1. கேள்வி: உட்கார்ந்த நிலையில் பாங்கு மற்றும் இகாமத் சொல்லலாமா? அமர்ந்து கொண்டு ‘இமாமத்’ செய்யலாமா?
பதில்: அமர்ந்து கொண்டு பாங்கு இகாமத் சொல்வது மக்ரூஹாகும். அமர்ந்த நிலையில் ‘இமாமத்’ செய்வது அறவே கூடாது.
2. கேள்வி: ஷவ்வால் மாதம் 6 நோன்பை பெருநாள் முடிந்த மறுநாளே ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வைக்கலாமா?
பதில்: ஷவ்வால் மாதம் முடிவதற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் வைக்கலாம்.
3. கேள்வி: மாற்றுமத சகோதரர்கள் ‘ஸலாம்’ சொன்னால் அந்த ஸலாத்திற்கு பதில் சொல்லலாமா?
பதில்: சொல்லலாம். ‘வஸ்ஸலாமு அலா மனித்தபஅல் ஹுதா’ என்று சொல்ல வேண்டும்.
4. கேள்வி: மனைவியை மகிழ்விப்பதற்காக மல்லிகைப்பூவை மனைவிக்கு கொடுக்கலாமா?
பதில்: தாராளமாக கொடுக்கலாம்.
5. கேள்வி: ஊர் பள்ளிவாசலில் வசதி இருந்தும் நிகாஹ்வை திருமண மண்டபத்தில் வைக்கிறார்களே! ஏன்?
பதில்: இந்த தற்கால புதிய நிகழ்வுகளுக்கு பலர் பல காரணங்கள் சொன்னாலும் நம்முடைய தலைவர், அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய புனிதமான சுன்னத் வீணடிக்கப் படுகிறதே! என்பதை நினைக்கும்போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. மாற்றுமத சகோதரர்கள்கூட அவரவர்களுடைய திருமண நிகழ்ச்சிகளை, எந்த நிலையிலும் தங்களுடைய வணக்கத்தலங்களிலேயே நடத்தும்போது நமது சமூகத்தார்கள் நமது சுன்னத்தான வழிமுறையை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டி வருவது மிகவும் வேதனையான செய்தியே! இதுகுறித்து உலமாக்கள் ‘ஜும்ஆ பயானில்’ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
6. கேள்வி: மாற்றுமத நண்பர்களின் கடையில் நோன்பு திறக்கலாமா?
பதில்: திறக்கலாம்.
7. கேள்வி: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடலாமா? ஆதாரம் உண்டா?
பதில்: ஆதாரம் இல்லை.
8. கேள்வி: எனது பணத்தை வங்கியில் போட்டுள்ளேன். அந்த பணத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாக தருகிறார்கள். நான் ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளேன். ஆந்த கடனை அடைப்பதற்கு வங்கியிலிருந்து வரும் வட்டிப் பணத்தை கொடுக்கலாமா?
பதில்: வட்டியாக வரும் பணத்தை கொடுக்கக்கூடாது. உங்களது சொந்தப் பணத்திலிருந்துதான் கடனை அடைக்க வேண்டும்.
9. கேள்வி: முஸ்லிம்கள் நண்டு சாப்பிடலாமா?
பதில்: சாப்பிடுவதுமக்ரூஹ் தஹ்ரீம் ஆகும் என்று சிலரும், சாப்பிடுவது கூடும் என்று சில அறிஞர்களும் கருத்து கொண்டுள்ளனர்
10. கேள்வி: இப்பொழுதும் சில பள்ளிவாசல்களில் குர்பானி கொடுக்கும் தோல்களை வாங்கி, அதில் வரும் பணத்தை ஊர் பொது காரியங்களுக்கு செய்கிறார்கள் (குடி தண்ணீர், கிணறு வெட்ட இதுபோன்று). இது கூடுமா?
பதில்: கூடாது.
11. கேள்வி: சிலந்தி வலையை அழிக்கலாமா?
பதில்: ஷரீஅத்தில் தடையில்லை.
12. கேள்வி: வாக்குறுதியை நிறைவேற்றுவது கடமையா? கடமை என்றால் வாக்குறுதியை நிறைவேற்றும் நேரமும் ஃபர்ளான தொழுகையை நிறைவேற்றும் நேரமும் ஒன்றாக வரும்போது, எதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும்?
பதில்: வாக்குறுதியை நிறைவேற்றுவது கட்டாய கடமையாகும். ஃபர்ளான தொழுகையின் நேரம் தவறாது என்றால், முதலில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லையெனில் ஃபர்ளு தொழுகையைத்தான் முதலில் நிறைவேற்ற வேண்டும். அது முடிந்தவுடனேயே மற்ற காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்பு வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
13. கேள்வி: எனது மகள் தனது ஜகாத் பணத்திலிருந்து எனது கூட பிறந்த தம்பிக்கு கொடுக்க நாடியுள்ளார். கொடுக்கலாமா?
பதில்: கொடுக்கலாம்.
14. கேள்வி: அல்லாஹ்வுக்காக நஃபில் தொழுகையை தொழுது அதன் நன்மையை இறந்தவர்களுக்கு எத்தி வைக்கலாமா?
பதில்: ஹனஃபி மத்ஹபின்படி தொழுகையின் நன்மையை மற்றவர்களுக்கு எத்தி வைக்க முடியாது. எனினும் குர்ஆன் ஓதி எத்தி வைக்கலாம்.
15. கேள்வி: இறந்தவர்கள் பேரில் குர்பானி கொடுக்கலாமா?
பதில்: கொடுக்கலாம்.
16. கேள்வி: ஜனாஸாவை மாற்றுமத நண்பர்கள் சுமந்து செல்ல அனுமதிக்கலாமா?
பதில்: அனுமதிக்கலாம். எனினும் முடிந்த அளவு நாமே சுமப்பது சிறந்தது. அவர்களும் விரும்பி சேர்ந்து கொண்டால் பரவாயில்லை.
17. கேள்வி: இன்கம்டேக்ஸை ஜகாத்தாக நிய்யத் செய்யலாமா?
பதில்: கூடாது.
18. கேள்வி: பாத்ரூம், கக்கூஸ் ஒன்றாக உள்ளது. அதில் துவைக்கும்போது ‘தஸ்பீஹ்’ ஓதலாமா?
பதில்: கூடாது.
19. கேள்வி: வாசற்படியில் நின்று கொண்டு எந்த தர்மம் செய்தாலும் அதில் நமது பரக்கத் போய்விடும், அதனால் வாசற்படி தாண்டிதான் கொடுக்க வேண்டும் என்கிறார்களே?!
பதில்: உண்மையில்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
20. கேள்வி: சத்தியம் செய்யலாமா? முஸ்லிம்களிலேயே சிலர் குர்ஆனின் மீது சத்தியமாக என்று கூறுகிறார்களே! இது மார்க்கப்படி ஆகுமா? சத்தியத்தை முறித்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
பதில்: உலகிலேயே அல்லாஹ்வைத் தவிர மற்ற எந்த பொருள்களின் மீதும் சத்தியம் செய்யக் கூடாது. அப்படி செய்தாலும் அது உண்மையான சத்தியமாக ஆகாது. அதனால் சத்தியமும் நிகழாது. அதன்படி நடக்காவிட்டால் சத்தியத்தை முறித்த குற்றமும் ஏற்படாது.
அதேசமயம் ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்துவிட்டு அதை முறித்து விட்டால் அதற்குப் பரிகாரமாக பத்து ஏழைகளுக்கு உணவோ அல்லது உடையோ அளிக்க வேண்டும்.