47. கேள்வி: தலையில் துணி இல்லாமல் ஒளு செய்கிறார்கள். தலையில் ஒளு இல்லாமல் ஒளு செய்தால் அந்த ஒளுவும், அவர்கள் தொழுத தொழுகையும் கூடுமா?
பதில்: ஒளு செய்யும்போது தலையை மறைக்க வேண்டும் என்பது ஃபர்ளுமல்ல, வாஜிபுமல்ல, சுன்னத்துமல்ல, முஸ்தஹப்புமல்ல.
48. கேள்வி: ஒருவர் ஜும்ஆவுடைய குத்பா முழுவதையும் கேட்டார். பிறகு ஃபர்ளு தொழுதார். ஆனால், தொழுது கொண்டிருக்கும்போது இடையிலேயே ஒளு முறிந்து விட்டது. வெளியேறிச்செல்ல முடியாததால் ஜும்ஆ தொழுகை முடிந்தபின் வெளியில் சென்று ஒளு செய்து தொழ நாடினார். இப்பொழுது இவர் எத்தனை ரக்அத் தொழ வேண்டும்? ஜும்ஆவுடைய ஃபர்ளான இரண்டு ரக்அத்தா? லுஹருடைய ஃபர்ளு நான்கு ரக்அத்தா?
பதில்: லுஹராக நான்கு ரக்அத் ஃபர்ளு தொழ வேண்டும்.
49.கேள்வி: ஈமான் ஒறுதியாக, ஊசலாட்டங்கள் குறைய என்ன ஓத வேண்டும்?
பதில்: அல் இக்லாஸ், அல் ஃபலக், அந் நாஸ் ஆகிய சூராக்களை அதிகமதிகம் ஓத வேண்டும்.
50. கேள்வி: நம் இஸ்லாம் மார்க்கத்தில் மஞ்சள் மக்ரூஹ் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், நம் சகோதரர்கள் கல்யாண வேஷ்டியின் நான்கு மூலைகளிலும், கல்யாண பத்திரகையின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவுகிறார்கள். பெண் பிள்ளைகள் சடங்கு விஷயத்திலும் மஞ்சள் அரைத்து தேய்த்து குளிக்க வைக்கிறார்கள். புதுவீடு கட்டி புகுந்தாலும், அவ்வீட்டு மூலையில் ஒரு பானையில் அரிசியும், மஞ்சளும் போட்டு வைத்துள்ளார்கள். மஞ்சள் நமக்கு எதனால் மக்ரூஹ் ஆக்கப்பட்டுள்ளது?
பதில்: மாற்றாரின் பழக்கதோஷம்தான் இது. மஞ்சள் ஆண்மையை சிறிது சிறிதாக குறைக்கிறது என்பதால் ஷரீஅத்தில் அது மக்ரூஹ் ஆக்கப்பட்டுள்ளது.
51. கேள்வி: லுஹர் தொழுகைக்கு முன்சுன்னத்து தொழ ஆரம்பித்தவுடன் ஃபர்ளு தொழுகைக்கு இகாமத் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ள சுன்னத் தொழுகையை முறிக்கலாமா?
பதில்: இரண்டு ரக்அத்தாக அந்த சுன்னத்தை முடித்துக்கொண்டு ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
52. கேள்வி: கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரே பாயில் நின்று தொழலாமா? அதில் இமாமாக யாரை தேர்ந்தெடுப்பது?
பதில்: தொழலாம். கணவர் இமாமத் செய்வார்.
53. கேள்வி: பூனை குறுக்கே போகும்போது மனிதர்கள் எந்த வேலையாக போனாலும், அந்த காரியம் நல்லபடியாக நடக்காது என்று சொல்கிறார்களே!
பதில்: தவறான எண்ணம். ஷரீஅத்படி அப்படி எதுவும் கிடையாது.
54. கேள்வி: இறந்தவர் வீட்டிற்குச் சென்றால் முதலில் மைய்யத்தைப் பார்த்து ஸலாம் கூற வேண்டுமா? அல்லது திரும்பி வரும்போது ஸலாம் கூற வேண்டுமா? மைய்யத் வீட்டில் இருந்து வந்ததும் கை, கால், முகம் கழுவிய பிறகுதான் வீட்டிற்குள் நுழைய வேண்டுமா?
பதில்: அப்படி எதுவுமே ஷரீஅத்தில் இல்லை.
55. கேள்வி: நமது சமுதாயத்தை சேர்ந்த சிலரை நாம் ஸலாம் கூறலாம் என்று அவர்கள் முகத்தை நோக்கினால், அவர்கள் தங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்களே! மறுமுறை அவர்களை நாம் காணும்போது நாமும் மேற்படி நிலைக்கு தள்ளப்படுகிறோம். இவர்களுக்கு தங்கள் அறிவுரை என்ன?
