ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1)
[ வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற மாவீரர் ]
நெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவரது இரவுகள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, வீரம் மற்றும் நேர்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், இறைச் சட்டங்களைக் கண்டிப்புடன் பேணி வாழக் கூடியவராகவும் அவரது வாழ்வு திகழ்ந்தது.
இறையச்சத்துடன் கழிந்த அவரது வாழ்வில், கொடைத்தன்மையும், ஏழைகளுக்கு இரங்கும் தன்மையும், பணிவும் இன்னும் தியாகமும் நிறைந்திருந்தன. இத்தகைய நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் திருவதனங்களினால் சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட 10 ஸஹபாப் பெருமக்களில் ஒருவராகவும் திகழக் கூடிய நற்பேற்றைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.
இன்னும் “ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது பிரார்த்தனைகளை யா அல்லாஹ் நீ ஏற்றுக் கொள்வாயாக! இன்னும் அவரது வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்பு, எதிரியின் இலக்கைத் துல்லியமாகத் துளைக்க கிருபை செய்வாயாக” என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்காகத் துஆச் செய்யும் பேறு பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.
இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் வாய்மையாக நடந்து கொள்வோம், எந்த நிலையிலும் அதிலிருந்து மாற மாட்டோம் என்று வாய்மையாக உறுதி மொழி அளித்த, அதாவது பைஅத்துர் ரிழ்வான் என்னும் ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட பெருமக்களில் இவரும் ஒருவராவார்.
திருமறைக்குர்ஆனில் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பல நபித்தோழர்களில் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களும் ஒருவராவார். இன்னும் உஹத் போரிலே அஞ்சாமல் எதிரிகளைத் துளைத்துக் கொண்டு சென்று போரிட்ட மாவீரர்களில் இவரும் ஒருவராவார்.
வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவரான இந்த நபித்தோழர் உஹதுப் போர்க்களத்தில் தனது வில்லிலிருந்து அம்புகளை மழை என எதிரிகளின் மீது பொழிந்து எதிரிகளை நிலைகுலையச் செய்தவரும் ஆவார். அந்தப் போர்க்களத்தில் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் வில் வித்தையைக் குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு புகழ்ந்து கூறுபவர்களாக இருந்தார்கள்.
“ஒ ஸஅத்..! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், உங்களது அம்புகளை வீசுங்கள்!” என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தனது பதினேழாவது வயதில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். தாருல் அர்க்கம் என்ற பயிற்சிப் பாசறையில் வைத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவரும், கல்வி பெற்றவருமாவார்.
இன்னும் ஷிஅப் அபீதாலிப் கணவாயில் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு சொல்லொண்ணா துன்பங்களுக்கிடையில் இரண்டு வருடங்களைப் பொறுமையுடன் கழித்த பெருந்தகையுமாவார். வாழ்வின் அநேக தருணங்களைப் போர்க்களத்தில் கழித்த இவர், அங்கு தனது பிரமிக்கத்தக்க வீரத்தை நிரூபித்துக் காட்டினார். அவரது ஒவ்வொரு நிமிடமும் இன்றைக்கிருக்கின்ற முஸ்லிம் உம்மத் ஏற்றுப் பின்பற்றத் தக்கதாகவும், இன்னும் போர்க்களத்தில் இருந்து கொண்டிருப்பவர்களுக்குப் படிப்பினையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.
இன்றைய ஈராக்கின் அன்றைய பிரபலமான நகராகத் திகழ்ந்த ஜஸ்ர் என்ற இடத்தில் வைத்து முஸ்லிம் படையணியினர் எதிரிகளைச் சந்தித்தனர். போர்க்குணத்துடன் மார்தட்டிக் கொண்டு வெற்றி எங்கள் பக்கமே என்று ஆர்ப்பரித்து வந்தனர் எதிரிகள். போர் துவங்கிய முதல் நாளிலேயே நான்காயிரம் முஸ்லிம் படைவீரர்கள் இறைவழியில் தங்களது உயிர்களைத் தத்தம் செய்திருந்தனர்.
அப்பொழுது, முஸ்லிம் உம்மத்தின் இரண்டாவது கலீபாவாக ஆட்சித்தலைவராக இருந்த உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு இந்தச் செய்தி மிகவும் கவலையை அளித்தது மட்டுமல்லாமல், இனி தான் செல்வதன் மூலம் மட்டுமே எதிரிகளைச் சமாளிக்க முடியும் என்ற முடிவையும் அவர்கள் அப்பொழுது எடுத்து, தானே படைக்குத் தலைமையேற்பதற்காக மதீனாவை விட்டு ஈராக்கிற்கு புறப்படவும் தயாரானார்கள். இன்னும் அலி ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை மதீனாவிற்குத் தற்காலிகத் தலைவராக நியமித்து விட்டு, சிறுபடையினருடன் ஈராக் நோக்கிப் புறப்பட்டும் விட்டார்கள்.
உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் ஈராக் நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மிகவும் கவலையடைந்தவர்களாக, அவரைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை இடைமறிப்பதற்காகப் புறப்பட்டார்கள். மதீனாவின் புறநகர்ப் பகுதியிலேயே உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைப் பிடித்து விட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், கலீபா அவர்களே! இப்பொழுது முஸ்லிம் உம்மத் எப்பொழுதும் இல்லாத அளவு பிரச்னைகளில் உழன்று கொண்டிருக்கின்றது.
நிலைமைகளும் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நீங்கள் மதீனாவில் இருந்து நிலைமைகளைச் சமாளிப்பதற்கு அவசியமான இந்த நிலையில் நீங்கள் ஈராக் நோக்கிச் செல்வது சரியான முடிவல்ல. இன்னும் ஈராக்கின் நிலைமையைச் சமாளிப்பதற்கு மிகவும் அனுபவமிக்க, தீரமிக்க எத்தனையோ தளபதிகள் மதீனாவில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்குப் பதிலாக அவர்களை நாம் அனுப்புவோம் வாருங்கள் என்று மதீனாவிற்கே திருப்பி அழைத்துக் கொண்டு வந்து விடுகின்றார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், அலி ரளியல்லாஹ¤ அன்ஹ¤ மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ ஆகியோர்கள் கலந்து கொண்ட அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நான் போவதை நீங்கள் விரும்பவில்லை எனில், மிகவும் மோசமான நிலையில் ஈராக்கில் உள்ள முஸ்லிம்களின் படைக்குத் தலைமையேற்கக் கூடிய அளவுக்குத் திறமைவாய்ந்த படைத்தளபதி ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என்று உத்தரவிடுகின்றார்கள்.
உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், நமது படைக்கு மிகவும் தகுதி வாய்ந்த தளபதி ஒருவரை நான் தேர்வு செய்து விட்டேன். அவர் தான் மோசமான இந்த சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய தகுதி வாய்ந்த நபராகவும் இருப்பார் என்று கூறியவுடன், அவரது பெயரைக் கூறுங்கள், யார் அவர்? என்று உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் வினவ, அவர் தான் சிங்கம் போன்ற இதயம் கொண்ட, எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய அளவுக்கு திறமையும் கொண்ட நமது மாவீரர் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ என்று கூறி முடித்தவுடன், அவையில் இருந்த அனைவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது தேர்வு மிகச் சரியான தேர்வு என்று, அவரைத் தளபதியாக அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். இன்னும் அவரைத் தளபதியாக அனுப்புவதில் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயாரான ஆமீனா அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். ஒருமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றார்கள், அப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் அங்கே நுழைந்த பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைக் குறித்து, இவர் தான் எனது தாய் மாமா, உங்களில் எவராவது இவரை விடச் சிறந்த தாய்மாமா ஒருவரை எனக்கு நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் என்று பெருமைபடக் கூறினார்கள்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய பயிற்சியை தாருல் அர்கமில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புப் பெற்ற ஆரம்ப கால முஸ்லிம்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவ்வாறு இவருடன் அந்தப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்களில் பெருமை மிகு தோழர்களான அபுபக்கர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤, உத்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹ¤ அன்ஹ¤, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤, தல்ஹா பின் அப்துல்லா ரளியல்லாஹ¤ அன்ஹ¤, சுபைர் பின் அவ்வாம் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ ஆகியோர்களும் அடங்குவர்.
மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத அளவுக்கு இருந்த பொழுது, தங்களது தொழுகைகளை – இறைவணக்கத்தை நிறைவேற்ற இவர்கள் மக்காவின் ஒதுக்குப் புறமான பகுதிகளுக்குச் சென்று விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஒருமுறை இவர்கள் ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்து, இறைவணக்கத்தில் தங்களது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, மக்கத்து ரவுடிக் கும்பலொன்று இவர்களது இருப்பிடத்தை அடையாளம் கண்டு கொண்டு, அங்கே சிறியதொரு கலவரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கே கீழே கிடந்த ஒட்டகத்தின் எலும்பை எடுத்து அவர்களை நோக்கி படுவேகமாக வீசியெறிந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள். இவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையில் அந்த எலும்பு பட்டு, படுகாயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது.
ஒரு சிறுவன் அடிபட்டதும் மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டு வெருண்டோடி விட்டார்கள். இது தான் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மிகவும் சாதுர்யமாக தீரமாக இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்து தொடுத்த முதல் தாக்குதலாகும்.இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மிகச் சிறந்த பல குண நலன்களைக் கொண்டிருந்தார்கள். எனினும் இங்கே அவற்றில் சில குணங்கள் மற்றவர்களிடமிருந்து இவரை தனித்துவமாக்கிக் காட்டியது.
