காத்திருக்கும் பேராபத்து!
ஆட்சிகள் மாறுகிறதே தவிர, அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மூலதனத்துடன் காத்திருப்போருக்கான சலுகைகளை வாரி வழங்கும் காட்சிகளில் எந்தவித மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒருபுறம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும், மறுபுறம் விலைவாசி உயர்வுப் பிரச்னையும் ஆட்சியாளர்களையும், பொதுமக்களையும் அலட்டும் நேரத்தில் சந்தடி சாக்கில், விவாதத்திற்கும் பிரச்னைக்கும் உரிய விஷயங்களை அவசர அவசரமாக நடத்திக் கொள்ள மன்மோகன் சிங் அரசு முனைப்புடன் செயல்படுவது வேதனையாக இருக்கிறது.
கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் அன்னிய நாட்டுப் பத்திரிகைகள், இந்தியாவில் தங்களது பதிப்புகளைக் கொண்டு வருவது மற்றும் இந்தியப் பத்திரிகைகளில் முதலீடு செய்வது தொடர்பாக ஒரு மசோதா கொண்டு வர முயன்று காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது அதே முயற்சியில் அதே துறையில் இன்றைய அமைச்சராக இருக்கும் பி.ஆர். தாஸ் முன்ஷி இறங்கி இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
உலகமயம் என்கிற பெயரில், தங்களது தொலைக்காட்சிச் சேனல்கள் மூலம் பல்வேறு சர்வதேசச் சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதித்த பிறகு இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கலாசார மாற்றங்களும் அதனால் ஏற்பட்டிருக்கும் சமூகச் சீர்கேடுகளும் கொஞ்சநஞ்சமல்ல. உலகம் முழுவதும் உள்ள நல்ல விஷயங்கள் நமக்குக் கிடைக்கும் என்று கூறி வழங்கப்பட்ட அனுமதி, இப்போது அசிங்கங்களுக்கும் ஆபாசங்களுக்கும் லைசென்ஸ் அளித்திருக்கும் கொடுமையை அனைவரும் பார்க்கிறோம். தாயும் மகனும் அமர்ந்து சில வெளிநாட்டுச் சேனல்களைப் பார்க்க முடியாது என்கிற நிலைமை.
இந்த லட்சணத்தில் மேலைநாட்டுப் பத்திரிகைகள் இந்தியாவில் தங்களது பதிப்புகளை வெளியிட அனுமதி அளிப்பது என்பது ஆபாசத்துக்கு அச்சாரம் கொடுக்கும் முயற்சி அல்லாமல் வேறென்ன?
அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் பத்திரிகைகளின் தாக்கமே நம்மில் பல பத்திரிகைகள் ஆபாசப் படங்களை வெளியிட வைத்திருக்கும்போது, அந்தப் பத்திரிகைகளே தங்களது பதிப்பை வெளியிடும் நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுதந்திரம் அடைந்த இந்தியா அன்னியப் பத்திரிகைகளை அனுமதிப்பதா வேண்டாமா என்கிற கேள்வி எழுந்தபோது, அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவும் அவரது அமைச்சரவை சகாக்களும் காட்டிய துணிவு மகத்தானது. அன்னிய சக்திகள் இங்கே பத்திரிகைகளை நடத்த அனுமதித்தால், அவர்கள் எழுத்துகள் மூலம் மூளைச்சலவை செய்து இந்திய சுதந்திரத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உணர்ந்து செயல்பட்டது நேருவின் அரசு.
1955-ல் மத்திய அமைச்சரவை கூடி இந்த விஷயத்தை விவாதித்து, இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் இந்தியப் பிரஜைகளாக இருக்கும் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் மட்டும்தான் இயங்க வேண்டும் என்றும், இந்தியப் பத்திரிகைகள் இந்தியர்களால் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படக் கூடாது என்றும் தீர்மானித்தது. அன்னியர்களின் முதலீடு இருந்தால், பத்திரிகை அவர்களது கைப்பாவையாகச் செயல்படும் நிர்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று தீர்க்கதரிசனத்துடன் முடிவெடுத்தது நேருவின் அமைச்சரவை.
அன்னிய நாட்டுப் பத்திரிகைகள் நமது இந்தியப் பத்திரிகைகளை ஓரம் கட்டவும், விலைக்கு வாங்கவும் முடியும் என்பதால், பத்திரிகைச் சுதந்திரம் என்பதே அன்னிய சக்திகளின் கருத்துகளைப் பரப்பவும், இந்திய உணர்வுக்கும், அரசுக்கும் எதிரான கருத்துகளைப் பரப்பி மூளைச்சலவை செய்யவும் பயன்படுத்தப்படும் என்பதுதான் உண்மை.
ஆபாசங்கள் அள்ளித் தெளிக்கப்படுகிறதோ இல்லையோ, நமது கலாசாரமும் பண்பாடும் காற்றில் பறக்கவிடப்படும். தங்களுக்குச் சாதகமான கருத்துகளைப் பரப்பி மக்கள் மன்றத்தைக் கருத்துச்சலவை செய்யப் பன்னாட்டு சக்திகள் அந்தப் பத்திரிகைகளைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடும்.
தற்போது ஏற்பட்டிருக்கும் பத்திரிகைக் காகிதப் பற்றாக்குறையும் விலை உயர்வும்கூட, இந்தியப் பத்திரிகைகளை விலையேற்றம் செய்ய வைத்து, சிறு பத்திரிகைகளை அழித்துத் தாங்கள் குறைந்த விலையில் நிறையப் பக்கங்களுடன் நுழைவதற்கு அன்னியப் பத்திரிகைகள் செய்யும் சதியோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. விலைபோகவும், துணைபோகவும் தயாராக அரசே இருக்கிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது.
வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியாவில் வெளியிடப்படுவதும், இந்தியப் பத்திரிகைகளில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுவதும் பேராபத்து. அதைத் தடுத்து நிறுத்தியே தீரவேண்டும். இதை மக்கள் இயக்கமாக, தேசத்தின் குரலாக, நாட்டுப் பற்றின் வெளிப்பாடாக நாம் ஒவ்வொருவரும் உரக்க ஒலிக்க வேண்டிய நேரமிது!
தினமணி