| சிலவரிச் செய்திகள் |
|
|
|
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் முதல் விமானச் சேவை தொடங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்தார். ஏப்ரல் மாதம் முதல் புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50 பயணிகள் பயணம் செய்யும் வகையிலான விமானம் முதலில் இயக்கப்படும். இதற்காக விமானங்களை இயக்கத் தனியார் நிறுவனங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இங்கிருந்து பெங்களூர், கொச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும். பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் சென்னைக்கும் விமானப் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மத்திய திட்டத்துறை இணையமைச்சர். வாஷிங்டன்: இதை அமெரிக்க அரசு மற்றும் சர்வதேச கல்விக்கான அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகளவில் படிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வரிசையில் இந்தியா தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. கல்விக் கட்டணம் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த ஆண்டு மட்டும் இந்திய மாணவர்கள் ரூ.14,100 கோடிக்கு பங்கு வகித்தனர். மொத்த வெளிநாட்டு மாணவர்களின் பங்கு ரூ.93,660 கோடி. அதிலும், அமெரிக்காவில் நிதி நெருக்கடி தீவிரமாக இருந்த நேரத்தில் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. புது தில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் புகைப் படத்தை முன்அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திலும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் படத்துடன் கூடிய விளம்பரப் பலகைகளை வைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதனையடுத்து மன்மோகன் சிங்கின் படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பிரதமரின் படத்தை பயன்படுத்துவதாக இருந்தால் அது குறித்து முன் கூட்டியே பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.சென்னை: அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை வளாகம் (பிளாக் ஏ) மற்றும் தலைமைச் செயலக வளாகம் (பிளாக் பி) கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. `பிளாக் ஏ' பகுதியில் சட்டமன்ற வளாகம் உள்பட 4 அடுக்குமாடி வளாகங்களும், பிளாக் பி' பகுதியில் தலைமைச் செயலக வளாகமும் கட்டப்பட்டு வருகின்றன. வரும் மார்ச் 13-ந் தேதியன்று, புதிய சட்டமன்ற வளாகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மார்ச் 19-ந் தேதி வாக்கில், பட்ஜெட் தாக்கல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள உதவியாக பட்டப்படிப்புடன் தொழிற் பயிற்சிக்கான பட்டய சான்றிதழ் படிப்பு ஒன்றையும் சேர்த்து மூன்றாண்டுகளில் வழங்கும் ஒரு புதிய திட்டம் இந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மல்டி மீடியா, டேலி, ஏ.சி. டெக்னாலஜி, கம்யூட்டர் ஹார்டுவேர் சர்வீசிங், டொமஸ்டிக் வயரிங், நெட் ஒர்க்கிங், வெப்டிசைனிங் மற்றும் அனிமேஷன், இ.காமர்ஸ், லைட்- ஹெவி வாகன டிரைவிங், அழகுகலை, ஆடைகள் தர ஆய்வு மற்றும் ஏற்றுமதி வணிகம், கம்யூனிகேஷன் திறன், ஆபீஸ் ஆட்டோமேஷன், சர்வே, கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற பாடப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இப்புதிய திட்டத்தில் இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 571 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
|