இவரது மிகச் சிறந்த நிபுணத்துவத்தை உஹதுப் போரில் வைத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டு கொண்டார்கள், அதுமட்டுமல்ல அதனை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்வப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சஅதே..! உமக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும் என்றும் கூறி, சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் ஆசிர்வதித்தார்கள்.
இன்னும் இவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு, அதற்குப் பதிலும் அளித்தான். இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் பிரார்த்தனைக்கு இறைவா! நீ பதில் அளிப்பாயாக! என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதன் காரணமாக இவரது பிரார்த்னைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருந்தது. இன்னும் இறைத்தோழர்கள் யாவரும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை மிகவும் கண்ணியத்துடன் மதிப்பிட்டு, மரியாதை அளித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் முழு அரபுலகமும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் போர்த்திறனைப் பற்றி அறிந்திருந்தது. எந்த எதிரியையும் இவர் தன்னை மிகைத்து விட அனுமதித்ததில்லை. பிறர் கண்ணுக்கு எளிதில் புலப்படாத இரண்டு ஆயுதங்களை அவர் வைத்திருந்தார், அவை இரண்டையும் எதிரிகளின் கண்கள் பார்த்ததுமில்லை, ஒன்று அவரது அம்பு, மற்றது இறைவனை நோக்கி ஏந்தக் கூடிய அவரது கரங்கள், பிரார்த்தனைகள். உஹதுப் போரில் முஸ்லிம்களின் இதயங்களை ஆட்டிப் படைத்து கலங்கடித்த எதிரிகளை நேருக்கு நேராக எதிர்த்துப் போர் புரிந்தவர்.
உஹதுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது, சஅதே உமது அம்பை இன்னார் மீது எறியுங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்பொழுது தான் அம்பு தீர்ந்து விட்டதை சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ உணர்கின்றார்கள். இருப்பினும், கட்டளை இட்டது இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களாயிற்றே!
இறைத்தூதரவர்களின் கட்டளைக்கு அடிபணிவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாயிற்றே! உடனே அங்குமிங்கும் தேடுகின்றார்கள், ஒரு அம்பும் கிடைக்கவில்லை, பின் இறுதியில் ஒரு உடைந்த அம்பு ஒன்று தான் கிடைத்தது. அதனைத் தனது வில்லில் பூட்டி இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட அந்த நபரை நோக்கி, அம்பெய்துகின்றார்கள். அந்த அம்பானது அந்த எதிரியின் முன் நெற்றியில் பட்டு, அந்த இடத்திலேயே அந்த நபர் தரையில் சாய்ந்து, தனது உயிரை விடுகின்றார்.
அதுபோல அடுத்த ஒரு வில்லைக் கண்டெடுக்கின்றார்கள். அந்த வில்லை எதிரியின் கழுத்துக்குக் குறி வைக்கின்றார்கள். அந்த வில்லும் சரியான இலக்கைத் தாக்க, தொண்டையில் குத்திய அம்பு அவனது நாக்கை வெளிக் கொண்டு வந்து விட்டது, அந்த எதிரியும் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான்.
ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்: இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள், ”யா அல்லாஹ்! அவரது குறியை மிகச் சரியாக ஆக்கி வைப்பாயாக! அவரது பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக!”
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் பிரார்த்தனைகள் யாவும் நன்கு தீட்டப்பட்ட கூர்மையான வாளைப் போன்றது, இறைவன் அவரது பிரார்த்தனைகளை உடனே ஏற்றுக் கொள்ளவும் செய்தான். சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது மகன் தனது தந்தைகயின் பிரார்த்தனைகளை இறைவன் எவ்வாறு உடன் அங்கீகரித்தான் என்பதற்கு தனது நினைவலைகளில் இருந்து ஒரு சம்பவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்.
ஒருமுறை ஒரு மனிதன் அலி ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பற்றியும் இன்னும் சுபைர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ , தல்ஹா ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பற்றியும் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சித்துக் கொண்டிருப்பதை சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கேட்டு விட்டு, இந்த மாதிரி கெட்ட வார்த்தைகளைக் கொண்டு பேசுவதை நிறுத்துங்கள் என்று கோபத்துடன் கூறினார்கள். ஆனால் அந்த மனிதர் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார். மிகவும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்ட சஅத் பின் அபீ வக்காஸ்ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், இனிமேலும் நீங்கள் நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது சாபம் இறங்கட்டுமாக என்று நான் பிரார்த்தனை செய்து விடுவேன் என்று கூறினார்கள்.
