்னையில்லாமல் தமது வர்த்தக உறவுகளை பலப்படுத்திக்கொள்வது என்கிற ஒரு திட்டம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.ஆகவே, சற்றே மாறுபட்ட விதத்தில் முகம்மதை இன்னொரு விதமாகவும் பரீட்சித்து, அவர் ஒரு பொய்யர்தான் என்பதை நிரூபிப்பது என்று முடிவு செய்தார்கள்.

இங்கேதான் அவர்களுக்கு யூதர்களின் நினைவு வந்தது. படித்த யூதர்கள். பண்டிதர்களான யூதர்கள். அறிவிற் சிறந்த யூதர்கள். யூத ரபிக்கள் (Rabbi). இந்த ரபிக்கள் குறித்து ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். யூத மதகுருக்களாக விளங்கும் இவர்கள், யூதமதச் சட்டங்களிலும் விற்பன்னர்கள். தனியரு சமஸ்தானம், தனியரு நீதிமன்றம் என்று யூதர்களிடையே இந்த ரபிக்களின் செல்வாக்கு மிகப்பெரிது. மன்னர் அளிக்கும் தீர்ப்புகளை மாற்றி வழங்குமளவுக்கே செல்வாக்குப் பெற்ற ரபிக்கள் இருந்திருக்கிறார்கள். (யூத ஆட்சியாளர்கள் இருக்கும் இடங்களில் ரபிக்களைக் கேட்காமல் பெரும்பாலும் யாரும் தீர்ப்பு வழங்கமாட்டார்கள் என்பதையும் சொல்லிவிடவேண்டும்.)இத்தனைக்கும் யூதமதம் தோன்றியபோதே உதித்தவர்கள் அல்ல அவர்கள்.

யூதர்களின் தேவதூதரான மோசஸ் (மூஸா அலைஹிஸ்ஸலாம்) மூலம் இறைவன் அளித்த வேதமான “தோரா“வில் ரபிக்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடையாது. பின்னாளில் “தால்மூத்” (Talmud) என்ற யூதச் சட்டதிட்டங்களும் யூத நம்பிக்கைகளும் அடங்கிய பிரதி உருவாக்கப்பட்ட காலத்தில்தான் ரபிக்களுக்கான முக்கியத்துவம் கூடியது. ஸிணீதீதீவீஸீவீநீணீறீ யிuபீணீவீsனீ என்றே குறிப்பிடும் அளவுக்கு “தால்மூத்” காலத்தில் ரபிக்களின் செல்வாக்கு உச்சத்தை எட்டியிருந்தது.அத்தகைய யூத மதகுருமார்களை அணுகி, தங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கேட்பது என்று முடிவு செய்தார்கள், மக்கா நகரத்து குறைஷிகள்.

தமது தகுதிகள் பற்றிய தாழ்வுமனப்பான்மை அவர்களுக்கு மேலோங்கியிருந்ததனாலும் யூத மதம் உயர்வானது என்கிற எண்ணம் இருந்ததாலுமே இப்படியரு முடிவுக்கு வந்தார்கள். இதற்காக யூதர்களின் தலைமையகமான இஸ்ரேலுக்கு ஓடமுடியுமா? அப்படி ஓடினால்தான் அங்கே யூத குருமார்கள் இருப்பார்களா? எல்லோரும்தான் இடம் பெயர்ந்து மத்திய ஆசியா முழுவதும் பரவி வசித்துக் கொண்டிருக்கிறார்களே. ஆனால் அன்றைக்கு மக்காவில் யூதர்கள் அதிகம் இல்லை. யூத குருமார்கள் ஒருவர்கூட இல்லை. ஆகவே, யத்ரிப் நகரில் (மதினா நகரின் பண்டையகாலப் பெயர் இதுதான்.) வசித்துவந்த சில யூத ரபிக்களைச் சந்திக்க ஆள் அனுப்பினார்கள்.பிரச்னை இதுதான்.முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஓர் இறைத்தூதர்தானா? அவர் சொல்லுவதையெல்லாம் நம்பி, ஏற்பதற்கில்லை. மந்திரவாதியோ என்று சந்தேகப்படுகிறோம். என்ன செய்து அவரை பரீட்சித்தால் சரியாக இருக்கும்?

ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் அரபுகளின் நம்பிக்கைகளை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அடிப்படையே தகர்ந்துவிடும் போலிருக்கிறது. அரபுகளின் வழிபாட்டு உருவங்களை அவர் மதிப்பதில்லை. உருவமற்ற ஒரே இறைவன் என்றொரு புதிய கருத்தை முன்வைத்து மக்களை ஈர்க்கிறார். அவர் உண்மையா, போலியா என்று எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும். இதற்கு யூத குருமார்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.மக்கா நகரத்து வணிகர்களின் இந்தக் கோரிக்கை, யத்ரிபில் வசித்துவந்த யூத குருமார்களின் சபைக்குப் போய்ச் சேர்ந்தது. அவர்கள், மெக்காவாசிகள் முகம்மது குறித்துச் சொன்ன ஒவ்வொரு தகவலையும் கூர்மையாக கவனித்துக் கேட்டார்கள். தமக்குள் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

இறுதியில், முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களை பரிசோதிக்க மூன்று வினாக்களை அவரிடம் கேட்கச் சொல்லி அரபுகளிடம் சொல்லி அனுப்பினார்கள்.”இதுதான் பரீட்சை. இவைதான் கேள்விகள். இதற்கு மேலான கேள்விகள் என்று எதுவுமில்லை. இந்த மூன்று கேள்விகளுக்கும் அந்த முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) என்ன பதில் தருகிறார் என்று கேட்டு வந்து சொல்லுங்கள். அவர் சொல்லும் பதில்கள் சரியானவையாக இருக்குமானால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் இறைத்தூதர்தான் என்று நீங்கள் நம்பலாம். பதில்கள் சரியில்லை என்றால், அவர் பித்தலாட்டக்காரர்தான் என்பதில் சந்தேகமில்லை” என்று சொன்னார்கள். யூத மதகுருமார்கள் எழுப்பிய அந்த மூன்று வினாக்களுக்கு சத்தியமாக எந்த அரேபியருக்கும் விடை தெரிய நியாயமில்லை. முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) ஒரு அரேபியர். எழுதப்படிக்கத் தெரியாதவர். யாரிடமும் பாடம் கேட்டவரும் அல்லர். எனவே யூத குருமார்களுக்கு மட்டுமே விடை தெரிந்த அந்த வினாக்களுக்கு அவர் எப்படி பதில் சொல்லுகிறார் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் குறைஷிகள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 13 ஜனவரி, 2005

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 58 = 63

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb