DON’T MISS IT
கேள்வி பதில் பகுதியை தொடர்ந்து படிப்பதன் வாயிலாக மார்க்கம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களுக்கு விளக்கத்தைப் பெறுங்கள்
35. கேள்வி: நண்பரொருவர் என்னிடம் பத்து நாள் கழித்து தருவதாக ரூபாய் 100 கடன் கேட்டார். நான் கொடுத்தேன். அவர் திருப்பித் தந்தபோது ரூபாய் 110 – ஆக கொடுத்தார். நான் ஏற்க மறுத்தேன். இல்லை, இது என்னுடைய அன்பளிப்பு எனக்கூறினார். அந்த பணம் வட்டியா? இல்லையா?
பதில்: நீங்கள் வட்டி பெறும் நோக்கத்தில் கடன் கொடுக்கவில்லை. செய்த உதவிக்காக அவர் ரூபாய் 10 – ஐ சேர்த்து அளித்துள்ளார். இது வட்டியாகாது. இதனை அவரின் பூரண திருப்தி அறிந்து பெற்றுக்கொள்வதில் தவறில்லை. உங்கள் நண்பர் “மார்க்கம் தெரிந்தவராக” தெரிகிறார். கடன் வாங்கிச் செல்வோர் திரும்பக் கொடுக்கும்போது இப்படி சேர்த்துக் கொடுப்பது சுன்னத்தாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி செய்துள்ளார்கள்.
36. கேள்வி: எனது சில தோழிகள் முகத்தில் ஏற்பட்டுவிட்ட காயம், புள்ளிகள், பருக்கள் நீங்குவதற்காக தேன், பால், முட்டை போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பயன்படுத்தலாமா?
பதில்: தேன், பால், முட்டை ஆகியவைகளை அல்லாஹ் உடலுக்கு உணவாக ஏற்படுத்தியுள்ளான். அது நஜீஸ் ஒன்றுமில்லை. நீங்கள் குறிப்பிடுவதுபோல் அவ்வாறு உபயோகிப்பதில் எந்த தவறுமில்லை. “பூமியில் உள்ளவைகள் அனைத்தையும் உங்களுக்காகவே நாம் படைத்துள்ளோம்” என்று சூரத்துல் பகரா 29-வது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இதில் “உங்களுக்காக” என்று கூறியிருப்பது பொதுவான வார்த்தையாகும்.
அதில் அழகுக்காகவும் இந்த பொருட்களை பயன்படுத்தலாம். மேலும் அந்த அழகை இந்த பொருட்கள் அல்லது வேறு பொருட்களைக் கொண்டும் பெறமுடியும் என்றிருந்து அது ஆகுமானதாக இருப்பின் அதையும் பயன்படுத்தலாம். ஏனெனில், அல்லாஹ் அழகானவன். அழகையே விரும்புகிறான். அதே சமயம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை பயன்படுத்துவதில் வீண்விரயம், ஆடம்பரம் கூடாது. அது ஷைத்தானின் செயலாகும்.
37. கேள்வி: ஒரு பெண் தனது வாரிஸ் சொத்தை தனது தாய்க்கு கொடுத்து விட்டால், இதில் கணவன் எதையாவது கூறுவதற்கு உரிமையுள்ளதா? கணவனுக்கு, மனைவியின் சொத்தில், அவள் வாங்கும் ஊதியத்தில் செலவு செய்யும் உரிமை உண்டா?
பதில்: பெண் தனது பொருளுக்கு சொந்தக்காரியாகும். அதை அவள் நினைத்தது போல் செலவு செய்ய உரிமை உண்டு. அவள் தனது சொத்தை நன்கொடையாக மற்றவர்களுக்கு கொடுக்கலாம், ஸதகா (தர்மம்) செய்யலாம், தனது கடனை நிறைவேற்றலாம். தான் நாடியவர்களுக்கு தனது சொத்தை, பொருளை கொடுக்கலாம். இதில் எந்த வகையிலும் குறுக்கிட கணவனுக்கு உரிமையில்லை. எனினும் அப்பெண் (மனைவி) புத்தி சுவாதீனமுள்ள நல்ல தெளிவான பெண்ணாக இருக்க வேண்டும். கணவன், தன் மனைவியின் சொத்தை அவளது அனுமதி இல்லாமல் செலவு செய்யக்கூடாது. மேலும் மனைவி சம்பாதித்து வாங்கும் ஊதியத்தை அவளே செலவு செய்யலாம்.
38. கேள்வி: ஒருவர் வியாபாரக் கம்பெனியின் பங்கில் ஒருபங்கு சேர்ந்தார். கம்பெனி ஆரம்பிக்கும்போது ஒருபங்கின் விலை ரூபாய் 500 ஆக இருந்தது. அவர் பங்கை வாங்கும்போது ஒருபங்கின் விலை ரூபாய் 1000 ஆக வாங்கினார். ஆனால் இப்போது ஒரு பங்கின் விலை ரூபாய் 500 ஆக ஆகிவிட்டது. இப்போது எதை அடிப்படையாகக் கொண்டு ஜகாத் கொடுக்க வேண்டும்?
பதில்: தற்போது என்ன விலை இருக்கிறதோ, அதாவது ரூபாய் 500, அதன் விலையை அடிப்படையாகக் கொண்டு ஜகாத் கொடுக்க வேண்டும்.
39. கேள்வி: ஒரு தீன்தாரி, தனது உறவினர்களுக்குச் செய்த உதவியை சொல்லிக் காண்பிக்கிறார். இப்படி செய்யலாமா?
பதில்: “(கொடுத்த தர்மத்தை) சொல்லிக் காண்பிப்பதின் வாயிலாகவும், மனம் நோகும்படி பேசுவதாலும், உங்கள் தர்மத்தை அழித்து விடாதீர்கள்” என்பது திருக்குர்ஆனின் எச்சரிக்கை ஆகும். ஆகவே அவர் தீன்தாரியாக இருந்தாலும் இந்த செயல் அவர் நன்மையை அழித்து விடும்.
40. கேள்வி: பள்ளிவாசலில் ‘நிகாஹ்’ செய்யலாமா?
பதில்: பள்ளிவாசலில் வைத்து திருமணம் நடத்துங்கள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனையாகும். இன்று நிகாஹ் மஹல் ஊருக்கு ஊர் தோன்றி இந்த சுன்னத்து கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது.
சுன்னத்தான முறையில் திருமணம் நடத்துகிறோம் என்று சொல்கின்றவர்கள் கூட பள்ளிவாசலை விட்டு விட்டு நிகாஹ் மஹலில் திருமணம் நடத்தும் நிலைக்கு சமுதாயம் வந்துவிட்டது. மறைந்து கொண்டு வரும் இந்த சுன்னத்தை ஹயாத்தாக்க ஒவ்வொரு இளைஞரும் முன்வர வேண்டும். செய்வார்களா?
41. கேள்வி: நான் ஒரு ஆடு அறுத்து ஸதகா செய்வதாக நேர்ச்சை செய்தேன். அதன்படி ஆடு அறுத்துத்தான் நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டுமா? அல்லது ஆட்டின் கிரயத்தை (தொகையை) ஸதகா செய்வதின் மூலம் நேர்ச்சை நிறைவேறி விடுமா? ஆடு அறுத்து ஸதகா செய்ய வேண்டுமென்றால் அந்த ஆட்டின் சட்டம் என்ன? அதன் இறைச்சியை ஸதகா கொடுப்பவரும் அவரின் குடும்கத்தாரும் சாப்பிடலாமா?
பதில்: ஆடு அறுத்து ஸதகா செய்து உங்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவதே சிறந்ததாகும். ஏனெனில் அல்லாஹ், திருமறையில் (நீங்கள் எதை நேர்ச்சை செய்திருக்கிறீர்களோ அந்த) உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள் என்று கூறியுள்ளான்.
மேலும் நேர்ச்சைக்காக அறுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை ஸதகா கொடுப்பவரும், அவரின் குடும்பத்தாரும் சாப்பிடுவது கூடாது. அதை முழுவதும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட வேண்டும்.
42. கேள்வி: தாடி வைக்காதாவர்களும், தாடியே வளராதவர்களும் பாங்கு இகாமத் கூறுவது கூடாது என்று ஒருவர் கூறுகிறார். ஷரீஅத்படி இவர் கூற்று உண்மையா?
பதில்: தாடி வைப்பது என்பது ஒரு சுன்னத்து. அதை பேண வேண்டும். அதை வைக்காதவர் பாங்கு இகாமத் சொல்வது கூடாது என்பது இயலாது. தாராளமாக பாங்கு இகாமத் சொல்லலாம்.
43. கேள்வி: ஒருவர் மீது ஜகாத் கடமையாகி இருக்கிறது. ஆனால் அவரிடம் இருக்கும் பொருளைவிட அதிகமான கடன் இருக்கிறது. இப்படிப்பட்டவரின் மீது ஜகாத் கடமையாகுமா?
பதில்: இப்படிப்பட்டவரின்மீத ஜகாத் கடமையில்லை.
44. கேள்வி: கணவர் தனது மனைவியை பயமுறுத்தி அவளுக்கு கொடுக்க வேண்டிய மஹர் தொகையை மன்னிக்கும்படி கோரி மன்னிக்க வைத்தார். இப்படி செய்வது கூடுமா?
பதில்: இவ்வாரான மன்னிப்பு ஷரீஅத் அடிப்படையில் கூடாது. மஹரை அவர் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
45. கேள்வி: தூங்கும்போது அத்தர் பூசிக்கொண்டு தூங்கலாமா?
பதில்: இது மிகச்சிறந்த நல்ல பழக்கம்.
பதில்கள்: -ரஹ்மத் மாத இதழ்