ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பு வெளியிடப்படும்போதும், “மனிதன் விஞ்ஞானத்தின் துணையோடு இயற்கையை வென்று விட்டான்’ என்று எக்காளமிடுவதும், அடுத்த இருபது முப்பது வருடங்களில் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை வேறு வழியில்லாமல் நமது சந்ததியினருக்குத் தத்துக் கொடுத்து அசடு வழிவதும் கடந்த எழுபது ஆண்டுகளாகத் தொடர்கிறது.
மனிதனின் அனைத்து நோய்களுக்கும் விஞ்ஞானம் தந்திருக்கும் அதி அற்புதத் தீர்வு என்று கூறப்பட்ட பென்சிலின்இ இப்போது அதிக கவனத்துடன் உபயோகிக்கப்பட வேண்டிய மருந்தாகி விட்டது. காரணம், அதன் பின்விளைவுகள் மிகமோசமாக இருப்பது தெளிவாகி இருக்கிறது.
அதேபோலத்தான் பிளாஸ்டிக், அணுசக்தி, சிமெண்ட், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என்று நாளைய சமுதாயத்துக்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், மனித இனத்தின் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்வது என்னவோ உண்மை.
மேலே குறிப்பிட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் விஞ்ஞான வளர்ச்சி செல்·போன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கைபேசி. கைபேசி என்பது அடிப்படைத் தேவை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 19,26,96,402 கைபேசிகள் இயங்குகின்றன என்றும், ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் சுமார் 1,42,81,726 புதிய இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இந்தக் கைபேசியின் தொடர் உபயோகம் வாடிக்கையாளர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதுடன், இதயத்துடிப்பையும், சீரான ரத்த ஓட்டத்தையும்கூட பாதிக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மனிதனின் கண்டுபிடிப்பு மனிதனைப் பாதிக்கிறது என்பதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு உலகில் வாழும் ஏனைய ஜீவராசிகளைப் பாதிப்பது என்ன நியாயம்? மென்மையான உணர்வுகளாலான பறவைகளின் மூளை நரம்பு மண்டலம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி அவைகள் இறந்து விடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
நகரங்களையும், கைபேசி கோபுரங்களைச் சுற்றியும் சிறு சிறு குருவிகளையும், ஏன்! வரவர காகம் மற்றும் மைனா போன்ற பறவைகளையும்கூட நாம் பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதை எத்தனை பேர் உணர்கிறோம்? மனிதக் கழிவுகளைத் துப்புரவு செய்யும் காகங்கள் விரைவிலேயே காணாமல் போய் விடும் பேராபத்தை இந்தக் கைபேசிகளின் மின்காந்த ரேடியோ கதிரியக்க சக்திகள் உருவாக்கி வருகின்றன.
ஒருபுறம் மரம் செடி கொடிகள் அழிக்கப்பட்டு கான்க்ரீட் கட்டடங்கள் உருவாவதால்இ தங்குமிடம் இல்லாத தவிப்பு; மறுபுறம், சுதந்திரமாகக் காற்று மண்டலத்தில் பறக்க முடியாமல் இதுபோன்ற கதிரியக்க அலைகளால் ஏற்படும் பாதிப்பு. பாவம், பறவைகள் சரணடையக் காடுகள்கூட இல்லாமல் போய்விடும் அபாயகரமான சூழ்நிலை. இது எப்படி நியாயமாகும்?
கைபேசிகளிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்க அலைகளின் தாக்கத்தால், தேனீக்கள் அக்கம்பக்கமுள்ள காட்டுப் பகுதிகளில்கூட இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியுமா? “தேன்’ என்கிற அரிய இயற்கையின் வரப்பிரசாதம் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்காமலேகூடப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.