| ஹஜ்ஜு என்னும் அருள்மாதம் |
|
|
|
ஹஜ்ஜு என்னும் அருள்மாதம்
• ஆதி இறைவன் இல்லம் ஒன்றே • அழகாய் ஹஜ்ஜு செய்திடவே • வேதம் தன்னில் "கடமை" என்றே • விளக்கம், சொன்னான் இறையோனே!
• ஓதும் வேதம் வழியில் சென்றால் • உண்டாம் சொர்க்கப் பதியன்றோ! • கோது போக்கி ஏதம் நீக்கக் • குளிர்ந்தெழும் ஹஜ்ஜாம் அருள் மாதம்!
• பாவம் எண்ணி வருந்தி யழவும் • பாதை காட்டி அறம் செய்தும் • சாபம் நீங்க உறவைத் திருத்தி • சார்ந்து வணக்க வழிபாட்டில் • கோபம் கொன்று குணத்தில் ஒளிரும் • குன்றாய் நிற்க வழிகாட்டி • ஏமம் ஆகி இறையை நெருங்க • இலங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• நகத்தை வெட்டி அகற்றி முடிகள் • நபிசொல் படியே குளித்திடவும் • அகத்தில் கறையை அகற்றி மறுமை • அடையாளத்தைக் காண்பித்தே • முகத்தில் கண்ணீர் வழிய பக்தி • முறையாய் "இஹ்ராம்" கட்டிடவும் • தகைக்கும் வெயிலை குளிராய்க் காட்டி • தளிர்க்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• கருப்பர், சிகப்பர், வெள்ளையர் இன்னும் • காணும் பற்பல நிறத்தினரும் • இருப்பார் கஃபா இல்லத் தருகே • எல்லாம் ஒருதாய் மக்க ளென • "இறைவா!" உன்முன் வந்தோம் வந்தோம் • இணையே இல்லை உனக்கென்றே • நிறைவாய் "தல்பியா"ச் சொல்லிச் சொல்லி • நிற்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• தந்தை ஆதம் கட்டி "தவாபு" • தகையாய்ச் செய்ய நபிமார்கள் • சிந்தை மகிழச் சுற்றி சுற்றி • சிறந்தார்; நபியாம் இபுறாஹீம் • அந்த பாலகர் இஸ்மா யீலும் • அழகாய்க்கட்டி முடிக்க அதை • எந்தை அஹ்மது நபிவழிகாட்டி • எழுந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• நெஞ்சம் உருக, நிலைதடுமாற • நிறைவாய் ஏழு முறை சுற்றி • கெஞ்சிக் கெஞ்சி இறையைப் புகழ்ந்து • கேட்க, நாட்டம் நிறை வேற, • அஞ்சி அஞ்சி அகத்தை ஒடுக்க • அழுக்கு நீங்கி அருள் சுரக்க, • மிஞ்சும் தூய்மை மேலாய் மலர • மிளிர்ந் தெழும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• சொர்க்கக் கல்லாம் ஹஜருல் அசுவத்தை • தொட்டு தொட்டு முத்தமிட • தர்க்கம் இல்லாச் சரித்திரம் – இஸ்மாயீல் • தங்கப் பாதம் பட்டவுடன் • பெருக்கெடுத்தோடும் "ஜம் ஜம்" தண்ணீர் • பெருமை கண்டு குடித்திடவும்! • உருகிக் கேட்க இறையருள் பெறவும் • உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• தண்ணீர்க்காக அன்னை ஹாஜிரா • தாவி ஓடிய செயல் நினைந்தே • கண்ணீர் விட்டு நாமும் ஓடிக் • கருத்தைத் துலக்கி சொர்க்கம் பெற • புண்ணிய சீர்சபா மருவாக் கிடையே • புகுவார் கூட்டம் காட்டிடவும் • மண்ணும் விண்ணும் கடலும் புகழ • மலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• பாவமெல்லாம் விட்டோம் என்று • படைத்தோன் முன்னால் உறுதி செய • தோய்ந்தே உள்ளம் தலைமுடி களைந்தே • துயரம் மாயும் நிலை காட்ட • மாய்ந்து வஞ்சக நெஞ்ச மெல்லாம் • மாண்பாம் மலரில் மணம்வீச, • ஆய்ந்தே உலகம் அதியம் கொள்ள • அலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• அரிய ஹஜ்ஜு நிறைவு பெறுமாம் • அரஃபா வந்துத் தங்கிடவும் • கரிய பாவம் எல்லாம் உலர்ந்து • கரையைக் கடக்கச் செய்திடவும்! • உரிய "ஹாஜி" பட்டம் பெறவும் • உயர்ந்த படித்தரம் பெற்றிடவும் • தரித்தே இறையின் அருளில் இன்புறத் • தாங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• அருளின் கடலாம் முஜ்தலிபாவில் • அழகாய்த் தங்கி அருள்பெறவும் • குருபா னீ யைக் கொடுத்து மினாவில் • கோதில் இறைக்கே பணிந்திடவும் • பெரும்பகையான ஷைத்தான் ஓடப் • பேணிக் கற்கள் எறிந்திடவும் • உரிய வழியை முறையாய்க் காட்டி • உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
• மாமணம் கமழும் மதீனா நகரில் • மாநபி தம்மைத் தரிசிக்கவும் • தூமனம் கொண்டு ஸலவாத் தோதி • தூய்கலீஃபாக்களை நினைந்திடவும் • காமணம் வீசும் கஸ்தூரி வாடை • கனிந்த நபியைச் சூழ்ந்திடவும் • தாயாய் வந்துத் தாங்கி நிற்கும் • தகையாம் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
- அதிரை, மு. முஹம்மது தாஹா மதனீ எம்.ஏ.பி.எட்.
|



