Home செய்திகள் ஒரு வரி சிலவரிச் செய்திகள் 19 11 2009
சிலவரிச் செய்திகள் 19 11 2009 Print E-mail

புது தில்லி: பிற நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, கடந்த 20 ஆண்டுகளில் தற்போது முதல்முறையாக அரிசியை இறக்குமதி செய்கிறது. நாட்டின் ஒருபகுதியில் வறட்சி மற்றொரு பகுதியில் வெள்ளத்தால் அனைத்து பயிர்களின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தில்லியில் புதன்கிழமை வங்கி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனை கூறினார்.

லக்னோ: சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி படுதோல்வியைச் சந்தித்தில் அதிர்ச்சி அடைந்த அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், இனி கல்யாண் சிங்குக்கு கட்சியில் இடமில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். கல்யாண் சிங்குடன் கைகோர்த்ததன் மூலம் நான் பெரிய தவறு செய்துவிட்டேன். இதனால் நான் சிறுபான்மை மக்களின் அதிருப்திக்கு ஆளாகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

லண்டன்: பிரிட்டன் விசா பெற விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயமாக ஆங்கில மொழித் திறன் அறியும் தேர்வை நடத்த வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பிரிட்டன் விசா கேட்டு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கு பிரச்னையாக அமையும். பிரிட்டனில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடை பெறவுள்ளது. அப்போது பிற நாட்டவர்களுக்கு குடியிரிமை வழங்குவதை எதிர்க்கும் குழுவினர் இந்த பிரச்னையை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வர் என தெரிகிறது.

வாஷிங்டன்: இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அளவில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்தியா, பாகிஸ்தானுடன் சீனாவும் அதிக இடங்களில் ஆயுதங்களைக் குவித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தானிடம் 70 முதல் 90 வரை அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கணித்த இவர்கள், இந்தியாவிடம் 60 முதல் 80 வரை அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.  சீனாவின் ஆயுதக் கிடங்குகள் அமைந்துள்ள இடங்கள் ஏற்கனவே அறியப்பட்டதுதான். ஆனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவற்றின் ஆயுதச் சேமிப்பிடங்கள் அறிய முடியததாக உள்ளது என்றும் தங்கள் கட்டுரையில் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாஷிங்டன்: மேற்படிப்பிற்காக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு மாணவர்கள் செல்வது ஒருபுறம் இருக்க, அமெரி்க்காவிலிருந்து இந்தியாவிற்கு மாணவர்கள் வருவது அதிகரித்துள்ளது தெரிய வந்திருக்கிறதுஇவ்வாரம் திங்களன்று வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பின்படி 2007-08 ஆண்டில் 3,150 அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு படிப்பதற்காக வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.

கொழும்பு: இலங்கையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பு-யாழ்ப்பாணத்தை இணைக்கும் சாலையில் (சாலை எண் ஏ௯) பொதுமக்கள் தடையின்றி பயணிக்க ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டனர். இரு நகரங்களை இணைக்கும் சாலையில் பயணிக்கு இனி பொதுமக்களுக்கு பாதுகாப்புத் தடையில்லா சான்றிதழ் அவசியமில்லை. தேசிய அடையாள அட்டையோ அல்லது இலங்கை குடிமகன்தான் என்பதை நிரூபிக்க ஏதாவது ஆவணமோ வைத்திருந்தால் இந்த சாலை வழியாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று அந்நாட்டு பாதுகாப்புப் படை கமாண்டர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

டோக்கியோ: நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நிறுவனம் மீண்டும் நிமிர கால அவகாசம் தேவை என்று ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர்லைன்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜப்பானில் பெரும் அதிர்ச்சியலைகளை உண்டாக்கியுள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 131.2 பில்லியன் யென் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது. கடந்த ஆண்டு இந்த நஷ்டத்தின் அளவு 36.7 பில்லியன் யென்களாக இருந்தது.  இப்போதைக்கு சரிவிலிருந்து நிமிர உடனடியாக 125 பில்லியன் யென் தேவை என்றும், இதனை ஜப்பானிய அரசு கொடுத்து உதவ வேண்டும் என்றும் இந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி பவுன் விலை ரூ.11,920 ஆக இருந்தது. இது நவம்பர் 2-ம் தேதி ரூ.12,104 ஆக அதிகரித்தது. இதன் மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பவுன் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இப்போது ரூ.13 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.1,605. திங்கள்கிழமை விலை: ஒரு பவுன் ரூ.12,784. ஒரு கிராம் ரூ.1,598.

 

தலப்பாக்கட்டு பிரியாணிக்கு நீதி மன்றம் தற்காலிகத்தடை

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் அன்பு விலாஸ் தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வரும் நாகசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் என்னுடைய முன்னோர்கள்....

திண்டுக்கல் அன்பு விலாஸ் தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை தொடங்கினார்கள். இக்கடையை சுமார் 70 வருடங்களாக நடத்தி வருகிறோம். இந்த பெயரை வைக்கும் உரிமையை இதுவரைக்கும் யாருக்கும் வழங்கவில்லை. இந்த நிலையில் சென்னை மாநகரில் மட்டும் தலப்பாகட்டு என்ற பெயரில் 16 கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் எங்களது வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே தலப்பாகட்டு என்ற பெயரில் பிரியாணி கடை நடத்த தடை விதிக்க வேண்டும். என்று அதில் கூறியிருக்கிறார்.

நேற்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா தனது தீர்ப்பில் சென்னையில் தலப்பாகட்டு என்ற பெயரில் பிரியாணி கடை நடத்த இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், இது குறித்து மற்ற 16 கடைகளுக்கும் நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டார்.