ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ (4)
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இந்தப் போரில் நேரடியாகக் கலந்து கொள்ளாவிட்டாலும், தனது இருப்பிடத்தில் இருந்து கொண்டு படைக்களுக்குத் தேவையான கட்டளைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் போரில் கலந்து கொண்டவர்களின் இறைநம்பிக்கை மற்றும் வீரம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, படைத்தளபதிகளின் சரியான திட்டமிடுதல் இருந்ததை நாம் காண முடிந்தது. அதுவே கதீஸிய்யாப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. படைத்தளபதிகள் போரில் நேரடியாகப் பங்கு கொண்டாலும் அல்லது பங்கு கொள்ளா விட்;டாலும், யுத்த வரலாற்றின் நெடுகிலும் நடைபெற்ற போர்களில் ஒரு போரின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கும் அதன் தளபதிகளே காரண கர்த்தாக்களாக இருந்துள்ளார்கள்.
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணமாக அவரால் நேரடியாகப் போரில் பங்கு கொள்ள இயலாமல், பரணில் உட்கார்ந்து கொண்டு போர் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார், இன்னும் தனது படைவீரர்களுக்கும், துணைத் தளபதிகளுக்கும் கட்டளைகளை அங்கிருந்தே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
கதீஸிய்யாப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றாலும், இன்னும் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக அதிகமாகவே இருந்தது.
மத்யன் போர்
கதீஸிய்யாவில் ஈரானியர்களை வெற்றி பெற்ற பின், அதே ஈரானியர்களை மீண்டும் மத்யன் என்ற இடத்தில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் போரிலும் ஈரானியர்கள் கதீஸிய்யாப் போருக்கு வந்திருந்ததைப் போலவே மிக மிக முன்னேற்பாடுகளுடன், அதிகமான ஆயுதங்களுடனும் வந்திருந்தார்கள். இந்தப் போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய தடையை தஜ்லா என்ற நதி ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
ஈரானியப் படை ஒரு கரையிலும், மறு கரையில் முஸ்லிம்களின் படையும் நின்று கொண்டிருந்தது. இருவரையும் பிரித்து வைத்து, அந்த நதி தனது போக்கில் போய்க் கொண்டிருந்தது. ஈரானியர்களைத் தாக்க வேண்டுமென்றால் ஆற்றைக் கடந்து தான் தாக்க வேண்டும் என்ற நிலை, இன்னும் ஆறு ஈரானியர்களை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்கக் கூடிய கவசமாகவும் திகழ்ந்து கொண்டிருந்தது. இன்னும் அந்த ஆற்றின் குறுக்கே இருந்த அத்தனை பாலங்களை ஈரானியர்கள் நிர்மூலமாக்கி, உடைத்து வைத்திருந்தனர். எனவே, தஜ்லா நதி முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் சவால் விட்டுக் கொண்டிருந்தது.
முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால், எதிர்த்தாக்குதலை நடத்த வேண்டுமென்றால்.. முஸ்லிம்கள் தான் முதலில் அடி எடுத்து வைத்து எதிர்த்தாக்குதலை நடத்த வேண்டும். ஆனால் ஆறு குறுக்கிட்டு ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இது எப்படிச் சாத்தியம்? அப்படியே, ஆற்றைக் கடந்து எதிரிகளைச் சந்திக்கலாம் என்ற முடிவினை எடுத்தாலும் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலேயே எதிரில் உள்ள ஈரானியப் படைகளின் தாக்குதலைச் சந்திக்க வேண்டி வரும். இது எதிரிக்கு சாதகமாகக் கூட ஆகி விடும்.
இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் ஒரு புது வித யுக்தி ஒன்றை வகுத்தார்கள். அதன் படி ஒரு படைப்பிரிவு ஆஸிம் பின் அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தலைமையில் ஆற்றில் இறங்குவது, இன்னும் அடுத்த படைப்பிரிவு முதல் பிரிவுக்கு சற்றுத் தூரத்தில் காகா பின் அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தலைமையில் ஆற்றில் இறங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், முதலில் இறங்கிய படைப்பிரிவுடன் ஈரானியப் படைகள் மோதிக் கொண்டிருக்கின்ற நிலையில், இரண்டாவது பிரிவு ஆற்றகை; கடக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் முதல் பிரிவுடன் ஈரானியர்கள் மோதுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுதே, இரண்டாவது பிரிவு எதிர்க்கரையை அடைந்து, எதிர்பாராத தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்து,
ஈரானியர்களை நிலைகுலையச் செய்வதே இந்த ஏற்பாட்டின் நோக்கமாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இந்த போர்க்கலைத்திட்டம் வெகு சிறப்பாக வேலை செய்தது, எதிரிகளை நிலைகுலையச் செய்ததுடன் வெற்றியையும் பெற்றுத் தந்தது. இன்னும் இராணுவ வரலாற்றில், சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இந்தப் போர்த்திட்டம் பொன்னெழுத்துக்களால் பதிக்கக் கூடியதொரு வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகவும் அமைந்து விட்டது.
இந்தத் திட்டத்தைத் தெளிவாகத் தன்னுடைய படைவீரர்களுக்கு விளக்கிய பின், இறைவன் மீது நம்பிக்கை கொண்ட என்னுடைய படைவீரர்களே! அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்களாக இந்த ஆற்றில் இறங்குங்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இப்பொழுது, முஸ்லிம் வீரர்கள் ஒவ்வொருவரின் உதடும், அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தது, இன்னும் அவர்கள் ஹஸ்புனல்லாஹ வ நிஃமல் வக்கீல் – அதாவது எங்களுக்கு உதவி செய்ய அல்லாஹ்வே போதுமானவன் என்று கூறிக் கொண்டே இப்பொழுது ஆற்றில் இறங்க ஆரம்பித்தார்கள். ஆழமான அந்த தஜ்லா நதியை எந்தவித பயமுமின்றி இப்பொழுது முஸ்லிம் வீரர்கள் கடக்க ஆரம்பித்தார்கள். முஸ்லிம் வீரர்கள் ஆற்றைக் கடந்த இந்த சம்பவத்தை உலகம் இவ்வாறு பேசிக் கொண்டது :
இவர்கள் என்ன நிலத்தில் நடந்து செல்வது போலல்லவா ஆற்றின் மீது நடந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு ஆற்றைக் கடந்த முஸ்லிம் வீரர்களில் சல்மான் அல் பார்ஸி ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களும் ஒருவராவார். யுத்த வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக் கூடிய அளவுக்கு, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அழகியதொரு பணியைச் செய்தார் சல்மான் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள். அவர் கூறினார் : “இஸ்லாம் என்ற இந்த இறைமார்க்கம் உன்னதமானது, சிறப்பு மிக்கது, அது வானத்திலிருந்து இந்த உலகத்திற்கு இறக்கி அருள் செய்யப்பட்டது. அந்த வல்ல அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இந்த ஆறானாது இறைநம்பிக்கை கொண்ட நல்லடியார்களுக்கு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த பாலைப் பூமியைப் போன்றதே!
எவனுடைய கைவசத்தில் என்னுடைய உயிர் இருக்கின்றதோ..! அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக..! ஆற்றில் யார் யாரெல்லாம் இறங்கினார்களோ அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே அதன் மறுகரையை அடைந்தார்கள். ஆழமான அந்த நதி அவர்களில் எவருக்கும் எந்த கெடுதியையும் ஏற்படுத்தவில்லை.
இன்னும் ஆற்றைக் கடந்த வீரர்களிடமிருந்து ஒரு கயிறு கூட தவறி அந்த ஆற்றில் விழுந்து விடவில்லை. ஒரு போர்வீரருடைய குவளை ஒன்று தவறி ஆற்றில் விழுந்து விட, அதனை கண்டெடுத்துத் தருமாறு தன்னுடைய சக வீரர்களிடம் வேண்டுகிறார். ஆற்றில் தவறி விழுந்த அந்தக் குவளை இவர்களை நோக்கி மிதந்து வந்து கொண்டிருந்தது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!”
முஸ்லிம்கள் ஆற்றைக் கடந்து வருவதைப் பார்த்த ஈரானியப் படைகள், தங்களது கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை, தங்களை ஏதோ மிகப் பெரிய பிராணி ஒன்று விழுங்க வருவதைப் போலக் கண்டார்கள், பயத்தால் நடுங்கினார்கள், இன்னும் படையை விட்டு ஓடவும் விரண்டோடவும் செய்தார்கள். ஆனால் ஈரானியப் படைத்தளபதி உறுதியுடன் முஸ்லிம்களை எதிர்த்து நின்றார், விரண்டோடிய சிலர் மீண்டும் அவருடன் வந்து ஒட்டிக் கொண்டனர். ஆனால் ஈரானியப் படைக்கு முதல் நாளிலேயே முஸ்லிம் வீரர்கள் சமாதி கட்டி விட்டனர். ஈரானியர்களின் மத்யன் பிரதேசமும், கோட்டைகளும், அரண்மனைகளும் இப்பொழுது முஸ்லிம்கள் வசமாகின. ஈரானியப் பேரரசர் தோல்வியடைவதற்கு முன்பே, மத்யனை விட்டு யஸ்ட்கார் என்ற பகுதியை நோக்கிச் சென்று விட்டார். மத்யனின் அத்தனை பொருள்களும், இன்னும் கஜானாக்களும் கைப்பற்றப்பட்டு, மதீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மத்யன் நகரில் நுழைந்த பொழுது, மத்யன் நகரம் வெறிச்சோடிக் கிடந்தது. ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக இருந்தது. இந்தக் காட்சி சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை மிகவும் பாதித்து விட்டது. அதன் காரணமாக அவரது நாவிலிருந்து கீழ்க்கண்ட வசனம் உதிர ஆரம்பித்தது : “எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்? இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்). இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்). அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.” (44:25-28)
மத்யன் பிரதேசம் முஸ்லிம்களின் கைவசம் வந்ததும், அதனையடுத்த ஈராக் பகுதியும் முஸ்லிம்களின் கைவசம் வந்தது, இப்பொழுது அங்கு இஸ்லாமிய ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. மக்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, வீட்டை விட்டு யார் யார் ஓடினார்களோ அவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு வந்து, அமைதியான முறையில் வசிக்கலாம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேட்ட அவர்கள், மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு வந்தார்கள், தங்களது பொருள், மற்றும் செல்வம், சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டவர்களாக தங்களது வாழ்வைத் துவங்கினார்கள்.
ஈராக்கின் முழுப் பகுதியும் இஸ்லாமியப் படைகளின் கைவசம் வந்ததும், ஈராக்கின் கவர்னராக சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ நியமிக்கப்பட்டார்கள். வெற்றி கொள்ளப்பட்டவுடன் அந்த தேசத்தை ஒருங்கிணைத்து அதனை ஆள்வதென்பது மிகவும் சிரமமானதொரு பணியாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தன்னுடைய தோழர்களது தீரமிக்க தியாகத்தையும், வீரத்தையும் கண்டு இறைவனுக்கு நன்றி கூறினார்.
இன்னும் வெகு சீக்கிரத்திலேயே ஈராக் பிரதேசத்தை மிகவும் செழிப்பான, வியக்கத்தக்க மாறுதல்களைக் கொண்ட பூமியாக, ஒரு முன்மாதிரி மிக்க தேசமாக மாற்றிக் காட்டினார். ஈராக்கின் சீதோஷ்ண நிலை நமது வீரர்களுக்கு ஒத்து வரவில்லை. அநேக வீரர்கள் இதனால் கடுமையான நோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கலீபா உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு, சரியான இடத்தைத் தேர்வு செய்து அங்கு புதியதொரு நகரை நிர்மாணிக்கும்படியும், படைவீரர்களுக்கு அங்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும்படியும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பதில் கடிதம் எழுதினார்கள்.
எனவே, புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது, புதிய நகரம் கூஃபா நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது, நகரின் மார்பிடத்தில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்றும் கட்டப்பட்டது. அந்தப் பள்ளியில் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் நின்று தொழும் அளவுக்கு விசாலமாக அந்தப் பள்ளி கட்டப்பட்டது. ஈராக்கை திட்டமிட்டபடியும், சரியான நிர்வாகத்திறனைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டதாலும், முன்னைக் காட்டிலும் அமைதியாகவும், செழிப்பாகவும், நிம்மதியாகவும் மக்கள் வாழ ஆரம்பித்தார்கள்.
சரியான நிர்வாகம், பாரபட்சமில்லாத நீதி, இன்னும் மக்களை சரியான முறையில் வழி நடத்தியதால் மக்கள் அமைதியையும், சுபிட்சத்தையும், சந்தோஷத்தையும் இஸ்லாமிய ஆட்சியில் அனுபவித்தார்கள். ஆனால், எப்பொழுதும் பிரச்னைகளை உருவாக்கி அதில் குளிர்காய விரும்பும் ஒரு கூட்டம் எங்கும் இருந்து கொண்டிருப்பது போல கூஃபாவிலும் ஒரு சிறு கூட்டம் உருவாகியது. இன்னும் அந்தக் கூட்டம் அரசைக் குறைகூறிக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் தொழ வைப்பதில்லை என்றும் இன்னும் வேலைகளில் சோம்பேறித்தனத்தையும், பொடுபோக்காகச் செயல்படுவதாகவும் கவர்னர் மீது குற்றம் சாட்டினார்கள்.
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டைப் பெற்றுக் கொண்ட கலீபா உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், உடனே மதீனாவிற்குப் புறப்பட்டு வரும்படி சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு உத்தரவிடுகின்றார்கள். அந்த உத்தரவைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்திலேயே, சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மதீனாவுக்கு பயணமாகின்றார்கள்.
அங்கு சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ விசாரணை செய்கின்றார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤) அவர்களே! உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
சிரித்துக் கொண்டே..! ”நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம வஸல்லம் அவர்கள் எந்த முறையில் தொழ வைத்தார்களோ, அதே முறையில் தான் தொழ வைக்கின்றேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் இரண்டு ரக்அத்துக்களை எவ்வாறு பிந்திய இரண்டு ரக்அத்துக்களை விட நீட்டித் தொழ வைத்தார்களோ அதனைப் போன்றே நானும் மக்களுக்கு தொழ வைக்கின்றேன்” என்று கூறினார்கள்.
சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது பதிலால் திருப்தியுற்ற உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், சரி..! இப்பொழுது நீங்கள் மீண்டும் ஈராக் சென்று கவர்னர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
ஆனால் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களோ! சிரித்துக் கொண்டே.., ”என் மீது திருப்தி கொள்ளாத, இன்னும் என்னுடைய தொழுகையில் சந்தேகம் கொண்டு நான் சரியாகத் தொழுகையை நடத்தவில்லை என்று என்னைப் பற்றிப் புகார் செய்த மக்களிடமா என்னை மீண்டும் திருப்பி அனுப்புகின்றீர்கள். என்னுடைய வாழ்வை இனி நான் மதீனாவில் கழிக்க விரும்புகின்றேன், எனக்குப் பதிலாக வேறு யாரையாவது நியமித்து விடுங்கள்” என்று சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களிடம் கோருகின்றார்கள். எனவே, இதுவரை சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு உதவியாக இருந்த உதவி கவர்னரையே, ஈராக்கின் கவர்னராக நியமித்து விடுகின்றார்கள்.
ஹிஜ்ரி 23 ல் பாரசீக நெருப்பு வணங்கியான ஒருவன், உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது கத்தியால் குத்தி விட்ட நிகழ்ச்சி நடந்தது. அந்த தாக்குதலில் இருந்து உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மீள இயலவில்லை. அவர்களை மரணம் நெருங்கிக் கொண்டிருந்த வேலையில், உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை அடுத்து ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்றதொரு பிரச்னை உருவாகியது.
இன்னும் யாரையும் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் குறிப்பிட்டுக் கூறவில்லை, தலைமைப் பதவிக்கு நியமிக்கவும் இல்லை. இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம அவர்களின் பேரன்மைப் பெற்ற தோழர்களைக் கொண்ட, ஆறு நபர் கொண்ட கமிட்டியை நியமித்து, அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து புதிய கலீபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவில் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களும் ஒருவராவார். இன்னும் எனக்குப் பின் ஒருவரை கலீபாக நியமிக்க வேண்டும் என்று நான் முடிவு எடுத்தால், நான் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களையே நியமிப்பேன் என்றும் அப்போது கூறினார்கள். ஆனால் அது சரியல்ல. தனது தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை முஸ்லிம் உம்மத்திற்கு இருக்கின்றது என்று உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கூறி விட்டார்கள்.
இன்னும் எனக்குப் பின் கலிபாவாக வரக் கூடியவர் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களாக இல்லா விட்டால், அவரல்லாது வேறு யாராவது ஆட்சிக்கு வருவாரேயானால், அவ்வாறு பொறுப்புக்கு வரக் கூடியவர் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளட்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். பின் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மரணமடைந்து, அவர்களை நல்லடக்கம் செய்ததன் பின்பு, நபித்தோழர்களில் அதிகமானோரின் ஆதரவின் அடிப்படையில், உதுமான் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்கள்.
மீண்டும் ஈராக் கவர்னராக..!
உதுமான் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், ஈராக் பகுதியின் கவர்னராக மீண்டும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைச் சென்று பதவியேற்றுக் கொள்ளுமாறு பணித்தார்கள். உதுமான் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் உத்தரவுப்படி, மீண்டும் ஈராக் சென்று அங்கு மூன்று வருடம் ஆட்சிப் பொறுப்பில் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கடமையாற்றினார்கள்.
சில வருடங்கள் கழித்து, சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கும் நிதியமைச்சராகப் பதவி வகித்த அப்துல்லா பின் மஸ்ஊத் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக மீண்டும் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு, மதீனாவிற்கே திரும்பி வந்தார்கள். மதீனாவை அண்மித்துக் கொண்டிருந்த வேiலையில், மதீனாவிற்கும் சில மைல்கள் தூரத்தில் உள்ள அகீக் என்ற இடத்தில் தனக்கென ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு, தனிமையான வாழ்வை வாழ ஆரம்பித்தார்கள்.