பதில்: ஒருவர் முஸ்லிம் என்று இருந்தால் அவர் முகத்தை திருப்பிக் கொண்டாலும், அவருடன் அறிமுகமிருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் நண்பராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சந்தித்ததும் ஸலாம் சொல்வது சுன்னத்தாகும். அதை கேட்பவர் பதில் சொல்வது வாஜிபாகும். பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டால் வாஜிபை விட்ட குற்றத்திற்கு அவர் ஆளாவார்.
56. கேள்வி: காஃபிராக இருந்த கணவன் மனைவி இருவரும் இஸ்லாத்தில் சேந்தால் அவர்கள் தங்களது திருமணத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டுh?
பதில்: புதுப்பித்துக்கொள்ளத் தேவையில்லை.
57. கேள்வி: ஒருவர் முயற்சி செய்து சம்பாதித்து தப்லீக் செய்வதில் முன்னுரிமை கொடுப்பது நல்லதா? அல்லது ஹஜ் செய்யப் போவது நல்லதா?
பதில்: ஹஜ் கடமையாகிவிட்டால் முதலில் ஹஜ்ஜுக்குச் செல்லவதே முக்கியம்.
58. கேள்வி: குளிப்பு கடமையானவர் தக்பீர் சொல்லி கோழி அறுக்கலாமா?
பதில்: அறுக்கலாம். கூடும்.
59. கேள்வி: புனித லைலதுல் கத்ரு இரவன்று தொழுகை நடக்கும் பள்ளிகளில் ஆடம்பரமான முறையில் மின்விளக்குகளாலும், பூக்களாலும் அலங்காரம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறதா?
பதில்: இதுபோன்ற ஆடம்பரங்கள், அலங்காரங்கள் செய்வதற்கு இஸ்லாத்தில் எந்த அனுமதியும் இல்லை, ஆதாரங்களும் இல்லை. இவையணைத்தும் பித்அத்தான செயலாகும்.
60. கேள்வி: வித்ரு வாஜிப் தொழுத இரவில் தஹஜ்ஜத் தொழுகை தொழுகக் கூடாது என்று சிலர் சொல்கிறார்களே!
பதில்: தெரியாமலும் புரியாமலும் சொல்கிறார்கள். தஹஜ்ஜத்து தொழுபவர்கள் வித்ரை பிற்படுத்துவது முஸ்தஹபபாகும். அவ்வளவுதான்!
61. கேள்வி: அஸருக்கும், மஃரிபுக்கும் இடையே குர்ஆன் ஓதக்கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஓதலாமா?
பதில்: ஓதலாம். தவறில்லை.
62. கேள்வி: பேங்க்கில் கிடைக்கும் வட்டிப்பணத்தை ஜகாத்தாக கொடுத்தால் கூடுமா?
புதில்: பேங்கில் கிடைக்கும் வட்டிப்பணம் நிச்சயமாக அவருக்கு சொந்தமானது அல்ல. (அது ஹராமாகும்) அவருக்கு சொந்தமில்லாத பணத்தை – தான் கொடுக்க வேண்டிய ஜகாத்தாக அவர் கொடுத்தால் அது எப்படி நிறைவேறும்? நிச்சயமாக நிறைவேறாது.
63. கேள்வி: திருமணம் மற்றும் விஷேச நாட்களில் ஆண், பெண் பெரியவர்கள் தாய், தகப்பன் கால்களில் விழுகிறார்களே: இது சரியா? தவறா?
பதில்: ஹராமாகும்.
64. கேள்வி: மைதீன் என்பதற்கும் முஹையதீன் என்பதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன?
பதில்: இரண்டு வார்த்தைகளுமே தவறு. முஹ்யித்தீன் என்பதே சரியான வார்த்தை. பேச்சு வழக்கில் அதன் அசல் அமைப்பே மாற்றப்பட்டுவிட்டது.
65. கேள்வி: ஷாஃபி மதஹபின் சட்டப்படி பெண்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டியது இல்லையாமே உண்மையா? நான் வருடா வருடம் கொடுத்து வருகிறேனே சரியா?
பதில்: ஷாஃபி மதஹபின் சட்டப்படி பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் கடமையில்லை. தாங்கள் கொடுத்ததற்கு நஃபிலான தான தர்மத்தின் கூலி இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கிடைக்கும். எதுவும் வீண் போய் விடாது.
தொடர்ச்சிக்கு கீழுள்ள “NEXT” ஐ “கிளிக்” செய்யவும்