திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!!
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திருமணத்தில்… திருமண மண்டபத்தில் நிகாஹ் நடந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட அந்த திருமண வைபவத்தில் மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு காட்சி பார்வையில் பட்டது.
மணமகளிடம் ‘திருமண ஒப்புதல் கையெழுத்து’ வாங்குவதற்காக, பெண் வீட்டார்கள் மணப்பெண்ணுக்கு ஒதுக்குப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைகிறார்கள். மணப்பெண்ணிடம் கையெழுத்தும் வாங்குகிறார்கள். இதில் என்ன அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா? இனிமேல்தான் அந்த அதிர்ச்சியே!
மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியபிறகு பெண்வீட்டு ஆடவர்கள்; நிகாஹ் மஜ்லிசுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் மணகள் கையெழுத்திடுவதை ‘வீடியோ’ எடுப்பதற்காக சென்றவர்கள் மணமகளின் கையெழுத்தை பதிவு செய்ததோடு நிற்கவில்லை. மணப்பெண் தங்கியிருக்கும் அறையில் மணமகள் முக்காட்டை விலக்கி கேமராவுக்கு ‘போஸ்’ கொடுப்பதற்காக; தோழிகள் போன்ற பெண் வீட்டார்களே பெண்ணின் முக்காடை விலக்கி விட மணப்பெண் கூச்சத்தில் தடுத்தாலும், தோழிகள் கழுத்து நகைகளை சரிசெய்யும் சாக்கில் முக்காடு விலக்கப்படுகிறது. இதை ‘வீடியோ கேமராவும்’ பதிவு செய்கிறது.
கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், இந்த காட்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. அந்த நிக்காஹ் மஜ்லிஸில் இரு புறமும் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காடசிப் பெட்டியில் அந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, இங்கு மஜ்லிஸில் இமாம் திருமண ஒப்பந்த நடைமுறைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.
தற்செயலாக கூடட்டத்தில் உட்கார்ந்திருந்த விருந்தாளிகளை கவனிக்கும்போது
நடுவிலுள்ள மேடையில் நடக்கும் திருமண நிகழ்ச்சியை அவர்கள் பார்ப்பதாகத் தெரியவில்லை.
அவர்களுடைய தலைகளெல்லாம் இடது புறமோ வலது புறமோ நிலைகுத்தி
ஆவலோடு எதையோ பார்ப்பதுபோல் தெரிந்தது.
மணமகன் கூட மணப்பெண்ணின் முகத்தை, அலங்காரத்தை பார்த்திருப்பாரோ என்று தெரியாது.
ஆனால் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள், மணமகளின் ஒவ்வொரு அசைவையும்
அலங்காரத்தையும் கண்டுகளித்தார்கள்.
எவ்வளவு பெரிய கொடுமை!
பல சமயம் மணப்பெண் அறையில் அமர்ந்திருக்கும் பெண்களின் கூட்டத்தையும்கூட
வீடியோ கேமராக்கள் விட்டு வைப்பதில்லை.
திருமணம் என்கின்ற சுன்னத்தான ஒரு நிகழ்ச்சிக்கு புர்கா அணிந்து கொண்டு வந்திருக்கும் நம் வீட்டு பெண்மணிகளை, பெண்கள் மட்டுமே தங்கியிருக்கும் அறைக்குள் (திருமணத்திற்கு வந்திருக்கும் பெண்மணிகளின்) அனுமதியின்றி வீடியோ எடுப்பதற்கு திருமண வீட்டாருக்கு யார் உரிமை வழங்கியது?
இதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
வருங்கால திருமண நிகழ்ச்சிகளின்போதாவது இது போன்ற ‘முற்றிலும் ஹராமான’ சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல, வருங்கால சழுதாயக்காவலர்களான இளைஞர்களின், ஊர் ஜமா அத்தார்களின் கடமையும்கூட! அல்லாஹ் காப்பாற்றுவானாக, ஆமீன்.
– M.A.முஹம்மது அலீ