தனிமை வாழ்வு
இன்னும் முஸ்லிம் சமுதாயத்தைப் பல்வேறு பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் இட்டுச் சென்றதோடு, நபித்தோழர்கள் பலரது உயிர்களையும் குடித்த ஜமல் யுத்தம், ஸிப்பீன் யுத்தம் போன்வற்றிலும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டார்கள். இன்னும் அந்தக் காலப் பிரிவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள், குழப்பங்கள், வாதப் பிரதிவாதங்கள் எதனைப் பற்றியும் தன்னிடம் கூற வேண்டாம் என்று தன்னுடைய குடும்பத்தவர்களுக்கு உத்தரவே போட்டு வைத்திருந்தார்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் மனமுடைந்து போயிருப்பார்கள் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
அவர்கள் வேதனையுடன், ஒரு முஸ்லிம் சகோதரனின் வாள், சொந்த முஸ்லிம் சகோதரனின் தலையைத் துண்டிக்கப் பயன்படுத்தப்படுகின்றதே என்று வேதனை தொணிக்கக் கூறி வருந்தினார்கள். இருதரப்பினரும் எனது மரியாதைக்குரிய தோழர்கள் தான், இவர்களில் யாருக்கு எதிராகவும் எனது கனவில் கூட நான் என்னுடைய வாளை உயர்த்த மாட்டேன் என்றும் கூறினார்கள்.
இறுதி நாட்கள்
ஹிஜ்ரி 54 ல் அந்த அகீக் என்ற இடத்தில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய 80 வது வயதில் மரணம் அவரை வந்தடைந்தது. அவருடைய இறுதி நிலை பற்றி, அவரது மகன் விவரிப்பதை நாம் இங்கு நோக்குவோம் :
என்னுடைய தந்தையின் தலை என்னுடைய மடிமீதிருந்தது, அவரது கண்கள் பார்வை வெளிச்சத்தை இழந்து, நிலை குத்தி நின்றது. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
என்னை நோக்கி.., ஏன் மகனே அழுகின்றாய், பொறுமையாக இரு என்று எனக்கு ஆறுதல் கூறினார். நிச்சயமாக அல்லாஹ் எனக்கு எந்தத் தண்டனையும் கொடுக்க மாட்டான், இன்ஷா அல்லாஹ்..! என்றும் கூறினார்கள்.
இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள், தனது மலரிதழால் எனக்கு சொர்க்கம் உண்டென்று நன்மாரயம் கூறியிருக்கின்றார்கள் என்று கூறி விட்டு,
மகனே! அந்த அலமாரியைச் சற்று திறப்பாயாக! என்று கூறி, அதில் நான் மடித்து வைத்திருக்கும் பழைய துணி ஒன்றை எடுத்து வருவாயாக என்று கூறினார்கள்.
நான் அந்தப் பழைய துணியை எடுத்து வந்து கொடுத்தேன்.
அதனைப் பார்த்து, இதை நான் பத்ர் யுத்தத்தின் பொழுது அணிந்திருந்தேன், அதனால் அதனை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். இன்னும் இந்த துணியைக் கொண்டே எனக்கு நீ கபனிடுவாயாக!! இந்தத் துணி பழைய துணியாக இருக்கின்றதே என்று நீ கவலைப்பட வேண்டாம். அது பழையதாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதனைக் கொண்டே எனக்கு நீ கபனிட்டு அடக்கம் செய்! என்றும் கூறினார்கள்.
அவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவர்களது உயிர் விண்ணை நோக்கிச் சென்று விட்டது. பின்பு அவரது ஜனாஸா ஜன்னத்துல் பக்கீ யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கதீஸிய்யாவையும், பெர்ஸியாவையும் வெற்றி கொண்ட மாவீரரே!!
இன்னும் தனது போர்த்திறத்தாலும், ஞானத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் மத்யனை வெற்றி கொண்ட பெருமகனே!
தஜ்லா நதியின் மீது தனது குதிரையைச் செலுத்தி பயம் என்றால் என்ன? என்று கேட்ட பெருவீரரே!
கூஃபா நகரை உருவாக்கிவரே!
இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் மலரிதழால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்டவரே!
இஸ்லாத்தின் மிகப் பெரும் படைத்தளபதியே! நெறி தவறாத ஆட்சியாளரே!
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களே!
உங்களுக்கு எங்கள் ஸலாம்..! உங்களுக்கு எங்கள் ஸலாம்!
சொர்க்கத்தின் ஓடைகளின் சலசலப்பும் என்றென்றும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கட்டுமாக!! ஆமீன்!!
======================