உடனே அந்த மனிதர், நீங்கள் என்ன அனைத்து வல்லமையும் படைத்தவரா? அல்லது இறைத்தூதரா? நீங்கள் கேட்ட துஆவுக்கு இறைவன் உடனே பதில் அளிப்பதற்கு! என்று கேட்டு விட்டார். அந்த மனிதரது கேடு கெட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். பின் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு (ஒளுச் செய்து கொண்டு) இரண்டு ரக்அத் துக்களைத் தொழுதார்கள். பின் இறைவனிடம் இவ்வாறு முறையிட்டார்கள் :
யா அல்லாஹ்! நீ யாரைப் பொருந்திக் கொண்டாயோ, இன்னும் அவர்களது நற்செயல்கள் குறித்து திருப்தி கொண்டாயோ அத்தகைய நல்ல ஆத்மாக்களைப் பற்றி இந்த மனிதர் குறை கூறிக் கொண்டிருக்கின்றார். நிச்சயமாக இத்தகைய கெட்ட வார்த்தைகளுக்கு அவர்கள் உரித்தவர்களல்ல என்பதை நீ அறிவாய், இந்த மனிதருடைய வார்த்தைகளை நீ நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டாய். அவர் வெளிப்படுத்திய இந்த வார்த்தைகளுக்காக பிற மனிதர்களுக்கு இவரை ஒரு படிப்பினையாக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பிரார்த்தனை செய்து விட்டு திரும்பிய சற்று நேரத்திற்குள்ளாக, எங்கிருந்தோ கட்டப்பட்ட கயிறை அறுத்துக் கொண்டு, மதம் பிடித்தது போல ஒரு ஒட்டகம் மனிதர்கள் கூடி நின்று கொண்டிருந்த அந்த இடத்தை நோக்கி வந்தது. அந்த ஒட்டகம் அந்த கூட்டத்தின் நடுவே அலை மோதித் திரிவதைக் கண்ட நாங்கள், அந்த ஒட்டகம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மனிதரைத் தேடுவது போல இருந்தது.
அப்பொழுது, எந்த மனிதரைக் குறித்து சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்களோ அந்த மனிதரின் தலையை இரத்த வெறி கொண்ட அந்த ஒட்டகம் கொத்தாகப் பிடித்து, அங்குமிங்கு பலம் கொண்ட மட்டும் ஆட்டியது. ஒட்டகத்தின் பிடியில் அகப்பட்ட அவனது கழுத்து முறிந்து, அவன் மரணத்தைத் தழுவினான். கூடியிருந்த மக்கள் அனைவரும் கண் மூடி விழிப்பதற்குள் நடந்து விட்ட அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து பிரமித்து நின்றார்கள்.
இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட, அந்த நல்லடியார்களைப் பற்றி சற்று முன் வாய்த் துடுக்காகப் பேசிய அந்த மனிதர் இப்பொழுது செத்து மடிந்த நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தார். இவ்வாறு பேசத் துடிக்கும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவும் அந்த நிகழ்வு இருந்தது.
நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்தியையும், இறைவனது திருப்பொருத்தத்தையும் தங்களது அர்ப்பணங்களால் பெற்றுக் கொண்ட அந்த நல்லடியார்களைப் பற்றி இப்பொழுதும் சரி.., எப்பொழுதும் சரி.., குறை கூறிப் பேசித் திரிபவர்களுக்கு இந்தச் சம்பவம் சிறந்ததொரு படிப்பினையாகத் திகழும்.
நிச்சயமாக இறைத்தோழர்களை நேசிப்பது இறைத் தூதரை நேசிப்பதற்கு முந்தையது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு கொள்வது என்பது இறைவன் மீது அன்பு கொள்வதற்கு முந்தையது. இதில் எவரொருவர் இவ்வாறு அன்பு கொள்வதில் மறுதலிக்கின்றாரோ அவர் இஸ்லாமிய மார்கத்தையே புறக்கணித்தவராவார். எவரொருவர் இறைத்தோழர்களையும், இறைத்தூதர்களையும், இறைவனையும் அன்பு கொண்டு, அவர்கள் காட்டிய வாழ்வை மேற்கொள்கின்றாரோ, அத்தகையவர்கள் இம்மையிலும், மறுமையிலும் அளப்பரிய அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்வார்கள். இல்லை என்றால், அவர்கள் பாவ மன்னிப்புக் கோராத வரையிலும், அவர்களது மறுமை வாழ்வு நஷ்டமடைந்ததாகவே இருக்கும்.
இறைவன் நம் அனைவரையும் இந்த உத்தம ஆத்மாக்களை அதிகமதிகம் நேசிக்கக் கூடிய மக்களாக ஆக்கி அருள்வானாக! இன்னும் நம் அனைவரையும் அந்த உத்தம ஆத்மாக்களோடு மறுமையில் ஒன்றிணைத்து வைப்பானாக! ஆமீன்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்